சந்திரசேகர கம்பார் தமிழில் வெளி ரெங்கராஜன்
கர்நாடக நாட்டுப்புற நாடகம் பற்றியும், எனக்கும் என் மக்களுக்கும் அது எந்த வகையில் தொடர்புடையது என்பது பற்றியும் நான் எழுதுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டேன். நாட்டுப்புறப் பாடல்களையும் நாடக வடிவங்களையும் பயன்படுத்துபவன் என்ற முறையில் என்னுடைய கருத்துக்களை முறையாகவோ, தொகுத்தோ கூறுவதென்பது சுலபமான அதே சமயத்தில் கடினமான வேலை. அது ஒரு படித்த விமர்சகரின் வேலை என்று நினைக்கிறேன். என்னால் அதை செய்ய முடியாது. நான் செய்யவும் விரும்பவில்லை. இந்தக் கட்டுரையில் என்னுடைய நோக்கம் நாட்டுப்புற நாடகம் என்று அறியப்படுகிற ஒன்றுடன் என்னுடைய தொடர்பை பதிவு செய்வதுதான். அப்படிப்பட்ட ஒரு முயற்சி நாட்டுப்புற நாடகம் பற்றிய என்னுடைய பார்வையையும், எனக்கும், என்னுடைய காலத்துக்கும், என்னுடைய மக்களுக்கும் அதன் தொடர்பையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
நான் உடனடியான தொடர்பில் இருந்து தொடங்குறேன். நான் பூகோள ரீதியாக ஒரு கிராமத்தைச் சேர்ந்தவன். சமூக ரீதியாக ஒரு அழுத்தப்பட்ட, படிப்பறிவில்லாத வகுப்பைச் சேர்ந்தவன். அதனால் சுலபமாக நான் ஒரு நாட்டுப்புறமனிதன். ஏனென்றால் நான் வேறு யாராகவும் இருக்க முடியாது ( நான் இதை ஏன் வலியுறுத்துகிறேன் என்றால் கடந்த பத்து வருடங்களாக படித்த நகர்ப்புற வர்கத்திற்கு இந்த நாட்டுப்புறத்தன்மை ஒரு ‘உரிய ‘ விஷயமாக இருக்கிறது.) நான் எழுதிய முதல் நீண்ட கவிதை ‘ஹெலதீனகேலா ‘ முழுவதும் என்னுடைய மண்ணிலிருந்து பெறப்பட்டது. இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு நான் அதைப் பார்க்கும் பொழுது என்னுடைய பெரும்பாலான எழுத்துக்கள் உள்ளடக்கத்தில் அந்த நீண்ட கவிதையுடன் தொடர்புடையதாகவே இருக்கின்றன. இவற்றை ஒரே மாதிரியான உள்ளடக்க முயற்சிகள் என்றோ, படைப்புத்திறன் காலாவதியாகிவிட்டது என்றோ எடுத்துக் கொள்ளகூடாது ஹெலதீனகேலாவில் வெளிப்பட்ட அனுபவ செறிவும் முழுமையும் ஒரு கலைஞனின் பலதரப்பட்ட தேவைகளுக்கேற்ற மற்றும் என்னுடைய மக்களின் படைப்பு சக்திக்கான உந்துதல்களை வடிவமைக்கத் தேவையான அடிப்படைகளையும், அனுகுமுறைகளையும் அளித்திருக்கின்றன. ஹெலதீனகேலாவை உருவாக்கிய நாட்டுப்புற ஊடகம்தான் சங்க்யா பால்யா, ஜோகுமாரசாமி மற்றும் என்னுடைய பிற நாடகங்களையும் சாத்தியமாக்கியது என்பதை நான் உறுதியாகக் கூற முடியும். நான் ஒரு முழுமையான கலையைக் கையாள்கிறேன் என்பதுதான் என்னை இவ்வளவு காலம் ஏன் இனிமேலும் நிலை நிறுத்தும் என்று எனக்குத் தோன்றுகிறது.
20ம் நூற்றாண்டின் இறுதியில் இப்படிப்பட்ட ஒரு அறிவிப்பு, விவாதத்தை உருவாக்கும் என்பதை நான் உணர்கிறேன். அதனால் இதை விளக்கமாகச் சொல்ல விரும்புகிறேன் எளிமையாக ஆரம்பிப்பதென்றால் என்னைப் பொறுத்தவரை கால அட்டவணை என்பது சிந்தனை மாற்றத்தைக் குறிக்கும் குறியீடு அல்ல. ஒரு அனுபவத்தின் தன்மை மக்களின் கற்பனை மற்றும் உணர்வு ரீதியான தேவைகளைப் பொறுத்தே நுட்பமாக உணரப்படுகிறது. அந்த அனுபவத்தின் சாசுவதத் தன்மையும், அது உருவாக்கும் கலை அம்சமும் மக்களின் சமூக கலாச்சாரத் தேவைகள், கோபதாபங்கள், பிரச்னைகள், கொந்தளிப்புகள் இவைகளைக் கொண்டே தீர்மானமாகிறது. தன்னுடைய படைப்பு சக்தியை மக்களிடமிருந்து பெறும் கலைஞன் அவைகளை வடிவமைத்து உரிய முறையில் தொடர்புபடுத்துகிறான். என்னுடைய மக்கள் இன்றும் நில உடமைச் சமூக மதிப்பீடுகளிலும், பழங்கால கட்டுமானங்களிலுமே வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. நான் அதற்காக வருத்தப்படவோ, விமர்சிக்கவோ இல்லை. ஒரு கலைஞன் யதார்தத்தை களனாகக் கொள்ளும்போது தன்னுள்ளும், தன்னுடைய மக்களிடத்திலும், அவர்களுடைய தொடர்புகளிலும் சில மாற்றங்களை விளைவிக்க முடியும். அவனுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்போது சில சமயங்களில் கட்டுமானங்கள், அடிமனக்குரல்கள், பழைய உருவகங்கள், குறியீடுகள் போன்ற மிக அடிப்படையான வலிமைவாய்ந்தவைகளை அவன் எடுத்துக் கொள்கிறான். அப்போது சமகாலத்தன்மை போன்ற விஷயங்கள் அவன் இயங்கும் தளத்தில் எழுவதில்லை. உதாரணமாக நான் ஹெலதீனகேலாவில் வளமை, ஆண்மைக்குறைவு, வறட்சி இவைகளைப்பற்றி சொல்ல ஆரம்பித்து என்னுடைய எல்லாப் படைப்புகளிலும் அந்த விஷயங்களையே எடுத்துக் கொண்டேன். டி. எஸ். எலியட், யீட்ஸ் போன்ற மேற்கத்திய நகர்ப்புறக் கலாச்சார மற்றும் நவீன இலக்கியக் காவலர்களும் இந்த விஷயங்களையே தங்கள் படைப்புகளின் மையமாகக் கொண்டிருந்தார்கள் ஆனால் நான் என்னுடைய கிராமத்திலிருந்துதான் விஷய்ங்களை எடுக்கிறேன். எலியட்டிடமிருந்தோ, யீட்ஸிடமிருந்தோ அல்ல. நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் சில அடிப்படையான மனித நிலைமைகள் இடம், காலம் இவற்றுக்கு உட்பட்டும், இவற்றைக் கடந்தும் உத்வேகமும், ஆதிக்கமும் செலுத்துகின்றன.
முழுமை என்பதை நான் இன்னொரு விதமாகவும் பார்க்கிறேன். மனித சமூகம் பல்வேறு நிலைகளைக் கடந்திருக்கிறது அல்லது பல்வேறு நிலைகளில் வெளிப்படுகிறது என்று ஒருவர் சொல்லலாம். ஆனால் சில சமூகங்களில் பல்வேறு காரணங்களால் வாழ்க்கைத் தரம் கட்டுப்பட்டதாக, உணர்வு ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் அமுக்கப்பட்டதாக இருக்கிறது. கட்டுப்பாடுகள் விலக்கப்பட்ட இடமாக இருப்பது மதம் ஒன்றுதான். அப்படிப்பட்ட சமூகங்களில் பொதுவாக ஒடுக்கப்பட்ட ஒரு மனிதர் தன்னுடைய தளைகளிலிருந்து வெளிப்படுவது மதம் அனுமதிக்கிற தருணங்களில்தான். மதச்சடங்குகளுடன் இணைந்த அதீத நடவடிக்கைகளின் பிண்ணனி இதுதான். மனித முயற்சிகளை மீறிய விளையாட்டுகள் சுய பலியிடுதல்கள், பாலியல் வெளிப்பாடுகள் இவை இத்தகைய அதீத நடவடிக்கைகளில் அடங்கும். சுருக்கமாகச் சொன்னால் இத்தகைய வெளிப்பாடுகள் அந்த சமூகங்கள் தங்களை இருத்திக் கொள்ளவும், நிலை நிறுத்திக் கொள்ளவும். அத்யாவசியமானவையாக இருக்கின்றன. இன்னும் மேல் நோக்கிப் பார்க்கும்போது வாழ்க்கைத் தளங்களில் தென்படும் வேறுபாடுகள் சகஜமான வாழ்க்கை மற்றும் மதச்சடங்குகளில் பங்கு கொள்ளுதல் இவற்றுக்கு இடையிலான வேறுபாட்டைப் போன்றே தெளிவாகவும், முழுமையாகவும் இருக்கின்றன. இவ்வாறான தெளிவான வரையறையினால்தான் இத்தகைய சமூகங்களின் பொழுதுபோக்கு வெளிப்பாடுகள் மிக நுண்மையான முழுமையான குணாம்சத்தைப் பெறுகின்றன. வெளிப்படையாக உணரப்படுகிற எல்லா தேவைகளையும், உந்துதல்களையும் பிரதிபலிப்பதால் இவை நுட்பமானவை ஆகின்றன. இவ்வாறு அது தீவிரத்தன்மையும் ஒட்டுமொத்த தன்மையும் ஒருங்கே இணைந்ததாக இருக்கிறது. நாட்டுப்புற நாடகம் இதனால் நடனம், நாடகத் தன்மை, கதை சொல்லுதல், பாடல், பாலியல் தன்மை, மரணம், மதம் எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் நடிகர்கள் மட்டுமல்லாமல் நாடகம் பார்க்கும் பார்வையாளர்களும் வெளி உலகத்துக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கிறார்கள். பார்வையாளர்கள் நாட்டுப்புற நாடகத்தில் இவ்வாறு பங்கேற்கிறார்கள். உண்மையில் நடிகர்களும் பார்வையாளர்களும் நாடகம் என்ற வடிவில் இறுதியில் மதச் சடங்காகிப் போகிற காரியத்தில் இணைந்த பங்கேற்பாளர்களாகிறார்கள். நீண்ட பயாலதா நாடகம் பிரார்த்தனையுடன் ஆரம்பித்து நடிகர்களும், பார்வையாளர்களும் விடியற்காலையில் கோவிலுக்குப் போவதுடன் முடிகிறது. இப்படிப்பட்ட பின்னணியில் பாடல்கள் மற்றும் நடனங்கள் குறித்த விமர்சனங்கள் பொருத்தமற்றவை ஆகின்றன. இத்தகைய விமர்சனங்கள் மேற்சொன்ன சமூகங்களிலிருந்து மாறுபட்ட பொழுது போக்கு என்பது வேறு வகையில் செயல்படுகிற சமூகங்களிலிருந்து எழுபவை. நவீன சமூகம் என்று சொல்லப்படுகிற ஒரு சமூகத்தில் அரிந்தோ, அறியாமலோ ஒருவித மதம் சாராத தன்மை நிலவுகிறது. மனிதனுடைய வாழ்க்கையின் பெரும்பான்மை முக்கிய நிகழ்வுகள் எல்லாம் மதம் சார்ந்த அமைப்பிலிருந்து விடுபட்டவையாகத்தான் இருக்கின்றன. மதம் தாக்கம் செலுத்துகிற பகுதிகள் குறைந்து கொண்டே போய் மதம் என்பது சமூகம் அங்கீகரிக்கிற சில பகுதிகளில் செயல்படுகிற தொழிலாகிவிடுகிறது. நடனம், நாடகம், பாடல் எல்லாம் சமூகத்தில் பரந்து சிதறிப்போய் ஒன்றுடன் ஒன்று விடுபட்டு விடுகின்றன. ஒரு லண்டன் நகரவாசி நடனம், நாட்டியம், நாடகம், மதம் எல்லாவற்றையும் தனித்தனியாகப் பார்க்கிறான். என்னுடைய கிராமத்து மனிதனுக்கு எல்லாவற்றையும் இணைத்துப் பார்க்க வேண்டும். எளிமையாகச் சொன்னால் இப்ஸன் என்னுடைய கிராமத்துக்கு சாத்தியமற்றவன்- சாத்தியப்பட வேண்டாம் என்று கூடச் சொல்வேன்.
நான் இதை வேறுவிதமாக விளக்க முற்படுகிறேன். ஓரளவுக்கு நியாயமான விமர்சனம் அடிக்கடி முன் வைக்கப்படுகிறது. அதாவது நம்முடைய நாடகம், சங்கீதம், நடனம், கவிதை மூலம் செயலை பின்னுக்கு தள்ளி, விஷயத்தை நீர்த்துப் போகச் செய்து ஒருவித தப்பியோடும் தன்மை கொண்டிருக்கிறது என்பது. இத்தகைய விமர்சனம் நம்முடைய மதம் சாராத நாடகங்கள் மற்றும் சினிமாக்களின் மீது முன் வைக்கப்படும் போது ஓரளவுக்கு சரியானதாக இருக்கலாம். ஆனால் நாட்டுப்புற நாடகத்துக்கு இது பொருந்தாது. ஏற்கனவே தெளிவாக்கியிருப்பதுபோல் நாட்டுப்புற நாடகத்தில் பொழுதுபோக்கு அம்சம் என்பது முக்கியமாக இயற்கையை சரிகட்டும்போக்கு. அங்கேதான் சமூக, கலாச்சார கட்டுப்பாடுகளால் வாழ்க்கையில் பல விதங்களிலும் ஒடுக்கப்பட்ட மனிதன் தன்னுடைய வாழ்வியல் பிரச்சினைகளைத் தாண்டி தன்னை ஒரு முழுமனிதனாகப் பார்க்கிறான் எந்த மத அமைப்புக்குள் இந்த விடுதலையும், பூரணத்துவமும் நிகழ்கிறதோ, அது அவனுடைய மிக நுட்பமான மற்றும் நேரிடையான எல்லைகளைத் தாண்ட அவனுக்கு அனுமதி வழங்குகிறது. ஆனால் நகரவாசிக்கு (லண்டன் நகரவாசி) பொழுதுபோக்குக்கும், மததுக்கும் இடையேயும் பொழுதுபோக்கிற்குள்ளேயே பல்வேறுதர அடிப்படையிலும் தேர்வு சாத்தியப்படுகிறது. அவன் ஒரு சங்கீத நிகழ்ச்சி அல்லது ஆடையுரிப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டால், அது தப்பிக்கும் செயல். ஆனால் பயாலதாவில் பாடலோ, திரெளபதி துகிலுரிப்போ நிகழும்போது அந்த தாக்கம் வேறுவகைப்பட்டது. தப்பித்தல் குணாம்சங்களும், நாட்டுப்புற அடையாளங்களும் ஒன்றுபோல் தோன்றுவது அமைப்பு ரீதியான ஒற்றுமையில் நேர்ந்த ஒரு விபத்துதான். இந்தத் தாக்க வேறுபாட்டை எதிர்கொள்ள ஒருவன் விழிப்புடன் இருக்க வேண்டும்.
நாட்டுப்புற நாடகத்தின் எதிர்காலம் என்னவாகும் என்று என்னைக் கேட்கிறார்கள். வரப்போகிற கம்ப்யூடர் மற்றும் கிரகப் போர் யுகத்துக்கு அது பொருந்த முடியுமா ? நான் ஏற்கனவே சொன்னதைத்தான் திருப்பிச் சொல்ல வேண்டியிருக்கிறது. நாட்டுப்புற நாடகம் மொழியைப் போலவே எந்த சமயத்திலும் அதை உபயோகிப்பவர்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு இருக்கிறது. அதை உபயோகிப்பவர்கள் எந்த அளவுக்கு பொருத்தமானவர்களாக இருக்கிறார்களோ அந்த அளவுக்கு நாட்டுப்புற நாடகமும் பொருத்தமானதாக இருக்கும். வரலாற்றின் படிப்படியான மாறுதல்களுக்கு ஏற்ப அதுவும் எதிர்காலத்தில் உயிர் வாழும். ஏதாவது பிரளயம் ஏற்பட்டு அது உயிர்தரிக்காது போகலாம். ஆனால் அதை உபயோகப்படுத்துபவர்களும் இருக்கமாட்டார்கள்.
– Sangeet Natak
திண்ணை
|