இப்னு ஹம்துன்
நாகாவை எனக்கு நாலரை வருடங்களாகத் தெரியும். என் கழுத்தில் கத்தி வைக்கத் துணிகிற, அதற்கு நான் அனுமதிக்கிற ஒரே ஆள் அவர். (“ஹ, இதென்ன, பெரிய கம்பசூத்திரமா” என்று எண்ணி, யாரும் வந்து அப்படி செய்ய மாட்டீர்கள் என்கிற நம்பிக்கையில் தான் சொல்கிறேன்). நாகா, பத்தாவிலுள்ள ‘சென்னை முடி திருத்தக’த்தில் ஒரு பணியாளர். ஐவரில் ஒருவர்.
ரியாத் வந்த புதிதில் எங்கு போய் ‘முடி’ இழக்கலாம் என்று யோசித்து ‘பத்தா’வைச் சுற்றி வந்த என்னை ஈர்த்தது சற்று தொலைவில் கண்ணில் பட்ட ‘சென்னை’. உள்ளே நுழைய அதன் பின்னும் யோசிப்பேனா, என்ன.
‘சென்னை முடி திருத்தகம்’ சந்துகள் நிறைந்த பத்தாவில் ஒரு பெரிய சந்தில் இருக்கிறது. கவர்ச்சிப்படங்களின் வாய்ப்பும் வழியுமற்ற சவூதியில் எல்லா நவீன முடி திருத்தும் நிலையங்களைப் போலவே சுற்றிலும் கண்ணாடியால் தன்னை நிரப்பிக்கொண்டிருக்கிறது. சற்றே நீளமான கடை.உள்ளே நுழைந்த நான் ‘காத்திருப்போர் பட்டியலில்’ தான் இடம் பெற முடிந்தது. பின்னே, உள்ளே வந்தவுடன் ‘எந்திரி’ என்று அடுத்தவனைச் சொல்லிவிட்டு தான் ‘மந்திரி’யாக அமர்ந்துக்கொள்வதற்கு ஒரு முடி திருத்தகத்தில் முடியாதல்லவா?!
ஒரு சில நிமிடங்கள் கரைய, நான் அழைக்கப்பட்டேன். அழைத்தவர் தான் நாகா என்பது பிறகு தான் தெரிந்தது. முதலில் என் விருப்பம் கேட்டறிந்தார். பின்னர் இலாவகமாகவும் பொறுமையாகவும் தன் பணியில் ஈடுபட்டார். அவருடைய பொறுமை தொடக்கத்தில் சற்றே எரிச்சலாகவும் எனக்கு இருந்தது. பக்கத்து இருக்கை அதற்குள் மூன்று ‘மந்திரி’களைப் பார்த்திருந்தது. ‘என்ன இவர் இத்தனை மெதுவாக இருக்கிறாரே’ என்ற என் எண்ணம் முடி திருத்திக்கொண்ட பின் கண்ணாடியில் என்னைக் கண்ட போது மாறியிருந்தது.
“அருமை” என்றேன் என்னையறியாமலேயே.
“இப்படியே நீங்க பொண்ணு பார்க்கப் போகலாம்ணே” என்றார் நடுத்தரவயது நாகா – இளையவர் பெரியவர் பாராமல் “அண்ணே” போட்டு விளிக்கும் தஞ்சைத் தமிழில்.
“பொண்டாட்டி வுட்டான்னா போவலாம் தான்” என்றேன் நானும்.
இப்படியாகத் தொடங்கிய எங்கள் நட்பு வளர ஏதுவாக ஒரு ‘நடை’ தூரத்தில் அமைந்திருந்த அந்த முடி திருத்தகத்தில் தமிழகத்தின் பிரபலமான இரு தினசரிகளும் நட்பு வளர்க்கும் வாடிக்கையாளர்களும். கூடவே நாகாவின் நல்ல, எதையும் எளிதாக எடுத்துக்கொண்டு விடுகிற குணம். ஆனால் தான் சொல்வது தான் சரி என்று சாதிப்பார். மெல்லுவதற்கு எதுவும் கிடைக்காத போது மற்ற பணியாளர்களுக்கும் நட்பான வாடிக்கையாளர்களுக்கும் நாகா தான் ‘அவல்’.
கூட்டமில்லாத சமயத்தில் கலாய்க்க நினைத்து ” இன்னிக்கு என்னாச்சு தெரியுமா, ஒரு சவூதிக்காரன் நாகா அண்ணங்கிட்ட முடி வெட்டிக்க வந்தான், கத்தரி போடணுமா, மெசினான்னு அவங்கிட்ட தமிழ்ல கேக்குறாரு,”
என்று ஒரு சக பணியாளர் தொடங்கி வைக்க
“அவெம், அவெம் மொழில பேசும்போது நாமளும் நம்ம மொழில தான் பேசணும்னு அண்ணன் சொல்லுவாரு- இல்லயா நாகாண்ணே” என்பார் மற்றவர் – இப்படியாக நாகாவை வைத்தே ஒரு நகைச்சுவை படம் ஓட்டுவார்கள். என்ன தான் தன்னைப்பற்றி மோசமாக கிண்டல் செய்தாலும் நாகா கொஞ்சம் கூட கோபப்படமாட்டார். அவரும் சேர்ந்து சிரித்து அந்த கணத்தை இனிமையாக மாற்றிக்கொள்வார். புன்னகை ஒருபோதும் அவர் உதட்டிலிருந்து உதிர்ந்து விழுந்து நான் பார்த்ததேயில்லை.
போன முறை போயிருந்த போது, விமான சேவை பற்றி பேச்சு வந்தது.
“ஸ்ரீ லங்கா (விமானம்) வுல போறது ரொம்ப மலிவுண்ணே” என்றார் ஒருவர்.
“ஆனா, கொளும்பு போயித்தான் போவும். கொளும்புலேந்து சமயத்துல கன்ஃபாம் கெடைக்காம போயிறும்” என்றார் மற்றொருவர்.
“யார் சொன்னது, கொளும்புலேந்து மணிக்கொருக்கா ஃபிளைட் இருக்குப்பா” என்றார் நாகா – தஞ்சை-திருச்சி பேருந்து என்று எண்ணிக்கொண்டு.
முடி திருத்திக்கொள்ள அமர்ந்திருந்த எனக்கு பணி சார்ந்த உண்மையைச் சொல்ல நாவு எழுந்தாலும் உள்ளிருந்த ஒரு குரல் ‘கேட்டுட்டுருக்கம்ல – கம்முன்னு கிட’ என்றது.
கிரிக்கெட், சினிமா தொடங்கி சகலமும் அங்கு அலசப்படும். எதுவுமில்லாத சமயங்களில் இருக்கவே இருக்கிறார் நாகா என்று ஆகிப்போயிருந்தது. எதற்காகவும் கோபப்படாத அவரை எனக்கும் பிடித்திருந்தது. அவரிடம் மட்டும் தலை கொடுப்பதாக தீர்மானித்திருந்தேன்.
சென்ற தடவை அங்கு தேர்தல் பேச்சுக்கள் களை கட்டியிருந்தன. “இங்கு அரசியல் பேசக்கூடாது” என்றோ “அரசியலையும் செருப்பையும் வெளியே விட்டு விட்டு வரவும்” என்றோ அறிவிப்புகள் இல்லாமலே அரசியல் பேச வாய்ப்பின்றி வறண்டுப் போயிருக்கும் நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தல், சொந்த நாட்டின் அரசியலைப் பேசுவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. பாலையில் பெய்த மழை.
“யாருண்ணே ஜெயிப்பான்றீங்க?” என்றார் நாகாவின் சக தோழர்.
“யார் நம்ம தலைல நல்லா மொளகா அரைக்கிறாங்கன்றத பொறுத்தது ” என்று வழக்கமான குதர்க்கத்துடன் பதில் சொன்னேன்.
அப்போது நாகா வாயைத்திறந்தார்: “நம்மாளு தாண்ணே ஜெயிப்பாரு”
“நம்மாளுன்னா…?”
“நம்ம தலைவர்ணே, இன்னா தெறம அவருக்கு, அவரை மாதிரி இன்னி தேதிக்கி யார்ணே இருக்கா?” (ஒரு சிறு விளக்கம்: ‘தலைவர்’ என்று சொல்வதை இங்கு பொதுவாகக் கொள்வோம். ஆண்பாலாகவோ, பெண்பாலாகவோ அது இருக்கலாம்).
அன்று தான் நாகாவின் அரசியல் அபிமானம் எனக்குத் தெரிய வந்தது. ஓய்வாக பக்கத்தில் வந்தமர்ந்தவர், ஊரில் கட்சியில் அவர் வகித்த சிறிய பதவி பற்றி, கட்சிக்காக ஜெயிலுக்குப் போய் வந்தது பற்றியெல்லாம் சொன்னார். அட, இது நாகாவின் இன்னொரு முகம். ஆச்சரியமாக இருந்தது.
அரசியல் கலகலப்புகளில், கலாய்ப்புகளில் நேரம் போனதே தெரியவில்லை.
சென்னை முடிதிருத்தகத்தின் அந்த ஐந்து பணியாளர்களில் ஒருவரே முதலாளி. மற்றவர்கள் சம்பளப்பணியாளர் தாம். அந்த முதலாளி தமிழர் மாதந்தோறும் ஒரு தொகையை கடையை தன் பெயரில் உரிமம் வைத்திருக்கும் மண்ணின் மைந்தருக்கு தந்துவிடுவார். மற்ற இலாப நட்டமெல்லாம் அவரோடு.
அன்றைக்கு முடி வெட்டிக்கொள்வதற்காக ‘சென்னை’க்குப் போயிருந்தப்போது கடையில் நாகாவைக் காணவில்லை.
“நாகாண்ணே இன்னும் வரல்லியா?” என்றேன்.
“அவரு இனிம வரமாட்டாருங்க, வேலைய விட்டு நின்னுட்டார்” என்றார் கத்தரியும் கையுமாக இருந்த ஒரு பணியாளர்.
எனக்கு ஆச்சரியமாக; அதைவிட அதிர்ச்சியாக இருந்தது.
“என்னாச்சு?” கேட்க நினைத்தேன். ஏனோ கேட்கவில்லை. அவரும் வேலையில் மும்முரமாகிவிட்டிருக்க, கையிலிருந்த கத்தரியும் அரசியல் தலைகளைப் போல காற்றில் எதையோ எதிரும்புதிருமாக வெட்டிக்கொண்டிருந்தது.
“சரி, வரேங்க!” – எனக்கே கேட்காத குரலில் சொல்லிவிட்டு திரும்பி நடந்தேன்.
‘ஏன் வேலையை விட்டு நின்று விட்டார்’- நாகாவைப் பற்றி சிந்தித்தப்படி நடந்துக்கொண்டிருந்தவனை “வாங்கண்ணே” என்ற நாகாவின் குரலே கலைத்தது. திருப்பத்தில் நின்றபடி வழக்கம் போல் ‘பீடி’ புகைத்துக்கொண்டிருந்தார். பீடியை கீழிட்டு காலால் மிதித்த படி ” முடி வெட்டிக்க வந்தீங்களா?” என்றார்.
“ஆமங்க! நீங்க தான் வேலய விட்டு நின்னுட்டீங்களாமே?”
“எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்குண்ணே” என்ற நாகா, “வாங்கண்ணே, டீ குடிச்சிட்டே பேசலாம்” என்று சொல்லி என் பதிலை எதிர்பாராதவராய் அருகிலுள்ள ‘அதிர்ஷ்டம் கஃபே’ க்கு நடந்தார்.
தேனீர் குடிப்பதன் பொருட்டு கடையில் எதிரெதிர் இருக்கையில் அமர்ந்தபின்னர் “சொல்லுங்க” என்றேன்.
“என்னப் பத்தி எதுவேணாலும் பேசட்டும்ணே,ஏதாச்சும் கோவப்பட்டுருக்கேனா?, என் தலைவனப் பத்தி எப்படிங்க மோசமா பேசலாம்” என்றார் நாகா!
“அப்படி என்ன மோசமா பேசிட்டாங்க?”
“உங்களுக்குத் தெரியாதுண்ணே, அன்னிக்கு ரொம்ப ஓவராப் பேச ஆரம்பிச்சுட்டாங்க, நானும் எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன்.., வேணாம்னு. கடசீல, ……..ராப்போச்சுன்னு வெளில வந்துட்டேன்”
‘இதுதானா பிரச்னை’ என்றிருந்தது எனக்கு.
” தலைவனுக்காக ஜெயிலுக்கே போனவன்ங்க நான்…” என்று தொடங்கி அதன்பின் நாகா சொன்ன எதுவும் என் காதில் விழவில்லை.
மின்விசிறியின் சுழலில் படபடத்த நாளேடு காலத்தின் ஏடாகத் தோன்ற, அதில் தலைவர்கள் கையுயர்த்திச் சிரித்துக்கொண்டிருந்தார்கள். ‘ஆளப்போவது யார்’ என்று தலைப்பிட்டிருந்த அந்த செய்திவிளம்பரத்தில் ஒரு நாற்காலியும் இருந்தது. பின்னால் நிறைய நாகாக்கள் தெரிந்தார்கள்.
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
www.ezuthovian.blogspot.com
fakhrudeen.h@gmail.com
- புலம் பெயரும் மக்களைப்பற்றின சில படங்கள்
- பாரத தேசத்துக்குப் படைப்பலம் அளித்த விஞ்ஞான மேதை டாக்டர் அப்துல் கலாம் -7
- ஒரு கணம்
- மெய் எழுத்து ஏடு ஜூலை முதல்
- மீனாட்சிபுரம் முஸ்லிம்கள் பற்றி திரு.வெங்கட்சுவாமிநாதன் சமூகத்திற்கு…
- PhD மாணவர்களின் நிலை
- மும் மொழி மின் வலை இதழ்
- அற்றைத்திங்கள் நிகழ்ச்சி
- சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகத்தின் 2-ஆம் தேசிய கருத்தரங்க அறிவிப்பு
- கடிதம் (ஆங்கிலம்)
- அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை கவிதைத் திருவிழா
- பேராசிரியர் சிவத்தம்பியின் 75 வது வயது நிறைவு
- அர்த்தமுள்ள அறிமுகங்கள்
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 19
- நகுலனின் நினைவில்
- இலை போட்டாச்சு! – 30 அடை
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 11
- காதல் நாற்பது (22) கொடுமை இழைக்கும் இவ்வுலகம் !
- பயம்
- பெரியபுராணம்- 132
- உம்மா
- தந்தை மகற்கு ஆற்றும் நன்றி
- நிலமகளின் குருதி! (தொடர்ச்சி) – 2
- ஊதா நிறச் சட்டையில்…
- நாற்காலிக்குப் பின்னால்
- ஆறும் ஒன்பதும்
- தொடர்நாவல்: அமெரிக்கா! – அத்தியாயம் பதினொன்று: இளங்கோ இலங்கா ஆன காதை!
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்: 8 காட்சி: 2 பாகம்: 2)
- சுளுக்கெடுப்பவர்
- கால நதிக்கரையில் .. – 7
- விவாகங்கள் விகாரங்கள் விவாதங்கள்