நான் வானவியலுக்கு புதியவன். நான் எந்த தொலை நோக்கியை வாங்குவது ?

This entry is part [part not set] of 30 in the series 20020302_Issue

வானவியல் கேள்விகள்


கேள்வி: நான் வானவியலுக்கு புதியவன். நான் எந்த தொலை நோக்கியை வாங்குவது ?

பதில்:

அமெச்சூர் வானவியலுக்கு நல்வரவு.

4.5 இன்ச் ரிஃப்லக்டர் தொலைநோக்கி நல்ல ஆரம்ப தொலைநோக்கி. ஆனால் உங்களது அனுபவத்தைப் பொறுத்தது.

கடைகளில், மீட், செலஸ்ட்ரான், ஓரியன், கோல்டர் ஆகிய நிறுவனங்களின் தொலைநோக்கிகள் கிடைக்கின்றன. இவைகளில் மீட் தொலைநோக்கியும், செலஸ்ட்ரான் தொலைநோக்கியும் சிறப்பானவை. இவைகளின் நுட்பமான வித்தியாசம் மிகவும் தேர்ந்த ஒரு வானவியலாளருக்குத் தான் தெரியும். வெறுமே பார்க்கமட்டுமே தொலைநோக்கிகள் உபயோகப்படுத்தப்பட்டால், எந்த தொலைநோக்கியும் உபயோகப்படுத்தலாம். ஆனால், பார்க்கும் படத்தை ஒளிப்படமாக எடுக்கவேண்டுமென்றால், நீங்கள் மீட் அல்லது செலஸ்ட்ரான் வாங்கவேண்டும்.

ஐ-பீஸ் எனப்படும் கண்ணருகு லென்ஸ் முக்கியமான ஒரு பகுதி.

பெரிதாக்கம் (magnification) அதிகமாக இருக்கவேண்டும் என்று கட்டாயம் இல்லை. பெரிதாக்கம் (magnification) அதிகமாக இருந்தால், பார்க்கும் பகுதி (field of view) சிறியதாகி விடும். இவ்வாறு பார்க்கும் பகுதி சிறியதாவதால், பார்க்கும் பொருள்கள் மங்கியதாக தெரியும். ஒரே ஒரு கண்ணருகு லென்ஸ் இருக்குமாயின், இது நல்ல பெரிய பார்க்கும் பகுதி கொண்டதாக இருக்க வேண்டும். சுமார் 1 டிகிரி இருந்தால் நன்றாக இருக்கும். இப்படி இருந்தால், நட்சத்திரக் கூட்டங்களையும், நெபுலாக்களையும், காலக்ஸிகளையும் காண எளிதாக இருக்கும்.

உங்களிடம் ஏற்கெனவே ஒன்றுக்கு மேற்பட்ட கண்ணருகு லென்ஸ்கள் இருந்தால், அதிகமான பெரிதாக்கம் உள்ள தொலைநோக்கிகளை வாங்கலாம்.

முதலில், வானத்தில் இருக்கும் ஒரு பொருளை பரந்த பகுதி காட்டும் கண்ணருகு லென்ஸ் (wide field eyepiece) கொண்டு மையப்படுத்திக்கொண்டு, பின்னர், அதிக பெரிதாக்கம் உள்ள கண்ணருகு லென்சுக்கு மாற்றிகொண்டு நன்றாகப் பார்க்கலாம். இது zoom-in போல நன்றாகத் தெரிய உதவும். அதிக பெரிதாக்கம் உள்ள கண்ணருகு லென்சு மட்டுமே கொண்டு ஒரு பொருளைத் தேடுவது கடினம்.

கண்ணருகு லென்ஸ்கள் குவிதூரம் (focal length) மில்லி மீட்டரில் குறிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. ஆகவே, நல்ல கண்ணருகு லென்ஸ் தேடும்போது, உங்களது தொலைநோக்கியின் குவிதூரத்தை (focal length) அறிந்து கொள்வது நல்லது.

கண்ணருகு லென்ஸின் பெரிதாக்கத்தை கண்டறிய கீழ்க்கண்ட வாய்ப்பாட்டைப் பயன்படுத்தலாம்.

பெரிதாக்கம் = தொலைநோக்கியின் குவிதூரம் / கண்ணருகு லென்ஸின் குவிதூரம்.

பெரும்பாலான தொலைநோக்கிகளோடு கண்ணருகு லென்ஸ்களும் விற்கப்படுகின்றன. அவற்றின் குவிதூரம் பெரும்பாலும், 20லிருந்து 32 மி.மீ வரை இருக்கும். நடுத்தர பெரிதாக்க கண்ணருகு லென்ஸின் குவிதூரம் 12-18 மி.மீ. மிகவும் அதிக பெரிதாக்கம் உள்ள கண்ணருகு லென்ஸின் குவிதூரம் 6-12 மி.மீ எனலாம்.

கேள்வி: எப்படி கிரகங்களை என் தொலைநோக்கி மூலம் கண்டுபிடிப்பது ?

பதில்:

தொலைநோக்கி இல்லாமலேயே கிரகங்களை வெறும் கண் மூலமே பார்க்க முடியும். புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி போன்ற கிரகங்களை தெளிவாக சாதாரண கண்கொண்டே பார்க்க இயலும். வெள்ளி, வியாழன், சனி ஆகியவை மிகவும் எளியவை. ஏனெனில் அவை மிகவும் பிரகாசமானவை. http://skyandtelescope.com/ மற்றும் http://www.astronomy.com ஆகிய வலைப்பக்கங்களில் மாதம் தோறும், எங்கெங்கே கிரகங்கள் இருக்கும் என்ற வரைபடங்களை வெளியிடுகிறார்கள். அவற்றைப் பாருங்கள்.

வெறும் கண்களால் கிரகங்களைப் பார்த்த பின்னர், அவைகளை தொலைநோக்கி மூலம் பார்க்க முயலுங்கள். தொலைநோக்கியை அந்த கிரகங்களை நோக்கித் திருப்பி, தொலைநோக்கியின் கண்ணருகு லென்ஸ் அருகில் கண்களை வைத்துக்கொண்டு, தொலைநோக்கி வழியே பார்க்காமல், தொலைநோக்கியின் விளிம்பு பார்க்கும் கிரகத்தை ஒட்டி இருப்பது போல வைத்துக்கொண்டு மீண்டும் தொலைநோக்கி வழியே பார்க்க முயலுங்கள். சில தொலைநோக்கிகளில், கண்டுபிடிக்கும் தொலைநோக்கி (finder scope) என ஒரு உப கருவி பொருத்தப்பட்டிருக்கும். இதன் வழியே பெரிய அளவில் பார்த்துவிட்டு, கிரகத்தை மையப்படுத்திவிட்டு, முக்கிய தொலைநோக்கி வழியே அந்த கிரகத்தைப் பார்க்கலாம். சில வேளைகளில், சரியாக கிரகத்தின் ஒளி குவிக்கப்பட்டிருக்காது. குவிமையத்தைச் சரிப்படுத்தி தெளிவாகக் காணலாம்.

மிகவும் முக்கியமான விஷயம், பொறுமை. தொலைநோக்கியை உபயோகப்படுத்துவதை கற்றுக்கொண்டு, எப்படி ஒரு பொருளைப் பார்ப்பது என கற்றுக்கொள்ள சில நாட்கள் ஆகும். அதைரியப்படாதீர்கள். சில நாட்களுக்குப் பிறகு, கிரகங்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிய விஷயமாகிவிடும்.

எவ்வாறு தொலைநோக்கிகளை உபயோகப்படுத்துவது என்பதை விளக்கும் நல்ல வலைப்பக்கம் இங்கே.

http://skyandtelescope.com/

சந்திரனை வைத்துக்கூட உங்கள் தொலை நோக்கியைக் கற்றுக்கொள்ளலாம். ஆனால் எக்காரணம் கொண்டும், சூரியனை தொலைநோக்கி மூலம் பார்த்துவிடாதீர்கள். கால் வினாடி சூரியனை தொலைநோக்கி மூலம் பார்த்தாலும், உங்கள் கண் நிரந்தரமாக கெட்டுப்போக வாய்ப்பு இருக்கிறது. ஜாக்கிரதை.

Series Navigation

வானவியல் கேள்விகள்

வானவியல் கேள்விகள்