நரகல் வாக்கு

This entry is part [part not set] of 53 in the series 20041125_Issue

அருண் கொலட்கர் மொழியாக்கம் இரா.முருகன்


1

இங்கே நடந்ததொன்றும் அறியாமல்,
காலைச் சாப்பாடும் கிட்டாமல்
இத்தனை நேரமும் தூங்கிக் கிடந்த
குடிகாரன் கண்விழிக்கிறான்.

ஆளரவமில்லாத கூட்டுச்சாலைத் தீவில்
கப்பல் மூழ்கிக் கரையேறியவனாகத்
காலி மதுக்குப்பியை நெஞ்சோடு அணைத்தபடி
தனித்துக் கிடக்கிறான்.
உடம்பில் சட்டையில்லை. வயிறு பசிக்கிறது.

இரண்டு திட்டுகளுக்கு இடையே
போத்தலைக் கவனமாக வைக்கிறான்.
எப்போதாவது வருங்காலத்தில்
உலகத்துக்குச் செய்தி ஏதாவது
போத்தலுக்குள் வைத்து
அனுப்ப வேண்டி வந்தால்
பயன்படலாம் என்று
மங்கலாக ஒரு நினைப்பு.

2

எழுகிறான். மூன்று பக்கம்
அடைத்துக் கட்டிய
போக்குவரத்துத் தீவைத்
தீவிரமாக ஆராய்கிறான்.
பக்கங்களையும், கோணத்தையும்,
உயரத்தையும் அளந்தபடி
அடியெடுத்து வைக்கிறான்.
வாயில் அடக்கிய கூழாங்கல்லுமாகக்
கடற்கரையில் நின்று
பேசப்பழகும் பேச்சாளன் போல்
தனக்குத் தானே பேசிக்கொள்கிறான்.

தீவின் கிழக்கு மூலையில்
கிழக்கு நோக்கி நின்று
போதை கலைத்த பார்வையோடு
சூரியனைப் பார்த்துப்
புரியாது விழிக்கிறான்.
இதை எங்கேயோ பார்த்திருக்கிறேனே.
என் பச்சை கால்சராயின்
உதிர்ந்து போன பொத்தான் இல்லையோ இது.

3
வெறுப்போடு திரும்பி
காது மடலை இழுத்து விட்டு,
தாடையைச் சொறிந்து கொள்கிறான்.

மூக்கைத் தடவிக் கொண்டு
சூரியனை எதிர்த்து வசவுமழையாக
முதல் சொற்பொழிவைத் தொடங்குகிறான்.

வானத்தில் இருக்கும் அந்தப்
பெரிய குதவாயைக்
குறிவைத்த சொற்பெருக்கு.

கடவுளின் மகிமையே மகிமை.
சிறிதும் பெரிதுமாகத் தான் படைத்து விட்ட
எல்லா உயிரினத்துக்கும்
இரண்டு துளை கொடுத்திருக்கார்.
சாப்பிட ஒன்று. கழிய ஒன்று.
கொடுத்த ஆண்டவனே இரையும் தருவார்.
கடவுளின் மகிமையே மகிமை.
நான் கேட்க மாட்டேன்.

4

தன்னைச் சுற்றிய மெல்லிய
டிசம்பர் காலைப் பொழுதின் சுருள்களை
நீவிக் கொள்கிறான்.

கொட்டாவியோடு சோம்பல் முறிக்கிறான்.
பாக்தாதிலிருந்து எப்போதோ இங்கே வந்து
நூலக வளைவில் சிலையாக மக்கி உறைந்த
தாடிக்கார யூதப் போக்கிரியின்
விரிசல் கண்ட விழிகள்
புழுதி படிந்த அவன் தலைக்கு மேல்.

முள்படர்ந்த தாடையை எக்கி
வாயில் எச்சிலை நிரப்பி
அவனை நோக்கி உமிழ்கிறான்.

5

நரகல் நகரம்.
இடிபோல் முழங்குகிறான்
பம்பாயின் சிங்க மகன்.
நரகல் நகரம்.

நான் உன்மேல்
மலம் கழிக்கிறேன்.
இங்கிலாந்தின் நரகல் ராஜா
மலம் கழிவதற்காகச்
சீதனமாகக் கொடுக்கப்பட்ட
ஏழு நரகல் தீவுகளின் குழு நீ.
அதெல்லாம் ஒன்றாகத் திரண்டெழுந்த
ஒற்றை மலக் குவியல் இப்போது.
கடவுள் குமிழைத் திருகித்
தண்ணீரைத் திறந்து விட,
கரைந்து மறையக் காத்திருக்கிறாய்.
கடவுளின் மகிமையே மகிமை.

அண்டங்காக்கைக் கூட்டத்தின்
நிழல்போல் அவன் வார்த்தைகள்
வாயிலிருந்து உயர்ந்து
வானில் வட்டமிடுகின்றன.
பங்கு வர்த்தகக் கட்டிடம் மேலும்,
உயர்நீதிமன்ற உச்சியிலும்,
தலைமைச் செயலகம் மீதும்
படிந்த அவை
கூரைகள் மேல் நிலைக்கின்றன.

அவன் பின்னாலிருந்து
மெல்ல நெருங்கிய தெருநாய்
புட்டத்தில் கடிக்கிறது.

அருண் கொலட்கர் – காலா கோடா பொயம்ஸ் – ‘The Shit Sermon ‘
மொழியாக்கம் – இரா.முருகன் நவம்பர் ’04

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்