நாடியை நாடி……

This entry is part [part not set] of 26 in the series 20020428_Issue

நாராயணன் ஸ்வாமிநாதன்


டாக்டர் ஜெயராமன் என்னுடைய நீண்ட நாள் நண்பர். தமிழ் இலக்கியம், சித்த வைத்தியம், நாடி ஜோசியம் இவற்றில் அவருக்கு அதிக ஈடுபாடு உண்டு. ஓய்வு கிடைத்தபோது அவரிடம் போய் பேசிக் கொண்டிருப்பதுண்டு. அப்படித்தான் அன்று அவரிடம் போனேன்.

அங்கு அவருடைய நோயாளி ஒருவர் ‘நாளைக்கி வைத்திசுவரன் கோயில் போகறதா இருக்கேன். அப்புறமா வந்து உங்களைப் பார்க்க வரேன் ‘ என்று சொல்லி விடை பெற்றுக்கொண்டார்.

அவர் போன பிறகு டாக்டர் ஜே சொன்னார், ‘இப்ப வந்தாரே ஒருத்தர், அவர் நாடி சோசியம் பார்க்க வைத்தீசுவரன் கோயில் போகிறார். நாடி சோசியத்துல அவருக்கு அதிக ஈடுபாடு ‘ .

‘என்ன டாக்டர், நோய் குணமாகுமா இல்லியான்னு நீங்கல்ல மணிக்கட்டுல நாடி பாத்து சொல்லணும். நோயாளியே போய் நாடி சோசியம் பாத்தா முடிவு பண்றது ‘ என்று நான் கேலி செய்த போதுதான் பேச்சு நாடி சோசியம் பற்றி திரும்பியது.

‘நாடி சோசியம் எழுதினது யாரு ? ‘ என்று கேட்டேன்.

‘அகத்தியர், காகபுசுண்டர், கெளசிகர், வசிஷ்டர், பிருகு, சுகர்னு பல ஞான திருஷ்டி உள்ள முனிவர்கள் சுவடில எழுதியிருக்காங்க. வெள்ளக்காரன் ஆட்சிக்காலத்துல இதெல்லாம் தஞ்சை சரசுவதி மகால்ல கட்டு கட்டாய் கேட்பாரில்லாமல் கெடந்ததாம். அதை ஏலம் விட்டபோது, சிலர் அதை வாங்கி படித்து நாடி சோசியராய் பிழைப்பு நடத்த ஆரம்பித்தார்களாம் ‘

‘நாடியில் என்ன இருக்கும் ? ‘

‘ஒருவன் வாழ்க்கை பத்தின எல்லா விசயமும் நாடியிலே பாட்டா இருக்கும். அவன் வாழ்க்கை,வேலை, திருமணம், சந்ததி, நோய், மரணம், இப்படி பல விசயம் எழுதப்பட்டிருக்கும். இது எப்படி சாத்தியம்னு விஞ்ஞானரீதியா விளக்க முடியாது ‘ என்றார்.

‘ஒலகத்துல உள்ள எல்லார் வாழ்க்கையுமா நாடியில இருக்கும் ? ‘

‘அதுமட்டுமல்ல. ஒருத்தன் எந்த நேரத்துல நாடியத் தேடி போவான்னு கூட அதுல இருக்கும். நாடிப் போவதால்தான் நாடின்னு பேரு வந்தது. ‘

என் முகத்தில் இருந்த சந்தேகத்தின் சாயலை அவர் கவனித்திருக்கவேண்டும்.

‘ஒங்களுக்கு திருஞான தம்பிரானைத் தெரியுமா ? தமிழ் ஓலைச்சுவடி நூலகம்னு கேள்விப்பட்டு இருக்கிறீர்களா ? ‘ என்றார்.

எனக்குத் தெரியாது என்பதை ஒப்புக்கொண்டேன்.

‘அவர் ஒரு சைவ மடத்துக்கு தலைவரா இருந்தவர். மணவாழ்க்கையை விட்டு துறவியானவர். ஆலயத்திருப்பணிகள் பல செய்தார். நாவன்மை படித்தவர். ஆன்மீக சொற்பொழிவுகள் செய்வார். தீவிர சைவர். காக்காகறி சமைத்து கருவாடு மென்று தின்பார் ‘

‘என்ன ? திவீர சைவர்னு சொன்னீங்க, காக்கா, கருவாடு எல்லாம் திம்பாரா ? ‘

‘இதுக்குத்தான் தமிழ் படிக்கணுங்கிறது. காக்காகறின்னா கால் காய் கறி, அதாவது கொஞ்சமாக வேக வைத்த கறிகாய்கள். கரு வாடும் என்று தின்பவர், அதாவது உணவு உண்ணாவிட்டால் உடலில் இருக்கும் உயிராகிய கரு வாடுமே என்று சாப்பிடுபவர் ‘

எனக்கு முகத்தில் அசடு வழிந்தது. காட்டிக்கொள்ளாமல், ‘ஆமா. இதுக்கும் நாடிக்கும் என்ன சம்பந்தம் ‘ என்று கேட்டேன்.

டாக்டர் ஜே தொடர்ந்தார்.

‘திருஞானத் தம்பிரான் முக்கியமா பழய ஓலைச்சுவடிகள் சேகரித்து ஆய்வு செய்ய நூலகம் ஒன்று அமைத்தார். அவருக்கு என்னமோ சோசியத்துல நம்பிக்கை இல்லை. நாளென்ன செய்யும் கோளென்ன செய்யும், நாவில் நமச்சிவாயவென்ற நாமம் இருக்கையிலேம்பாரு. ‘

‘அப்பதான் சேலம் நடராசன்னு ஒரு நண்பர் தனக்கு கிடைச்ச சில சுவடிகள அவர் நூலகத்துக்கு அன்பளிப்பா கொடுத்தாரு. அதுல சில சுவடிகள் நாடி சோசியம் பத்தி இருந்திருக்கு ‘

‘எனக்கு நாடியில நம்பிக்கை இல்லப்பான்னு சொல்லியிருக்காரு, திருஞானம் ‘

‘மொதல்ல ஒங்க நாடியப் பார்க்கலாம். அப்புறம் அது சரியா தப்பான்னு சொல்லலாம்னு சேலம் நடராசன் அவரை மெதுவா சம்மதிக்க வெச்சு நாடி சோசியம் பாக்க அழச்சிட்டு போனாராம் ‘

‘அரிச்சந்திரன்னு ஒரு சோசியருகிட்ட போயிருக்காங்க. அவருகிட்ட திருஞானதம்பிரான் நாடி ஓலய பார்க்கச் சொன்னாங்களாம். அவரும் தம்பிரான் கை ரேகையை எடுத்து ஓலயை தேடி எடுத்து படிச்சாராம். ‘

‘திரு அறிவப்பா கேள்

திருஅம்பலத்தான் அப்பனாம்

திருமகள் தாயுமாவளாம்

தந்தைசொல் தட்டாதவன் தம்பியாம்

தங்கத்தொட்டிலில் கிடந்தாய்

சங்கம் வளர்த்த நகரிலே

மங்காத புகழுடன்…. ‘

என்று சோசியர் தொடங்கிய உடனே திருஞான தம்பிரான் திகைச்சு போயிட்டாராம். ‘ நீங்க சொல்றது சரியா இருக்கு. எங்க அப்பா பேரு அம்பலம், அம்மா பேரு லஷ்மி. திருஞானத்தை திரு அறிவுன்னு சொல்றீங்க. தந்தை சொல் தண்டாதவன் ராமபிரான்தானே. தம்பி ராமசந்திரன். சங்கம் வளர்த்த நகர்னு சொன்னீங்க. பொறந்த ஊரு மதுரை. பழசு இருக்கட்டும். இப்ப நடக்கரத, இனிம நடக்கப்போறத சொல்லுங்க கேக்கலாம் ‘ என்றாராம்.

சோசியர் படிச்சாராம்.

‘நவின்ற நற்சொல் நாடெங்கும் நிறையுமே

நாவன்மை நாடெல்லாம் போற்றுமே

நலம் கெட்ட ஆலயஞ் சீர்செய்திடுவார்

நாளும் சிவன் நாமம் செப்பிடுவார்

நல்ல நூலகமமைத்திடுவார்

நாடாளும் அமைச்சன்

நற்தயவாலே நிதியும் கிடைத்திடுமே

நாலு பத்து வயசிலே நாடிகேட்க

நாடிடுவார் நாளும் வாய்மை

நல்கும் நற்கோவை ‘

என்று படித்தவுடன் திருஞானம் திகைத்துப்போனார். ஆலயத்திருப்பணியும், சிவபக்தியும், நாவன்மை எல்லாருக்கும் தெரிந்த விடயமானாலும், நூலகம் அமைத்தது இன்னம் பரவலாகத் தெரியாது. சில நாட்கள் முன்னர் தனி மடலில் அவருடைய பணியைப் பாராட்டி முதலமைச்சர் நூலகத்துக்கு நன்கொடையாக ஒரு பெரும் தொகையைக் கொடுப்பதாக எழுதி இருந்தார். இந்த சமாசாரத்தை இதுவரை திருஞானம் யாருக்கும் சொல்லவில்லை. இதை நாடி ஓலையில் பார்த்த உடனே நம்பமுடியவில்லை. நாற்பது வயதில் நாடி பார்க்க நாளும் வாய்மை நல்கும் நற்கோவை, அதாவது அரிச்சந்திர சோசியரை, நாடிவருவார் என்றதும் திகைப்பாக இருந்தது. அப்ப திருஞானத்துக்கு நாப்பது வயசு ‘.

ஆச்சரியம் தாங்காம, ‘ மேல படிங்கய்யா ‘ன்னாரு.

அடுத்த வரியில, ‘ மிச்சம் ஓலை மீட்கவே ‘ என்று ஒரு வரிக்கு மேல் எதுவும் இல்லை.

இந்த வரி புரியவில்லை. ஓலை இன்னம் முடியவில்லை. பாக்கி சமாசாரம் என்னாச்சு ? ஜோசியர் அரிச்சந்திரனுக்கும் இது புதுமையாக இருந்தது. இதுவரை இது மாதிரி நிகழ்ந்தது இல்லை. சிறிது யோசனைக்கு அப்புறம் விளங்கியது. அரிச்சந்திரனின் அப்பா நாடி சோசியர். அவர் தன் தொழிலை தன் பிள்ளைகளான அரிச்சந்திரனுக்கும் பாலச்சந்திரனுக்கும் சொல்லிக்கொடுத்தார்.

பாலச்சந்திரன் தனியே தொழில் செய்ய திருவனந்தபுரம் போனபோது அப்பாவின் சுவடிகளை அவர்கள் சரி சமமாக பங்கிட்டுக்கொண்டார்கள். வாடிக்கையாளர்கள் பற்றிய விபரம் ஒருவரிடம் இல்லை என்றால், மற்றவரிடம் அனுப்புவார்கள். இந்த தம்பிரானின் சில சுவடிகள் ஒருவேளை தன் தம்பியிடம் இருக்கும் ஓலைகளில் தவறுதலாய் பிரிந்துபோய் இருக்கலாம். எனவே தன் தம்பி விலாசம் கொடுத்து மேற்கொண்டு தெரிந்து கொள்ள அவனிடம் போகுமாறு சொன்னார்.

நாடியில் நம்பிக்கை இல்லாத திருஞான தம்பிரானுக்கு இப்பொழுது பரிபூரண நம்பிக்கை வந்துவிட்டது. நண்பரிடம் தான் திருவனந்தபுரம் போகவேண்டும் என்றார். நடராசனும் அவரும் காரில் பயணமானார்கள். எதிர்பாராவிதமாக அவர்கள் சென்ற கார் மதுரை கிட்ட ஒரு விபத்துக்கு உள்ளாகி திருஞானம் அந்த இடத்திலேயே மரணமடைந்தார். நடராசன் பலத்த காயங்களுடன் ஒரு மாத மருத்துவ மனை வைத்தியத்துக்கு பிறகு உயிர் பிழைத்தார். ‘

இதை டாக்டர் ஜே சொல்லிக் கொண்டிருந்தபோது, அவரைத்தேடி ஒருவர் வந்தார்.

சுவாரசியமான கட்டத்தில், ‘ரெண்டு நாளா வயித்து வலி ‘ என்று வந்த அந்த நோயாளி மீது எனக்கு கோபம் வந்தது.

டாக்டர் ஜே அர்த்தபுஷ்டியுடன் என்னைப் பார்த்தார்.

‘சரி, போயிட்டு அப்புறம் வாங்க ‘ என்பது அதன் பொருள்.

வேண்டா வெறுப்பாக எழுந்தேன்.

நாடியில் எல்லா விடயமும் இருக்குமென்றால் ஏன் திருஞானத்தின் முடிவு பற்றி ஒன்றும் இல்லை ? குழப்பமாக இருந்தது.

இரண்டு நாள் கழித்து டாக்டர் ஜேயை சந்தித்தேன். அவரே தொடங்கினார். ‘அன்னிக்கி சொன்னேனே, திருஞான தம்பிரான் கதை. அப்புறம் என்னாச்சு தெரியுமா ? ‘ என்று என் ஆவலைத் தூண்டினார்.

‘சார், முடிவு தெரியாம எனக்கு தூக்கமே வரல ‘ என்றேன்.

‘கார் விபத்துல திருஞான தம்பிரான் இறந்து போனார். உயிர் தப்பிய நடராசனுக்கு மனசு சரியில்லை. திருஞான தம்பிரானுக்கு நேர்ந்த அகால முடிவு அவரை வாட்டியது. சரி இவ்வளவு தூரம் வந்தாச்சு, திருவனந்தபுரம் போய் அந்த சோசியர் பாலசந்திரனைப் பாத்துடலாம்னு போனாரு. அவருகிட்ட விவரம் சொல்லி திருஞானதம்பிரான் பத்தின ஓலை ஏதாச்சும் இங்க இருக்கான்னாரு. அவரு தேடிப்பாத்ததுல ஒரே ஒரு ஓலை மட்டும் கெடச்சிது.

அதப்படிச்சதும் நடராசன் அப்படியே மலைச்சு போயிட்டாரு.

‘மிச்ச ஓலை தேடியே ‘ என்பதின் தொடர்ச்சியா அதுல எழுதி இருந்தது இதுதான்:

‘மாறா இச்சை கொண்டே

ஆடியபாதன் துணையோடே

மலயாளதேசம் போவார் மீளாரே

சென்ற வாகனம் சிதைய

சென்னி பிளந்து சேர்ந்திடுவார்

சீர்மிகு சிவனார் பாதமே ‘

ஆடியபாதன், அதாவது நடராசன் துணையோட மலையாள தேசத்துக்கு போவார். போற வழியில விபத்துல தலையில அடிபட்டு செத்துடுவார்னு அதுல இருந்தது. இப்ப என்ன சொல்றீங்க ? நாடிய நம்பரீங்களா ? இதுனால என்ன தெரியுது ? ‘ என்று விக்கிரமாதித்தன் வேதாளம் போல் கேள்வி எழுப்பினார், டாக்டர் ஜே.

நான் சற்று யோசித்து, அடிக்கடி நிகழும் சாலை விபத்துகளை மனதில் கொண்டு, ‘திருவனந்தபுரத்துக்கு ரயில்ல போறது நல்லது ‘ என்று சொல்ல நினைத்தபோது எனக்கு லேசாக தலை வலித்தது. எங்கே ஏதாவது தப்பாக சொல்லப்போக தலைவெடித்துவிடுமோ என்ற அச்சத்தில், ‘நீங்களே சொல்லிடுங்க சார் ‘ என்றேன்.

டாக்டர் ஜே புன்னகையுடன் சொன்னார், ‘வேறெதும் நடக்குமோ வல்லான் வகுத்த வகையல்லால் ‘.

‘சார் ஒரு சந்தேகம். நடராசன் நாடியில என்ன முடிவு எழுதி இருந்ததுன்னு தெரியுமா ? ‘ என்று நான் கேட்டேன்.

‘சந்தேகப் பிராணி அய்யா, நீங்க. அவரு நாடி பாக்காம இருந்திருப்பாரா. அவருக்கு

‘காசினியெங்கும் ஆசையுடன் ஆலயம் சுற்றி

நேசமுடன் வாசமிகு குடந்தை

மாசி மகத்தில் பாசிக்குளமதில் நீராட

சுவாசமது கெட்டு மோசமொன்று நேருமே

நோவென்று பாயில் படுத்தவர் தேறாமலே

நொடியில் பாசவலை வீசி

காலன் கவர்வானே ‘

என்று இருந்ததாம் ‘

‘அது சரியா இருந்ததா ? ‘

‘இருந்துதாவா ? அந்தக்கோவில் இந்தக்கோவில்னு ஊரு பூரா சுத்திட்டு கடைசில போன மாசி மகத்தின்போது கும்பகோணத்துல கொளத்துல முழுகிட்டு ஊருக்கு வந்தாரு. ஏதோ மூச்சு அடைப்பு, ஒடம்புவலி , சொரம்னு படுத்தாராம். படுத்தவர் படுத்தவர்தான் . ‘

‘இப்படி எல்லாருக்கும் எப்ப முடிவுன்னு தெரிஞ்சா நாம என்ன செய்யணும்னு திட்டமிட்டு செய்யலாமில்லியா, டாக்டர் ‘ என்றேன்.

‘முடிவு தெரிஞ்சாதானா. அதான் சொல்லிருக்காங்களே ரொம்ப நாள் முன்னியே என்ன செய்யணும்னு ‘ என்றார்.

நான் அவர் சொல்வது புரியாமல் விழித்தேன்.

அவர் மேசை மேல் இருந்த டேப் ரிகார்டரின் பொத்தானை அமுக்க எம்.எஸ். சுப்புஸஷ்மியின் குரலில் ஒலித்தது ஒரு பாட்டு.

‘மனமே கணமும் மறவாதே ஈசன் மலர்ப்பதமே

நாதன் நாமம் நீ மறவாதே

நாளை என்றால் யாரே கண்டார் ?

நடையுந்தளர, தேகமொடுங்க

நாவது குழற, கண்கள் மங்க

என்ன செய்வாய் ? துணை யார் வருவார் ?

ஆதலாலே கணமும் மறவாதே ஈசன் மலர்ப்பதமே…. ‘

======

Series Navigation

நாராயணன் ஸ்வாமிநாதன்

நாராயணன் ஸ்வாமிநாதன்