யமுனா ராஜேந்திரன்
இந்தியாவிலிருந்து திரும்பிவந்த இரண்டாம் நாளே பாரிஸிருந்து அசோக் யோகன் அசை வருடமிருமுறை கோட்பாட்டுச் சஞ்சிகை குறித்துப் பேச அழைத்ததைத் தொடர்ந்து பயணக் களைப்பையும் மறந்து பாரிஸ் சென்று பஸ் நிலையத்தில் இறங்கியபோது இரண்டு மாதங்களில் முதன் முதலாகத் தலைவலியும் கண் எரிச்சலும் தொடங்கியிருந்தது. இங்கிலாந்து வாழ்வில் வழக்கமாகக் கடந்த சில வருடங்களாக வருகிற ஹே பிவுரின் தொடக்கம் என்பது லேசாக ஞாபகம் வந்தது. வுழக்கம் போல இங்கிலாந்துப் பெண்களை விடவும் சாந்தமாகவும் பரபரப்பற்றும்இருக்கிற பிரெஞ்சுப் பெண்முகங்கள் மனதுக்குச் சந்தோஷமாக இருந்தது. பிரெஞ்சுப் பெண்களும் சரி ஸ்பானியப் பெண்களும் சரி கொஞ்சம் வெயிலில் காய்ந்தால் தென்னிந்தியப் பெண்கள் மாதிரியான நிறத்தில் தோற்றம் தருவதும் அவர்தம் வட்டமுகங்களும் அவர்களை எமது மனசுக்குள் அருகில் உணர்வதற்கான காரணங்களில் ஒன்றாகவும் எனக்குத் தோன்றியது.. அறிவுமதி அப்போது பிரான்ஸில் இருந்ததாகவும் லண்டனில் நடைபெறும் முருகன் கோவில் விழா நிகழ்ச்சியொன்றுக்காக அவர் ஐரோப்பா வந்திருப்பதாகவும் தமிழகத்தில் இருந்தபோது கேள்விப்பட்டிருந்தேன். பெரியார் வினாடியில் மனசுக்குள் வந்து போனார். அறிவுமதியின் புத்தகங்களுக்கு ஐரோப்பாவில் அதிக கிராக்கி இருந்ததால் அவரைத் தொலைபேசியில் துரத்திக் கொண்டிருந்தார் பாரிஸ் அறிவாலயம் நண்பர். அறிவாலயம் பாரிஸிலே மட்டுமல்ல ஐரோப்பாவில் எங்கும் வாழும் சிறுபத்திரிக்கை வாசகச்சூழலாளர்களுக்கான ஒரு சமீபச் சுனை.
இரண்டு நாள் பாரிஸ் பயணத்தில் எவரையும் நான் குறிப்பாகச் சந்திக்க விரும்பியிருக்கவில்லை. அறிவாலயத்தில் சந்தித்த நண்பர் பாலகணேசன் தான் தற்போது பிரெஞ்சுக் கல்வியகமொன்றில் நாடகம் பயின்று கொண்டிருப்பதாகச் சொன்னார். பாலகணேசன் எரிமலை சஞ்சிகையின் பொறுப்பாளர்களில் ஒருவராக இருந்தவர். இவரது குறிப்பிபடத்தக்க கவிதைகள் பத்மநாப ஐயர் ஆண்டு தோறும் வெளியிட்டு வரும் இலக்கியத் தொகுப்புகளில் பிரசுரமாகியிருக்கிறது. சமீபத்திய தனது ஈழவாழ்வு பற்றிய மழை குறுநாவலின் பிரதியொன்றினையும் அவர் தந்தார். பாரிஸ் ஈழுமுரசு ஆசிரியர் குழுவைச் சேர்ந்த நாகேஷ் அவர்கள் நீண்ட நாட்களாக தேடிக் கொண்டிருக்கிற தமிழீழத் திரைப்படங்களைத் திரட்டித் தருவதாகச் சொன்னதில் மனம் நிறைந்த சந்தோஷம் தொற்றிக் கொண்டது.
உயிர்நிழல் ஆசிரியர்களான கலைச் செல்வனும் லக்சுமியும் போர்னோகிரபி இலக்கியம் பீடபைல் மற்றும் சாருநிவேதிதா தொடர்பான உயிர்நிழல் கட்டுரைக்கு நிறைய எதிர்வினைகள் வந்ததாகச் சொல்லியிருந்தததை நினைததுக் கொண்டிருந்த தருணத்தில் கலாமோகனின் சிறுபிரசுரமொன்றை யோகன் அறையில் காண நேர்ந்தது. ஷோபாசக்தி சுகன் வெளியிட்ட கலாமோகனின் தமிழ் அகதிகள் பற்றிய லெமாண்டே பத்திரிக்கைக் குறிப்புகள் பற்றிய துண்டுப் பிரசுரத்துக்கு மறுப்பு அது. துண்டுப்பிரசுரக் கலாச்சாரம் தற்போது தகவல் தொழில்நுட்ப ஊடகத்தின் முழூ சாத்தியத்தையும் பயன்படுத்தத் தொடங்கியிருப்பது சில் நண்பர்களுக்கு வந்திருந்த இமெயில் கற்றைகளைப் பார்க்கத் தெரிந்தது. பாரிஸிலிருந்து திிரும்பி வருகையில் பஸ் சானல் டன்னலுக்குள் வந்து நின்று இங்கிலாந்துக்குள் நுழைவதற்கு முன்பாக பஸ்ஸின் கண்ணாடி ஜன்னலினுாடே பார்த்தபோது கைகள் கட்ட்ப்பட்ட நிலையில்- அநேகமாக கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்தவர்களாக-ஜிப்ஸிகளாக அல்லது கொசவர்களாக இருக்க வேண்டும்- சில இளைஞர்கள் பிரெஞ்சு போலீஸ்காரர்கள் வாக்கி டாக்கியுடன் சூழ தரையில் அமர வைக்கப்பட்டிருந்தார்கள். இங்கிலாந்தை அடைவதற்கு முன் நான் கடைசியில் பார்த்த அக்காட்சி அகதிகள் பற்றிய இன்றைய ஐரோப்பியக் கொள்கைக்கான சாட்சியமாக இருந்தது.
தமிழகத்தில் இருந்த ஏப்ரல் மே மாத காலகட்டங்களில் ஈழக்கவிஞர் வில்வரத்தினத்தின் முழக்கவிதைத் தொகுப்பின் வெளியீட்டுக்காக அவர் இந்தியாவுக்கு வரவிருந்தார். நடைமுறைக் குடியேற்ற விசாக் காரணங்களால் அவர் நேரே இலண்டனுக்கு வந் து விட்டிருந்தார். ஏப்ரல் ஏழாம் திகதி இந்தியாவுக்குப் புறப்படுவதற்கு முன்பாகவே தமிழகத்தில் வில்வரத்தினத்தை நான சந் திக்க முடியும் என பத்மநாப ஐயர் சொல்லியிருந்தார். இந்தியாவிலிருந்து திரும்பி வந்து பாரிஸ் புறப்படுவதற்கு முதல்நாள் வில்வரத்தினமும் அ..யேசுராசாவும் எனது அறைக்கு வந்திருந்து பேசிக் கொண்டிருந்தோம். இனப்பரச்சினையைச் சித்தரித்த ஈழத்து நாவல்கள் பற்றி எழுத உத்தேசித்திருக்கும் நுாலுக்கான நிறைய புத்தக ஆதாரங்களை தரவுகளை யேசுராசாவிடம் இருந்து பெறமுடிந்தது. தமிழீழப் போராட்டத்தின் மீது சுமத்தப்படும் சாதிய ாீதியிலான அபத்தக் குற்றச்சாடடுக்களை வில்வரத்தினம் கடுமையாக மறுத்துரைத்தார். வடக்கிலிருந்து வந்திருக்கும் அவர்களிடமிருந்து நிறைய நேரடியான அறிவைப் பெறக்கூடியதாகவிருந்தது.
ரயிலிலும் பஸ்ஸிலும் மட்டும் பதினாறு நாட்களைக் கழித்த தமிழகப்பயணத்தில் கணேசலிங்கன் போன்ற ஈழப் படைப்பாளிகளைச் சந்திக்க முடியாமல் போனதை மு.நித்தியானந்தனிடம் சங்கடத்துடன் ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது. சுந்தரராமசாமியுடனுான தொலைபேசி உரையாடலை பிரஸ்தாபித்த மு.புஷ்பராஜன் சுராவின் நலவிசாரிப்புகளைத் தெரிவித்தார். மனுஷ்யபுத்திரனை அவரது அறையில் சந்தித்துத்துப் பேசியது ஞாபகம் வந்தது..கனடிய இயல் விருது வழங்கும் விழா நிகழ்வுகள், புதுமைப்பித்தன் பிரச்சனைகள், ஜெயமோகன் புத்தக விமர்சன நிகழ்வு, சேரன் காலச்சுவடு பிரச்சினை என தமிழகத்திலும் ஐரோப்பா கனடா என எங்கும் சிற்சில விஷயங்களே மையமான இலக்கிய விவகாரங்களாக இருந்தது ஆச்சர்யமாகவிருந்தது.
இரண்டாயிரத்து ஒண்ணாம் வருடம் ஏப்ரல் எட்டாம் திகதி பிரிட்டாஸ் ஏர்வேஸ் மூலம் சென்னை போய் இறங்கியபோது வனவாசம் பற்றிய குறியீடு ஞாபகம் வந்தது. எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் பெற்ற நிறவாதம் காலனியம் சார்ந்த கசப்பான அனுபவம் எல்லாப் பழுப்பு நிறத்தவர் போலவே எனக்கும் நேர்ந்தது. இந்த அனுபவம் ஒரு ஆசியனுக்கு ஐரோப்பாவிலும் நேர்கிறது ஆசியாவிலும் நேர்கிறது. குடியேற்ற அதிகாரிகள் அநாவசியமான கேள்விகளையும் தொந்திரவுகளையும் வெள்ளைப் பயணிகளை நோக்கி ஏவுவுதில்லை. ஆசிய நாடுகளில் வெள்ளை நிறத்தவன் ஒரு எஜமானன் போல் எந்தவிதமான சோதனைகளும் இன்றி விமானநிலையத்தை விட்டு வெளியே வருகிறான்.. பழுப்பு நிறத்தவன் தனது சொந்த வாழ்வின் அந்தரங்க விவரங்கள் கூட நாறடிக்கப்பட்டு லக்கேஜ்கள் குதறப்பட்டு வெளியே வீசப்படுகிறான். ஐரோப்பாவில் வெள்ளை நிறத்தவன் மண்ணின் மைந்தன். பழுப்பு நிறத்தவன் எத்தனை ஆண்டு காலம் வாழ்ந்தாலும் எத்தனை தலைமுறை வாழ்ந்தாலும் அவன் ஐரோப்பிய பாஸ்போர்ட் வைத்திருந்தாலும் திருடன் அல்லது அன்னியன். காலனியாதிக்கமும் நிறவாதமும் இன்றளவும் இறுக்கமாக மேற்கு கிழக்கு அதிகார மையங்களில் நிலவுவதற்கான நிகழ்கால சாட்சியங்களாக விமான நிலையக் குடியேற்றச் சோதனைகள் இருக்கின்றன. மேற்கத்தியன இன்னும் எஜமானனாகத்ததான் இருக்கிறான். கறுப்பனும் ஆசியனும் இன்னும் அடிமைப்புத்தியுடன்தான இருக்கிறான்.
சென்னை நண்பர்கள் சுரேசும் டாக்டர் மணியும் விமான நிலையத்திற்கு வந்திருந்தார்கள். விமான நிலையத்தின் வரவேற்பு வாசல் தமிழ்சினிமாக்களில் வருகிற மாதிரியில்லை. மலர்க் கொத்துடன் இருப்பவர்கள்- பாதி இந்திய பாதி ஐரோப்பிய அரைக் கை ஜாக்கெட் பெண்கள் இல்லை. சோதனை முடிந்து வெளியே வந்தால் தெரிகிறது இடிந்த காரை பெயர்ந்த காலடியில் நெருடும் குட்டிச் சுவர்கள். வுியர்வையில் நனைந்த எமது மக்களின் பழுப்பு முகங்கள். அதிகமும் ஆட்டோ டிரைவர்கள் டாக்ஸிக்காரர்கள். புழதி மண்டிய தரையில் ஷுவை அந்தக் கணமே கழட்டி வீசிவிட்டு கால்பரப்ப வேண்டும் போல் மனம் பரிதவிக்கிறது. நண்பர்களை நெஞ்சாரக் கட்டிக் கொள்கிறபோது எனது தேசம் என்ற நினைவில் கண்கள் லேசாகப் பனிக்கிறது. அந்த நொடியில் பன்னிரண்டாண்டு நகர்வாசம் அற்றுப் போனது. ஐரோப்பா உயர்ந்த கட்டிடங்களும் மனிதமும் அற்ற இயந்திர நகரங்கள். வறுமையும் எழிலும் பசுமையும் கயமையும் காதலும் கொண்ட எமது நாடுகள்தான் எமது கிராமங்கள். இங்கேதான் எமது வீடு இருக்கிறது. எமது முதற்காதல் முதல் சாவு முதல் காமுறல் எல்லாமும் இங்கேதான். எமது முக்தி எமது சவம் இம்மண்ணில்தான் கிடக்கிறன.
நண்பர்களோடு சென்னையில் இரண்டு நாட்கள் கழிப்பதாக ஆரம்பத்தில் உத்தேசத்திருந்தது கோயமுத்துாரிலிருந்து அம்மாவின் குரல் தொலைபேசியில் ஒலித்த அந்தக் கணமே. மறந்து போனது. மணியுடன் அடுத்த நாள் கோவை இரயில் நிலையத்தில் இறங்கியபோது சிறிய அண்ணன் அவரது மகள திவ்யா நண்பன் விசு மூவரும் வந்திருந்தார்கள். என்ன ஆயிற்று அண்ணனுக்கு- எனது நண்பனுக்கு- நரை விழுந்திருந்தது-இயல்பாகவில்லாத முதுமை அவர்களில் விழுந்து கிடந்தது. இந்திய வாழ்வும் கோவையில் உலகமயமாதலின் செயல்போக்கின் விளைவாக நலிந்து அழிந்து போன பஞ்சாலைத் தொழிலும் சிறுதொழிலின் வீழ்ச்சியும் நேரடியாக எனது மனிதர்களைப் பாதித்திருந்தது. சிறுகுழந்தையாய் பார்த்திருந்த அண்ணன் மகள் நெடு நெடுவென வளர்ந்து பெரிய மனுஷியாய்த் தெரிந்தாலும் அவள் முகம் குழந்தைமையைக் கொண்டுதானிருந்தது. கட்டிக் கொண்டு முத்தமிட்டபோது நீண்டநெடு ஆண்டுகளின் பின் அழுகைவந்தது. வேனிலேயே பென்ஸன் ஹெட்ஜஸை உடைத்து அண்ணனுடனும் விசுவுடனும் முதல் கொண்டாட்டத்தைத் துவக்கினேன்.
பன்னிரண்டரை ஆண்டுகளில் ரோடுகள் அகண்டு போயிருந்தது. ரெயில் நிலையத்திலிருந்து உப்பிலிபாளையம் திரும்புப் போது பாதையின் நடுவில் இந்து பத்திரிக்கையின் நீல நிற பிரம்மாண்ட விளக்கு தெரிந்தது. பாதையின் பகக்ங்களில் நிறைய உயர்ந்த கட்டிடங்கள் நகரை பழைய அடையாளத்துடன் ஒப்பிட்டுப்பார்த்து இடத்தை அவதானிப்பதில் பிரச்சனைகளை விளைவித்தாலும் குறுக்குப் பாதைகளும் பக்கப் பாதைகளும் அப்படியப்படியே இருந்தன. லக்ஷ்மி மில்ஸ் கடந்தபோது அடுத்ததாக பீளமேடு ரங்கவிலாஸ் மில் பள்ளமும் அந்தப் பள்ளத்தின் வழி கிருஷ்ணம்மாள் பள்ளி கல்லுாரிப் பெண்களின் தாவணி கசங்கிய புட்டத்தைக் கவனித்தபடி தார்ப்பாதைக்கு மேலேறி சர்வஜன உயர்நிலைப்பள்ளிக்கு மசக் காளிபாளையம் கடந்து தினமும். நடைபாதையாக நான்கு மைல் வந்த அனுபவமும் ஞாபகம் வந்தது. எதிர்ப் பக்கத்தில் சுடுகாடு காலமாற்றத்தில் மாறாமல் கிடந்தது. மசக்காளிபாளையம் ரோடு அங்கேதான் இருந்தது. இடம் பெயரவில்லை. மருந்துக் கடையும் டாக்கடையும் அப்படியேதான் இருந்தது. வாலிபக் குறும்பும் காதலும் கொண்டு திமிரோடும் அரசியல் வன்முறையோடும் திரிந்த ஹோப் காலேக பாலன் நகர் நிறைய மாறிப் போயிருந்தது. பாலன் நகரின் வரவேற்பு வளைவு அப்படியே இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சிக் கிளைக் கூட்டங்களில் கலகம் செய்தது ஞாபகம் வந்தது.
வீடு வந்தது. அப்பா அப்பா எங்கே அப்பா. அம்மா இருந்தாள்.. தங்கையின் மகள் நானறிந்த குழந்தை ஷோபனா. எனக்குக் குழந்தைகளாக இருந்த தம்பான் சுரேஷ்.. அன்புக்கு தங்கை இந்திரா என்று இன்னொரு பெயர். அண்ணன் மகன்கள். என்னை இப்போதும் ராஜி என நெருக்கமாக அழைக்கும் வளர்ந்த சிகரெட் குடிக்கும் ராவாக பிராந்தி அடிக்கும் மகன்கள். அவலப் பொழுது அது. அன்புமயமான சோக நாடகம். ஷேக்ஸ்பியரும் ஷேக்ஸ்பியரைத்தழுவும் குரசோவாவும் செலுவி படத்தில் வரும் பூ_புக்கும் மரமும் ஒருநொடியில் வந்து நெஞ்சை அடைத்த நாடகம். நடைதடுமாறி வார்த்தை குழற கட்டிக் கொண்டு விழுந்துவிடாமல் நிலத்தில் அழுத்தமாக ஊன்றிக் கொண்டு வீட்டு முன்றிலில் அனைவரையும் முத்தமிட்டேன். வீட்டுக்குள் அதிகாலைப் படுக்கையை மடித்து வைத்துக் கொண்டிருந்த அப்பா-காது சுத்தமாகக் கேட்காத அப்பா- சுற்றிலும் நட்க்கும் அரவம் புரியாத அப்பா- வீட்டுக்குள்ளிருந்து லேசாகத் திரும்பி ஆச்சரியமாகப் பார்த்தார். அவரிடம் நாளை வருவதாகத்ததான் சொல்லியிருந்தார்களாம்- முகம் மாறிப் போய்விட்டது என்றார். ஏன் குறும்தாடி என்றார். சுறுக்கம் விழுந்த அப்பா அம்மாவின் முதுமை எனக்கு கசப்பாக மனசுக்குள் இறங்கியது. எனக்குள் என்மேல் எரிச்சல் வந்தது. அப்பாவைக் கட்டிக் கொண்டேன். முதுகைத் தடவிப் பார்த்துக் கொண்டேன். முதுமையின் மணம் வினோதமாகவிருந்தது. மனம் திடுக்கிட்டு மறுகணம் சமாதானத்துடன் இறுகக் கட்டிக் கொண்டேன்.
கோவையின் புறநகர்ப்பிரதேசம். குறிப்பாக கல்லுாரிகள் நிறைந்த ஹோப் காலேஜ் நிறைய மாறிப் போய்விட்டிருக்கிறது. நான் குடியிருந்த பாலன் நகர் ஜனத்தொகை இரட்டிப்பாய் விட்டிருந்தது. கல்லுாரிகள் கணக்கின்றிப் பெருகிப் போய் இருந்தன. பாலன் நகருக்கு வெகு அருகாமையிலேயே கீற்றுக் கொட்டகையின் கீழ் பழைய சாராயக் கடையைப் போல பிராந்திக் கடைகள் திறந்திருந்தன. தகரக் கேட்டு வாசலைத் தாண்டி நுழைந்தால் சாக்கனாக் கடை பெண்ணுக்குப் பதில் பதின்மூன்று பதினான்கு வயதுப் பையன்கள் அனபுடனும் சிரிப்புடனும் வேர்வையில் பூத்த சோர்வுடனும் நம்மை வரவேற்கிறார்கள். எங்கெங்கு பார்த்தாலும் எஸ்.டி.டி.பூத்துகள் நிறைந்திருந்தது. டாபார்ட்மெண்டல் ஸ்டோர்கள் இருந்தன. பெட்ரோல் பங்குகளில் மேற்கத்திய வாசம் தெரிந்தது. ஏர்கண்டிஸன் மதுவிடுதிகள் லண்டன் வாழ்க்கையை ஞாபகப்படுத்தின. வீட்டுக்கு வீடு துணிகளை வாங்கி இஸ்திரிபோட்டுத் தருபவர் அதே வண்டியில் குடியிருப்புகளுக்கு வந்து போய்க் கொண்டிருந்தார். நுாற்பாலைகள் அநேகமாக அனைத்தும் மூடப்பட்டுவிட்டன. இன்ஜினியரிங் ஒரு சிறு தொழிலாக அநேகமாக சாவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. புதிய கூலி அடிமைத்தனத்தின் சாதுரியங்களை கோயமுத்தார் மில் முதலாளிகள் கற்றுக் கொண்டிருந்தார்கள். முன்னை நாள் தொழிலாளிகள் இன்றைய அன்றாடக் கூலிகளாக ஆகியிருந்தார்கள். பதின்மூன்றுிலிருந்து பதினைந்து வரையிலான பெண்கள் ஆடுமாடுகள் போல் அழைத்துவரப்பட்டு தகரம் வேய்ந்த நீண்ட குடியிருப்புகளில் அமர்த்தப்பட்டு ஆண்டுக்கணக்கில் காண்ட்ராக்ட் போடப்பட்டு புதிய கூலி அடிமைகளாக ஆகியிருக்கிறார்கள். பூட்டப்பட்ட இருட்டுக் குயிருப்புகளில் அவர்களுக்கு மாதம் இருமுறை திரைப்படங்கள் காண்பிக்கப்படுகின்றன.
ஜாவா படிப்புக்கான கிராக்கி குறைந்து போய்விட்டது. டெக்ஸ்டைல் டெக்னாலஜி படிப்பு சீந்துவாரற்றுக் கிடக்கிறது. உற்பத்தித் துறைகள் அனைத்தும் உலக மயமாதலின் போட்டியில் நின்று பிடிக்க முடியாமல் அழிந்து கொண்டிருக்க நுகர்பொருள் கலாச்சாரம் பரவிக் கொண்டிருக்கிறது. மேனுபேக்சரிங் இன்டஸ்ட்ரிகள் அழிந்து கொண்டிருப்பதால் அவைகளுக்கான அப்ளைடு இன்டஸ்ட்ரியான ஸாப்டவேர் இன்டஸ்ட்ரியின் தேவை இல்லாது போகிறபோது கம்ப்யூட்டர் படிப்புகளுக்கான தேவை அருகிப்போய்விடுவதை காருண்யா தொழில்நுட்பக் கல்லுாரியின் முதல்வர் காரணமாக ஒப்புக் கொண்டார். தகவல் தொழில் நுட்பப்புரட்சியும் உலகமயமாதலும் மனிதர்களுக்கிடையிலான இடைவெளியை எல்லையற்று அதிகரித்தபடியிருக்கிறது. ஏற்கனவே சுகங்களை அனுபவித்தவன் இன்று அதிகம் சுகம் நோக்கிப் போகிறான். மூன்று வேளைப்பட்டினியிருந்தவன் அநேகமாக மரணத்தைத் தான் தின்ன வேண்டியிருக்கிறது. ஜனத்தொகையில் பாதிப்பேர் அரசியல்வாதிகளாக இருக்கிறார்கள். சமூக உற்பத்தியில் எந்தப் பங்கும் வகிக்காத அவர்கள் சமூகத்தின் உற்பத்தியில் பெரும்பான்மையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பன்னிரண்டரை ஆண்டு இடைவெளி ஓர் இரவில் மறந்து போய்விட்டது. மொட்டைமாடித் தென்னைமர ஓலைகளை கைநீட்டித் தொட்டபோது அதன் சீதளம் நேற்றின் ஞாபகம் போல் காலத்தைக் கரைத்துக் கொண்டு போய்விட்டது. என்னவும் மாறலாம் அடிப்படையில் மனிதர்கள் மாறவில்லை. மாறுவதில்லை என்றே நான் நினைக்கிறேன். அன்பும் பாசமும் நேசமும் தோழமையும் நட்பும் இரத்தத்திலிருந்து பண்பாட்டுக்குக் கடத்தப்படுகிறது. பொருளியல் மாற்றங்கள் இடப் பெயர்வு மனிதனை வெகுவாக மாற்றிவிடுவதிலலை. அரசியல் மாற்றங்கள் கூட மனிதனை மாற்றிவிடுவதில்லை. மனிதன் ஒரே சமயத்தில் உன்னதனாகவும் பொறுக்கியாகவும் தான் இருக்கின்றான். பணமும் வசதியும் பாவணைகளைத் தான் கொண்டுவருகின்றன. காலப் போக்கில் பாவனைகளையே வசதிபடைத்தவன் நிஜம் போல் ஆக்கிக் கொள்கிறான். மேற்கிலிருந்து இந்தியாவுக்கும் இலங்கைக்கும் போகிறவர்களில் பெரும்பாலுமானோர் அப்படியான பாவனைகளில் சிக்கிக் கொள்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. நிறைய நண்பர்கள் பக்கத்து விட்டுக்காரர்கள் வந்தார்கள். உறவினர்கள் வந்தார்கள். நிறையச் சாவுகளும் பிறப்புகளும் நிகழ்ந்துவிட்டிருந்தன.
நண்பர்களை ஒவ்வொருவாராகத் தொடர்பு கொண்டேன். கள்ளச்சாராயம் காய்ச்சும் ஏதேனும் ஒரு கிராமத்துக்குப் போய் பருப்பரிசி சோறு சாப்பிட்டபடி ஊறுகாய் நக்கியபடி அவர்களோடு நாலைந்து இரவுகளைக் கழிக்க ஆசை வந்தது. அவர்கள் நிறைய மாறிப் போயிருந்தார்கள். கல்யாணம் குழந்தைகள் விவாகரத்து தனிவிடு என நிறையப் பிரச்சினைகள். கடந்த கால ஈழவிடுதலை ஆதரவாளர்களும் திராவிடப் பகத்தறிவாளர்களும் பிரபலமான ஜோசியர்களாக ஆகியிருந்தார்கள். சில அற்புதமான மனிதர்கள் அதே அற்புதமனத்துடன் இருந்தார்கள். துரைமடங்கன் அதே அன்பு மாறாத மனிதராக இருந்தார். அவரிடம் இல்க்கியம் பேசலாம் வாழ்வு பேசலாம் நட்பு பேசலாம். அரசியல் வேண்டாம். அரசியல் பேச எனக்குப் பிடிக்கவில்லை. நல்ல மனிதர்களிட்ம அரசியல் பேசவது சில வேளை அவலமாகவும் அபத்தமாகவும் அசிங்கமாகவும் எனக்குத் தோன்றியது.
தலித்தியமும் பஞ்சாப் காஷ்மீர் இனவிடுதலையும் கிசுகிசுவும் ஒரே தளத்தில் செயல்படுகிற மனங்கள் அப்படியேதான் இருந்தன. முன்பு போலவே நிறைய விமர்சித்துக் கொண்டேயிருந்தார்கள். சொந்தவாழ்வில் எந்த இழப்புக்கும் ஆளாகாமல் நிறையப் புரட்சி பேசிக் கொண்டிருந்தவர்கள் அப்படியே இருந்தார்கள். எழுத்தும் புரட்சியும் புத்தகப் பிரசுரங்களும் இன்று இயல்பான தொழில்முறைக் காரியங்கள் ஆகிவிட்டன. முழு நேரப் புரட்சியாளர்கள் இல்லை. முழு நேர மொழிபெயர்ப்பாளர்கள் எழுத்தாளர்கள் ப்ருப்ரீடர்கள் தான் நிறைய இருக்கிறார்கள். புரட்சி பற்றி எழுதுவது இன்று அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள் பிரசுரிக்கும் இடதுசாரி ஆய்வுகள் போல தொழில்ாீதியிலான அமைப்பாக தமிழகத்தில் வளர்ந்திருப்பதைக் காணமுடிந்தது. தத்தம் தொழில் சார்ந்து அங்கே புரட்சி பேசிக் கொண்டு மேல்மத்தியதரவர்க்கம் நோக்கிப் போகிறவர்களாகவே முன்னாள் நக்ஸலைட்டுகள் முன்னைநாள் தலித்தியர்கள் அங்கே இருக்கிறார்கள். தொழிலையும் அரசியல் நம்பிக்கைகளையும் அவர்கள் குழப்பிக் கொள்ளமுடியாத அளவில் வளர்ந்திருக்கிறார்கள். இது உலக மயமாதலின் விளைவான புதிய புத்திஜீவித நிலைப்பாடாகத் தோன்றியது. பிரபலமான புரட்சியாளர்களிடம் மீடியா பர்ஸனாலிட்டிகள் ஆகிற அவசரம் அறிஞர்கள் எனக் கொண்டாடப்படுகிற அவலத்தைத் தாங்குகிற அவசரம் தென்பட்டது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் அனைத்துமே அது பாராளுமன்றக் கட்சிகள் ஆயினும் ஆயுதப் போராட்டம் பேசுகிற கடசிகளாயினும் மக்களிடமிருந்து விலகிய மக்களின் பொருட்டு அதிகாரத்தைக் குவித்துக் கொள்ள நினைக்கிற ஸ்டாலினிய அதிகாரவர்க்கக் கட்சிகளாகவே இன்றும் இருக்கின்றன. இதற்கு புதிதாகத் தோன்றியிருக்கிற தேசியக் கருத்தியல் சார்ந்தவர்களும் தலித் கருத்தியல் சார்ந்தவர்களும் விதிவிலக்கில்லை. ஸ்டாலினியம் குறித்த கடுமையான பரிசீலனை இன்னும் இந்திய இடதுசாரிகளிடம் பரவலாகத் தோன்றவில்லை. இன்னும் சோவியத் யூனியன் கிழக்கு ஐரோப்பிய சோசலிச வீழ்ச்சி புரட்சிகர சமூகங்களின் பின்னடைவு போன்றவை குறித்த விமர்சனங்களும் பரிசீலனைகளும் கூடத் தோன்றவில்லை என்பது துரதிருஷ்டவசமானதாகும். உரையாடிய அனைத்து இடதுசாரிகளும் தேசியர்களும் தலித் அரசியலாளர்களும் இக்கருத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
காக்கிச் சட்டை யூனிபாரம் போட்டபடி சந்திரன் அப்படியேதான் இருந்தான். ஆட்டோ ஓட்டுனர்களிடம் இடதுசாரி அரசியல் பேசியவன் தலித் மக்களை அமைப்பாக்கியவன் அநீதிக்கெதிராக வன்முறையைத் தேர்ந்தவன் நிறைய வாசிப்பவன் இப்போது சிறை அனுபவங்கள் சிறுகதைகள் எழுதுகிறான். நண்பர்கள் விசுவநாதன் பழனிச்சாமி உதயகுமார் பாலகிருஷ்ணன் பத்மநாபன் என அவர்களது இயல்புகள் மாறவில்லை. பாலு மேல் நோக்கியபடிதான் பேசிக் கொண்டிருந்தான். உதயகுமார் வழக்கம் போல் ஒரே சமயத்தில் இயல்பாகவும் தீவிரமாகவும் இருந்தான். சீனிவாசன் விமானப்படையில் இருக்கிறான். கண்கள் இரண்டையும் விபத்தில் பறிகொடுத்த நிலையில் இருந்தாலும் நான் வளர்த்த குழந்தை கண்ணன் இப்போது வளர்ந்து கர்னாடக இசை கற்பிக்கும் ஆசிரியனாக இருக்கிறான். நூறு மைல்கள் பிரயாணம் செய்து அவனைப் பார்த்துவிட்டு வந்தேன்.
ஞானியும் புவியரசுவும் அதே தேடலுடன் பதட்டத்துடன் இருந்தனர். முதுமைகொடிது. தளர்ச்சியைக் கொண்டுவந்துவிட்டது. யமுனாவிடம் என்னமாற்றம் என்று முகத்தைத் தடவிய ஞானிக்கு இளந்தாடி குத்தியபொது கையை விலக்கிக் கொண்டார். கட்டித்தழுவி முகர்நது பார்த்தேன். அன்பு பற்றி சதா உணரந்தபடி பேசிக் கொண்டிருக்கும் ஞானி. அறிந்து கொள்ளச செல்கிறவர்களிடமிருந்து அறிந்து கொள்ளத் துடிக்கும் ஞானி. இப்போதும் உதவியாளர்களை வைத்துக் கொண்டு வாசித்துக் கொண்டுதான் இருக்கிறார். புத்தகங்கள் அனைத்தையும் ஒரு நண்பர் ஆரம்பிக்கவிருக்கும் நுாலகத்துக்குத் தந்துவிடும் ஆயத்தங்களில் புத்தகங்களின் நடுவிலிருந்தபடி ஞானி. ஞானி வீட்டில் அமர்கிற இடத்துக்கு நேர்மேலே முற்றிய தென்னங்காய்கள். விழுந்தால் நேரே மண்டையில் விழும். வீட்டுக்கார எஜமானனான முஸ்லீம் ஆள் மனிதனும் இல்லை நல்ல முஸ்லீமும் இல்லை என் கோபம் கொள்கிறார் ஞானி . விஸ்வநாதன் ‘அவன் தலையில் விழுகிறமாதிரி செய்வம் அல்லவெனில் தேங்காய்களை வெட்டிச் சாய்ப்போம் ‘ என்றுவிட்டுவந்தான். அடுத்தமுறை போனபோது அதை மறக்காது கேட்டார். அந்த மரங்களை அடியோடு சாய்க்கத்தான் வேண்டும்.
தமிழ்தேசியம் குறித்து ஜனநாயகபூர்வமான சமூகம் குறித்துப் பேசியபடியே தியாகு தனது தாய்த்தமிழ்ப்பள்ளி குறித்த புதிய முயற்சிகளை அழைத்துச் சென்று காண்பித்தார். மறுமுறை சந்திப்பதாகச் சொல்லியிருந்த திலகவதிக்கு இரயில் கொள்ளையர்கள் அரக்கர்களாக ஆகியிருந்தார்கள். முழு மூன்றுநாட்கள் இலக்கியம் சினிமா வரலாறு வாழ்க்கை என பாலுமகேந்திராவிடம் உரையாடிய விஷயங்கள் தனி நூலாக வருகிறன. பின் சோவியத்அனுபவங்கள் தேசியத்தில் மதத்தின் பங்கு குறித்து ஞானி இன்குலாப் போன்றோருடன் உரையாடியவை தனித்தனி நேர்முகங்களாக வருகிறன. பெண்ணலைவாதமும் இலக்கியமும் குறித்த அமரந்த்தாவுடனான உரையாடல் அரசியல் ஓவியங்களும் தமிழக இந்தியச் சூழலும் குறித்த ஓவியர்புகழேந்தியுடனான உரையாடல்களும் தொகுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. உன்னதம் பத்திரிக்கை நண்பர்கள் சித்தார்த்தன் பழனிச்சாமி இருவருடனுமான எனது நேர்முகம் உன்னதத்தில் வருகிறது. மேற்கில் கூட்டுணர்வும் சகமனிதஈடுபாடும் அன்பும் இல்லை. கிழக்கில் தனிநபருக்கான இடம் வீட்டிலும் இல்லை. சமூகத்திலும் இல்லை என்பதுதான் எனது செய்தியாகக் கோவைக்கூட்டத்தில் இருந்தது. நிறம் மொழி இனம் போன்றவற்றுக்கு அப்பால் விளையும் ஆண் பெண் புணர்ச்சியின் மூலம் மதிப்பீடுகள் கடந்த நிலையை எய்த முடியும் என்கிற எனது நம்பிக்கைக்கும் அகமணமுறை தகர்ப்பு ஜாதிமீறிய மணத்தின் அடிப்படைத்தேவை போன்ற பெரியாரிய அம்பேத்காரிய வாழ்முறைக்கும் மேற்கில் நிகழும் வயதுவந்தோருக்கிடையிலான பிரக்ஞைபூர்வமான வரைமுறையற்ற பாலுறவுக்கும் இடையிலான உறவை இங்கு வலியுறத்திச் சொன்னேன்.
சென்னைக்கூட்டத்தில் பாலுமகேந்திரா தொலைக்காட்சிச் சாதனத்தின் வழி சமரசமற்று மாற்றுச் சினிமாவைச் செய்யமுடியும் என்றதோடு சான்றாக தனது கதை நேரம் தொகுப்பிலிருந்து மூன்று படங்களையும் திரையிட்டுக் காட்டினார். மாற்றுச் சினிமா என்பது மாற்று வாழ்வு மாற்று மனித உறவுகள் ஆண்பெண் உறவில் ஜனநாயகம் மாற்றுச் சமூகம் அதன்வழியிலான மாற்று அரசியல் போன்றவை குறித்ததாகும் என்பது எனது செய்தியாக இருந்தது. இரத்தமும் சதையுமாக நான் அங்கு அறிந்தவை ஒரு வகையில் தகவல் தொழல்நுட்ப ஊடகம் வாயிலாக ஏற்கனவே அறிந்தவைதான். அரசியல் ரீதியில்தலைமை பற்றிக் கவலைப்படாத நிறைய இடதுசாரிக்கட்சிகளைச் சேர்ந்த இளம் தோழர்களையும் கோட்பாட்டாளர்களையும் நான் சந்தித்தேன். இடதுசாரி அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்ல தமக்கும் கூட மாற்றுச் சம்பந்த்மாகத் திட்டவட்டமான பார்வைகள் இல்லை என்பதை தேசியவாதிகளும் தலித்திய அரசியல் பேசுகிறவர்களும் மார்க்சீயக் கோட்பாட்டாளர்களும் சொல்லக் கேட்டேன். கடந்த சில பத்தாண்டுகளில் மேற்கிலும் உலகின் பிற பகுதிகளிலும் நடைமுறையிலுள்ள பின் சோசலிச பின் புரட்சிகர சமூகங்களின் அனுபவங்கள் சம்பந்தமான உரையாடல்கள் தமிழ் வெளிக்குள் இல்லை என்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. பின் நவீனத்துவம் கூட அதிர்ச்சி அளிப்பது எனும் தற்காலிக நோக்கமன்றி அதுதொடர்பான விவாதங்கள் விமர்சனங்களளுடன் தமிழில் அறிமுகப்படுத்தப்படவில்லை என்பதையும் என்னால் அவதானிக்க முடிந்தது. தேசியத்திற்கும் மதத்திற்குமான உறவு தொடர்பாக நிறையச் சிந்திக்க வேண்டியிருக்கிறது என்று ஞானி வலியுறுத்திக் கூறினார்.
தொடர்ந்து மழை பெய்து நிலச்சரிவு ஏற்கட்டிருந்ததால் ஊட்டி போகும் எண்ணத்தைக் கைவிட்டோம்.குழந்தைகளையும் வீட்டிலுள்ளவர்களையும் நண்பர்கள் குடும்பத்தினரையும் அழைத்துக் கொண்டு திருமூர்த்தி மலை அருவிக்குப் போனோம். அருவிப்பக்கம் குரங்குகளை எடுத்த படம் எதுவுமே காமெராவுக்குள் நிற்காமல் போயிருந்தது. இயற்கையும் அதனது அடிப்படை அழுகும் காட்டுப்பூக்களின் விச்ராந்தியும் மேலிருந்து பாறைச் சிதறல் போல் வீழும் அருவி நீரின் வேகமும். ஆண் பெண் பேதங்களை தயக்கங்களை அகற்றித்தான் விடுகிறது. குழந்தைகள் அருகிலிருந்த அணைக்கட்டில் படகில் போனார்கள். மதுரையிலிருந்த இரண்டு நாட்கள் நண்பன் பழனிச்சாமிக்குக் கடுமையான காய்ச்சல். காய்ச்சலை அவன் அவனது துணைவி ரஜனிக்கு மட்டுமல்ல அடுத்து வந்த நாட்களில் கோவைக்கும் கடத்திவிட்டது தெரிந்தது. மதுரையில் நண்பர் சுந்தர் காளி வந்திருந்து சினிமா விமர்சனத்தின் இன்றைய தேக்கம் பற்றி கேசிக் கொண்டிருந்தோம். மதுரைக்குப் போகும் இரயிலிலே காரமான சினிமா விமர்சனங்கள் எழுதி தமிழக சினிமா இயக்குனர்களைக் கலக்கிய பாமரன் என்கிற எழிலின் அனுபவங்களைக் கேட்டுக் கொண்டு வந்தேன். ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப நாட்களில் இருந்த அதே கோபத்துடன் எழில் மாறாமலிருந்தான். இந்தியாவை ஒருவர் இருந்த இடத்திலிருந்து பார்க்க இரயில் பயணத்தை பரிந்துரை செய்யலாம் என்பது அதனது ஜன்னலில் பார்க்கப் புரிந்தது கொள்ளமுடியும். முந்நுாறு ருபாயை வாங்கிக் கொண்டு ஏர்கண்டிஷன் பஸ் என்று நானும் விஸ்வநாதனும் சென்னையில் ஏமாற்றப்பட்ட சம்பவம் இரயில் பயணங்களை நினைக்க உடன் ஞாபகம் வருகிறது.
குண்டும் குழியுமான மதுரையில் புழுதி பறந்தது. மே மாதச் சென்னை வெயிலில் பாத விரல்கள் எரிந்தது. எரிக்கும் கோடையிலும் கோயமுத்துாரின் சாயங்காலக் காற்றும் பாலக்காட்டுக் கண்வாய் வழியே கசியும் அதிகாலைச் சீதளமும் உண்மையில் உலகில் எங்கும் கிட்டாதது.மனிதர்கள் நிறையப் பயணம் செய்வது தெரிந்தது. நிச்சயமாக முன்பதிவு என்பது நான்கு நாட்களுக்கு முன்னால் செய்தால் மட்டுமே நினைத்தபடி ஊர் போய்ச்சேரலாம். வந்து இறங்கி அடுத்தநாள் கோவைக்கு வரப்பட்டபாடு ஞாபகம் வந்தது. ரிசர்வேஷன் கிடைக்கவில்லை. திலகவதி ஞாபகம் வந்தார்.பாலுமகேந்திரா தனது நண்பரொருவரின் முகவரிக்குத் தொடர்பு கொண்டு முயற்சி செய்யுங்கள் என்றார். கனரா வங்கி பாலு- பாலு ஒரு அட்சய பாத்தரம்- அழகாக அடுக்கப்பட்ட புத்தகங்கள் நிறைந்த அறை- சினிமா பற்றிய அபூர்வமான ஞானம்- உடல் முழக்க அன்பும் கூச்ச சுபாவமும் நிறைத்துக் கொண்டிருக்கிறார்- பாலுவின் இடத்திலிருந்து திலகவதிக்குப் போன் செய்து அவசரமாகப் போகவேண்டியிருப்பதைச் சொல்லி உதவி கேட்கிறோம் மணியும் நானும்.. வாக்களித்தபடி திலகவதி டிக்கெட்டுடன் ஒரு அலுவலக உதவியாளரை அனுப்பியிருந்தும் அவரின் உதவியுடன் கடைசி வினாடியில்- நிஜமாகவே கடைசி விநாடியில் தான் – மிகமிகமிகச் சிரமப்பட்டு இரயிலில் இடம் பிடித்தோம்.
இயந்திரத் துப்பாக்கிக் ஏந்திய போலீஸ்காரர்கள் நிறைந்த பெட்டி. கோவைக்கு பாட்சாவை அழைத்தக் கொண்டு போகிறார்கள். அடுத்த பெட்டியில் பாட்சா இருப்பதாகச் சொன்னார்கள். மாறி மாறித்துாங்கியபடி விழித்தபடியிருந்த போலீஸ்காரர்களைக் கவனித்துக் கொண்டிருந்தபோது துாங்கியது தெரியாமல் கோவைவந்து சேர்நதோம். போலீஸ் ராஜ்யமாகி இருந்தது தமிழகம். அமெரிக்காவையும் பிரித்தானியாவையும் உலகின் போலீஸ் ஸ்டேட்டுகள் என்பார்கள். நிச்சயம் தமிழகத்தையும் சேர்க்கலாம். இரவில் போய்ஒரு நகரத்தில் இறங்கி நண்பனின் விடு போய்ச் சேற்வதற்கள் எட்டோக்கள் வழிமறிக்கப்பட்டு விசாரனைகள் நடந்தபடியிருக்கின்றன. விஜயாபதிப்பகம் நட்த்தும் புததகக்கண்காட்சி டவுன்ஹால் முன்னால் நடக்கிறது. புத்தகக் கண்காட்சி முன்னாள் போலீஸ் பின்னால் போலீஸ் கோயமுத்தாரின் மூலை முடுக்களில் எல்லாம் போலீஸ். குண்டு வெடிப்பின் பின் முஸ்லீம் மக்களின் மீதாக தாக்குதலின் பின் கோவையின் பொருளாதாரம் அநேகமாக வீழந்துவிட்டது என்றான் விசுவநாதன். வடமாநிலத்திலிருந்து எவரும் இங்கு பயணம செய்வதில்லை. வியாபாரம் செய்வதில்லை. மூலதனம் போட்டு தொழில் தொடங்க எவரும் வருவதில்லை. பயங்கரமும் பீதியும் நிறைந்த நகரமாக கோவை காட்சியளித்தது.
சந்தித்தவர்களில் அநேகமானவர்கள் எனது கோவைநாட்களின் ஆதர்ஷமாக இருந்தவர்கள் அல்லது சமீப காலங்களில் லண்டன் வந்து சென்றவர்கள். எனது லண்டன் வாசத்திற்கு இடையிலும் தமிழகத்தோடு எனது உறவைத் தொடர்ந்து பேணக் காரணமாக இருக்கும் நண்பர்கள். எழுத்தாளரும் போலீஸ் அதிகாாியுமான திலகவதி சுவருக்குள் சித்திரம் ஆசிரியரும் மூலதனம் மொழிபெயர்ப்பாளருமான தியாகு என்றும் எனது ஆதர்ஷங்களில் ஒருவராயிருக்கும் ஞானி பல்துறை ஆறற்லும் சமகால சினிமா குறித்த நேரடி ஞானமும் கொண்ட புவியரசு நான் மிகமதிக்கிற நேர்மையாளர் கவிஞர் இன்குலாப் எனது நெடுநாள் இல்க்கிய நண்பர் மனுஷ்யபுத்திரன் – மனுஷ்யபுத்திரன் கோட்பாட்டாளர்களையும் விமர்சகர்களின் அதிகாரத்தையயும் கண்டு இப்போது படைப்பாளிகள் அஞ்சுவது இல்லை என்றார். சொல்புதிது புதுவிசை ஆரண்யம் போன்றவை காலச்சுவடை அடுத்த அதிகமாக விற்பனையாகிறது என்றார்- தமிழ் சினிமாவின் நிகரில்லா படைப்பாளி பாலுமகேந்திரா மார்க்சீயக் கோட்பாட்டாளர் காமராஜர் பல்கலைக்கழக தத்துவத்துறைப் பேராசிரியர் முத்துமோகன் மார்க்சீய இலக்கிய விமர்சகர் தி.சு.நடராஜன் போன்றவர்களோடு நிறைய மணிநேரங்கள் உரையாட முடிந்தது.எனது நண்பர்கள் விசுவநாதன் பழனிச்சாமி போன்றவர்களின் வழி ரவிக்குமார் அ. மார்க்ஸ் போன்றவர்களைச் சந்திக்க நான் எடுத்த முயற்சி பயணவேகத்திலும் பரஸ்பரப் பணிகளாலும் இயலாமல் போனது.நான் இன்னும் சந்திக்க மனம் கொண்டிருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லகண்ணு எனது தந்தையின் நண்பரும் கோட்பாட்டுப் படிப்பாளருமான கீதானநதன் போன்றேரை தேர்தல் அவசரத்தில் சந்திக்கமுடியாமலேயே எனது பயணம் முடிவுற்றது.
தேசியம் பின்நவீனத்துவம் மார்க்சியம் எனும் எல்லாச் சொல்லாடல்களும் சிறுபத்திரிக்கைகளும்மனசுக்குள் வந்தது. ஜெயலலிதா வெற்றி பெற்றிருந்தார். ஜெயாடிவி இன்னும் நான்கு சானல்கள் தொடங்கப் போவதான செய்தி லண்டனுக்குப் புறப்படும் முன்பு கேள்விப்பட்டிருந்தேன். பொற்காலம் என தனது ஆட்சியை அறுதியிட்டுச் சொன்னதால் அதற்குப் பிறகு கருணாநிதியிடம் தர திட்டங்கள் இல்லாததால்தான் மக்கள் ஜெயலலிதாவுக்கு வாக்களித்தார்கள் என்ற சிலர் அந்தப் பெண்ணைக் கருணாநிதி சீரழித்துவிட்டார் என்று கழிவிரக்கமும் கொண்டார்கள். பொதுவாழ்வில் ஊழல் என்பது அங்கீகரிக்கப்பட்டதாக ஆகியிருப்பதான அவலமும் இதன்மூலம் நிலைநாட்ப்பட்டவிட்டது. ஞானி சொன்ன மாதிரி இந்த ஆண்களை அடக்க இந்த மாதிரி அராஜகப் பெண்தான் வேண்டும் என தமிழகப் பெண்கள் முடிவுகட்டிவிட்டதற்கான சாட்சியம்தான் ஜெயலலிதாவின் வெற்றி என நகைச்சுவையாகவும் புரிந்து கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. இப்போது நினைக்க எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. தேர்தல் காலத்தில சென்றேன். ஓரு தேர்தல் கூட்டம் கூட கேட்டவில்லை. சுவரொட்டிக் கலாச்சாரம் அநாவசிய இரைச்சல் உயிர்ப்பலி போன்றவை தவிர்த்த தேர்தல் ஆச்சர்யமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. திருமாவளவன் தவிர அனைத்து தலித் வேட்பாளர்களும் தோல்வியடைந்திருக்கிறார்கள. இது மனதிற்கு சோர்வைத் தந்தாலும் சிங்காநல்லுார் தொகுதியில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் கருணாகரன் வெற்றி பெற்றது சந்தோஷத்தைத்தந்தது.
தாமரைச் செல்வி பதிப்கம் திருநாவுக்கரசு மொழிபெயர்ப்பாளரும் சிறுகதையாசிரியருமான அமரந்ததா காலக்குறி ஆசிரியர் கான் திரைப்பட இயகுனர்கள் ஆர்ஆர்.சீனிவாசன் அருண்மொழி அஜயன் பாலா கவிஞரான குட்டிரேவதி சிறுகதையாசிரியர் செயப்பிரகாசம் விமர்சகர் இந்திரன் போன்றவர்களை சென்னையில் மாற்றுச் சினிமா குறித்த உரையாடலின் போது சந்தித்தேன். சுப்பிரபாரதிமணியன் திருப்பூரிலிருந்து வந்திருந்தார். அவரது சாயத்திரை நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயரக்கப்பட்டிருக்கிறது. தட்டச்சுப் பிரதி தந்தார். சுப்ரபாரதிமணியன் என்மீது மாறா அன்புகொண்ட நண்பர். கள்ளம் கபடற்ற தன்னலம் கருதாத நண்பர். அவர் தந்த பனியன்கள் அழகானதென்பதால் என் மாப்பிள்ளை சுரேஷிக்கும் நண்பர்களுக்கும் அதைக் கொடுத்தவிட்டேன். இலங்கை நாவல்கள் பற்றி நான் எழுதிய கட்டுரைகளை கனவு பத்திரிகைக்கு கொடுக்க வேண்டும் எனும் விஷயத்தைத் திரும்பவும் ஞாபகமூட்டினார். திருப்பூர் சென்றும் எனது அன்புத்தோழர் செல்வராடன் ஒரு நாளைக்கூட கழிக்க முடியாதது மனக்குள் இன்னும் உறுத்திக் கொண்டிருக்கிறது. சந்தித்த பெரும்பாலுமானவர்கள் ஈழப்பிரச்சினை பற்றி சத்தமில்லாமல் ஆனால் ஆர்வமாக அதன் எதிர்காலம் குறித்த அக்கறையுடன் பேசினார்கள்.
தமிழகத்தில் மலையாளப்படங்கள் சிலவற்றைப் பார்க்கும் நோக்கில் இருந்தேன். மேற்கில் போர்னோகிராபிப் படங்கள் பற்றி நான் நிறைய அறிந்து வைத்திருந்ததால் கோவையிலிருந்தபோதே விஸ்வநாதனுடன் சில படங்கள் பார்க்க முயற்சி செய்தேன். சென்னையில் மணியுடன்தான் அது சாத்திமாயிற்று. இரண்டு படங்கள். மூன்று ரூபாய் டிக்கெட் போட்டு இருபத்தைந்து ரூபாய் வசூல் செய்து முதலும் முடிவும் வெட்டப்பட்டு இடையில் ஆறு பிட்கள் போடப்பட்ட இருபத்தியைந்து நிமிஷத் தமிழ்ப்படம். இது வடநாட்டவர்களால் நடிக்க தயாரிக்கப்பட்ட தமிழ் படம். பலான படம் தமிழர்களுக்காக மலையாளத்திலிருந்தல்ல தற்போது வடக்கிலிருந்து தமிழில் தயர்ரிக்கபபடுகிறது. இப்படத்தில் இருபத்தியைந்து நிமிடத்தில் ஆறுமுறை தியேட்டரில் காலிங்பெல் அடித்தது. ஒவ்வொரு காலிங் பெல்லின் போதும் பிட்போடப்பட்து. கடைசி காலிங் பெல்லுக்கு கதாநாயகி கேட்டைத் திறந்து ஓடிக் கொண்டிருக்கப் படம் முடிந்தது. வந்திருந்த கார்களும் ஸ்கூட்டர்களும் பறந்தன. ராசநிலா என்றொரு இரண்டரை மணி நேரப்படம். சினிமா ஸ்கோப் படம். வழக்கமான தமிழ்சினிமா அம்சங்கள் அத்தனையும் கொண்ட பக்காவாகத் தயாரிக்கப்பட்ட படம். ஆயிரம் பேர் உட்கார்ந்து பார்க்கக்ககூடிய தியேட்டரில் திரையிடப்பட்ட அரங்கு நிறைந்த படம். தற்போது மேற்கில் இரண்டரை மணிநேரத்தில் கதையம்சத்திடன் உயரிய தொழல்நுட்பத்துடன் பேர்னோகிராபி படங்கள் தயாராகின்றன. தமிழகத்தில் இவ்வகையில் ஸாப்ட் போர்னோகிராபிப் படங்கள் மையசினிமா அரங்குகளிலேயே திரையிடப்படுகிறது. இப்படத்தின் கதை உங்களுக்கு ஆர்.சி.சக்தி இயக்கிய கமல்ஹாஸன் ஜெயசுதா நடித்த உணர்ச்சிகள் படக்கதையை ஞாபகமூட்டக்கூடும்.
கோவையில் இலக்கியமும் அரசியலும் குறித்த உரையாடலை கவிஞர் குறிஞ்சியும் கோவை ஞானியும் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆரண்யம் எனும் அழகான காலாண்டிதழைக் கொண்டுவரும் சிறிபதி பத்மநாபாவைச்சந்தித்ததும் அவர் கொடுத்த காரமான செட்டிநாட்டுச்சாப்பாடும் மறக்கமுடியாதவை. அண்ணாச்சி வேலாயுதம் புத்தகக் கடல் வைத்திருந்தார் புத்தக விற்பனையை வாங்கும் பண்பை ஒரு கலாச்சாரமாக வளர்தத்வர் அண்ணாச்சி. உப்பிலிபாளையம் எனும் சிற்றுாரில் மொழிபெயர்ப்பாளர் சிங்கராயர் மற்றும் எனது இளமை நாட்களின் ஆதர்ஷங்களாயிருந்த க.பழனிச்சாமி திருமூர்த்தி போன்றவர்களை சந்தித்தேன். உப்பிலிபாளையத்தில் எனது இளமைக்காலத்தில் பொன்விலங்கையும் குறிஞ்சி மலரையும் தேடிப்படித்த நுாலகம் இப்போது அரசாங்கத்தினால் இடிக்கப்பட்டவிட்டது. அந்த நுாலகத்தை பிரதியாக்கம் செய்யும் பொருட்டு நானறிந்த நண்பர்கள் சிலரும் எனது அடுத்த தலைமுறையினர் சிலரும் முயற்சி மேற்கொண்டு ஒரு படிப்பக்ததை நடத்தி வருகிறார்கள். அந்தப் படிப்பகம் ஏற்பாடு செய்த அந்தக் கூட்டம் எனது பால்யதாயகத்தில் நடந்தது. அநேகமாக எனது எல்லா முதல் நினைவுகளுமே அங்கிருந்துதான் தொடங்குகிறது. எனது பல்கலாச்சார நோக்கின் விதை அங்கேதான் இருந்தது. கன்னடம் பேசுகிறவர் தெருவில் தெலுங்கு பேசுகிறவனான நான் மலையாள நண்பர்களோடு அருகிலிருக்கும் தலித் நண்பர்களோடு கல்வியும் அரசியலும் கற்றேன்.. எனது குழந்தை நாட்களில் அந்த ஊரின் பெண்களிடமே நான் மனிதரை நேசிக்கும் பாடத்தைக் கற்றேன். எனது இன்னொரு அன்னையே ஆகிய என்னை வளர்த்த ருக்கு எனது பால்யத்தோழியும் என்போலவே எம்.ஜி.ஆர் ரசிகையுமான அருக்காணியக்கா பார்வதியக்கா போன்றவர்களின் ஞாபகங்கள் எனது முதல் காமுறலும் காதலுமான ஞாபகங்கள் இந்திராணி டாச்சரின் ஞாபகங்கள் போன்றவற்றோடு பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் மன்றத்தின் பகத்சிங் மன்றத்தின் தோழர்களும் நண்பர்களும் கொண்ட ஞாபகங்கள் வறுமையில் இறந்த குழந்தை எனது தங்கை அம்சவேணியைப் புதைத்த இடுகாடும் கூட என்னால் மறக்கமுடியாதவை.
நாடகக் கலைஞன் ஜான் தொழில்துறையாளராகிவிட்டார். புருஷோத்தமன் கட்சி விசுவாசியாகவே தொடர்ந்தும் இருக்கிறார். அன்பரசு நடத்துகிற பள்ளிக்கூடத்தில் ஒரு கூட்டத்திற்கு ஏறபாடு செய்திருந் தார்கள் . கட்சித் தலைமையைக் கடந்து இய்க்கம் தேடும் நண்பர்களை அங்கு சந்தித்தேன். மாற்றுத்திட்டமில்லாத சுயவிமர்சன உணர்வற்ற கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து நிறைய அதிருப்தி கொண்டிருந்தார்கள். ஜாதியப் பிரச்சினை பற்றிய அக்கறையற்ற ஜாதிய உணர்வு கொண்ட தலைமைகளால்தான் தலித் அரசியல் இடதுசாரிக்கட்சிகளுக்கு வெளியில் தோன்றியிருக்கிறது எனும் கசப்பான உண்மையைப் பகிர்நது கொண்டார்கள். முனைவர் முத்துமோகனும் இடதுசாரிக் கட்சிகளுக்கு அப்பால் இத்தகைய கட்சிகளிலும் கட்சிக்கு வெளியிலும் இருக்கிறவர்களைக் கொண்ட ஒரு இயக்கம் உருவாகிற எதிர்கால சாத்தியம் இருக்கிறது எனும் நம்பிக்கையைப் பகிர்ந்து கொண்டார. இன்னும் கோபக்காராக இருக்கிற எனது சின்ன அண்ணன் கம்யூனிஸ்ட் கட்சி பற்றிய கடுமையான விமர்சனங்களை முன்வைத்தாலும் அதற்குப் பணியாற்றவதினின்று தன்னால் விலக்கிக் கொள்ளமுடியவில்லை என்றார். அடுத்த தலைமுறை இளைஞர்கள் எவருக்கும் இடதுசாரி அரசியலில் ஈடுபாடில்லாமல் போன சோகம் இவர்களை நிறையப் பாதித்திருக்க்ிறது.
மது உண்மையில் மனிதனது முகமூடிகளை நிச்சயமாக அகற்றிவிடுகிறது. மனதைத் திறந்து விட்டபடி நெகிழ்ச்சியுடனும் பரவசத்துடனும் நம்மைப் பகிர்ந்து கொள்ளக் கோருகிறது. மது அருந்துதல் என்பது உறவு கொள்தலும் நேசம் பாராட்டுதலும் எனும் கலாச்சாரத்தோடு சம்பந்தப்பட்டது. கோவையிலும் சென்னையிலும் எனது நண்பர்களோடு சென்ற மதுவிடுதி அனுபவங்கள் அழகானவை. பாலு அம்ஷன்குமார் கனகராசு உதயகுமார் ஞானி விசுவநாதன் பழனிச்சாமி பாமரன் எனும் எழிற்கோ என பிற நண்பர்களுடன் அங்கு கழித்த அனுபவங்கள் பசுமையாக நிற்பவை. மது அருந்துதல் என்பது எமது சமூகத்தில் ஒரு சமூகத்தீமையாகவும் குடும்பத்தை அழிப்பதாகவும் அறியப்பட்டிருப்பது அவலமானதாகும். கல்வியறிவின்மையை அகற்றுவதும் வறுமையை அகற்றுவதும் தான் முக்கியமே ஒழிய மதுவை மனித வாழ்வினின்று அகற்றுவது அல்ல. இன்னும் சில பின் நவீனத்துவவாதிகளும் எழுத்தாளர்களும் மது அருந்துவதை நிதானம் தவறிய நடவடிக்கையாகச் செய்வதும் கலகநடவடிக்கையாக ஆராதிப்பதும் அபத்தமானதும் அற்பத்தனமானதுமாகும். மது அருநதுவதில் கிடைக்கும் மிதப்புநிலை தன் அழிவுக்கும் வன்முறைக்கும் செல்லவேண்டிய அவசியமில்லை. எனது பெற்றோரும் எனது சகோதரரும் எனது மகன்களும் எனது நண்பரகளும் என ஒரே சமூகமாக இருந்து மது அருந்திய அனுபவம் எனக்கு உவகையாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. மேற்கில் மது அருந்துவதை ஒரு கலாச்சாரமாக சமூகஉறவை ஸ்தாபிக்கும் நிகழ்வாக உணர்ந்த எனக்கு இந்நிகழ்வு மக்ிழ்ச்சியாக இருந்தது.
எனது கம்யூனிஸ்ட் நண்பர்கள் அநேகம்பேர் முழுக்க குடிப்பதில் ஆழ்ந்திருந்தனர். குடும்பங்களுக்கும் குழந்தைகளுக்குமான தமது பொறுப்பிலிருந்தும் விலகியிருந்தனர். ஆத்மீகரீதியில் மார்க்சியத்தைப் பற்றியிருந்தவர்கள் தீவிரமாக மார்க்சீயத்தை நம்பியவர்கள் கோட்பாட்டுப் படிப்பில் தீராத தாகம் கொண்டவர்கள் செயலில் தீவிரத்தைக் காட்டயவர்கள் இவர்கள். தற்போது இவர்கள் கட்சிகளிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள் அல்லது வெளியேற்றப்படடிருக்கிறார்கள். தேசியவாதிகளாக அல்லது தீவிர இடதுசாரிகளாக ஆகியிருக்கிறார்கள். தாம் நம்பிய கோட்பாடுகள் வீழ்ந்துவிட்டமை இவர்களால் சகிக்கமுடியாததாக இருக்கிறது. மார்க்சீய பகுப்பாய்வில் இவர்கள் நம்பிக்கையிழந்துவிடவில்லை. கட்சிகளில் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். மனிதர்களின் மீது கொண்ட அன்பில் இவர்களிடம்மாற்றமில்லை. தொழில்துறை போல் மடாலயங்கள் போல் இருகிப் போய்விட்ட கட்சிகளின் மீதும் அதனது தொழிற்சங்கத் தலைவர்கள் மீதும் இவர்கள் தீராத கோபம் கொண்டிருக்கிறார்கள். இவர்களை போதையில் ஆறுதலும் சந்தோஷமும் காணவைத்த சமூக அவலத்திற்கான முழப் பொறுப்பையும் இடதுசாரிக்கட்சியின் தலைமையினர்தான் ஏற்கவேண்டும்.
சென்னையில் ஆரம்ப மாதத்தில் இருந்த சில நாட்களில் வாகன இரைசசலும் அவைகள் எழுப்பும் ஹாரன் ஒலிகளும் எரிச்சலாகவும் மிகுந்த வன்முறைத் தன்மை கொண்டதாகவும் இருந்தது. என்னேரமும் விபத்து நிகழும் மனிதர்கள் வன்முறையில் ஈடுபடுவர். சாவு நிகழும் என்று மனம் பதட்டமாக இருந்தது. ஆயினும் அந்த விரைவிலும் அராஜகத்திலும்கூட ஒரு லயம் இயங்குவதைப் பிற்பாடு அறிந்து கொண்டேன். வாகனங்கள் லேசாக முட்டினால் கூட பரஸ்பரம் சகிப்புத் தன்மையுடன் கலைந்து போகிற மனிதர்களை புன்னகையுடன் நட்பு பாராட்டுகிற மனிதரகளை நான் கண்டேன். அவசரம் எல்லோருக்கும்தான் என்பதை எல்லோரும் உணர்ந்து கெர்ணடிருக்கிறார்கள் போலும். சென்னையில் இருந்தபோது இரண்டு திரையிடல்களுக்கு நண்பர் பாலு என்னை அழைத்துச் சென்றார். ரஷ்யக் கலாச்சார மையததில் கம் அனட் ஸீ எனும் ரஷ்யப்படமும் சென்னை பிலிம் சேம்பரில் பாதிப்படத்தில் நுழைந்து பாதிப்படத்தில் வெளியேறிய ஒரு பிரெஞ்சுப்படமும் பார்க்கமுடிந்தது. மறுபடியும் பாலு. இந்த பாலு ஒரு வித்யாசமான அடக்கமாக மனிதர். அதிர்ந்து பேசாத மனிதர் தன்னலம் கருதாத மனிதர். சினிமா குறித்தும் இலக்கியம் குறித்தும் அபரிமிதமான அறிவைச் சேகரித்து வைத்திருக்கும் மனிதர். இவ்வாறாக அதிகம் வெளியில் பேசப்படாத நிறைய முக்கியத்துவமுள்ள மனிதர்களைச் சொல்ல வேண்டுமானால் இவரோடு சேர்த்து பத்மநாப ஐயரையும் நான் சொல்வேன்.
இமெயில் பார்ப்பது மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது. ஓரு மணி சேரத்திற்கு முப்பது ருபாய்கள். பெரும்பாலுமான இடங்களில் கம்யூட்டர் மிககிக மெதுவாக வேலை செய்தது. கோவையில் திட்டமிட்டே நெட்கேபேயினர் அப்படிச்செய்வதாக நண்பர்கள் சொன்னார்கள். இரண்டு மூன்று முறை முயற்சி செய்தும் ஈழ நண்பர்கள் ஜெயபாலன் ரமணீதரன் போன்றவர்கள் அனுப்பியிருந்த இமெயில்களைப் பார்க்கமுடியவில்லை. சென்னையில் கடைசியில் கனெக்ஷன் கிடைத்தும் முடியாமல் போனது. இருநூறு மெயில்கள் வந்து அடைத்துக் கொண்டு கடைசியில் அந்ந முகவரியைக் கைவிடவேண்டிய நிலையேற்பட்டது.
எனது சகோதர சகோதரிகளின் பெண் குழந்தைகளோடு நிறைய நேரத்தைச் நான் செலவிட்டேன். இன்றைய பையன்கள் ரொம்பவும் புத்திசாலித்தனமாக பெண்பிள்ளைகளை நைச்சியம் செய்ய அறிந்திருக்கிறார்கள். தனது காதலியும் தனது மனைவியும் கன்னியராக இருக்கவேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். காருண்யா தொழில்நுடபக் கல்லுாரி முதல்வருடன் பேசிக்கொண்டிருந்தபோது இன்றைய மாணவர்கள் பெற்றோர்களுக்குப் பொறுப்பெடுக்க விரும்புவதில்லை. சீக்கிரம் பணக்கார்கள் ஆக முயற்சிக்கிறார்கள். தம்மை மையமாக வைத்தே பிறவற்றை அணுகுகின்றனர் ஒரு வகையில் உலக மயமாதலின் மனிதத் தாக்கம்இது என்றார். திருமணம் என்கிற நிறுவனத்தின் மிது வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என நினைக்கிற பெண்கள் மத்தியில் நபிக்கை குறைந்து வருகிறது. வுாழ்க்கையை ஆண்களை மையப்படுத்தியதாக திருமணத்தை மையப்படுத்தியதாக தொழில்நுட்பக் கல்வியும் கணணிக் கல்வியும் கற்கிற மாணவிகள் நினைப்பதில்லை என்பது கல்லுாரிக்கல்விக்கு மேலே படிக்க நினைக்கும் மாணவிகளது மனப் போக்காக இருக்கிறது.
தொழில் முனைவர்களாக பேராசிரியர்களாக ஆராய்ச்சியாளர்களாக பத்திரிக்கையாளர்களாக வழக்குரைஞர்களாக புலம் பெயர்ந்தவர்களாக எழுத்தாளர்களாக விலகியவர்களாக மணம் முடித்தவர்களாக விவாகரத்துப் பெற்றவர்களாக இன்னும் தனியர்களாக குழந்தைகள் கொண்டவர்களாக எங்கெங்கோ சிதறிப் போனோம். மறுபடியும் நாங்கள் சந்தித்தோம். முன்னொருநாள் சந்தித்த நூலகத்தில் பாதைகளில் தெருக்களில் காப்பிக் கடைகளில் மது விடுதிகளில் நண்பர்கள் நாங்கள் சந்தித்தோம். பெண்களைப்பற்றி அன்று போல் இன்றும் பேசித் தீர்த்தோம். ஏமது இளமையும் முதுமையுமான காதலியர்க்கு இப்போது மணம்முடித்து குழந்தைகள் இருந்தனர். குழந்தைகளுககும் குழந்தைகள் இருந்தனர். மறுபடியும் எம்மிடமிருந்து புத்தகங்கள் வரும். வாழ்வின் வறட்சியும் பசுமையும் குறித்து துயரமும் அன்பும் குறித்து பிரிவும் சேரலும் குறித்து மாற்றுச்சினிமா குறித்து நீட்ஷே குறித்து கவிதைகள் குறித்து பாலுறவு குறித்து நாம் பறிமாறிக்கொள்வோம்.
சொந்தக் காரியங்கள் தவிர என்னுடைய மாற்றுச் சினிமா குறித்த இரு தொகுதி நூல்களை அச்சிட்டு வெளிக் கொண்டுவந்துவிடும் திட்டத்தோடு போனேன். அது நடவாமல் இடையிலேயே விட்டுத்தான் திரும்ப வேண்டியிருந்தது. நிறையப்பேரை நான் சந்திக்க முடியவில்லை. நோய்வாய்ப்பட்டிருக்கும் எனது உடன் பிறந்த சகோதரி ஒருவரைப் பயணம் செய்து பார்க்கக் கடைசியில் எடுத்த முயற்சி கைகூடாமலேயே திரும்பிவந்தேன். தங்கையின் மகனைக் கூட்டிக் கொண்டுபோய் புதியதாக ஒரு ஸோனி டிவியும் விசிடி பிளேயரும் வாங்கிக் கொடுத்து பதினைந்து வருடங்களான கறுப்பு வெள்ளை டிவிக்கு விடை கொடுத்தேன். அம்மா அந்தக் கறுப்பு வெள்ளையை இன்னும் விடமறுக்கிறாள் என தங்கை இப்போதும் சொல்கிறாள்.
கடைசிவரையிலும் கோவை பாப்பநாய்க்கன்பாளையத்திலிருக்கும் லேண்ட் மார்க் புத்தகக் கடைக்கு மருமகள் ஷோபனாவைக் கூட்டிக் கொண்டு போகிறேன் என்று சொன்ன வாக்கைக் காபபாற்ற முடியவில்லை. லேண்ட் மார்க் கோவையில் இருக்கும் ஐரோப்பிய புத்தகக் கடைகளை ஒத்த ஆங்கிலப் புத்தகக் கடை. ஐரோப்பியப் புத்தகக் கடைகளைப் போல அலமாரிகளில் பொருள்வாரியாக புத்தகங்கள் அடுக்கப்பட்ட கடை. ஐரோப்பாவிலிருந்து செல்பவர்கள் இங்குள்ள தமது நணபர்களுக்கு அங்கிருந்து நினைவுப் பொருட்கள் வாங்கி வருகிற மாதிரி திட்டமிட்டுச் செய்யப்பட்ட கடை. நீட்ஷேயும் அருந்ததி ராயும் போஸ்ட்மாடர்னிசமும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் எழுத்தாளர்களின் நுால்களையும் அங்கு வாங்கலாம். ஆரம்பத்திலொருநாள் நண்பர்கள் சுப்ரபாரதிமணியன் பழனிசாமியுடன் போனபோது இந்திய வெகுஜன சினிமாவின் அரசியல் பற்றிய புத்தகமொன்றை அங்கே வாங்கினேன். மருமகளுக்கு நிஜத்தின் வலிமை குறித்த வாசகத்தகடு ஒன்றை மேஜை மேல் வைக்க நினைவுப் பரிசாக வாங்கிக் கொடுத்திருந்தேன்.
தனது எழுபத்தி ஆறாவது வயதில் தீராத வேட்கையுடன் படித்துக் கொண்டிருக்கும் அப்பாவுக்கு சமகாலத்தில் வந்த மிக நல்ல நாவல்களையும் சில நல்ல புத்தகஙகளையும் எனது நண்பன் விசுவநாதனிடமிருந்து திரட்டித் தந்தவிட்டுவந்தேன். அவர் சமீபத்தில் படித்த முடித்த புத்தகம் தியாகு மொழிபெயர்த்த மூலதனம் அனைத்து தொகுதிகள். படித்துவிட்டு மிகுந்த எரிச்சல் கொண்ட புத்தகம் ஜெயமோகனின் பின் தொடரும் நிழலின் குரல். நான்காவது வகுப்பு மட்டுமே படித்த அவர் தனது ஐந்தாவது வயதில் கிராமததில் மாடு மேய்க்கும் தொழிலைவிட்டு உறவினரின் அழைப்பின் பேரில் கோவை நகரம் வந்தவர். கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியராக அதனது எழுச்சி வீழ்ச்சி பிரிவினைகள் என அனைத்தையும் தனது வாழ்வாக இருந்து கண்டவர். சுமார் அறுபத்து ஐந்து ஆண்டுகளாக அதன் தலைவர்களை அருகிலிருந்து கண்டவர் ப.விருத்தகிரி எல்.அப்பு எஸ்என்.நாகராஜன் போன்றவர்களை நண்பர்களாகக் கொண்டவர். கம்யூனிஸ்ட் கட்சி பற்றி நிறைய விமர்சனங்களுடன் இருக்கிறார். என் அப்பா கஸ்துாரிசாமிக்கு கனவுகள் இன்னும் கலைந்துபோகவில்லை. மகன் தந்தைக்காற்றும் உதவி என்னளவில் அவருக்கு வாசிக்கப் புத்தகங்கள் வாங்கிக் குவிப்பதுதான் என வரித்துக் கொண்டேன்.
விசுவநாதனிடமிருந்து திரட்டியதும் எனது பழைய புத்தகங்கள் சிலவும் மற்றும் சில புதிய நூல்களையும் தம்பான் வசம் ஒப்புவித்து கடல்தபாலில் போடச் சொன்னேன். லண்டன் போய்ச்சேர்ந்தவுடன் வாங்கிவந்த புத்தகங்கள் எங்கே எனக்கேட்கும் பத்மநாப ஐயரை நினைத்துக் கொண்டேன். நான் பார்க்க வளர்ந்த குழந்தைகளிடம் அவர்களது எதிர்காலத்திட்டங்கள் குறித்து பல்வேறு வாக்குறுதிகளைப் பெற்றுக் கொண்டுவந்தேன். ஈழத்து எழுத்தாளர் எஸ்.பொ.வுடன் மறுபடி சந்திக்கிறேன் என்று சொன்னது இயலாமலேயே போனது. தோழர் அஜய்கோசிடம் சொன்னபடி பழங்குடி மக்களுக்காக தம் வாழ்வில் அர்ப்பணிப்புடன் செயல்படும் குணசேகரனையும் தோழர் நஞ்சப்பனையும் சந்திக்காமலேயே வந்துவிட்டேன். லண்டனிலிருந்து புறபபடும் போதும் திரும்பி வரும்போதும் எனக்கு விருப்பமான எனது அன்பு மனிதர்கள் கொடுத்த புத்தகங்களையோ பொருட்களையோ நான் எடுத்துவரவில்லை. பிறர் எந்த விதமான பொறுப்பான சிந்தனையுமற்று என் மீது சுமத்திய மூட்டைகளை லண்டனில் இருக்கிற அவர்களது உறவினர்களுக்குச் சுமந்துதான் வந்தேன். தமிழகத்தில் வாழ்கிற மத்தியதரவர்க்க மனிதர்கள் மிக மோசமான சுயநலவாதிகளாக தம நலன்களை மட்டுமே முன்னிறுத்துகிறவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு இவையெல்லாம் சாட்சிகள். அன்பையும் இயலுமானால் கடிதங்களையும் இன்னும் போனால் புத்தகங்களையும் கொடுத்தனுப்புங்கள்.உங்களது மூட்டைகளைச் சுமந்து செல்லுகிற துர்ப்பாக்கிய்ததையும் அதன் பொருட்டு பிறமனிதர் அன்புடன் கொடுக்கும் பொருட்களை எடுத்துச் செல்லமுடியாத அவலத்தையும் தராதீர்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. இது ஒருதனிநபரின் துயரம் அல்ல என்பதால்தான் ஒரு பொதுச் செய்தியாக இதைச் சொல்ல வேண்டியிருக்க்ிறது.
தமிழகத்தில் கால் வைத்தவுடன் எனது நண்பர்களின் குழந்தைகளைப் பாரக்க விருமப்ினேன். இதற்கான உளவியல் விளக்கம் இன்னும் எனக்குப் பிடிபடவில்லை. கடந்த இரண்டு வருடங்களாக நான் பார்க்க இயலாதிருக்கும் எனது பன்னிரண்டு வயது மகளின் பிரிவு இதற்கொரு காரணமாயிருக்குமா என நிச்சயமாக எனக்குச் சொல்லமுடியவில்லை. மணியின் மகன் சின்னவயசு மணி. விஸ்வநாதனின் மகள் அவ்வை ரோஸா எழிலின் மகன் சே குவெரா. எனது நண்பர்கள் தாய்க் கோழி போலத்தான் இருக்கிறார்கள். குழந்தைகளிடம் தோற்றுப்போகிற குழைந்து போகிற சண்டைக்காரர்கள் அவர்கள். அவர்களது அநீதிக்கெதிரான வன்முறை உணர்வையும் கோபத்தையும் கடந்த காலத்தையும் நினைக்க எனக்கு ஆச்சர்யமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. குழந்தைகள் அழகாக கற்பனையாற்றலுடன் பொய் சொல்கிறார்கள். பல சமயங்களில் உண்மை பொய் நல்லது கெட்டது போன்றவற்றுக்கிடையிலான வித்தியாசங்கள் புரிவதில்லை. குழந்தைகளிடம் பேசும் போது அநேகமா அந்த மத்ிப்பீடுகள் முற்றிலும் அழிந்து போகிறது அல்லது மறந்து போகிறது. விஸ்வநாதனின் மூன்றுவயதுப்பெண்குழந்தை தன்னை நாய் கடித்ததாக புருடா விட்டதை நான் நம்பினேன். குழந்தைகள் தான் உண்மையில் வாழ்வை அழகானதாக ஆக்குகிறார்கள். நண்பர்களை இன்னும் அதிகமாக மனிதர்களாக ஆக்கியிருப்பவர்களும் அவர்கள் தான். எனது நண்பர்களுக்கு நரை விழுந்துவிட்டது. நான் பார்க்க பிறந்து வாலிப வயதிலிருக்கும் குழந்தைகள் உலகைப்புரிந்து நமக்கு அறிவுறுத்தும்போது சந்தோஷமாக இருக்கிறது. திருப்பூரிலிருக்கும் ஒரு அறுபது முஸ்லீம் முதியவர் சொன்னதாகச் சொல்லப்படும் வாசகம் ஞாபகம் வருகிறது : கொஞ்சிக் கொண்டிருக்க எப்போதும் மடியில் ஒரு குழந்தையில்லாத வாழ்வென்ன வாழ்வு ?
புறப்படும் முன்பு அடிக்கடி போனில் அழும் அம்மா அழாமல் வழியனுப்பி வைத்தது ஆச்சரியமாக இருந்தது. இரவில் திடாரென குளிர் உணர்ந்து விழித்துப் பார்ககையில் தலையைத் தடவியபடி அருகில் என்னைப் பார்த்தபடி படுத்திருக்கும் அம்மா அழாததில் எனக்கு ஆச்சரியம் அப்பா முதல் நாள் அம்மாவிடம் பேசியருக்கிறார் என நினைத்துக் கொண்டேன. பன்னிரண்டரை வருடங்களாக நான் கேட்க வேண்டும் என நினைத்த மன்னிப்பை நான் அண்ணியிடமும் அண்ணனிடமும் கேட்டேன். மறுபடிம் வாழ்க்கை குறித்து தீவிரமாக எழுதுவதாகச் சொல்கிற இலக்கியவாதிகளின் மேல் எனக்கிருந்த நம்பிக்கை குறைந்நு போனது. அதிகமான படிப்பறிவற்ற மனிதர்கள் எனது அண்ணி போன்ற கிராமத்து மனிதர்கள் அடிப்படையில் மிக அற்புதமான மனிதர்களாக நொடியில் உன்னதத்தை நிகழ்த்துகிற மனிதர்களாக இருந்ததை அன்று நான் கண்டேன். வீட்டுக்கு மூத்த பெண்ணாக முதல் முதல் எங்கள் வீட்டுக்குக்கு வந்த எனது பெரிய அண்ணி உச்சி மோந்து முத்தமிட்டு நான் அண்ணனுக்கும் அவளுக்கும் இழைத்த தீமைக்காக என்னை மன்னித்தாள். என் மேல் கவிந்த சாபமும் கால காலமாய் எனக்குள் இருந்த குற்றஉணர்வும் அந்நொடியில் எரிந்து சாம்பலாய் அவிந்தது.
தனது இருபத்தைந்தாவது வயதில் கணவனை விபத்திற்கு பலி கொடுத்துவிட்டு வைராக்கியமாக தனது குழந்தைகளை வளர்த்து ஆளாக்கிவிட்டு அவர்களோடு உளவியல் போராட்டங்களை வலியுடன் நடத்திக் கொண்டிருக்கும் எனது தங்கை இந்திரா- கட்சிக் கிளைச் செயலாளராக அதே அதிகாரவர்க்க அரசியல் நிலைபாட்டுடன் அன்பாகவும் இருக்கிற தோழர் நாராயணசாமி- தொடர்ந்ததுகலகக்காரராகவும் நேர்மையாளராகவும் சேவைமனப்பான்மையுடனும் சதா இயங்கிக் கொண்டிருக்கும் வடிவேலு- குழந்தைப் பிறப்பின் போது இறந்துபோன பக்கத்தவீட்டு சரசக்காவின் மகள் சித்திரா- இரண்டு வளர்நத குழந்தைகள் இருக்க திடார்ச்சாவுக்கு கணவனைப்பறிகொடுத்து நிற்கும் ராணி – ஆச்சி செட்டிநாடு உணவகத்தை சென்னைக்கூட்டத்துக்குக் கொடுத்ததவிய எனது சாகசக்கார தலித் நண்பர்கள் மணி சுரேஷ் – முதலில் மார்க்ஸிடமும் இப்போது கடவுளிடமும் சரணடைந்தருக்கும் நண்பனும் தோழனும் உறவினனும் ஆன மாமன் மகன் வெங்கடேசன் எனது நண்பர்களின் அன்பான மனைவியர் வாசுகி பேபி ரஜனி ஆனி – பதினைந்து வயது கிறுகிறுப்புடன் நான்கு முறை ஆடை மாற்றி பத்து முறை கண்ணாடி பார்க்கும் எனது அண்ணன் மகன் புபேஷ்- தாம் எப்படி வரவேண்டும் எனத் திட்டங்களுடன் எதிர்காலத்தை எதிர்நோக்கும் பாலு சதீஷ்-அன்பு செய்தலின் வழி தானே கடவுளென வாழும் அற்புத மனிதர் செட்டியாரண்ணன்- தோழர் கோபால் -அவரது அன்பு மனைவி- நான் எங்கெங்கும் சைக்கிளில் கொண்டுதிரிந்து தற்போது குறும்புக்காரப் பையனாக மொட்டைமாடிகளில் தொற்றித் திரியும் அஜி- மழைக்காலத்தில் தேங்கிய குழியில் விழுந்து மரணமெய்திய குழந்தை- அரசு அதிகாரியாக இருந்தும் நேர்மையாளராகவிருந்த உன்னி கிருஷ்ணன்- தனது மகள் அசாரணமானவடிவத்துடனான தலையுடன் பிற்ந்த வேதனைளை நெஞ்சில் சுமந்து கொண்டு சதா மருத்துவமனைக்கு அலைந்து கொண்டிருக்கும் தோழன் வள்ளி நாயகம்-என்னோடு தேர்தலுக்குத் தட்டி எழுத இரவும் பகலும் திரிந்தவன் ஓவியக்கலைஞன் பாட்டுக்காரன் நடுத்தெருவில் அனாதைப்பிணமாய் கஞ்சாவுக்கு அடிமையாகச் செத்தக்கிடந்த என நண்பன் ஆறுக்குட்டி- கூலிக்காரர்களைத் திரட்டுவதில் நோக்கமாயிருந்து அவர்களோடு சேர்ந்து குடித்துக் குடித்துச் செத்த தோழன் ராஜேந்திரன்-என்னைத் தேடிவந்து ஒன்றாகத் தண்ணியடித்துவிட்டு இனிமேல்தண்ணியைக் குறைத்துக் கொள்கிறேன் என அடிக்கடிசொல்லிப் போன தோழன் ஜெகநாதன்-தமது முதியவயதில் ஊழல் ஒழிப்பு இயக்கத்தைத் துவங்கியிருக்கும் கட்சியிருந்து வெளியேறிய கம்யூனிஸ்ட்டுகள் – எனது எண்ணற்ற தற்போது கட்சியினின்று விலகி வாழும் நண்பர்கள் சபாபதி ராதாகிருஷ்ணண் சோமு – பிரதான சமூகத்தினின்னறு இன்னும் விலக்கிவைக்கப்பட்டபடி வாழும் உப்பிலிபாளையம் தலித் மக்கள்- எனக்குள் அந்த மண்ணின் ஒவ்வொரு துகளுக்கும் வரலாறும் நினைவுகளும் இருக்கிறது.
டியூஸன் வாத்தியாரின் வளர்ந்த மகள்களை அவர்களது நெகிழ்ச்சியான தேகங்களை உள்ளங்கை வெம்மையை இன்னும் எனக்கு மறக்க முடியவில்லை. ஏழெட்டுவயதில் நான் அன்றைய – இன்று பெயர் சொல்லமுடியாத- இளம்வயதுப் பெண்ணிடம் பெற்ற முதல் ஸ்பரிசம் மறக்கவில்லை. எங்கோ தொலைதுாரத்தில் வளர்ந்த பிள்ளைகளுக்கத் தாயாகி என்னை சதா விசாரிக்கும் எனது சகியை எனக்கு மறக்கமுடியவில்லை. ஜாதியத்திற்கெதிரான சாகசங்களும் அநீதிக்கெதிரான வன்முறைகளும் மறக்கவில்லை. ஆலைகள் மூடுண்டு போயின. மனிதர்களுக்கு முதுமை வந்துற்றது. சக்கிலியத் தெருவில் மதுரைவீரன் சாமி அதே கம்பீரத்துடன்தான் இருக்கிறான். மனிதர்களிடம் அன்பு மாறவில்லை. வீடுகள் திறந்தபடிதான் இருக்கின்றன. சோறு கேட்டபோது கிடைக்கிறது.இட்லியும் சட்டினியும் திகட்டவில்லை. மெதுமெதுப்பான அன்றேயான இட்லியும் சட்னியும் காரமும் உலகில் இனி எங்கும் கிடைக்காது. கையேந்தி பவன்களில் நள்ளிரவில் சாப்பிடுகிற சுகம் கிடைக்காது. நட்புக்காக தம்மைத்தரும் நண்பர்கள் உலகில் இங்குபோல் எங்கும் இல்லை. அன்புதான் நமது நாடு. அன்புதான் நமது மனிதர் அன்புதான் எமது வீடு. வுீட்டையும் நாட்டையும் பிரிகிற நாள் வந்தபோது தற்காலிக மரணம் வந்தது போலும் அழுகை வந்தது.
எனது வாழ்க்கை காற்றில் அலையும் இறகு போல் ஆற்று நீரின் மீதான தக்கை போல் என்னை இழுத்துச் செல்கிறது. அரசியல் காரணங்கள் பொருளியல் காரணங்களால் உள்நாட்டுப்போரின் காரணங்களால் மனிதர்கள் இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஈழ நண்பர்கள் மாதிரியில்லாமல் எனக்கு இதில் என்ன காரணம் பொருந்தும் என்பதும் தெரியவில்லை. இனி தெரியப் போவதுமில்லை என்று தோன்றுகிறது. அடையாளமற்று ஆயினும் புதுயுக வேட்கை கொண்டு தேசாந்திரிகளாகத் திரிந்த எனது மூதாதையர்கள் மார்க்சும் லெனினும் குவேராவும் ஞாபகம் வருகிறார்கள். இன்றைய புலப்பெயர்வுக்கு அப்படியேதும் காரணங்கள் சொல்லமுடியாது. ஆனால் வாழ்க்கை பல்வேறு வகைகளில் எமது கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்பது மட்டும் தெரிகிறது. ஆனாலுமென்ன அடையாளமற்று அந்நிய நாட்டில் திரிகிற சுதந்திரமும் கடல் போல் விரிந்து கிடக்கும் லண்டன் நூலகப்புத்தகங்களும் எனது மேற்கத்திய இருத்தலுக்கான காரணங்களில் ஒன்று என்பதை மட்டும் என்னால் நிச்சயமாகச் சொல்லமுடிகிறது.
மே இருபத்தியேழாம் திகதி லண்டன் விமான நிலையத்துக்கு நடைமுறை ஞானியான எனது நண்பன் சிவா வநதிருந்தான். அறைக்குத் திரும்பியதும் அவசரமாக அவன் வெளியேறிய பின் பத்துநாட்களாவது எவருடைய தொந்தரவும் இல்லாமல் துாங்கவேண்டும் என்று தோன்றியது. சந்திக்க வந்த என் நண்பர் கஜேந்திரா ராஜேந்திரா நிறையக் கடிதங்களைத் தந்தார் . பாங்க் ஸ்டேட்மென்ட். கவுன்ஸில்டாக்ஸ் டிமான்ட நோட்டாஸ் சினிமா புததக அறிமுகவிழா அழைப்பு எல்லாவற்றுக்கும் மேலாக டெலிபோன் இணைப்பு துண்டிக்கப்பட்டதற்கான அறிவிப்புக்கடிதம் போன்றன இருந்தன. கஜேந்திரா பிலிம் எடிட்டிங் வேலைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். என்றார். சில டாகுமெண்டரிகளுக்கான முன்வரைவுகளைப் போட வேண்டும் என்றார். அக்டோபரில் நடக்கவிருக்கும் சினிசங்கம் டாகுமெண்டரி குறும்பட விழா சம்பந்தமாக அடிப்படையான பணிகள் உடனே மேற்கொள்ள வேண்டும் என்றார். மில்லினியம் கமிஷனுக்காக தமிழ் தகவல் நடுவத்துக்கு வெப் டிசைன் வேலைகளுக்காக குலெந்திரனையும் தொடர்ந்து தொந்தரவு தரும் டைனி கம்ப்யூட்டர் கம்பெனியின் மீதான புகார் கொடுக்க பிலிப் மாத்யுவையும் நாளைக்குக் காலையில் முதல் வேலையாக போன் பண்ணி தொடர்பு கொள்ள வேண்டும். லண்டனில் நான் வந்து இறங்கிய அன்று இரவு லண்டன் ஓல்த்தம் எனும் இடத்தில் ஆசிய இளைஞர்களுக்கும் வெள்ளை இளைஞர்களுக்குமிடையில் தெருச் சண்டைகள் தொடங்கியிருந்தன். மூன்றாம் தலைமுறை ஆசிய இளைஞர்கள் நீதியை உடனே கோருகிறார்கள். இனி இறைஞ்ச அவர்கள் தயாராயில்லை. வன்முறையை ஒரு வாழ்முறையாக தமது அடிப்படை உரிமைகளை அடையும் நெறிமுறையாக அவர்களும் கைக்கொள்ளத் தொடங்கிவிட்டதுபோல் வன்முறை இப்போது இங்கிலாந்து முழூவதற்கும் பரவிக் கொண்டிருப்பதின் சாட்சியமாக மான்செஸ்டர் நகரின் மையம் தொலைக்காட்சியில் எரிந்து கொண்டிருந்தது.
இந்த வருடம் இங்கிலாந்தில் அதி வெப்பமான கோடைக்காலம் என்றும் மிக அதிகமான மகரந்தக் காய்ச்சல் இருக்கும் என்று ராகவன் சொன்னதும் நினைவு வந்தது. சென்னையில் வழியனுப்ப வந்த என் ஆருயிர் நண்பன் விசுவநாதன் கடைசி நிமிடத்தில் காற்றில் அனுப்பிய முத்தம் ஞாபகம் வந்தது. மணி சுரேஷ் நிணைவில் வந்து போனார்கள். இரவுச்சாபபாடு பற்றிய நினைவு வந்தது. கோயமுத்தூர் போன அன்று அம்மா எனது தலையை வாஞ்சையடன் கோதியபடி மார்பில் சாய்த்தக் கொண்டு என் முன்னாள் கொண்டுவந்து வைத்த கோடிவகை பதார்த்தங்களும் உறவினர்களும் நண்பர்களின் மனைவியரும் மறுக்க மறுக்க இலையில் போட்ட சாப்பாடும் ஞாபகம் வர பசித்தது. இரவுக்கு பிரெட்வாங்கினால் ஊறுகாய் வைத்து சாலட் சான்ட்விச் செய்து சாப்பிடலாம் எனும் முடிவில் பார்க்கிங் சுரங்க இரயில் நிலையத்துக்குப் பக்கத்தில் வீதியின் மறுமுனையில் இருக்கும் இரவு நெடு நேரமும் திறந்திருக்கும் தமிழ் பையன்கள் இருக்கும் கடைக்குச் செல்லச் சட்டையைப் போட்டுக் கொள்ளத் தொடங்கினேன்.
26 ஜூன் 2001
- கொலுசுகள்.
- ‘கன்யாகுமரி ‘.ஏன் நம்மை சீண்டவேண்டும் ?
- ஏன் இந்துக்கள் பசுவைக் கொல்வதில்லை ?
- சுடர்ப் பெண்கள் சொல்லும் இரகசியம்.
- புகழின் நிழல்
- என் விடுமுறை
- விடியல்
- பழக்கமாகும்வரை…
- தோற்றுப்போகாதே….
- பசிக்கிறது!
- இருவர்
- ஜனநாயக அராஜகம்
- ஏன் இந்துக்கள் பசுவைக் கொல்வதில்லை ?
- நகர்வாசமும் வீடுபெறலும்
- அஹிம்சையில் எதிர்ப்பு -2
- இந்த வாரம் இப்படி (ஜெயலலிதா கட்டளை, முஷாரஃப் வருகை,காமராஜர் பிறந்த நாள்)
- தொலைதல்