நான்காவது கொலை!!! (அத்யாயம் எட்டு)

This entry is part [part not set] of 28 in the series 20020924_Issue

ஜெயமோகன்


அத்யாயம் எட்டு

கைரேகை நிபுணர் பேரா கைலாச மூர்த்தி எம். ஏ , எல்.எல். எஸ், பி, ஏ.ஏ, எஸ்.ஏ, டி ஆர். ஓ அவர்களின் அறைக்கதவை கோபாலன் பவ்யமாக தட்டி காத்து நின்றபோது உள்ளிருந்து சன் டிவி சின்னம் போல குங்குமப் பொட்டு போட்ட ஒரு மாமியும் அவளுக்குரிய மாமாவும் வெளிவந்து செருப்பணிந்து கோபாலனை குறுகுறுப்பாக பார்த்து சென்றார்கள்

‘வாங்கோ! வாங்கோ! ‘ என்றார் கைரேகை நிபுணர் ‘ உக்காருங்கோ. செளக்கியமா உக்காருங்கோ ‘

கோபாலன் உட்கார்ந்து , ‘ கொஞ்சம் வில்லங்கமான கேஸ். கைரேகை ஒரு கிளவுசுக்கு உள்ள இருக்கு ‘ என்றார்.

‘கவலையை விடுங்கோ .என்னாங்க நீங்க ? இதுக்குப்போய் கவலைப்பட்டுட்டு … இப்டித்தான் ஒரு மாஜி மிலிடரி காப்டன் , ரெண்டுகையும் கெடயாது . கைரேகை பாக்கணும்கிறார் . ஆசப்பட்டுட்டாரே விடமுடியுமா ? முதல்லே அவரோட அங்க லட்சணத்த வச்சு கையை கம்யூட்டர் கிராஃபிக்ஸ் பண்ணி கையை வரஞ்சாச்சு. அப்புறமா விலாவரியா பாத்து சொன்னோம்…குடுங்க ‘

நிபுணர் கிளவுஸை ஒரு இடுக்கியின் உதவியால் வாங்கி அதை மறுபக்கமாக் திருப்பி ரசாயனப்பொடி ஒன்றை மென்மையாக தூவி நாசுக்காக ஸ்கானரில் வைத்தார் . ‘இது ரொம்ப சாதாரணம் பாருங்கோ.கம்யூட்டர் வந்த பிறகு எல்லாம் ரொம்ப ஈஸியா ஆயிருச்சு. நம்ம ஃப்ரண்டு ஒத்தன் பூனாவிலே இருக்கான்.நீங்க உங்க ஒருதுளி விந்து குடுத்தாபோரும் , அதை டி .என் .ஏ மானிடரிங் பண்ணி அந்த குழந்தையை டிசைன்பண்ணி அதன் கையை கிராஃபிக்ஸிலே வரைஞ்சு அதுக்கு ரேகை பாத்து பலன் சொல்லிடுவான்… ‘

கைமானிட்டரில் தெரிந்தபோது நிபுணர் உற்று பார்த்து கீபோர்டை தட்டினார்

‘பாத்து சொல்லுங்கோ ‘

‘எந்த ஊர்லேசார் இருக்கீங்க ? ரேகை டேட்டாவையெல்லாம் அப்டியே நேரா பைனரிக்கு மாத்த சாஃப்ட்வேர் வந்தாச்சு . எந்த மாதிரி அனலைசிங் தேவையோ அதைச் தனியா செஞ்சு குடுக்க ஆயிரம் சாஃப்ட்வேர் வந்திருக்கு ‘ திரையில் எழுத்துக்கள் ஓட ஆரம்பித்தன.

‘உச்! உச் !உச் ! ‘ என்றார் நிபுணர் ‘ஆயுஷ்ரேகை இடமாஏறி போகுதுசார். இந்தாள் எப்ப காலீன்னு சொல்ல முடியாது . வித்யாரேகை பரவாயில்லை .உத்யோகம்……பிரிண்ட் அவுட் எடுத்தே குடுத்திடறேன்.. ‘ ‘

கோபாலன் கையில் தாளுடன் வெளியே வந்து மாடிப்படியில் நின்று ‘ஆயுசோட இருந்தா சரி ‘ என்று சொன்ன சாம்புவின் துப்பறியும் தீர்க்கதரிசனத்தை எண்ணி ஆனந்தக் கண்ணீர்வடித்தார்.

******

சங்கர்லால் கால் கை முகம் என முறைப்படி படிப்படியாக வெளிப்பட்டு சமையலறையின் ரகளைக்குள் புகுந்து வந்தபோது அங்கே மதியச்சாப்பாடு ஏற்பாடுகள் போர்க்க்கோலம் பூண்டிருந்தமையால் அவரை எவருமே கவனிக்கவில்லை .ஆனால் துப்பறியும் நிபுணர்கள் பிறர் கவனிக்காத எதையாவது கவனித்தேயாகவேண்டுமென்பதால் அவரை இரு கண்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தன.அக்கண்களுக்கு கீழே இருந்த வாய் சரக்கு மாஸ்டரிடம் அன்பளிப்பாகப் பெற்ற அப்பளத்தை தின்றுகொண்டிருந்தது .

அவ்வுறுப்புகள் சி .ஐ. டி இன்ஸ்பெக்டர் கோபாலனுடையதாக அன்றி வேறு எவருடையனவாகவும் இருக்க நியாயமில்லை என்பதை நேயர்கள் இதற்குள் உணர்ந்துவிட்டிருப்பார்கள் . [துப்பறியும்

கதை வாசகர்கள் உணர வேண்டியதை மட்டும் உணர்ந்து மற்றவற்றை தேவையான இடம்வரை உணராமலிருக்கும் தேர்ச்சி கொண்டவர்கள் ]

வினிகர் கஞ்சித்தண்ணி ஆகிய மூலபொருட்களை கலந்து புளித்த மூத்த தயிரை அதில் துணைப்பொருளாக சிறிதளவு சேர்த்து மோர் செய்துகொண்டிருந்த சரக்கு மாஸ்டர் குட்ட்ப்பன் நாயர் ‘…. அதனாலேதான் கேட்டோ , ஞான் ஸ்ரீராமனை கும்பிடறதில்லை . நம்ம இஷ்ட தெய்வம் கிருஷ்ணன்தான். ஒண்ணுமில்லேன்னானுலும் அவர் நாயர் தானே ? ‘ என்றார் .

துப்பறியும் நிபுணர் கோபாலன் கழுகுக் கண்களை [துப்பறியும் நிபுணர்களுக்கு இவை கண்டிப்பாக தேவை. நேர்முகதேர்விலே எம் .என் .நம்பியாரை ஜூரியாகக் கொண்டு இதை தனியாகப் பரிசோதனை செய்வார்கள் ] சங்கர்லால் மீது பதித்தபடி ‘ அதெப்டி அவர் கோனார் இல்லையோ ? ‘ என்றார் .

‘ கிருஹ நிலை பிழச்சா யாருக்கும் மாடுமேக்கிற கெதி வரும் சாரே . கிருஷ்ணனைப்பற்றி அம்பாடி கோவிலிலே போடுற பாட்டிலே தெளிவாக சொல்லியிருக்கு.. ‘

‘அடப்பாவி , கூஜாவா திருடுறாய் ? ‘ என்று வியந்த கோபாலன் ‘என்னபாட்டு ? ‘என்றார்

குட்டப்பன் நாயர் மோரை கலக்கி மூடிவைத்து ‘ தாயே யசோதே உந்தன் நாயர் குலத்துதித்த… ‘ என்று பாட ஆரம்பிக்க கூஜா கிளம்பிபோக சங்கர்லாலும் , கூடவே கோபாலனும் , கிளம்பிசென்றார்கள் .

கூஜா லிஃப்ட் வழியாக மாடிக்குபோக , தொடர்ந்து சங்கர்லால் ஃப்யர் எஸ்கேப் வழியாக வேர்த்து கதிகலங்கி ஏற , மாடிப்படிவழியாக கோபாலன் நடந்தார் .

சங்கர்லால் ஃப்யர் எஸ்கேப்பிலிருந்து மாடியறையில் திறந்துகிடந்த கம்பிகள் இருக்க வாய்ப்பில்லாத சன்னலுக்கு குதித்தார் . கீழே அதலபாதாளத்தில் ஓட்டலின் கார்பார்க்கிங் தெரிந்தபோது சற்று பகீரிட்டதெனினும் ‘ மடத்தனம், எங்கியாச்சும் துப்பறியும் நிபுணர் கால்தடுக்கி விழுந்து செத்ததா சரித்திரம் உண்டா ? ‘ என்று ஆசுவாசப்படுத்திக் கொண்டார் .கண்ணாடி கதவை [உயர்தர பூட்ஸ் அணிந்த கால்களால்] உதைத்து திறந்து உள்ளே புகுந்து இத்தகைய நோக்கங்களுக்காகவே கட்டப்பட்டிருக்கும் உயரமான தரை தோயும் கனமான திரைச்சீலைக்கு பின்னால் பதுங்கிக் கொண்டார் .

‘பாஸ் கொலை நடந்த அன்னிக்கு இந்த ஓட்டலுக்கு வந்த எல்லா காலையும் ட்ரேஸ் பண்ண டெலிபோன் எக்சேஞ்சிலே சொல்லிட்டேன் . சுவாரஸியம் என்னன்னா அங்கே சங்கர சுப்பூன்னு ஒரு ஆபரேட்டர்…. ‘

‘மூத்த பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்காராமா ? ‘

‘இல்லை பாஸ், இவ சின்னப் பொண்ணு . பதினெட்டு வயசு இளமொட்டு மனசூன்னு கம்பன் சொன்னாப்லே ‘

‘என்ன கண்ராவீடா பேரு.. ‘

‘அதுக்கென்ன பாஸ் . ஏ ரோஸ் ஈஸ் ஏ ரோஸ் ஈஸ் ஏ ரோஸ் அப்டான்னு ஒரு மேலைதேசத்துக் கவிஞன் பாடினானே . ரோஜா எந்த ரோல்லே நடிச்சாலும் ஒரேமாதிரித்தான் பண்ணுவாங்கன்னு .. ‘

சங்கர்லால் நம்பியார் போல ஒரு கைமுஷ்டியை மறுகை பரப்பில் குத்தி ,வாயை கோணலாக கடித்து, கழுகுப்பார்வை பார்த்து, ‘அப்படியானால் இவர்கள்தான் கொலைக்காரர்கள் ‘ என்றார். அவரது சிந்தனை படிப்படியாக அதிநுட்பமாக விரிவடைந்தது ‘ ஆகவே இவர்களைத்தான் நான் துப்பறியவேண்டும். அதற்கு இவர்களைப்பற்றிய அனைத்து தகவல்களையும் நான் திரட்டவேண்டும் .அதன் பொருட்டு இவர்களை நான் பின் தொடரவேண்டும் . ‘

அவர்கள் இருவரும் கிளம்பி அறையை பூட்டிவிட்டு போனபிறகு சங்கர்லால் பாய்ந்துவந்து அந்த டிரான்ஸ்மிட்டரை எடுத்து சட்டைப்பயில் வைத்துக் கொண்டு சன்னல் வழியாக வெளியேறி ஃபயர் எஸ்கேப் வழியாகவே இறங்கினார் .அவரை இரு கழுகுக் கண்கள் கவனித்துக் கொண்டிருந்தன என்பது இங்கு உட்குறிப்பு .

சங்கர் லால் தொலைவில் கணேஷ் வசந்த் இருவரும் பேசியபடியே போவதைக் கண்டார் .அவரது இதயம் காதில் முரசறைந்தது [டிரான்ஸ்மிட்டர் சட்டைப்பையில் இதயத்தின்மீது இருந்ததனால் ]

*****

ஹோம்ஸ் தன் பைப்பை ஆழ இழுத்தபடி ‘நல்லது வாட்சன் , நாம் ஊகித்தது போலவே நடந்துவிட்டது. வெல்லக்கட்டி ஒரு விஷப்பொருள் என்பது தெரியவருகிறது . ‘

‘ஆம் ஹோம்ஸ் .அதை நான் அப்போதே நக்கிப்பார்த்திருந்தால் இத்தனை தாமதமாகியிருக்காது ‘

‘ ‘இப்போது நாம் அக்கிழவனைத்தேடிச் செல்கிறோம் வாட்சன் ‘ ‘

‘ ‘அவன் இந்நேரம்வரை அங்கிருந்தால் ஆச்சரியம்தான் ‘ ‘.வாட்சன் சொன்னார் .

‘ ‘துப்பறிவாளர்கள் உச்சகட்ட காட்சி தவிர மற்ற தருணக்களில் எங்கும் மயிரிழை தாமதித்தே செல்லவேண்டும் வாட்சன் இது ஒரு உபபொன்விதி ‘ ‘ ஹோம்ஸ தெளிவுபடுத்தினார் .

எதிரே ஒரு வெள்ளைக்காரர் பதறியடித்தபடி வந்து ‘ மன்னிக்கவேண்டும் ஐயா, தாங்கள் இப்பக்கமாக பழைய இரும்புவியாபாரி ஒருவனைக் கண்டார்களா ? ‘ என்றார்

‘இல்லையே தாங்கள் யார் ? ‘

‘என் பெயர் இரும்புக்கை மாயாவி ‘

‘ அடாடா , இனிய சந்திப்பு .தாங்கள் ராணியின் மாட்சிமைதங்கிய சேவையில் உள்ளீர்களல்லவா ? ‘

‘ஆமாம் ஒரு கேஸ் விஷயமாக வந்தேன் ‘ மாயாவி தழுதழுத்தார் ‘ ஆனால் இப்போது திரும்பிப்போனால் எடுத்துக் கொள்வீர்களா என்று தெரியவில்லை . ஐயோ என் தேம்ஸ் நதிக்கரை மாதா, நான் என்ன செய்வேன் , ஏது செய்வேன் , ஒன்றுமே புரியவில்லையே . எனக்கு ஒருகையும் ஓடவில்லை இருகாலும் ஓடவில்லையே ‘

‘த , சும்மாகெட ! ‘ என்றார் ஹோம்ஸ் . பிறகு சுதாரித்துகொண்டு ‘ தங்கள் கவலை என்னவென நான் அறிந்துகொள்ளுதலை தாங்கள் அனுமதிக்கச் சித்தமாக உள்ளீர்களா ? ‘ என்றார் .

‘என் இரும்புக்கை போய்விட்டது அய்யா .. ‘

‘ சற்று முன்புதான் கை ஓடவில்லை என்றீர்கள் ‘

‘அய்யோ இது வேறுகதை . சாலையோரமாக நின்று வேற்கடலை தின்று கொண்டிருந்தேன் . ..அப்போது.. ‘

‘இரும்புக்கையால் வேற்கடலை உடைக்கமுடியுமா ? ‘ ‘

‘வறுக்கக் கூட முடியும் ஐயா. போயிற்றே.இந்நேரம் அது எந்தக் காயலான்கடையின் எப்படி நசுங்குகிறதோ ‘

‘அமைதியாக சொல்லுங்கள் . நாமெல்லாம் பிரிட்டிஷ்க்காரர்கள்…… ‘

‘சாலையோரமாக என் இரும்புக்கையை வேற்கடலையுடன் சற்று நீட்டினாற்போல வைத்துக் கொண்டிருந்தேன் . ஒரு பழைய இரும்புவியாபாரி மறுகையிலே ஒரு பிடி பேரீச்சம்பழத்தைத் தந்துவிட்டு அதைப் பிடுங்கிக் கொண்டு போய்விட்டான்… ‘

‘அவனை சும்மாவா விட்டார்கள்… ‘

‘நான் அதை ஆர். டி. எக்ஸ் என்று எண்ணி அப்படியே குப்புற விழுந்துவிட்டேன் . பிறகு ஓடிப்போய் குளித்துவிட்டு வருவதற்குள்….. ‘ ‘

‘எதற்குக் குளிக்கவேண்டும் ? ‘

மாயாவி சங்கடத்துடன் ‘இந்தியாவிலே சாலை ஓரங்கள் பன்முகப் பயன்பாடு கொண்டவை… ‘ என்றார்

‘தேடிப்பிடியுங்கள் , எங்கள் வேலை வேறு ‘ என்றார் ஹோம்ஸ் , சற்று தள்ளி நின்றபடி .

‘என்னுடைய பயம் அதல்ல… ‘ மாயாவி சொன்னார் ‘ காலையிலே சூப்பர்மேனை பார்த்தேன். தோள்பட்டையில் சுளுக்கு , பக்கத்திலே லேத்துப்பட்டறை ஏதாவது இருக்குமா என்றுகேட்டார். அவரை இந்தப் பயங்கர மனிதர்கள் இந்நேரம் அக்கக்காக கழட்டிவிட்டிருப்பார்களே .. ‘

‘அதெல்லாம் தப்பிவிடுவார் ‘ என்றார் ஹோம்ஸ் ‘ எங்களுக்குப் பலவிதமான வேலைகள் இருக்கின்றன … ‘

வாட்சன் ‘ இங்கே பலவிதமான மர்மப் பிராந்தியங்கள் உள்ளன . அங்கே இரும்புக்கையெல்லாம் சும்மா … சாரு நிவேதிதா என்று ஒருத்தர் எட்டுமணி நேரம் ஓடுவதுபோல இரும்பிலே …. ‘

‘வாட்சன் ஷட் அப் ‘ என்றார் ஹோம்ஸ்.

[தொடரும்]

Series Navigation

ஜெயமோகன்

ஜெயமோகன்