எஸ். ஷங்கரநாராயணன்
தோழர் விஜயகுமார் வீட்டுக்கு முதலாளி சார்பில் அவரது காரியதரிசி கருணாகரன் வந்திருந்தான். வழக்கமாய் படாடோபமாய் அலுவலகம் வரும் கருணாகரன் மிக எளிமையாய், குளிர் கண்ணாடியைக் கழற்றிக் கொண்டு உள்ளே வந்தான்.
விஜயகுமாரின் அப்பாவிடம் வந்து அவர் கையைப் பிடித்துக் கொண்டான். ”நல்ல பையன் விஜயகுமார். ரொம்ப கூச்ச சுபாவம். நேரில் வந்து பத்திரிகை கொடுத்தான்…”
”-ச், கல்யாணப் பத்திரிகை விநியோகிக்குமுன் அவனது உத்திரகிரியைப் பத்திரிகை…” அப்பா விசும்பினார்.
”ஆமாம், துரதிர்ஷ்டவசமாக…” என்றான் கருணாகரன். பின் நிமிர்ந்து ”ஆனால் நிகழ்ச்சிகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல’ என்றான்.
அப்பா அவனைப் பார்த்தார்.
”விஜயகுமாரும் பெஎறுப்பல்ல” என்றான் அவன். ”நான் விஜயகுமாரை அறிவேன். யாரோ விஷமிகள்…”
”மிஸ்டர்!” என்று அதட்டலாய் சரவணன் முன்னால் வந்தான்.
”மிரட்டாதே சரவணன். உங்கள் தேவையற்ற கலாட்டாவால் பார் ஓர் உயிர் பலியாகி விட்டது. உன்னால் அந்த உயிரைத் திருப்பித்தர முடியுமா?”
”வெளியே போ. ஒரு தொழிலாளியின் வேதனை உனக்குப் புரியாது. நீ முதலாளி வீட்டு அடிமை நாய்…”
”சண்டை போடாதீர்கள். அதுவும் இங்கே” என்றார் அப்பா.
”ஸாரி” என்றான் சரவணன்.
கருணாகரன் விஜயகுமாரின் அப்பாவிடம் ஒரு உறையைக் கொடுத்தான்.
”இதுல ஐந்தாயிரம் இருக்கிறது. அருமையான ஒரு தொழிலாளியை இழந்ததற்கு திரு பிலிப் மிக வருந்துகிறார். உங்கள் குடும்பத்தில் மற்றொருவருக்குத் தன்னால் பணியளிக்க முடியும் என நம்புகிறார்” என்றான் கருணாகரன்.
”ஒரு தம்பி இருக்கான். விஜியைப் போலப் படிப்பில்லை. எஸெல்சி. கோட்டு…”
”பரவாயில்லை…” என்று கருணாகரன் புன்னகைத்தான். ”திரு பிலிப்பை வந்து பார்க்கச் சொல்லுங்கள். அவன் தகுதிப்படி எதுவும் செய்ய முடியும் அவரால்.”
உடலை மதியம் எடுத்தார்கள். தொழிலாளிகளில் அவனுக்கு நெருக்கமானவர்கள் நிறையப் பேர் வந்து மாலை போட்டுவிட்டு ஒதுங்கி நின்றார்கள். பிலிப் காரில் வந்து இறங்கினார்.
யாருமே எதிர்பார்க்கவில்லை- அவருடன் காசியும் வந்து இறங்கினான். பிலிப் ஒரு மாலையைப் போட்டுவிட்டு உடலை வணக்கம் செய்தார். காசியும் ஒரு மாலை போட்டான்.
”காசி உன்னை போலிஸ் தேடுதே?” என்று சரவணன் கிட்ட வந்தான்.
”தேடாது இனி. நான் கம்ப்ளெயின்ட்டை வாபஸ் வாங்கிட்டேன்” என்றார் பிலிப். ”எடுத்திறலாம்” என்றபடி அவர் கண்ணைத் துடைத்துக் கொண்டார்.
ஊர்வலம் கிளம்பியபோது அவரும் தொழிலாளிகளின் கூடவே நடந்து வந்தார். கார் தனியே சுடுகாட்டுக்குப் போய் அவருக்குக் காத்திருந்தது.
————–
யூனியன் அலுவலகத்தில் அன்று மாலை கூட்டம் நிரம்பி வழிந்தது. சரவணனும் குமாரசாமியும் ரத்தினமும் சீனிவாசனும் ஆச்சரியப் பட்டார்கள். என்ன ஆச்சி இந்தக் காசிக்கு?
”விஷயம் நாம் எதிர்பார்த்த திசையில் செல்லவில்லையல்லவா?” என்றான் காசி. ”நாலு பேர் இன்னும் ஆஸ்பத்திரியில் இருக்கிறார்கள். அவர்களுக்கான மருத்துவச் செலவை பிலிப் ஏற்றுக் கொண்டிருக்கிறார்…”
”இது எதிர்பாராதது அல்ல” என்றான் ரத்தினம்.
”நைனா என்ன சொல்றார்?”
”இப்போ சம்பள உயர்வு கொடுத்தால் பொருட்களின் விலையையும் நாம் ஏற்ற வேண்டியிருக்கும். இன்றைய சந்தையில் விலையேற்றம் நமக்கு சாதகமான விஷயம் அல்ல, என்கிறார்.”
”ஸோ?” என்றான் சீனிவாசன்.
”நாம் கொஞ்சம் பொறுமையாய்த்தான் இருக்க வேண்டும், என்று தோன்றுகிறது.”
”இதுக்கு என்னத்துக்குப் போராட்டம்?” என்று எழுந்தான் ஒரு தொழிலாளி.
”தோழர்களே…” என்று காசி பேச ஆரம்பித்தான். ”போராட்டத்தில் பெருமளவில் பங்கு கொண்டு பெருத்த வெற்றி தேடித் தந்த அனைவருக்கும் சங்கம் நன்றி பாராட்டுகிறது. பல்வேறு பிரச்னைகளை நாங்கள் கலந்து கொண்டதில், நிர்வாகத்தின் தற்போதைய நிலையையும் நாம் தவிர்க்க முடியவில்லை. எனினும் நாம் நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை. மீண்டும் நாம் பேச்சு வார்த்தையைத் துவங்குவோம். இம்முறை நமது போராட்டம் தொழிலாளிகளிடம் பெற்ற ஆதரவு முதலாளியையே கலக்கி யிருக்கிறது. மீண்டும் நாம் போராடுவதை அவர் விரும்ப மாட்டார், என நான் உறுதிபடக் கூற முடியும்.”
சீனிவாசன் ரத்தினத்தைப் பார்த்தான்.
”ஆகவே தோழர்களே, நாளை முதல் அமைதியாக நாம் வேலைக்குத் திரும்புவோம். இந்த இடைப்பட்ட நாள் வேலை நிறுத்தத்தினால் உங்கள் பணியனுபவமோ, மாத ஊதியமோ பாதிக்கப் படாது. அதை சங்கம் ஒருநாளும் அனுமதிக்காது. லட்சிய வீரர்கள் தோற்றதில்லை. நமது சங்க வரலாற்றில் இந்த வேலை நிறுத்தம் ஒரு சாதனை. பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டிய ஒரு வைபவம்…”
சரவணன் குமாரசாமியைப் பார்த்தான்.
”தொழிற்சாலை வளாகத்தில் ஒரு கேன்ட்டீன் வைக்க நிர்வாகம் சம்மதித்துள்ளது. தவிர இலவச மருத்துவ வசதி பற்றியும் முதலாளி விரைவில் முடிவு செய்து அறிவிப்பதாகச் சொல்லியிருக்கிறார்… இவையெல்லாம் நம் சங்கத்தின் சாதனை என்பதை மறுக்க முடியாது. நம் சங்கத்தின் வெற்றி என்பது நம் ஒவ்வொருவரின் வெற்றியாகும். இந்த வெற்றி விழாவில் நம் சங்கத்தின் அறைகூவலை ஏற்று உண்ணாவிரதம் இருந்த தோழர்கள் குமாரசாமி, சரவணன், மற்றும்…”
”ஆனால் நாம் போராட்டத்தில் இறங்கியது எதற்காக? ஊதிய உயர்வுக்காக. அது இன்னும் கிடைக்கவில்லையே?” என்றான் சரவணன்.
”எனினும் மற்ற சலுகைகள்… நம் தோழர்களின் ஒத்துழைப்பால் நாம் மகத்தான…”
”இல்லை. நாம் தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்கிறோம்” என்றான் ரத்தினம்.
காசி திரும்பினான். ”நாம் ஏற்கனவே நஷ்டப் பட்டிருக்கிறோம். அருமைத் தோழர் விஜயகுமார்…”
”ஆனால் தியாகங்களுக்கு பலன் எதுவும் இல்லை” என்றான் சீனிவாசன்.
”இல்லாமல் இல்லை. திரு பிலிப் பேச்சு வார்த்தைக்கு இணக்கங் காட்ட ஆரம்பித்திருக்கிறார்…”
”அப்படியானால் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற ஏன் அவசரப் பட வேண்டும்?” என்று கேட்டான் குமாரசாமி.
”மேலும் முரண்டு பிடிப்பது சிக்கலை விலக்காது என்று நான் கருதுகிறேன்…” என்றபடி காசி திரும்பவும் ”தோழர்களே, போராட்டத்தை விலக்கிக் கொண்டு மீண்டும் சுமுகமாக நாம் வேலைக்குத் திரும்புவதையே நான் விரும்புகிறேன். உங்கள் நலனின் அக்கறை செலுத்துவது என் கடமையாகும். இத்தோடு கூட்டத்தை நாம் முடித்துக் கொள்கிறோம். தொழிலாளர் ஒற்றுமை!”
”ஓங்குக!”
”இல்லை. இந்நிலையில் நாம் போராட்டத்தை வாபஸ் பெறுவது நம் இயலாமையே காட்டுகிறது” என்று ரத்தினம் எழுந்தான். ”தோழர்களே…”
”நாம் தோற்கவும் இல்லை. ஆ நாம் ஜெயிக்கிற மாதிரி, முதலாளி நம் எதிரியும் அல்ல. எதோ ஒருகட்டத்தில் நாம் அவருடன் ஒத்துப் போகிறோம். இல்லாவிட்டால் நஷ்டங்கள், இருவர் தரப்பிலும்…” என்றான் காசி. அவன் ரத்தினத்தைப் பேச விட்வில்லை.
”தோழர்களே,” என்று காசியே ஆரம்பித்தான். ”நிலைமை நமக்கு சாதகமான முறையில் உருவாகி வருகிறது. நமது கம்பெனி போராட்டம் பற்றி பத்திரிகைகள் எழுதியுள்ளன. அரசாங்கத்துக்கும் தந்திகள் அனுப்பப் பட்டுள்ளன. இந்நிலையில் நாம் வேலைக்குத் திரும்புவதே நமக்கு பலமாக அமையும், என்று நான் கருதுகிறேன். பணியை முடக்குவதும், நஷ்டத்தை ஏற்படுத்துவதும் நம் நோக்கம் அல்ல, அல்லவா?”
”என்றாலும் இது விட்டுக் கொடுக்கிற விஷயமா என்ன?” என்று குமாரசாமி இடைமறித்தான்.
”உங்களுக்கு நான் ஏற்கனவே பதில் சொல்லி விட்டேன். ஏதும் விவரங்கள், கேள்விகள் உண்டென்றால் கூட்டம் முடிந்ததும் நாம் பேசி விவாதிக்கலாம். நம் தொழிலாளிகள் இந்த வெற்றியைக் கொண்டாடட்டும். வெற்றி வீரர்கள் இவர்கள். ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள். ஆனால் இந்த மகிழ்ச்சிக்குத் தோழர் விஜயகுமாரும்…”
”தோழர்களே!” என சரவணன் எழுந்தான். ”மேலும்…” என காசி தொடரப் போனான். ”நாங்கள் பேச வேண்டும்,” என்றான் சரவணன் ஒரு விரோதத்துடன்.
”என்ன?”
”நாங்கள் பேசுவதை நிறுத்தக் கூடாது.”
”தொழிலாளிகள் தேவையை நான் அறிவேன்…” என்றான் காசி ஒரு நிதானத்துடன்.
”என்ன அறிவீர்கள்?”
”அவர்கள் கலவரத்தில் பயந்திருக்கிறார்கள். அவர்களின் வேலை பற்றி நாம் உறுதியளிக்கக் கடமைப் பட்டுள்ளோம். மேலும்…”
”மேலும், முதலாளி சார்பில் பேச வேண்டிய நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள், அதானே?” என்றான் குமாரசாமி.
”அபத்தம்!” என்று காசி கிட்டத்தட்ட கத்தினான். ”தோழர்கள் தொழிலாளிகளைக் குழப்பாதீர்கள். என்மேல் உங்களுக்குக் கோபம் இருந்தால் காட்ட வேண்டிய இடம் இது அல்ல. தயவுசெய்து…”
”நாங்கள் போராட்டத்தைத் தொடர விரும்புறோம்” என நால்வரும் எழுந்தார்கள்.
”ஆனால் தொழிலாளிகள்… அவர்கள் வேலைக்குத் திரும்புவதை விரும்புகிறார்கள்” என்றான் காசி. கூட்டம் பார்க்கத் திரும்பி ”என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டான்.
”சாராசரிகளின் எதிர்ப்புக் குரல் எப்போதுமே பலவீனமாகவே இருக்கும். அவர்களை பலப்படுத்தவே அல்லமால், சங்கம் வேறு எதற்கு?”
”என்ன சொல்கிறீர்கள் நீங்கள்? போன போராட்டத்தில் கவனியுங்கள், நம் தொழிலாளிகள் முழு அளவில் பங்குகொண்டு மகத்தான…”
”நோ அட்ஜெக்டிவ்ஸ்” என்றான் சீனிவாசன். ”நாம் சற்று எளிமையாகப் பேசலாம், இந்தத் தொழிலாளிகளுக்குப் புரிகிற மாதிரி…”
”கூட்டம் இத்தோடு முடிகிறது. நாளைமுதல் நாம் வேலைக்குத் திரும்புகிறோம்” என்றான் காசி.
”இந்த முடிவு தன்னிச்சையானது. நாங்கள் இதை ஆட்சேபிக்கிறோம்.”
”நீங்கள் இப்படி செயல்படுவது முறையற்றது. தொழிலாளிகள் உங்களை அறிவார்கள்.”
காசியை அலட்சியப் படுத்திவிட்டு குமாரசாமி எழுந்து பேசத் துவங்கினான். ”மேலும் இருநாட்கள் நாம் பொறுத்திருக்க வேண்டும். நடந்து முடிந்தது பேச்சுவார்த்தை அல்ல, பேரம் என்றே தோன்றுகிறது.”
”இது அபாண்டம். நீங்கள் இதற்கு பதில் சொல்ல வேண்டிவரும்…”
”நாம் மேலும் இரு நாட்கள் பொறுமையாக இருப்போம். அதற்குள் நாங்கள்…” என்றதும் நால்வரும் முன்னால் வந்து நின்றார்கள். ”நாங்கள் சாதகமான முடிவு ஏற்படுத்திவிட முடியும் என நம்புகிறோம்.”
”எப்படி? எப்படி?” என்றான் காசி பரபரப்புடன்.
”ஆகவே தோழர்களே, நாம் விழிப்போடு இயங்க வேண்டிய நேரம் இது. பிரச்னைகளைத் திசைதிருப்பி விட நாம் அனுமதிக்க முடியாது. எங்களுடன் தயவுசெய்து ஒத்துழையுங்கள். தோழர் விஜயகுமார் நம் நலனுக்காக மிகப் பெரிய தியாகத்தைப் பங்களித்திருக்கிறார். நாம் அவருக்கு துரோகம் செய்யக் கூடாது.”
”ஆனால் நீங்கள்…” என இடைமறித்தான் காசி. ”நீங்கள் நிறையப் பேசி விட்டீர்கள். இப்போது தொழிலாளிகள் முறை” என்றான் சரவணன்.
”நாம் கேட்டது என்ன? ஊதிய உயர்வு. கிடைத்ததா அது? தோழர் விஜயகுமார் போராடியது எதற்கு? தன் உயிரைத் தியாகம் செய்தது எதற்கு? ஊதிய உயர்வுக்கு. அது கிடைக்காமல் போராட்டத்தை திடுதிப்பென்று தானே போய்ப் பேசிவிட்டதாகச் சொல்லி, தோழர் காசி, வாபஸ் பெற்றதாக அறிவிக்க வேண்டிய அவசியம், பின்னணி என்ன? நாம் தொடர்கிறோம். வெற்றி பெறுகிறோம்… என்ன சொல்கிறீர்கள்?” என்றான் சரவணன் கூட்டத்தைப் பார்த்து.
கூட்டத்தில் சலசலப்பு எற்பட்டது. சிலர் வேலைக்குத் திரும்ப வேண்டும், என்றார்கள். ஆனால் மிகச் சிலரே அவர்கள்.
”காத்திருக்கிறோம்’ என்றார்கள் எல்லாரும்.
சரவணன் காசியைப் பார்த்துப் புன்னகையுடன், ”ஊதிய உயர்வுக் கோரிக்கை அநியாயமானது அல்ல. அது நிறைவேறும் வரை நாம் போராட்டத்தைத் தொடருவோம்.”
”காசி நீ ஏன் பதவியை ராஜினாமா செய்யக் கூடாது?” என்றான் ரத்தினம்.
”ஏன் செய்ய வேண்டும்? தொழிலாளிகளுக்காக என்னைவிடப் பாடுபட்டவர் யார்?”
”கூட்டத்தின் தீர்மானத்தினை எற்றுக் கொண்டாயா?”
”இல்லை! ஆனால்…”
”ஆனால் என்ன?”
”இரண்டு நாட்கள். சரி, அதையும் பார்க்கலாம். நீங்களே நிர்வாகத்தோடு பேசுவீர்கள் அல்லவா?”
”ஒருவேளை அது சாத்தியமே.”
”சரி” என்றான் காசி. ஆனால் மனதில் அவன் என்ன நினைத்துக் கொண்டிருந்தான், யாருக்கும் தெரியாது.
——————–
storysankar@gmail.com
தொ ட ரு ம்
- புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 2 : மன்னர் மிலிந்தாவின் கேள்விகள் – வாதிக்க வருகிறீர்களா- அரசராகவா ? அறிஞராகவா ?
- ழான் பிரான்சுவா லையோதர்த் – (1924 – 1998)
- கடித இலக்கியம் (‘சந்திரமௌலி’ என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்) – கடிதம் – 4
- கொண்டாடக் கூடிய ஒரே ஒரு வெற்றி
- வாழ்த்துகிறேன் , வணங்குகிறேன்
- புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 3 : நிச்சலன நிருத்தியம்
- அல்லாவும் வகாபும்
- தமிழ் தொழுகையில் குர்ஆனிய வசனங்கள்
- நவீனத்துவம்,பின்நவீனத்துவம்: உரையாடல் தொடர்கிறது
- எடின்பரோ குறிப்புகள் – 15
- தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா?
- பின்காலனியப் பண்பாட்டு அடையாளம்
- இந்து அறநிலையத் துறையும், சில மடங்களும், இந்துத்துவாவும்
- புலம் பெயர் வாழ்வு 10 – மதம் ?
- திண்ணை புதிய வடிவமைப்பு குறித்து
- ஆத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்….. (3)
- சிந்திக்கும் திறன் கொண்ட சிந்தனையாளர்களுக்கு
- சுந்தர் காளியின் “திருமுகமும்,சுயமுகமும்” – பண்பாட்டாய்வுக் கட்டுரைகள் புத்தகம்
- மே 11 – 14 ஓண்டெரியோவில் தமிழ் ஆய்வாளர்கள் கருத்தரங்கு
- வசவுகளும் விஸ்வாமித்ராவும்
- சுடர் ஆய்வுப் பரிசு
- நடப்பன , பறப்பன – ஒரு புகைப்படத் தொகுப்பு
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 20
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-20 முடிவுக் காட்சி)
- சேர்ந்து வாழலாம், வா! – 2
- த னி ம ர ம் நாளை தோப்பாகும் – 2
- கூடுவிட்டுக் கூடுபாயும் பறவைகள்!
- கீதாஞ்சலி (72) ஐம்புலங்களுக்கு ஏது விடுவிப்பு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- செர்நோபில் அணுமின் உலை விபத்தில் உலகெங்கும் பரவிய கதிரியக்கம் -3
- பசுந்தளிர் – ஒரு புகைப்படத் தொகுப்பு
- கடிதம்
- காலத்துள் புதைந்து கிடைக்கும் உறவுகளும் உண்மைகளும்
- இங்கே இப்ப நல்ல நேரம்-முத்துலிங்கத்தின் வெளி
- சாயல் படிவது ‘காப்பி’யடித்தல் ஆகுமா?
- அக், யாத்ரா
- ஒரு தலை ராகமும் மீனா மிஸ்ஸ¤ம்
- அண்மைக் காலத் தொல்லியல் கண்டுபிடிப்புகள் பற்றி…
- கடிதம்
- தனிமை..