நளாயினியின் கவிதைவெளி – நளாயினி தாமரைச் செல்வனின் ‘உயிர்த்தீ’ மற்றும் ‘நங்கூரம்’

This entry is part [part not set] of 32 in the series 20070607_Issue

க.வாசுதேவன்



நளாயினி தாமரைச் செல்வனின் ‘உயிர்த்தீ’ மற்றும் ‘நங்கூரம்’

தொடருந்துப் பயணங்களின் போதான வாசிப்பில் எப்போதுமே ஒரு விதத் தீவிரமிருப்பதாகப் படுகிறது.

‘உயிர்த்தீ’ யைக் எடுத்து முதற் கவிதையில் கண்ணையும் மனதையும் பதிக்கும் போது அது பயணத்தைப் பற்றிப்பேசுகிறது. புகையிரதப் பயணத்தைப்பற்றிப் பேசுகிறது. அல்லது புகையிரதப் பயணம் எனும் ஒரு படிமத்தைப் பற்றிப் பேசுகிறது. நிற்காத, நிறுத்தாத, தொடர்ந்து கொண்டேயிருக்கும் ஓரு பயணம்பற்றிப் பேசுகிறது.

இவ்வாறுதான் ஆரம்பிக்கிறது நளாயினியின் கவிதைப் பயணம் அல்லது காதற்பயணம். சாதாரணமான சொற்கள். சாதாரணமான எண்ணங்கள். அசாதாரணமான பிடிவாதம். உள்ளிருந்து உருக்குலைக்கும் உணர்வுகளை உள்ளுணர்ந்த வகையிலேயே வெளிப்படுத்துத்தலில் ஒரு புனிதமும் குழந்தைத்தனமும் உள்ளுறைந்து கிடக்கிறது.

யாரும் அறியா ஒரு கணத்தில், சுயத்தையும் மீறி, மனதில் மலையென விரியும் காதல்சார்ந்த அகப்பரிமாணங்கள் இன்பிருப்பை நோக்கிய ஞாபகங்களின் செங்கம்பள விரிப்பு. எவரில் இது உருவாகவில்லை? தம்முள் உள்ள குழந்தையைக் கொல்லாத எவர் இதற்கு விதிவிலக்காகினார்கள்? உயிருக்குள்ளிருந்து பாடும் பறவையின் குரல்வளையை நசுக்காதவர்கள் எவரால் இதனிடமிருந்து தப்பிக்கொள்ள முடிந்தது?

ஆனால், சாத்தான் நம்மைப்பார்த்துக் கொண்டிருக்கிறது. சமூகமெனும் சாத்தான். அதனிடம் ஒழுக்கம் உண்டு, கலாச்சாரம் உண்டு. அதனிடம் தீர்ப்புகள் உண்டு. அதனிடம் பொறாமையும் வக்கிரமும் உண்டு. மலையென விரியும் நினைவுகளும் மலையின் உச்சியைத் தொடும் அனுபவமும் சாத்தானின் தொடுகையினால் தொடடாற் சிணுங்கியைப்போல் சுருங்கிவிடுகிறது.

திருமணத்தின் பின் காதலைப்பற்றிப் பேசுவது கொலைக்குற்றம் என ஆகிவிட்ட கலாச்சாரத்தின் முகத்தில் ஓங்கி அறைகிறது ‘உயிர்த்தீ’.

நளாயினி கையாளும் “தொட்டாற்சிணுங்கிப்” படிமம் சுற்றி வளையாமல் விடயத்தைத் நேரடியாகவே தொட்டு நிற்கிறது. தொட்டாற் சிணுங்கியின் தப்பிவாழும் இரகசியம் சுருங்கி வாழல். சுருங்கி வாழல் என்பது தன்னை மறைத்தல். தன்னை மறுத்தல்.

இத்தொடருந்தில் என்பக்கத்திலும், முன்னாலும் இருக்கும் எல்லோரையும் இல்லாமல் ஆக்குவதற்காகக் கண்களை மூடிக்கொள்கிறேன். பசும்வெளியை உறிஞ்சிக்கொண்டே பயணிக்கிறது புகையிரதம். கண்களை மீண்டும் திறந்து ‘உயிர்த்தீ’ யின் ஒன்பதாம் பக்கத்தை வாசிக்கிறேன். மீண்டும் கண்களை மூடுகிறேன். காலமழியும் ஒரு கணத்துள் உயிரின் அந்தம் வரை அதிர்வலைகள் பிறப்பெடுக்கின்றன. உயிரின் அந்தமென்பதே பிரபஞ்சத்துள் அழிந்துபோகிறது.

குளிரில் நடுங்கும் குருவிகளுக்குத் தலைசாய்க்க மடிகேட்கும் மனத்தின் வியாபக வீச்சத்தை புரிந்து கொள்வதற்குக் காதலித்திருக்கவேண்டும். காலம் தாழ்த்தி வந்து போகவேண்டிய வண்டி புறப்பட்டபின்னர் ஒரு போதும் மீண்டும் வராத ஒருவண்டிக்காகக் காத்திருக்கக் கற்றிருக்க வேண்டும்.

“பச்சைக் குழந்தையாய் அழுதிருக்கிறேன்” (பக்கம்14). பாரதக் கதைபடித்த சிறுவயது. கீசகன் வதைப்படலம். பாஞ்சாலியின் மீது கொண்ட அடங்காக் காதலினால் கீசகனின் படும் வேதனை. பஞ்சு மெத்தையிலும் முள்ளெனக் குத்தும் நிலவொளி. அப்போ புரியவில்லை. அனுபவமற்ற வயது. அனுபவித்த பின்னர்தான் புரிகிறது. பச்சைக் குழந்தையாய் நானும் அழுதிருக்கிறேன்.

“எமது உணர்வுகளை இரகசியமாக வைத்துக்கொள்”. உன்னுடைய உணர்வுகள் என்னுடைய உணர்வுகள் என்றெல்லாம் இல்லை. அவை எமது உணர்வுகள். எம்மில் யாரேனும் ஒருவர் “எமது” உணர்வுகளை வைத்திருந்தால் போதும். அவை அழிவற்றவையாகிவிடும். நான் உன்னைக் காதலிக்கிறேன். ஒரு வேளை நீ என்னை காதலிக்காது போனால், “எமது” உணர்வுகள் என்னிடம் உள்ளவரையும் காதல் வாழும். இரகசியமாக வைத்துக்கொள், யாரும் வந்து கொச்சைப் படுத்திவிட்டுப்போகக் கூடாது பார்”.

“உன்னை நான் இங்கு பத்திரமாகப் பாதுகாக்கிறேன்” (பக்கம் 19). “நானும் பாவம்”.
நான் என்பது நானல்ல. இன்று நான் வேறொருத்தி அல்லது வேறொருவன். நீயும் அவ்வாறே. ஆனால், அந்தக் காதல்? அந்த நானும் அந்த நீயும் கொண்ட காதல்?

அதுவென்னாயிற்று?

அது அழிந்து விட்டதென்றால். நானும் நீயும் அழிந்து கொண்டிருப்பவர்களா? நம் இருத்தல் என்பது அழிவின் தொடர்ச்சியா? இல்லை. நிச்சயமாக நானும் நீயும் அழிவின் தொடர்ச்சிகளல்ல.
ஆகவே, அந்த நானும் அந்த நீயும் அந்த காதலும் உணர்வுகளும் அழிவற்றவையே. அந்த உன்னை இந்த நான் இங்கு பாதுகாக்கிறேன். அந்த நானை இந்த நீ அங்கு பாதுகாத்துக்கொள்.

அழிவற்றிருப்பதற்கு நமக்கு வேறு வழியில்லையென்பதைப் புரிந்து கொண்டாயானால் அதுவே போதும்.

எனக்கென்ன பைத்தியமா? காதலை அறிவுகொண்டு அளக்க முற்படுகிறேன் போலல்லவா படுகிறது. இருப்பு, வாழ்வு, அழிவு என்றெல்லாம் பிதற்றுகிறேன் போல் படுகிறது

நயாயினியின் கவிதைவெளி அறிவுத்தளத்தில் நிற்பவர்களுக்குக் கேலியாகப்படலாம். ஆனால், கிளித்தட்டு விளையாடிய காலத்திற்கு மனதை அழைத்துச் சென்ற பின்னர்தான் தெரிகிறது அவரின் கவிதைகள் எத்தனை அழகானவையென்று. அப்போதுதான் தெரிகிறது வெள்ளைச் சீருடை அணிந்து நளாயினி பாடசாலைக்குச் செல்லும் காட்சி. அப்போதுதான் தெரிகிறது நளாயினி பாடசாலைக்குக் கொண்டு செல்லும் புத்தகப் பக்கங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் கவிதைகளின் கையெழுத்துப் பிரதிகள்.

அவஸ்தைப்படலும், ஆற்றுப்படுத்தலுமாய் தொடர்கிறது கவிதைகள். முதுமை வருவதாகவும் முடிந்து போனதை எண்ணி என்னசெய்வதென்பதாகவும் அவ்வப்போ தேற்றல்கள். இருப்பினுமென்ன? எந்தத் தேற்றல்களும் நிரந்தரமானவையல்ல. எத்தனையாயிரம் பொய்களை வேண்டுமானாலும் மனம் தனக்கு வாரிவழங்கலாம். ஆனால் இழந்துபோன உண்மையை எத்தனை கோடி பொய்களாலும் மறைத்து விடமுடியாது.
“அடிக்கடி உமிழ் நீரை உமிழ்ந்து விழுங்கும்போது சுகமாகத்தான்உள்ளது” (பக்கம் 91). இருப்பினும் என்ன தொண்டைக்குள் சிக்கிக் கொண்ட முள்ளைச் சமிப்பதற்கு மார்க்கமில்லை. இந்நிலையில் மாற்றமேயில்லை.

இவையெல்லாவற்றையும் விட “ஆனாலும்புதிதாய் வரும் ஆண்டின் நாட்காட்டியை ஏற்கத் துடிக்கும் சுவரில் அறைந்த ஆணிபோல்தான் நாமும்” (பக்கம் 94) எனும் வரிகள் உணர்த்தி நிற்பது என்ன என்பதைப் புரிய அச்சம் எழுகிறது. வெறுமை, தோல்வி, விதியிடம் சரணடைந்து வருவதை ஏற்கும் மனப்பாங்கு எனப் பல்வேறு கருமைகளைப் பறைசாற்றுகிறது இந்தச் சுவராணிப்படிமம்.

கருமையாயிருப்பினும் நளாயினியின் கவிதையுலகம் அதிகாலைச் சூரியனின் கதிர்களைக் கண்டு குயில்பாடும் பாடல்களாக ஒலிக்கிறது. வசந்தகாலத்தையும் இலுப்பைப் பூக்களையும் காத்திருக்கும் அணில்களுக்கு இரையூட்டுகின்றன நளாயினியின் கவிதைகள்.

அவரது இன்னொரு தொகுப்பான ‘நங்கூரமும்’ அதே தளத்தில், அதே லயத்தில், அதே சுருதியில் தொடர்கிறது. இரண்டு தொகுப்புகளையும் ஒன்றாகவே ஆக்கியிருக்கலாம் என்றுகூடத் தோன்றுகிறது.

காதலைக் கேவலமென்றும், காதலிப்பது கேவலமென்றும் கூறும் மனிதர்கன் அதையெல்லாவற்றையும் விடக்கேவலமானவர்கள் எனும் ஒரு கவிஞனின் கூற்று மனதில் எழுகிறது. இப்போதெல்லாம் காதற்கவிதை எழுவது ஏதோ ஒரு விதமான “பிற்போக்குத்தனம்” என்று எண்ணும் ஒரு போக்கும் உள்ளது. என்ன செய்வது ? முடவர்கள் ஓடுபவர்களுக்கு வழங்கும் ஒழுக்கத்தீர்ப்புப் பற்றி என்ன சொல்வது ?

இரு தொகுப்புகளினதும் வடிவமைப்பு உள்ளடக்கத்தை நிறைவு செய்து பிரதிபலிக்கிறது. ஜீவன் எனப்பெயர்பெற்ற ஓவியர் நந்தா கந்தசாமியை எனக்கு நந்தகுமார் என்றுதான் தெரியும்.பன்னிரண்டு வயதில் நானும்அவரும் ஒரே வகுப்பில் படிக்க ஆரம்பித்து சில வருடங்கள் தொடர்ந்தோம். அப்போதிருந்து அவருக்குள்ளிருந்த ஓவியரை நானறிவேன். நளாயினியின் கவிதைகளை தனக்கேயுரிய கவித்துவ மனப்பாங்குடன் அவர் உள்வாங்கியிருப்பது கண்கூடு.

இப்போ நான் இறங்க வேண்டிய இடத்திற்கு தொடருந்து வந்தடைந்து விட்டது. கவிதைப் புத்தகங்களை மூடிக்கொள்கிறேன். வீடு சென்றதும் பூச்செடிகள் நாட்டும் போது மீண்டும் இக்கவிதைகளை மீட்டுப்பார்ப்பேன்.

பூக்களின் அழகு மிகுந்திருக்கும்.

க.வாசுதேவன்


Series Navigation

க.வாசுதேவன்

க.வாசுதேவன்