நலம்பெறவேண்டும்

This entry is part [part not set] of 27 in the series 20050930_Issue

வ.ஐ.ச.ஜெயபாலன்


வாழிய நீடு,
உன் மனம்போல உன் உடலும்
வல்லமை ஒளிபெறுக.
மண்ணில் நசிந்த புல்லுக்கும்
கசிந்துருகும் உனக்காக
என்றுமென் கவிதை.
அமாவசை இருளில் நீலாதேடி
கூரையில் ஏறிய சிறுபெண்
இன்னும் உன்னுள் தேடலுடன்.
உன் கனவுகட்கும் கற்பனைக்கும்
உன் சிருஸ்ட்டி மனசின் சில்லான விந்தைகட்கும்
ஒருகுறையும் நேரற்க்க.

புலம்பெயர்ந்த நம்மவர்க்கு
மனசு கற்பகதரு.
கனவுகள் காமதேனு.
நல்ல நினைவுகளன்றோ
நம் இருப்பின் அமுத நதி.

சுமை மறந்து பாடி
சும்மா நடக்கின்ற
கிரமத்துப் பெண்களது
தவம் உனக்கும் கைவருக.
விரைந்து பருகு,
மண்னும் விண்ணும் காற்றும் நீரும் சேர்த்து
தீயில் சுட்டு குயவன் தந்த
ஒன்பது உடைசல் கிண்ணத்தில்
மனித வாழ்வின் மது.

விரைந்து பருகு.
இன்றை நாளையின் குப்பைத் தொட்டியுள்
விதி எறிய முன்னம்.
மண்ணுக்கும் விண்ணுக்கும் இடையில்
இக்கணம் இன்னும் எம்மிடம் உள்ளது.
பிறகு பிறகு என்பவர்கள்
புதைந்து குழியே இவ் உலகு.
இதோ என்று எழுந்தவர்கள்
இசைக்கும் கவிதை இவ் வாழ்வு.

புடத் தீயை பொன் விலங்கு
பிணிக்கும் என்று அஞ்சினையோ.
கவிதையான சிறு பெண்ணே
காலம் உன்னை விடுவிக்கும்
—-
V.I.S.Jayapalan (Poet)
Raadyr Veien 3B – leil. 36
0595 Oslo, NORWAY.
Tel/Fax: 00 47 22 162235
Sri Lanka: 00 94 777 560 759

Series Navigation