தி.ஜானகிராமன்
உப்பிலி வீட்டு வாசலில் கார் வந்து நிற்கிறது. கதவு திறக்கிறது. தட்டுச் சுற்று வேட்டி. சட்டை போடாத வெற்று உடம்பு. தோளில் சின்னச் சின்னக் கட்டம் போட்ட சிவப்பு காசித் துண்டு. தலையில் குடுமி. முன்பக்கம் சவரம் செய்யாது, பெண்பிள்ளை போல் நெற்றியிலிருந்தே வாரிச் சீவப்பட்ட தலை முடி. அதில் அங்கும் இங்கும் நரை. நெற்றியில் குங்குமம். குங்குமத்துக்குக் கீழ் துளி சந்தனப் பொருக்கு. வேர்வையில் கறுத்த பூணுல்.
கையில் ஒரு பையோடு இறங்குகிறார். திண்ணைப் பக்கம் வருகிறார்.
‘என்ன புரியலியா ? கோவிந்தன். ‘
‘கோவிந்தனா ‘ வா–வா, வா யாருடாப்பான்னு பார்த்தேன் ‘
‘கார்ல வந்து இறங்கறானே. யார்றாது–சட்டை கூட இல்லாமன்னு பார்த்திருப்பேள் ‘ இது சொந்தக்கார் இல்லே. ‘
‘வா வா உட்காரு–உனக்கு எதுக்கு சொந்தக்காரு ? ஊர்லெ இருக்கற கார்லாம் உன்னுதுதான் ‘
‘என்னுதுன்னு சொல்லாதீங்கோ–சங்கீத தேவதை யோடது–நாதப்பிரம்மத் தோடதுன்னு சொல்லுங்கோ ‘
‘அப்படியே வச்சுக்கோ. நீ இல்லாட்டா கர்நாடக சங்கீதம் யாரு ஓசிலெ கேக்கப்போறா இந்தச் சீமையிலெ. அப்படியெல்லாம் இருக்கச்சே காரா ‘ உனக்கு ஏரோப்ளேன், ஹெலிகாப்டர் இதெல்லாமனா குடுக்கணும் ‘ கார் கிடக்கு ‘
‘உப்பிலி அய்யங்கார் ஆயிரம் பரிகாசம் பண்ணட்டும், நான் அதுக்காக கோச்சுனுடப் போறதில்லே. உங்களுக்கு ஞாபகம் இருக்கோ என்னவோ. இந்த ஊர்லெ தான் என் நாதோபாசனையை ஆரம்பிச்சுது. முதல் கையெழுத்து நீங்கதான் போட்டு பதினோரு ரூபா கொடுத்தேள். இப்ப இதோட முப்பது வருஷமாறது. உங்க கைராசி இப்படி வந்து விச்வரூபம் எடுத்திருக்கு ‘ என்று ஒரு உறையை நீட்டுகிறார் கோவிந்தன்.
‘விச்வரூபம் எடுத்திருக்கா என்னது ? ‘ என்று உப்பிலி மூக்குக் கண்ணாடியை மாட்டிக் கொண்டு கவரைப் பிரித்து அந்த அச்சடித்த அட்டையை வெளியே உருவிப் படிக்கிறார். பளபளவென்று அச்சடித்த அட்டை தங்க எழுத்தில் அச்சடித்த அட்டை.
‘பலே பலே பலே பலே ‘ என்று கோவிந்தனை ஒரு தடவை நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் அழைப்பைப் படிக்கிறார் உப்பிலி.
‘நாதரட்சகரா… ? பேஷ் பேஷ்… திருச்சியிலா நடக்கறது ? ‘
‘ஆமாண்னா ‘
உப்பிலி படிக்கிறார் மீண்டும், கோவிந்தனின் சங்கீத சேவையைப் பாராட்டி ‘நாதரட்சகர் ‘ என்று அவருக்குப் பட்டம் கொடுக்கிறார்களாம்.
‘யாரு ஏற்பாடு இதெல்லாம் ? ‘ உப்பிலி.
‘எல்லாரும்தான் ‘
‘எல்லாரும்னா ? ‘நாதரட்சகர்னு, டைட்டில் கொடுக்கறதாப் போட்டிருக்கே. நாதத்தையே ரட்சிக்கிறவர்னா அர்த்தம். சங்கீத வித்வான்கள் ஏற்பாடு பண்ணியிருக்காளா ? சங்கீதம் கேக்கறவா ஏற்பாடு பண்ணியிருக்காளா ‘
‘ரண்டு பேரும்தான்னு வச்சுக் குங்களேன் ‘
‘சங்கீத வித்வான்லாம் ஒத்துண்டானா ? ‘நாதரட்சகரா பாடறவா நாங்க இருக்கோம்–அப்படி யிருக்கச்சே இவர் எப்படி ஐயா நாதரட்சகரா ஆவான் ‘னு கேப்பான்களே ? ‘
உப்பிலி சொன்னதைக் கேட்டு கோவிந்தன் மூக்கின் மேல் விரல் வைக்காத குறை–அப்படி ஆச்சரியப்பட்டான்.
‘இந்தப் பஞ்சாயத்து டவுன்லெ உட்கார்ந்துண்டு உலகத்தையே ஜயிக்கிறேளே. உங்களுக்கு எப்படி அப்படி சொல்லத் தெரிஞ்சுது ? பாப்பாக்குடி அய்யர்வாள் நீங்க சொல்றாப்பலயே கேட்டாராம். ‘ஏய்யா ‘ ஆறுவயதிலேர்ந்து அசுரசாதகம் பண்ணி, குருகுலவாசம் பண்ணி, பண்ணி, பணிவிடைபண்ணி, வெசுவு கேட்டு, உதைவாங்கி, குட்டுப்பட்டு ஆயிரக்கணக்காக கச்சேரி பண்ணி ஆஸ்தான சமஸ்தான ஜமீன்கள்ளாம் வித்வானா இருக்கற நாங்கள்ளாம் நாதரட்சகாளா, ஆஞ்சனேய உற்சவம் பண்றேன், அருணகிரி உற்சவம் பண்றேன்னு ஊர் ஊரா வசூல் பண்ணி, சங்கீதக் காரனையெல்லாம் வரவழைச்சு பாடச் சொல்லி தேங்கா மூடியும் ஒத்தமாட்டு வண்டியும் ரண்டாம் க்ளாஸ் ரயில் சார்ஜ்உம் கொடுக்கறவன் நாதரட்சகனா ? என்னய்யா பெரளியா இருக்கு ‘ன்னு ஆரமிச்சாராம். இவரும் சும்மா விடலெ கேட்டுண்டு சும்மா இருக்கல. ‘
‘யாரு ? ‘
‘அதாண்ணா, இந்த விழா ஏற்பாடு பண்ணியிருக்காரே பாலராமு எல்.ஐ.ஸி.லெ டாப் மேன்லெ ஒருத்தர், ‘சர்த்தான்யா, பணம் வசூல் பண்ணி டிக்கட் அடிச்சு வித்து ஹால் கட்டி, மண்டபம் வச்சு, கச்சேரி வைக்காட்டா எந்த நாதம்யா தானே ரட்சிச்சுக்கப்போறது ? ‘ராஜராஜன் பெரிய கோவில் கட்டினான்னா, அவனா உளிவச்சு அடிப்பன் ? உண்டியல்னா வச்சிண்டிருப்பன், உண்டியல் இல்லேன்னா, கோயிலாவது, சில்பமாவது, ஸ்தபதியாவதுன்னு சொல்லி பிடிவாதமாநிக்க ஆரம்பிச்சுட்டார்…அவர் சும்மா போன் பண்ண வேண்டியதுதான், உடனே விளம்பரம் பக்கம் பக்கமா வந்து விழறது ‘
‘எதுக்கு ? ‘
‘சிறப்பு மலருக்கு, ஸ்உவனிர் ஒண்ணு போடறார் ‘. ஓய் நீர்கொஞ்சமா உழைக்கலெய்யா சங்கீதத்துக்கு, சுவனீர்லெ, இன்னும் வசூல்லெ வர பணம் எல்லாத்தையும் உம்மபேர்லெ பாங்கிலே பிக்சட்டெபாசிட்லெ போட்டுடப்போறேன். நீர் சாப்பாட்டுக்குன்னு யார் கிட்டவும் நிக்காம இருக்கணுமோல்லியோன்னார் பாலராமு. ‘அடாடா அப்படியெல்லாம் என்னை எம்பாரஸ் பண்ணாதிங்கோ. அத்தனை பணத்தையும், ஏழைக் குழந்தைகளுக்கு சங்கீதம் சொல்லிக் கொடுக்கறதுக்குன்னு ஒதுக்கணும்னு சொல்லிட்டேன். ‘
‘தர்மம் வீட்லெதான்யா ஆரமிக்கும். அப்படி இங்கிலீஸ்லெ சொல்ற வழக்கம் ‘ உப்பிலி.
‘எனக்கு என்ன புள்ளையா குட்டியா ? கல்யாணமா கார்த்தியா ‘ ஒண்டிக்கட்டை. எங்கம்மாக் காரியைக் கரையேற்றிப்புட்டேன்னா தெருதான் வீடு, ஊரெல்லாம் குடும்பம். ‘
‘உனக்கென்னய்யா குறை ? சங்கீதக் காரனல்லாம் உள்ளங்கையிலெ வச்சுண்டு தாங்குவான் போ. ‘
‘நான் வரேண்ணா. எனக்கு ஆப்தமா அந்தரங்கமா இருக்கற அஞ்சாறுபேர் உண்டு. அவாளை நேரப் போய் அழைக்காட்டா நன்னிகெட்ட ஜன்மமாப் போயிடுவேன். ‘நன்னிதாண்டா முக்கியம். அதுதான் சோறு போடும். போய் நேர அழச்சுட்டுவா ‘ன்னு பால ராமு கார் கொடுத்தார். அவர்கார் தான் இது. நான் வரேண்ணா. ‘
உப்பிலியின் காபி, வெந்நீர் உபசாரத்தை ஏற்றுக் கொள்ளக்கூட அவனுக்குப் போது இல்லை. கார் கிளம்பி விட்டது.
‘பார்த்தீரா உலகம் போற போக்கை ? பாப்பாக்குடி அய்யர் ஏன் சொல்லமாட்டார் ? இவன் நாதத்தை ரட்சிக்கிறானாம். அதுக்கு எல்.ஐ.ஸிக்காரன் ஒருத்தன் பெரிய புள்ளியாம். அவன் பதிலடி கொடுத்தானாம். இந்த கோவிந்தனோட அப்பா பஞ்சாங்கக்காரன். இதுக்குப் படிப்பு வெல்லெ. பஞ்சாங்கம் பண்ணி வைக்க சொல்லிக்கொடுத்தான் தகப்பன். எங்கியோ ஒரு நாளைக்கு இவன் மதுரைப் பக்கம் போயிருந்தானாம் முப்பது வருஷம் முன்னாலெ. அப்ப சின்ன வயசு. பதினெட்டு பத்தொன்பது வயசு இருக்கும். ரயில்லே போறபோது யாரோ ஆபீசர் கூட பிரயாணம் பண்ணிண்டிருந்தானாம். விசாரிச்சதில தூரத்து உறவுன்னு தெரிஞ்சுண்டானாம். பூவாளூர் சந்தையில பொட்டியும் பொட்டியும் இடிச்சுண்டுதாம். அந்த மாதிரி ஏதோ உறவு. நாமல்லாம் தியாகப்பிரம்மத்தோட சம்சாரம் இருந்தாளே–அந்த வம்சத்தை சேர்ந்தவா. அப்படியிருக்கச்சே கண்டவனுக்கெல்லாம் போய் பஞ்சாங்கம் பண்ணி வச்சு அரிசியும் வாழைக்காயும் வாங்கிண்டு நீசப் பொழுப்பு பொழைக்கலாமான்னு ஆதங்கப்பட்டாராம் அவர். புள்ளையாண்டான் திரும்பி வந்தான். அப்பா எத்தனைசொல்லியும் கேக்கலெ. அனுமார் கோயிலுக்கு உத்ஸவம் பண்றேன்னு ஆரம்பிச்சான். எங்கிட்டதான் வந்தான். முசிரி, செம்மங்குடி, ஜிஎன்பி எல்லாரையும் கொண்டு வரேனா இல்லியா பாருங்கோன்னு. உங்க கையாலெமுதல்லே கொடுங்கோ. சோழகர் நாட்டார் எல்லாரும் உங்க கைராசியைப் பத்தித்தான் சொல்றா சொல்றா அப்படிச் சொல்றான்னான். முசிறி பேரு, சித்தூர் பேரு எல்லாம் சொல்லி என்னை இளக்கிட்டான். சரிடான்னு பதினோரு ரூபா போட்டேன். முதக் கையெழுத்து நம்முது. அதைத்தான் பெரிசாச் சொல்லிக்கிறான். அன்னிக்கி ஆரம்பிச்சவன் ஓயலே. ராதா கல்யாணம்னு வசூல் பண்ணுவன். மூட்டை மூட்டையாய் அரிசி வரும். கச்சேரி, சாப்பாடுன்னு அமர்க்களம் பண்ணுவன். மிச்சம் இருக்கிற தெல்லாம் வீட்டுக்குப் போயிடும். உடனே அருணகிரி உற்சவம்பான். அதுக்குத் தனியா வசூல் பண்ணுவான். இப்படிக் கும்மாணத்திலே ஒரு வீடும், திருச்சிறாப்பள்ளியிலே ஒருவீடும் வாங்கிட்டான். முன்னெல்லாம் கோவிந்து கோவிந்துன்னு பெரிய வித்வான்லாம் கூப்பிடுவா. இப்ப என்னமோ குருஜியாம். குருஜீ குருஜீன்னு கூப்பிடறான். பெரிய பெரிய வித்வான்லாம் கூட. என்னன்னே புரியலெ. ஒரு நாளைக்கு ஒரு இடத்திலே இருக்கமாட்டான். எங்கெங்கெல்லாம் திருவிழா உத்சவமோ அதுக்கெல்லாம் அழைப்பும், பங்களூர், மைசூர், திருவனந்தபுரம், விஜயவாடா, ஹைதராபாத்துன்னு கல்கத்தா, பம்பாய் போன்ற இடத்திலெல்லாம் வித்வான்களோட படுக்கை சாப்பாடு. ‘
இந்த சமயத்தில் தான் உப்பிலியின் அண்ணன் மகன் சீமாண்டி வந்தான்–வாயில் வெற்றிலை சீவல் அரையல்.
‘யாரு சித்தப்பா கோவிந்து மாதிரி இருந்ததே ?கார்லியா வந்திருந்தான் ? ‘
‘ஆமாண்டா கோவிந்துதான். அவன் சங்கீத சேவை முப்பது வருஷமாப் பண்றானாம். அதுக்காக நாதரட்சகன்னு டைட்டில் கொடுக்கப் போறாளாம் திருச்சியிலெ. ‘
‘என்னது ? ‘
‘நாதரட்சகன். ‘
‘தேவலியே ‘ ‘
‘நீங்களும் வரணும்னு என்னைக் கூப்பிட வந்தான். நான் தான் முதமுதல்லெ பதினொரு ரூபா போட்டேனாம் முப்பது வருஷம் முன்னாலெ. அவன் அனுமார் கோயில் உத்சவம் ஆரம்பிச்ச போது..அதை நினைச்சிண்டு காரை எடுத்துண்டு ஓடி வந்திருக்கான். ‘
‘ச்சு…ச்சு…ச்சு… ‘
‘என்ன உச்சுக்கொட்றே ? ‘
‘உன் சிண்டிலயும் பூச்சுத்த வரான் பாரு ஒத்தன்….
‘என்ன பூ சுத்திட்டான் என் சிண்டுலே ‘
‘இதே கார்ல தான் நேத்திக்கி கடைத் தெருவிலெ கோபால்சாமி கடைலெ சொல்லிண்டிருந்தான். அவர்தான் முதமுதல்லெ பத்து ரூபா போட்டாராம். போனவாரமும் வந்திருந்தான். சாலியத்தெருவுக்கு. சீது செட்டியார்கிட்டதான். நீங்கதான் முதமுதல்லே கையெழுத்துப் போட்டேள்னு நானூறு ரூபா ஒரு பக்கத்துக்குன்னு அட்வர்டைஸ்மெண்ட் வாங்கிண்டு போனான். உங்கிட்ட ஏதாவது வாங்கிண்டு போனானா டொனேஷன்னு ? ‘
‘எங்கிட்ட ஏண்டா வரான் ? நான் என்ன மொத்த மளிகைக் கடையா வச்சிருக்கேன் ? இல்லெ நூறு தறி வெச்சிருக்கேனா ? நெஜம்மாவே எங்கிட்ட தான் முதமுதல்லெ பதினொரு ரூபா வாங்கிண்டு ஆஞ்சனேய உற்சவம் ஆரம்பிச்சான் அந்தக் காலத்திலெ. ‘
‘நீ வெறுமனே கேட்டா குடுப்பியா ? நாளைக்கு தாசில்தார் இல்லாட்டா சப் கலெக்டர்டேர்ந்து லெட்டர் வரும்பாரு. ஒருகமிட்டி போட்டிருக்கா இந்த விழாவுக்கு. ‘
‘சப் கலெக்டர் டேர்ந்து சிபாரிசுக் கடுதாசி வரும். எங்க கிட்ட இரு நூறு முந்நூறுன்னு ரூபா பிடுங்கிண்டு போப்போறா–அவ்வளவுதானே ? உனக்கு சந்தோஷமா இருக்கும். சித்தப்பா கஷ்டப்படணும். நீ சந்தோஷப்படணும் இல்லியா ? எங்கண்ணாவுக்குன்னு வந்து புள்ளையா பொறந்தியேப்பா. ‘
இப்போது உப்பிலி முகம்சிவக்கவில்லை. தம் தமையனின் புத்ர சம்பத்தை நினைத்து வருந்தி அவர் உடம்பு உள்ளே எழுந்து போயிற்று.
- நாதரட்சகர்
- இழப்பு
- சிகுமாரபாரதியின் கட்டுரை பற்றிய கருத்து:
- தொழில் நுட்பங்களுடன் (தொடர்ந்து) வரும் வாழ்வு முறை மாற்றங்கள் (2)
- இந்த வாரம் இப்படி – சூன் 3
- பிப் – ’14
- ஜீவ ராசி
- பாரத சமுதாயம்
- காதல் நதியினிலே
- சொல்லேர் உழவர்
- தொழில் நுட்பங்களுடன் (தொடர்ந்து) வரும் வாழ்வு முறை மாற்றங்கள் (2)
- அவல் உப்புமா
- அவல் கேசரி
- பால் கொழூக்கட்டை
- கனடா பல்கலைக் கழகம் திரு சுந்தர ராமசாமிக்கு ‘இயல் ‘ விருது கொடுத்துக் கெளரவித்தது
- கனடாவில் ஜெயமோகன் நாவல்கள் பற்றிய கருத்தரங்கு!