நித்தியானந்தா விவகாரம் குறித்து சில சிந்தனைகள்

This entry is part [part not set] of 35 in the series 20100305_Issue

நேசகுமார்


nesakumar@gmail.com
நித்தியானந்தா விவகாரம் பரபரப்பாய் எங்கும் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது. இது எனக்கு ஜெயேந்திரர் கைது தினங்களை நினைவுக்குக் கொண்டுவருகிறது. ஐந்து வருடங்களுக்கு முன்பு அந்தச் சூழலில் நான் எழுதிய திண்ணைக் கட்டுரையும் நினைவுக்கு வருகிறது (http://www.thinnai.com/?module=displaystory&story_id=20412025&format=html ).

அப்போது எழுதிய விஷயங்களை இந்தச் சூழலிலும் நினைத்துக் கொள்கிறேன். குறைகளையும் மீறி இந்த சுதந்திர சூழலே தொடர்ந்து ஞானியரையும், சித்தர்களையும் நமது மரபில் தோற்றுவித்து ஆன்மீகத்தை வாழவைத்துக் கொண்டிருக்கிறது. பிற சமூகங்கள் இதற்கெனப் பயந்து இந்த மரபையே நிறுத்தி ஆன்மீக ரீதியாக அழுகிப் போய்விட்டன.

***

இது ஒரு புறமிருக்க நித்தியானந்தா விஷயத்தில் ஜெயமோகனும், சாரு நிவேதிதாவும் எழுதுபவைகளை தொடர்ந்து இரு தினங்களாக படித்து வருகிறேன். நித்தியானந்தா விஷயத்தில் சாரு நிவேதிதாவை எல்லோரும் சுழட்டி சுழட்டி அடிப்பதையும், அவர் எரிச்சலும் தடுமாற்றமும் அடைந்து விளக்கம், மறு விளக்கம் என்று எழுதித்தள்ளுவதையும் பார்த்து பரிதாபமாயும் இருக்கிறது (இதை அவர் இன்னமும் வெறுக்கிறார் என்றாலும் கூட).

***

இன்னொரு புறம் இதில் பரிதாபப் படுவது என்றால், கிட்டத்தட்ட மனித குலம் முழுவதன் மேலும் பரிதாபப்பட வேண்டும் என்பதும் தோன்றுகிறது. எல்லா மதங்களிலும் இப்படி மனிதர்கள் மீதான நம்பிக்கையே இறைவனின் மீதான நம்பிக்கையாக இருக்கிறது. ஒரு மனிதர் தன்னை அவதாரம்/நபி/இறைதூதர்/சித்தர்/சாமியார்/ஞானி என்று சொல்லிக் கொள்கிறார். அவர் பிடிபட்டால் போலிச் சாமியார்/ போலி நபி ஆகிறார். பிடிபடாவிட்டால் ஒரு மதத்தை/ கல்டை தோற்றுவித்தவர் ஆகிறார். அல்லது பல ஞானியரின் வழியில், நபிமார்களின் வழியில் தாம் வந்தவர் என்கிறார்.

இதில் நித்தியானந்தாவைப் பார்த்து நாம் இந்த மரபே தவறு, சந்நியாசமே தவறு, காவியே தவறு என்று முடிவெடுத்துவிட வேண்டியதில்லை. அப்படி என்றால், ஒரு இராமகிருஷ்ணரோ, விவேகாந்தரோ, ரமணரோ நமக்கு கிடைத்திருக்க மாட்டார்கள். இவர்கள் இல்லாத மதம் எப்படி இருந்திருக்கும்? இருட்டறையாகத்தான் இருந்திருக்கும். இந்த இருட்டறையிலிருந்து ஆன்மீகம் பற்றிய புரிதல் இல்லாமல், அடிப்படையான அறிவும் இல்லாமல் தம்மையும் வருத்திக்கொண்டு உலகையும் வருத்திய மத்திய ஆசிய கல்டுகள் விளைவித்த அனர்த்தங்கள் அதன் விளைவாக ஓடிய ரத்த ஆறுகள், மனித குலம் பட்ட துன்பங்கள், இன்றும் உலகின் பல பகுதிகளில் நிகழ்ந்து வரும் வன்முறைகள் ஆகியன நமக்கு இந்த பாடத்தையே சொல்கின்றன – you can’t set a cut-off date for the flow of divine knowledge.

***

மத்திய ஆசியா மட்டும் தான் என்றில்லை, எங்கெங்கெல்லாம் ஒருவரை சார்ந்து ஒரு மதம் அமைகிறதோ, அவரின் கூற்றுகள், செயல்பாடுகள் கேள்விக்கப்பாற்பட்டவையாக அந்த மதத்தவர் பின்பற்றக் கூடியதாக அமைகிறதோ அப்போது அது பின்பற்றுபவர்களை உன்மத்தர்களாக்கி பெரும் வெறியையும், அரக்கத்தனத்தையும் தோற்றுவிக்கின்றது. இதை நாம் இலங்கையில் காண்கிறோம். எப்போதோ இலங்கைக்கு வந்த அல்லது வந்ததாக நம்பப்படுகிற புத்தர், பின்னாளில் தமது மரணப் படுக்கையில் தமது மார்க்கம் தூய்மையுடன் திகழும் புண்ணிய பூமி அது என்று அறிவித்த அல்லது அப்படி பின்னர் உருவாக்கப்பட்ட நம்பிக்கை விளைவித்த மனப்பிறழ்வினால், சிங்கள – பவுத்த சமூகம் இன்றைய உலகில் நாம் எங்கும் காணாத கோரத்தை அஹிம்சை மார்க்கத்தின் பெயரால் அப்பாவித் தமிழ்மக்களின் மீது நிகழ்த்தியுள்ளது. ஒரு மனிதர்/ சாமியார்/இறைதூதர்/நபி மீதான நம்பிக்கை இப்படிப்பட்ட மனப்பிறழ்வுகளை தோற்றுவித்து அரக்கத்தனத்தை மனிதகுலத்தில் தோற்றுவிக்கிறது.

***

சாமியார்கள் அல்லது குருமார்கள் இந்து சமயத்தில் அல்லது இந்திய சமயங்களில் அல்லது சூஃபியிஸத்தில் இருப்பது பற்றி எள்ளலுடன் பார்க்கும் இஸ்லாமிஸ்டுகள் அல்லது கிறிஸ்துவ தூய்மையாளர்கள் ஒரு விஷயத்தை மறந்துவிடுகிறார்கள் அது – அந்த மதங்களும் இப்படிப்பட்ட ஒரு சாமியாரால்/குருவால் உருவானது என்பதே அது. அழைக்கப்பட்ட பெயர் அந்த கலாச்சாரம் சார்ந்து இருக்கலாம். நபி என்றழைத்தாலும் இரட்சகர் என்று அழைத்தாலும் ஒரு மனிதர் உருவாக்கியதுதானே இந்த பெரும் நம்பிக்கை கூட்டங்கள். அந்த மனிதர் கடவுளிடம் பேசினார், அவர் மனித உலகிற்கு எடுத்துக்காட்டு என்ற நம்பிக்கையைத்தானே இன்று வெவ்வேறு வகைகளில் பல சாமியார்களை நம்புகிறவர்களும் பின்பற்றுகின்றனர். ‘நான் கடவுள்’ என்று ஒரு நபி அல்லது இறைதூதர் சொல்லிக்கொள்ளவில்லை என்று வாதிடலாம். ‘நான் கடவுள்’ என்பதற்கும், ‘நான் சொல்வதெல்லாம் கடவுள் சொல்வது, நான் செய்வதெல்லாம் கடவுள் செய்யச் சொல்லி செய்வது’ என்று இந்த இறைதூதர்கள்/ரட்சகர்கள் சொல்வதற்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை. தன்னைத் தானே நபி/இறைத்தூதர் என்று சொல்லிக் கொள்வதற்கும், அவதாரம் என்று சொல்லிக் கொள்வதற்கும் பெரிய வித்தியாசமொன்றுமில்லை.

இதில் நித்தியானந்தாவைப் பார்த்து குதூகலிக்கும் மத/மார்க்க அன்பர்களின் நிலைதான் பரிதாபமானது. தாம் நம்பும் இறை மனிதர் நித்தியானந்தாவை விட மோசமாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் கூட இவர்களுக்கு எழுவதில்லை.

***

இதில் நான் நினைப்பதையெல்லாம் கிட்டத்தட்ட அப்படியே ஜெயமோகன் எழுதி வருகிறார். அவரது மொழி கொஞ்சம் சிக்கலானது என்றாலும், இந்திய ஆன்மீக மரபையும், சித்தாந்தங்களையும் அறிந்தோருக்கும் உணர்ந்தோருக்கும் தோன்றக்கூடிய, தெரிந்த விஷயங்களை இந்த தருணத்தில் ஜெயமோகன் எழுதி தெளிவை அளிப்பது சந்தோஷமாயிருக்கிறது. சாட்டில் அழைத்து அவரிடம் நன்றியும் தெரிவித்தேன்.

***

ஜெயமோகன் தனது கட்டுரையில் மத்திய ஆசியாவில் நிலவிவந்த இறைதூதர்கள், நபிமார்கள் பற்றிய ஒப்பீட்டை இங்கே உள்ள ஞானியர், சித்தர், சாமியார்கள் ஆகியோரை முன்வைத்து மிகவும் அழகாக பேசியிருக்கிறார். சாமியார்களில், சூஃபிக்களில், சித்தர்களில், ஞானிகளில் போலிகள் என்று அடையாளம் கண்டு அதை தடுப்பதும், அந்த மரபே தவறு என்று ஆவேசப்படுவதும் எப்படிப்பட்ட கடுமையான பிற்போக்கு என்பதை ஜெயமோகன் தமது மொழிநடையில் அழகாக விளக்குகிறார். “தடைசெய்யும் சமூகம் காலப்போக்கில் இறுகி மதவெறிகொண்ட சமூகமாக ஆகும். மீன்கள் வாழாத சாவுகடலாக அது ஆகிவிடும். ஆகவே சுதந்திரத்தை அனுமதித்து போலிகளையும் உண்மைகளையும் பிரித்தறியும் தர்க்கத்தையும் நுண்ணுணர்வையும் வளர்த்துக்கொள்வதொன்றே வழியாகும்” (ஆன்மீகம், போலி ஆன்மீகம் -4, ஜெயமோகன் http://www.jeyamohan.in/?p=6683).

***

சாரு நிவேதிதா குழம்பிப் போயிருப்பதையும் முன்னுக்குப் பின் முரணாக எழுதுவதையும் பார்க்கும்போது அதில் எனக்கு எவ்வித ஆச்சர்யமும் ஏற்படவில்லை. எல்லா கல்ட் லீடர்கள் விஷயத்தில் ஏற்படுவது இதுதான். ஏனெனில், எதோ ஒரு அசாத்திய ஆளுமை, வலிமை இல்லையென்றால் இப்படிப்பட்டவர்கள் ஒரு கூட்டத்தை தமக்கென உருவாக்கிக் கொள்வது கடினமான விஷயம் தான். அது இல்லாமலும் உருவாகும் என்பது வேறு விஷயம், நான் சொல்வது பொதுவாக உருவாகும் பெரும் கல்டுகள், மடங்கள், நிறுவனங்கள், தரீக்காக்கள் பற்றியது.

நானே ஒரு சிலரிடம் இது போன்ற அதிசயங்களை கண்டிருக்கிறேன். ஜெயமோகன் எழுதியிருப்பது போல இது போன்றவை முதிர்ச்சியில்லாதவர்களிடமும் இருக்கும் சாத்தியம் இருப்பதும் உண்மைதான். எது கல், எது கற்கண்டு என்று பிரித்துப் பார்ப்பது மிகவும் சிரமமான விஷயம்.

ஒரு கட்டுரையில் நான் மெய்வழிச்சாலை ஆண்டவர் பற்றி, அவருடன் இருந்தவர்கள் கண்ட அதிசயங்கள் பற்றி எழுதியிருந்தேன். என்னிடம் சொன்னவர்கள் பொய் சொல்ல வாய்ப்பில்லை. அவர்களது அனுபவங்கள் உண்மையாயிருக்க இருக்கும் வாய்ப்பைப் போலவே அந்தந்த குரு/சூஃபி/சாமியார்கள்/எவாங்கலிக்கர்கள் பித்தலாட்டக்காரர்களாயிருக்கும் வாய்ப்பும் அதிகமே.

திராவிடர் கழகப் பேச்சாளராயிருந்த அருள்மொழி ஒரு முறை பெரியார் திடலில் நடந்த கூட்டத்தில், மெரீனா பீச்சில் ஒரு கிறிஸ்துவ சுவிசேஷக் கூட்டத்திற்குப் போய் வந்த தோழிக்கு காது கேட்க ஆரம்பித்தது குறித்து நகைச்சுவையுடன் கூறினார். இந்த அதிசயங்களில் எது சைக்காலஜி சம்பந்தப்பட்டது, எது மேஜிக், எது கற்பனை, எது நிஜம் என்று பிரித்தறிவது சிக்கலான விஷயம். காரணம், நமது உலகப் பார்வை என்பது பாதிக்கு மேல் கற்பனை கலந்ததே. பல சமயங்களில் நாம் இல்லாத விஷயங்களை இருப்பதாகவோ, இருக்கும் விஷயங்களை இல்லாததாகவோ கற்பனை செய்து கொள்கிறோம், அது சாதாரணப் பார்வையாக நம்மிடம் இருக்கிறது. பல மேஜிக் நிபுணர்கள் நம்மிடையே இருக்கும் இந்த ‘black spot’ஐ பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

***

இது போன்ற சாதாரண தந்திரங்கள் மட்டுமில்லாமல், உண்மையிலேயே பலவித குணநலன்களும் ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது. ஏனெனில், நம்பிக்கை என்பது பல வித அதிசயங்களை நிகழ்த்திவிடும். திருடனாகவும், கொள்ளைக் காரனாகவும் இருந்து இறந்து போனவர்கள் பீர் ஆகவும், வலிமாராகவும், சித்தபீடங்களாகவும் மாறிவிட்ட நிலையில் அங்கே சென்று பயபக்தியுடன் பிரார்த்திப்பவர்களுக்கு ஏற்படும் அனுபவங்கள் அதிசயங்கள் இப்படித்தான் நம்பிக்கை நம்முள் இருக்கும் சக்தியை உசுப்பிவிடுவதன் விளைவாக நிகழ்கின்றன.

இதில் சாருநிவேதிதா குழம்பிப் போயிருப்பதும் இயல்பாக நிகழக்கூடிய விஷயமே.

Series Navigation

நேச குமார்

நேச குமார்