நம் தடுமாறும் ஜனநாயகம்

This entry is part [part not set] of 52 in the series 20040422_Issue

கே பி எஸ் கில்


உலகின் மிகப் பெரும் ஜனநாயகம் மீண்டும் வாக்குச் சாவடிக்குச் செல்கிறது. வாக்கு வேட்டை உக்கிரம் பெறுவதுடன் கூடவே வன்முறையும் அதிகரித்துள்ளது. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலும் அதிகமாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் மெஹ்பூப் மஃப்டி பேசிய பொதுக்கூட்டத்தில் நடந்த தாக்குதலில் 11 பேர் மரணம், 50க்கும் மேற்பட்டோர் காயமுற்றுள்ளனர். இரண்டு அமைச்சர்களும் காயமுற்றுள்ளனர். ஏப்ரல் 8-ல் நடந்த இந்தத் தாக்குதல் இது போன்ற தாக்குதல்களில் கொடூரமானது. காஷ்மீர் பயங்கரவாதிகள் தேர்தலில் பங்குபெறக்கூடாது என்று மக்களை மிரட்டி வருகின்றனர். பங்குபெற்றால் என்ன நடக்குமோ என்ற அச்சத்தைத் தோற்றுவித்து கொலை மிரட்டல் விடுக்கின்றனர். பயங்கரவாதிகளின் எதிரொலியாய் இயங்கிவரும் ஆல் பார்ட்டி ஹுரியத் கான்பெரென்ஸ் போன்ற அமைப்புகளும் பயங்கரவாதிகளைப் பின்பற்றி, தேர்தல் புறக்கணிப்பை அறிவித்துள்ளன.

வடமேற்குப் பகுதியிலும் தேர்தல் புறக்கணிப்பை சில குழுக்கள் அறிவித்துள்ளன. புறக்கணிப்பை மீறுபவர்கள் மீது வன்முறையும் ஏவப்படும் என்று இவை எச்சரிக்கை விடுத்துள்ளன. மணிப்பூர் மாநிலம் இந்த பயங்கரவாதிகளால் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளது. மார்ச் 30ல், காங்லே யவாய் கன்னா லுப் (KYKL) அமைப்பு பா ஜ கவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த நாள் பா ஜ கவின் மானிலத் துணைத் தலைவர் டாக்டர் நரோம் தம்பி தாக்கப் பட்டார். நல்லவேளையாக அவர் தப்பினார். இதனால தம்பியும் பல மானிலக் கட்சியின் தலைவர்களும் பா ஜ கவிலிருந்து விலக நேர்ந்துள்ளது.

பீஹார், ஆந்திராவின் நக்சலைட் உள்ள பகுதிகளில் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் செண்டர் (MCC) மற்றும் மக்கள் யுத்தக் குழு (PWG) தேர்தலைக் குலைக்க பல தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளன. அரசியல் கட்சித் தொண்டர்களையும் , தலைவர்களையும், பாதுகாவல் படையினரையும் அவர்கள் தாக்க முற்பட்டுள்ளனர். ஏப்ரல் 7ம் தேதி ஜார்க்கண்ட் மானிலத்தில் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் ஏழு கண்ணிவெடித் தாக்குதல்களில் 26 காவல் துறையினர் மரணம் அடைந்துள்ளனர்.

All along the Naxalite belt from Bihar to Andhra Pradesh in the

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 15 தொண்டர்கள் மக்கள் யுத்தக் குழுவினால் கொல்லப் பட்டுள்ளனர். மார்ச் 18ம் தேதி எம் வெங்கடராஜு என்ற தெலுங்கு தேசத் தொண்டர் – இவர் ஆதிவாசிகள் நல அமைச்சர் எம் மணி குமாரியின் கணவர் – விசாகப் பட்டணம் மாவட்டத்தின் பாடேரு என்ற இடத்தில் சுட்டுக் கொல்லப் பட்டார். இதனால் தெலுங்கு தேசதொண்டர்கள் ஒட்டுமொத்தமாய் கட்சியிலிருந்து விலகினர்.

பயங்கரவாதம் மட்டுமே ஜனநாயக நடைமுறையினைக் கவிழ்க்கிற சக்தி அல்ல. நகர்ப்புறம் அல்லாத பல தொகுதிகளில் குற்றவாளிகள் பலரும் வாக்காளர்களை மிரட்டுகின்றனர். எல்லாக் கட்சிகளுமே குற்றப் பின்னணியுள்ளவர்களை தேர்தலில் நிறுத்தியுள்ளன.

சட்டபூர்வமான ஆட்சிமுறை என்பது கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியுள்ளது. கிராமப் புறங்களில் இது மிக அதிகமாக நடக்கிறது. ஏதாவது ஒரு பெரும் ‘விபத்து ‘ முக்கிய நகரமொன்றில் நடந்தால் தான் ‘அரசியல் ‘, ‘ஆட்சி முறை ‘ ஜனநாயகம் இவற்றிற்கு ஆபத்து என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.

கிராமங்கள் – நாம் உண்மையான இந்தியா என்று அழைக்கிற பகுதி – பலவற்றில் நடக்கும் விஷயங்கள் நம் கவனத்திற்கு வருவதில்லை. அங்குதான் அரசியல் கட்சிகளும், ஜனநாயகத்தை மறுப்பவர்களும் மிக தீவிரமாய்ச் செயல்பட்டு வருகின்றனர்.

திறமையான நிர்வாகம் நகர்ப்புறங்களில் மட்டும் செயல்பட்டால் , பெரும் மக்கள் தொகை அதிகாரவர்க்கத்தின் பரிவை மட்டுமே நம்பி விடப்பட்டால், பயங்கரவாதிகள் அச்சுறுத்தலைப் பயன்படுத்தி இந்த மக்களிடம் ‘வரி ‘ வசூல் செய்வதை நாம் எப்படி கண்டனம் செய்ய முடியும் ? கடந்த காலங்களில் இந்தியா பெரும் முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இந்த முன்னேற்றத்தின் பயன் வசதிப்பட்ட மக்களை மட்டுமே அடைந்து, பெருவாரியான மக்களை விளிம்பு நிலைக்குத் தள்ளிவிட்டது. நிர்வாகத்தின் வெற்றியை ஹைதராபாத் ‘சைபர்சிடி ‘ கம்ப்யூட்டர் நகரம் ஆகிவிட்டது என்பதை வைத்தோ, பெங்களூர் கணிணிக் கம்பெனிகளின் மையமாகி விட்டது என்பதை வைத்தோ அளக்க முடியாது. குடிமக்கள் அரசுடன் இணக்கம் கொள்ளாமல், விலகிக் காயப்பட்டு நின்றால் நிர்வாகத்தின் சிறு பங்களிப்புகளுக்குப் பொருள் இல்லை.

வன்முறையின் கொடிய நிழல் தேர்தல்களைப் பாதிப்பது போன்றே, உண்மையான தேர்வு எதுவும் இல்லாத ஒரு நிலையும் தேர்தல்களையே பொருளிழக்கச் செய்கின்றன. இதுவரை நடந்த தேர்தல்களில் பலமுறை பல அரசாங்கங்கள் வாக்காளர்களின் வாக்குச்சீட்டினால் கவிழ்க்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்த கவிழ்ப்பு இந்த அரசாங்கம் வேண்டும் ‘ என்று போடப்பட்ட ஓட்டு அல்ல. இருக்கும் அரசாங்கம் பண்ணும் அட்டூழியங்கள் தாங்க முடியாமையால்,, எதிர்கட்சி அரசாங்கம் எப்படியிருக்கும் என்ற சிந்தனையோ அல்லது கவலையோ கூட இல்லாமல் எதிர்ப்பு ஓட்டாகவே அவை நடந்திருக்கின்றன. ஒரு சில வேளைகளில் இருக்கும் அரசாங்கத்துக்கே ஓட்டுப் போடுவது என்பது, அந்த அரசாங்கத்தின் மீதான சந்தோஷமோ அல்லது நம்பிக்கையோ இல்லாமல், எதிர்கட்சி வந்தால் இன்னும் அசிங்கமாத்தான் இருக்கும் என்பதாலேயே அவை சில முறை தப்பித்திருக்கின்றன.

இது ஆளும்கட்சி எதிர்ப்பு, எதிர்கட்சி எதிர்ப்பு என்ற சுழற்சியையே உருவாக்கியிக்கின்றன. ஏறக்குறைய அதே முகங்கள், அதே அரசியல் கூட்டணிகளே இந்த சுழற்சிமுறையில் தொடர்ந்து அதிகாரம் பெற்று வந்திருக்கின்றன. இந்த வாக்குச்சீட்டில் இந்த அரசாங்கத்தை விலக்கும் உரிமையோ அல்லது, மேற்குறிப்பிட்ட எந்த வேட்பாளரும் வேண்டாம் என்ற வாய்ப்போ வாக்காளர்களுக்கு வழங்கப்படவில்லை. அவை வழங்கபட்டால், இன்றைக்கு இருக்கும் பல அரசியல்வாதிகள் குப்பைக்கூடைக்குப் போக நேரிடும்.

இன்றைக்கு இருக்கும் இந்த எதிர்ப்பு ஓட்டுக்களால், காங்கிரஸ் தலைமை தாங்கும் எதிர்கட்சி கூட்டணி ஒருங்கிணைப்பு என்பதே இல்லாமல் இருந்தால் கூட பாஜக தனிப்பெரும்பான்மை பெற முடியாத அளவுக்கு இருக்கிறது.

ஜனநாயகம் என்பதை வெறும் தேர்தல்கள் என்று நாம் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம். உண்மையில், சட்ட அமைப்பை மதிக்கிற நிர்வாகமும், சட்டதிட்டங்களுக்கு இணங்கிய ஆட்சிமுறையும் இல்லாவிடில் ஜனநாயகம் வெறுமே, கொள்ளையர்களுக்கு அங்கீகாரம் வழங்குகிற வெற்று அமைப்பாகவே இருக்கும்.

இப்படிப் பட்ட அரசியல் அமைப்புகள் ஆதரவைப் பெற பல வழிகளில் முயல்கின்றன. வன்முறை, மிரட்டல், லஞ்சம், கொள்கையைப் பற்றிக் கவலைப் படாத கூட்டணி, தனிநபர் துதிபாடல், தேசநலனுக்கு எதிரான அமைப்புகளுடன் சட்ட அமைப்புக்குப்புறம்பான முறையில் உறவு கொண்டாடுதல் , வகுப்பு வாத மற்றும் சாதீய சக்திகளுடன் இணைதல் இப்படி பல வழிகளை இவை கைக்கொள்கின்றன. இந்த் உத்தி வெற்றி பெற்றால் இதே உத்தி தொடர்ந்து எல்லோராலும் பின்பற்றப் பட்டு , ஜனநாயக ஆட்சி அமைப்புக்கான நிறுவனங்கள் மெள்ள நசிவடைகின்றன.

இந்த மோசமான அரசியல் பாரம்பரியத்தின் கீழ்தான் இன்றைய தேர்தல்களும் நிகழும். தேர்தல் கமிஷன் , தரமற்ற அரசியல் விளம்பரங்களை சென்சார் செய்வது, மின்னணு இயந்திரங்கள் என்று மேம்போக்கான ஒப்பனைகள் இருந்தாலும் பயனில்லை. அரசியல் அமைப்பு ரீதியான மாற்றங்கள், சட்ட சீர்திருத்தம், போன்றவை இந்த நசிவை தடுத்து நிறுத்தவும் இதனை எதிர்த்திசையில் திருப்பவும் உதவும். பொது வாழ்வில் இருப்பவர்களின் பொறுப்பு பற்றிய அக்கறையை கோரும் ஒரு எதிர்காலமே வரவேற்கத்தக்கது.

—-

(கே பி எஸ் கில் முரண்பாடுகளை நிர்வகிப்பது பற்றிய ஆய்வு மையத்தின் தலைவர்.

தெற்காசிய உளவுக் கண்காணிப்பு அமைப்பின் பயங்கரவாதம் பற்றி ஆய்வு செய்யும் அமைப்பின் வெளியீட்டில் இந்தக் கட்டுரை வெளிவந்தது. முதலில் இது ‘பயனீர் ‘ ஏட்டில் பிரசுரமாயிற்று. )

Series Navigation

கே.பி.எஸ்.கில்

கே.பி.எஸ்.கில்