தோழியின் வீடு

This entry is part [part not set] of 28 in the series 20050826_Issue

வ.ஐ.ச.ஜெயபாலன்


மலைப் பனியோடு மனதின் பனியும் உருக
வான் நோக்கிக் கை பரப்பி
சூரியன் கை வீணையாய் இசைக்கின்றாள்.
இது புலம் பெயர்ந்த பின்னாடி அவள்
கோடைதொறும் நிகழ்த்துகின்ற கூத்துத்தான்.
பொன்னி நதி பண்டைப் பழசானாலும்
மாரிப் புதுவெள்ளத்தில் கன்னிதானே.
வாழிய தோழி வளர்க உன் பாடல் என்றேன்.

வாடா என் சூரியத் தோழனே
வந்தென்னை அள்ளி அணைத்திடடா.
கந்தல் வெண்பனிப் போர்வை வீசி
வானவிற் சேலைகட்டி
என்போல் குதூகலமாய்
சூழும் துருவத்து மலை சிகரங்களே.
கண் இறங்கும் பாதை எல்லாம்
வண்ணக் கம்பளமாய் விரிகின்ற பள்ளத்தாக்கே.
சாரல் பாறைகளிடையே துளிர்க்கின்ற திராட்சைகளே.
போதை தருகின்ற புது வசந்தத் தேன் காற்றே.
என்தேச விடியலின் பல்லியத்தை
என்னுடைய சன்னலைத் தேடி
இசைக்க வந்த வலசைப் பறவைகளே.
சொந்த ஊர் விட்டுவந்து சூரியனைக் கைப்பிடித்து
உங்கள் தெருவில் உலாவந்த மணமகள் நான்
வாழ்த்துங்கள் என்னை

பாடு தோழியே பாடுக நீடூழி என்றேன்.
பாடுகையில் அவளுள் ஓர்
வலசைப் பறவை சிறகுவிரிக்கிறது.
பாடலில் அவள் தன் நாட்டில்.
பாடலில் அவள் தன் முற்றத்தில்.
பாடலில் அவள் தாய் மடியில்.
பாடி அவள் சூரியனை மூட்டும் போது
மலை முகடுகளில் தேவதைகள் குரவை இடும்.
அவள் பாடலில் சாரல்கள் பூத்தன
பள்ளத்தாக்கில் பறவைகள் கிளர்ந்தன.
அவளோ இழந்த தாய்நாட்டை மீட்டு
கோடை முழுவதும் வாழ்ந்துவிடுகிற வீராங்கனை.

சென்ற தலைவசந்தத்தில்
இருந்தேன் அவளது இரவல் கூட்டில்.
‘கய்! ‘ என்ற அவளது பையனோ
இணையத்துள் தொலைந்துபோனான்.
அவளது கணவன் அன்புடன் நிறைத்த
மதுக் கிண்ணங்களை
முட்டு முட்டென முட்டிச் சிரித்தோம்.
எனினும் நாளை பற்றிக் கேட்டபோது
அவர்களது பெருமூச்சில் இரவு சூடாகியது.

நல்லவர்கள்தான்.
தவறு வீடாக அவள்மீது கட்டப்பட்டது.
மனம் கனிந்த காதலன்தான்
தவறு சாவியாக அவனிடம் திணிக்கப் பட்டது.
உள்ளிருந்துமட்டுமே பூட்டக்கூடிய வீடு அது.
மூடிய வீடு கனவுகளின் சமாதி
நனவுகளின் மணற் பாலை.

மறுநாள் காலை
மின்கலக் கூச்சல்களோடு விடிந்தது .
படுக்கையில் அவனும்,
தொலைக்காட்சிமுன் பையனும்
செல்பேசிச் செவியராய்.
அவளோ சன்னலால் நீண்டு
சூரியனில் இதழ்பதிய தன்னை இழந்தபடி.
வெளியே பாடும் பறவைகளுக்கு
ரொட்டித் துண்டுகளை வீசியபடி அயலான்.

வேலியில் முள்முருங்கை பூக்கிறது.
கோவில் மணி அமுங்கக்
குயில்கள் இசைக்கிறது.
காமுற்ற அன்னை
பேன் பார்க்க வாடியென
குரலெடுத்து அழைக்கின்றாள்.
கண்ணில் கனவுறையும்
கண்ணீரில் மை உறையும்.
சிருஸ்டி உறையுமவள்
சிந்தையில் தாய் மண் நிறையும்.
—-
V.I.S.Jayapalan (Poet)
Raadyr Veien 3B – leil. 36
0595 Oslo, NORWAY.
Tel/Fax: 00 47 22 162235
Sri Lanka: 00 94 777 560 759

Series Navigation