நடிகர் நீலுவுக்கு பஹ்ரைனில் பாராட்டு விழா

This entry is part [part not set] of 27 in the series 20090507_Issue

அப்துல் கையூம்


நடிப்புத்துறையில் அருஞ்சாதனை புரிந்துவரும் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நீலு அவர்களுக்கு ஒரு மாபெரும் பாராட்டு விழா பஹ்ரைன் பாரதி தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

வரும் 15-05-2009 ஆம் தேதி, அல் ரஜா பள்ளிக்கூட கலையரங்கில் “நீலுவின் நகைச்சுவை நேரம்” என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீலு அவர்கள் வழங்கும் நகைச்சுவை விருந்து/ கலந்துரையாடல்/ மற்றும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும்.

நீலுவைப் பற்றி சில வார்த்தைகள் :
—————————–
அறிமுகமே தேவையில்லாத அபூர்வ நடிகர் இவர்.

இவரது இயற்பெயர் R. நீலகண்டன். ஜூலை 26, 1936-ஆம் ஆண்டு பிறந்த நீலுவின் பூர்வீகம் கேரளாவிலுள்ள மஞ்சேரி எனும் ஊர். மற்றபடி படித்து வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். விவாகானந்தா கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்ற இவர் V.D.Swami & Co. என்ற புகழ்பெற்ற நிறுவனத்தில் பொது மேலாளராக 40 ஆண்டுகளாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

நாடகத்துறை :
————
நடிப்பு என்பது இவரது இரத்தத்தில் இரண்டறக் கலந்தது. நாடகத்துறையில் தனது ஏழாவது வயது முதற்கொண்டே நடிக்கத் தொடங்கியவர். நடிகர் ‘சோ’வின் விவேக் பைன் ஆர்ட்ஸ் கிளப்பில் 50 ஆண்டுகள் இணைந்து பணியாற்றியவர். சுமார் 7,000 க்கும் மேலான மேடை நாடகங்களில் நகைச்சுவை பாத்திரங்களில் இவர் தோன்றி சாதனை புரிந்துள்ளார். கிரேஸி மோகனின் குழுவிலும் பங்கேற்று நடித்து வருகிறார்.

சினிமாத் துறை :
————-
திரைப்படங்களில் 1966-ஆம் ஆண்டு நடிக்கத் தொடங்கி இன்று வரை தொடர்ந்து நடித்து வருபவர். வெள்ளித் திரையில் இவர் தோன்றிய முதற்படம் ‘ஆயிரம் பொய்’. இதுவரை 160 படங்களுக்கு மேல் நடித்திருப்பவர்.

அந்நியன், பம்மல் கே. சம்பந்தம், வீராப்பு, பெரியார் போன்ற அண்மையில் வெளியான படங்களிலும் நடித்திருப்பவர். தமிழ்த்திரைப்பட உலகின் முன்னணி நடிகர்கள் சிவாஜி கணேசன், ரஜினி காந்த், கமல் ஹாஸன், அர்ஜூன், அஜீத், சரத் குமார், பிரபு, கார்த்திக், நாகேஷ், மாதவன் போன்றவர்களுடன் இணைந்து நடித்திருப்பவர்.

தலைசிறந்த இயக்குனர்கள் பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, கே.பாலச்சந்தர், முக்தா சீனிவாசன், பாரதி ராஜா, சுந்தர் சி., சங்கர் முதலானோர்களின் இயக்கத்தில் நடித்திருப்பவர்.

இவையன்றி ஒரு மலையாளம் மற்றும் தெலுங்கு படத்திலும் நடித்திருக்கிறார்.

சின்னத்திரை :
————
இதுவரை 35-க்கு மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் இவர் நடித்திருக்கிறார். தற்சமயம் இவர் நடித்து வரும் “எங்கே பிராமணன்” ஜெயா டிவியில் தினமும் (திங்கள் முதல் வெள்ளி வரை இந்திய நேரம் இரவு 8.00 – 8.30 மணிக்கு) ஒளிபரப்பாகிறது.

V.P.L. (வெட்டிப் பேச்சு லீக்) கலைஞர் டிவியில் தினமும் (திங்கள் முதல் வெள்ளி வரை இந்திய நேரம் இரவு 10.00 – 10.30 மணிக்கு) ஒளிபரப்பாகிறது.

சாவி எழுதிய புகழ்பெற்ற “வாஷிங்டனில் திருமணம்” என்ற நகைச்சுவைத் தொடருக்காக இரண்டு மாதங்கள் அமெரிக்காவில் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்துக் கொண்டார் நீலு. 90-களில் தூரதர்ஷன் தொலைக்காட்சி இத்தொடரை ஒளிபரப்பியபோது அதிக அளவில் TRP மதிப்பீடு பெற்றிருந்தது இத்தொடரின் வெற்றிக்கு ஓர் எடுத்துக்காட்டு.

அதிகம் பேசப்பட்ட மற்றொரு தொலைக்காட்சித் தொடர் மாலியின் “ப்ளைட் 172” என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் வானொலி நாடகங்களில் தொடர்ந்து பங்கு பெற்று வருகிறார். கர்னாடக இசையில் பெரிதும் ஆர்வமுள்ளவர்.

இவருக்கு அர்ஜுன், பரத் என்ற பெயரில் இரண்டு மகன்கள் உள்ளனர். இல்லத்துணைவியார் திருமதி சாந்தா நீலகண்டன் சென்னையில் இயங்கும் பள்ளிக்கூடங்களில் புவியியல் ஆசிரியையாக 20 வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

அமெரிக்கா, பிரான்சு, ஜெர்மனி, சூடான், குவைத், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம் முதலிய நாடுகளுக்கு சென்று வந்துள்ளார்.

மே 15, 2009 அன்று நடைபெறப்போகும் பாராட்டுவிழாவில் அவருக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இடம்: அல்-ரஜா பள்ளிக்கூடம், மனாமா, பஹ்ரைன். நேரம் : மாலை : 6.30 மணி.

அனுமதி இலவசம். மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள அப்துல் கையூம் 00973-39628773/ கபீர் அஹமது 00973-39404100.


Series Navigation

அப்துல் கையூம்

அப்துல் கையூம்