நகரத்தின் வாழ்வும் வதையும் கே.ஆர்.மணியின் “மெட்ரோ பட்டாம்பூச்சி”

This entry is part [part not set] of 25 in the series 20091204_Issue

பாவண்ணன்


நகர வாழ்வின் கலவையான அனுபவங்களில் உள்ள கவித்துவமான தருணங்களைப் படம்பிடிப்பதில் ஆர்வமுள்ள கவிஞராக மெட்ரோ பட்டாம்பூச்சி தொகுதியின்மூலம் தன்னை நிறுவிக்கொண்டிருக்கிறார் கே.ஆர்.மணி. ஒருசில கவிதைகளில் விலகிப்போன கிராமத்துவாழ்வைப்பற்றி வருத்தம் தோய்ந்த ஆதங்கமும் கழிவிரக்கமும் தென்பட்டாலும் எண்பத்தெட்டு கவிதைகளில் பெரும்பாலானவை நகரத்தையே களமாகக் கொண்டவை. “எதுவும் நடக்கலாம்” என்றொரு கவிதை இத்தொகுதியில் உள்ளது. நகரமனிதர்களுக்குமட்டுமே சாத்தியமான உலகத்தைச் சித்தரிக்கும் கவிதை இது. ஒரு பேருந்துப்பயணம் அல்லது தொடர்வண்டிப்பயணத்தில் உட்கார்ந்துகொண்டோ அல்லது நின்றுகொண்டோ பயணம் செய்யும் ஒருவன் அந்தப் பயணத்தில் நிகழ்வதற்குச் சாத்தியமான எல்லாவற்றையும் பட்டியலிடுகிறது. ஒரு பட்டியல்கூட நல்ல கவிதையாவதற்குச் சாத்தியமுண்டு என்பதற்கு இதை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். பகவத் கீதை படிக்கலாம், குறுஞ்செய்திகள் அழிக்கலாம், காய்கறி நறுக்கலாம், அரசியல் திரைப்படக்கதைகளைப் பேசிப் பகிர்ந்துகொள்ளலாம் என, ஒரு பயணத்தில் சாத்தியமான எல்லா விஷயங்களையும் முன்வைத்துவிட்டு, இறுதியில் அந்தப் பயணத்தில் யாராவது வெடிகுண்டு வைத்திருக்கலாம், அது வெடிக்கவும் செய்யலாம், செத்தும் போகலாம் என்று கசப்போடு சொல்லிமுடிகிறது. மனிதன் நகரைநோக்கி எதற்காக குடியேறுகிறான்? வாழ்வதற்காக. மூன்று வேளை சோற்றுக்குத் தேவையான பணத்தைத் தடையில்லாமல் சம்பாதிப்பதற்காக. உழைப்பதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளதால், உழைக்கமட்டுமே தெரிந்த லட்சக்கணக்கான மக்கள் நகரத்தைநோக்கி தினந்தினமும் வந்தபடி இருக்கிறார்கள். தங்குமிடத்துக்கும் வேலை செய்யும் இடத்துக்கும் இடைப்பட்ட பயணத்தொலைவு ஒவ்வொரு நாளிலும் நாலைந்துமணிநேரங்களை எடுத்துக்கொள்கிறது. அந்த நேரத்தின் இழப்பை ஈடுகட்டும் விதத்தில்தான் பயணத்திலேயே படிப்பது, எழுதுவது, அழுவது, சின்னச்சின்ன வேலைகளைச் செய்துமுடிப்பது, பின்னல் போடுவது எல்லாமே நிகழ்கின்றன. வாழ்வைத் தேடி வந்த நகரத்தில் வாழ்வை உறுதிசெய்துகொள்ள தினந்தினமும் அந்தப் பயணங்கள் தேவைப்படுகின்றன. அந்தப் பயணமே, மரணத்தைநோக்கிய பயணமாக அமையுமென்றால், குடியேற்றமே அபத்தமாக மாறிவிடுகிறதல்லவா? வாழ்வதற்காக வந்த இடத்தில் வாழ்க்கையைத் தொலைப்பதற்கே நம் பயணம் காரணமாக அமையலாமா? வாழ்வதைப்பற்றிய மறுபரிசீலனைக்குத் தூண்டுகிற நல்ல கவிதை இது. ஆயினும் மணி இந்த அடுக்கிலும் சொல் கச்சிதத்திலும் போதிய கவனத்தைச் செலுத்தவில்லையோ என்று தோன்றுகிறது. வெடிகுண்டுகளைப்பற்றிய வரிகள் முத்தாய்ப்பாக அமைக்கப்பட்ட ஒரு கவிதையில் ஐந்தாவது வரியிலேயே ஒரு வெடிகுண்டு வெடித்துவிடுவது கவிதையின் வலிமையைக் குறைத்துவிடுகிறது.

தொகுப்பின் முக்கியக் கவிதைகளில் ஒன்று “குர்சி” . குர்சி என்பது நாற்காலியைக் குறிக்கும் இந்திச்சொல். மரத்தாலான ஓர் அ•றிணைப்பொருள் நாற்காலி. உயிரில்லாதது. உட்காரப் பயன்படுத்தும் பொருளென்றாலும் சில சமயங்களில் அதிகாரத்தின் குறியீடாகவும் விளங்கும் தன்மையுடையது. அதிக விலைகொடுத்து அந்த நாற்காலியை வாங்குகிறான் ஒருவன். அதில் உட்கார்ந்திப்பதே ஆனந்தமான அனுபவமாக இருக்கிறது அவனுக்கு. முதலில் தன்னைத்தவிர வேறு யாரையும் அந்த நாற்காலியில் அமர அவன் அனுமதிப்பதில்லை. பழகிய பிறகு, அந்தத் தனிமை பொறுக்கமுடியாததாக இருக்கிறது. அந்தச் சலிப்பை போக்கிக்கொள்ள எல்லாரையும் தன்னைச் சூழ்ந்துகொள்ள அனுமதிக்கிறான். இப்போது குழந்தைகளும் பெரியவர்களும்கூட தயக்கமில்லாமல் வந்து, அந்த நாற்காலியில் அமர்கிறார்கள். ஏறிக் குதிக்கிறார்கள். அழுக்காக்குகிறார்கள். பயன்பாட்டின் காரணமாக, புது நாற்காலியின்மீது சற்றே பழமை படியத் தொடங்குகிறது. எதிர்பாராத ஒரு கணத்தில் அவன் மனம் ஓர் உண்மையைக் கண்டடைகிறது. ஒரு நுகர்வாளனின் கோணத்தில் அதுவரை அ•றிணையாகக் கண்ட நாற்காலி, உயிர்ப்புள்ள ஒன்றாக மாறுதலடைகிறது. மரப்பொருளென்றாலும் அதற்கும் தனக்குமிடையே எவ்வித வேறுபாடுமில்லை என்ற உண்மையை உணர்கிறது. முதுமை இருவர்மீதும் படியத் தொடங்கும்போது, இருவரையுமே அது சமஅளவிலேயே பாதிக்கிறது. காலத்தின் முன் எல்லாம் ஒன்றே என்னும் தெளிவையும் தான் இவ்வளவுதான் என்ற தெளிவையும் மௌனமாக உள்வாங்கிக்கொள்ளும் கணத்தை இக்கவிதையில் அழகாகச் சித்தரித்திருக்கிறார் மணி. நம்மை மீறி காலம் ஏதோ ஒரு கட்டத்தில் நம் கண்களை மூடியிருக்கும் திரையை அகற்றி தன் விஸ்வரூபத்தைக் காட்டி மறைகிறது. மரப்பொருளான நாற்காலிக்கு, அது நாற்காலியாகப் பயன்பட்ட காலத்தையும் தாண்டி ஒரு பயன் இருக்கிறது. குப்பையள்ளிச் செல்கிறவர்களுக்கோ அல்லது வீட்டில் வேலை செய்கிறவர்களுக்கோ பரிசாகக் கொடுக்கப்படலாம். அது இன்னும் சில காலம் பயனளிக்கலாம். பிறகு, அதன் துண்டுகள் அடுப்பெரிக்கவோ, எதற்காகவாவது முட்டுக்கொடுக்கவோ பயன்படலாம். ஆனால், மரணத்துக்குப் பிறகு மனிதனால் விளையக்கூடிய பயன் எதுவுமே இல்லை. நம் முன் இன்னொரு திரையும் விலகிவிழுகிறது.

குர்சி கவிதை, அ•றிணை-உயர்திணை இடைவெளி அழிந்து கலைகிற தருணத்தை முன்வைக்கும்போது, விலங்குக்கும் மனிதனுக்கும் உள்ள இடைவெளி அழிந்து கலைகிற தருணத்தை முன்வைக்கிறது டயரும் நடுத்தெரு நாய்களும் என்னும் தலைப்பில் அமைந்த கவிதை. நகரத் தெருவில் சாதாரணமாகக் காணக்கிடைக்கக்கூடிய ஒரு காட்சியையே முன்வைக்கிறது இக்கவிதை. இடமும் வலமுமாக கணந்தோறும் வாகனங்கள் ஏராளமாக அலைகிற ஒரு தெரு அது. தெருவின் நெருக்கடி புரியாமல் ஒரு நாய் படுத்துக் கிடக்கிறது. எதிரே ஒரு வாகனம் கடுமையான வேகத்துடன் வருகிறது. அந்த வாகனத்தை ஓட்டிக்கொண்டு வருகிறவன் உறங்கும் நாயைப் பார்க்கிறான். ஒரு நாய்க்காக வேகத்தைக் குறைக்கவேண்டுமா என்ற யோசிக்கிறான் அவன். கியர் மாற்றி பிரேக் போடவேண்டுமா என்று அலட்சியமாக நினைக்கிறான். ஒலிப்பானை அழுத்துவதில்கூட அவன் அலட்சியம் காட்டுகிறான். அதனால் அழுத்தவில்லை. வேகம் குறையாமலேயே வண்டி பாய்ந்து வருகிறது. எப்படியோ தான் தாக்கப்படுவோம் என்று உணர்ந்துகொண்ட நாய் சட்டென்று விழித்துப் பின்னகர்ந்து உயிர்பிழைத்துவிடுகிறது. பிழைத்ததா இல்லையா என அறியும்பொருட்டு, அந்த நாயைத் திரும்பிப் பார்க்கிறான் அவன். அதன் கண்களையும் அவற்றில் ஒருகணம் ஒளிர்ந்த மிரட்சியையும் உயிராசையையும் கண்டு அவன் மனம் நிலைகுலைந்துவிடுகிறது. கலவரமும் பெருமூச்சும் இணைந்த அதே பார்வை, நிறுவனத்தைவிட்டு வெளியேற்றுவதற்கான முன்னறிவிப்புச்சீட்டு வழங்கப்பட்ட அன்று அவன் விழிகளிலும் படிந்திருந்தது. உயிராசையும் தப்பிப்பிழைக்கிற தருணத்தில் வெளிப்படும் உணர்வும் விலங்குக்கும் மனிதர்களுக்கும் பொதுவான ஒன்றே என்பதை அவன் உணர்ந்துகொள்கிறான். நாயை அற்பமாக நினைத்து, அடித்துவிட்டு செல்வது பிழையில்லை என நினைப்பது அவனைப் பொருத்தவரை நியாயமென்றால், அவனை அற்பமாக நினைத்து வேலையைவிட்டு நீக்க கடிதம் கொடுக்கிற நிறுவனத்தின் நடவடிக்கையும் நியாயமல்லவா? நாயின் கண்களில் ஒளிவிட்ட சுடர் அவன் கண்களைத் திறந்துவிடுகிறது.

“சத்திரம்” கவிதையிலும் அ•றிணைவழியாக உயர்திணைக்கு எட்டித் தாவுகிற ஒரு முயற்சி தெரிகிறது. ஒரு சத்திரக்காட்சி இக்கவிதையில் இடம்பெறுகிறது. மாப்பிள்ளை அழைப்பில் தொடங்கி மூன்றுநாள் திருமணச் சடங்குகளும் முடிந்து எல்லாரும் வெளியேறுகிற கட்டம்வரை சொல்லப்படுகிறது. பரபரப்புகள் அடங்கி அமைதி நிலவும் தருணம்f. அதுவரை துடிப்பு நிறைந்ததாகக் காட்சியளித்த சத்திரம் அமைதியில் உறங்கத் தொடங்குகிறது என கவிதை முடிவடைகிறது. சத்திரம் ஒரு கட்டடம் மட்டுமே. அது களைத்து உறங்கப் போவதாகச் சொல்வது, பரபரப்பு அடங்கி அமைதியில் ஆழ்ந்து நிற்கும் அதன் கோலத்தைக் குறிக்கும் ஒரு குறியீடாகவே எடுத்துக்கொள்ளவேண்டும். கவிதையில் இடம்பெறும் சத்திரத்தை ஒரு உருவகமாக எடுத்துக்கொள்ளலாம். திருமணம் நல்லபடி நடைபெறவேண்டுமே என பரபரப்பாக எல்லாவற்றையும் பார்த்துப்பார்த்துச் செய்யும் பெற்றோர்கள் அல்லவா அந்தச் சத்திரம். சாதாரண ஒரு கல்கட்டிடம் சட்டென்று ஒரே கணத்தில் உயிருள்ள மனிதர்களின் உருவத்தை அடைந்துவிடுகிறது.

நகரமனிதர்களின் மனநிலையைச் சித்தரிக்கும் பல கவிதைகள் இத்தொகுப்பில் இருந்தாலும் “மின்மினியும் பட்டாம்பூச்சியும்” முக்கியமான ஒன்று. ஒருபுறம் நகரத் தொடர்வண்டியில் பிரயாணம் செய்பவன். இன்னொரு புறம் அழுக்குச் சாக்கடை ஓரம் நிமிர்ந்து நிற்கிற செடியின் முடியில் அமர்ந்திருக்கும் பட்டாம்பூச்சி. கிளம்புவதற்கான சமிக்ஞை விளக்கு எந்த நேரமும் ஒளிரத்தொடங்கலாம் என்கிற நிலைமை. விளக்கு ஒளிர்ந்ததும் தொடர்வண்டி கிளம்பிவிடும். அப்படிப்பட்ட ஒரு நெருக்கடியான கட்டத்தில்தான் அவன் அந்தப் பட்டாம்பூச்சியைப் பார்க்கிறான். அதைப் பார்த்ததுமே, அது எழுந்து சிறகசைத்துப் பறக்கவேண்டும், சிறகில் விரிகிற நிறத்தைக் கண்ணாரப் பார்க்கவேண்டும் என்றெல்லாம் அவன் நெஞ்சில் ஆசையெழுகிறது. அசையாத பட்டாம்பூச்சியைப் பார்fத்து பதற்றத்தோடு விளக்கு ஒளிர்வதற்கு முன்பாக சீக்கிரமாக சிறகு படபடத்து படம்காட்ட மாட்டாயா என்று கேட்பதுதான் கவிதை.

ஒரு கோணத்தில் இக்கவிதை நகரமனிதர்களுடைய அழகியல் நாட்டத்தை வெளிப்படுத்தும் கவிதையாகச் சொல்லலாம். மனிதர்களின் ஆழ்மனத்தில் அழகியலுக்கான ஏக்கம் உள்ளது. அதைத் துய்த்துத் திளைப்பதற்கான வாய்ப்புகளையெல்லாம் பரபரப்பான வாழ்க்கை பறித்துக்கொண்டுவிட்டது. எங்கும் எதற்காகவும் நிற்கவிடாமல் துரத்திக்கொண்டே இருக்கிறது தினசரி வாழ்க்கை. சூரியனையோ, நிலவையோ, விண்மீன்களையோ பார்க்கக்கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறரர்கள் மனிதர்கள். இப்படிப்பட்ட சூழலில் பயணத்தின் இடைவழியில் பட்டாம்பூச்சியைக் கண்டதும் உள்ளார்ந்த அழகியல் பொங்கியெழுகிறது. அந்த தன்னிச்சையான மனஎழுச்சியின் காரணமாகத்தான் அவன் அந்தப் பட்டாம்பூச்சியிடம் மன்றாடுவதுபோல கேட்டுக்கொள்கிறான்.

இன்னொரு கோணம் இருக்கிறது. உலகில் படைக்கப்பட்fடிருக்கிற எல்லாமே தனக்காகவே என்ற எண்ணம் மனிதர்களிடையே பொதுவாக இருக்கிறது. இயற்கையில் உள்ள நீர், காடு, மலை, குன்றுகள், தோட்டம், பறவைகள், விலங்குகள் எல்லாமே தனக்காகவே படைக்கப்பட்டிருப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள். இயற்கையைக் கட்டுப்படுத்தி அதனை ஆட்சிசெய்யும் கனவும் ஒவ்வொருவருக்குள்ளும் உறங்குகிறது. விரிந்திருக்கும் இயற்கையின்பால் இவர்களுக்கு துளியும் நேசமே இல்லை. இயற்கையின் படைப்பில் ஒரு சிறு பகுதியே மானுடக்கூட்டம் என்கிற தௌiவுமில்லை. இயற்கையை தன்னைநோக்கி வளைக்கவேண்டும். யானை தன் தும்பிக்கையால் மரக்கிளையை இழுத்து வளைப்பதுபோல. இயற்கையை வெற்றிகொண்டு ஆட்சி செய்யவேண்டும், இயற்கையை கட்டுப்படுத்த வேண்டும். இப்படி ஏராளமான பேராசைகள் அவர்களை கணந்தோறும் உந்தித் தள்ளியபடி இருக்கின்றன. இவையனைத்தும் நகரமனிதர்களிடம் மற்றவர்களைக் காட்டிலும் சற்றே கூடுதலாக உள்ளன. கைதட்டி அழைத்தால் ஓடோடி வந்து ஆட்டோ நிற்கிறது. ஒரு தொலைபேசித் தகவல் மட்டுமே போதும், இருக்குமிடம் தேடிவந்து வாடகைவண்டி ஏற்றிக்கொண்டு செல்கிறது. பல வேலைகளை அமர்ந்த இடத்தில் அமர்ந்தபடி, மற்றவர்களை ஏவிச் செய்வித்துக்கொள்ளக் கூடிய சூழல் நகரத்தில் அதிகமாகவே உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் பழகியதாலே, நகரமனிதனின் மனம் சுபாவத்தின் அடிப்படையில் பட்டாம்பூச்சியைப் பார்த்து சிறகுவிரித்து காட்டச் சொல்கிறது. பட்டாம்பூச்சி சிறகு படபடத்து பறப்பதைக் காண விருப்பமுள்ளவர்கள், காத்திருந்து பார்ப்பதுதான் முறை. பறவைநோக்கர்கள் மணிக்கணக்கில் காட்டிலும் மலைப்பகுதிகளிலும் காத்திருந்துதான், அவை வானத்தில் தென்படும்போது பார்த்து மகிழ்கிறார்கள். இதில் யாருக்கும் எந்த விதிவிலக்கும் இல்லை. ஆனால், நகரமனிதர்களுக்கு அந்தப் பொறுமையும் காத்திருப்பதற்கான நேரமும் இல்லை. அவசரம், அவசரம் என்று காலில் சக்கரம் கட்டிக்கொண்டதைப்போல கணந்தோறும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். அந்த வேகம்தான் பட்டாம்பூச்சியைப் பார்த்து விளக்கு சுடர்விடும்முன்பாக சிறகு விரிக்கச் சொல்லி கேட்டுக்கொள்ளும் குரலுக்குக் காரணம். ஒரேஒரு சின்ன உரையாடல் வழியாக நகரமனிதர்களின் மனோபாவத்தை வெளிப்படுத்தும் மணியின் கவிதை வழங்கும் வாசிப்பனுவபம் முக்கியமானது.

பெரும்பாலான நகரக்காட்சிகளே மணியின் கவிதைகளில் இடம்பெறுகின்றன. காட்சிகள்வழியாக மனிதமனோபாவத்தை உணர்த்துவதற்கு அவர் முயற்சி செய்கிறார். இதுவே அவருடைய பலம். சில சமயங்களில் அவர் முயற்சி வெற்றியில் முடிவடைகிறது. சில சமயங்களில் அவர் எதிர்பார்த்த முடிவு கிடைப்பதில்லை. பல கவிதைகளில் மணி சொற்களை வாரியிறைத்தபடி செல்கிறார். காட்சி முழுமை பெற்ற பின்னரும், இன்னும் கொஞ்சம் சொற்களைச் செலவு செய்ய விரும்புகிறது அவர் மனம். இதுவே அவருடைய கவிதைகளில் பலவீனமாகத் தெரியும் அம்சம்.

(மெட்ரோ பட்டாம்பூச்சி. கவிதைகள். கே.ஆர்.மணி. அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 41, கல்யாண சுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை-600 011 விலை.ரூ.45)

*
paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்