தோணி

This entry is part [part not set] of 42 in the series 20060505_Issue

தமிழாக்கம் : புதுவை ஞானம்.


இளமைக்காலம் தொட்டே உன்னதமாய்த்
துலங்கியதென் யோக சக்தி.
வாழ்க்கைச் சக்கரத்தின் கரும வினைச் சுழற்சியில்
சிக்காமல் விலகி நிற்க -என் இயல்பைப் பயிற்றுவித்து
கடைப்பிடித்தேன் சத்தியத்தை.

மார்க்கத்தைத் தேடினேன் மனத்தை வெளுப்பித்து
இருதயம் சிரசு என்னும் சிகரத்தில் ஏறித் தேடிப்
பறித்து வந்தேன் பச்சிலை நாற்றுக்களை- சிகரத்தில்
வீற்றிருந்தார் முதியதோர் சிரஞ்சீவி – அகவை
ஆயிரத்தெட்டை அநாயசமாய்க் கடந்திருந்தார்.

மிகப்பெரும் தயையுடன் குரு பீடமேற்று
சிரஞ்சீவித்தன்மையின் சீர்த்தடம் காட்டினார்.
” உந்தன் உடளுக்குள் உறைகின்றன ஆன்மாவும்
ஊற்றுக்குளிகைகளும், வெளியே தேடும் வீண் முயற்சி
வேண்டாம்! ” என விளக்கி அருளினார் விண்ணுலக அதிசயத்தை.
அடித்துப் போயிருப்பேன் கால வெள்ளத்தால்
அந்த அடித்தளம் இல்லாவிட்டால்.

அருணனும் அம்புலியும் ஆர்வமாய்ப் புணர
அமைதியாய் வீற்றிருந்தேன்- ஒளிரத் தொடங்கியது
உண்முகச் சோதி ! ஆறறிவும்அடங்கித் துலங்க
அறுந்தன ஆசைகள்… காயம் வலுத்தது காலப் போக்கில்.

எளிமையாய் இருந்தது இளமைக்குத் திரும்புவது
எட்டாத தொலைவு இல்லை தவசிகளை எட்டுவது.
மூன்றாண்டு காலம் நாடியைக் கட்டியதில்
கிட்டியது எளிதாய் தெய்வீக தேகம்.

நிலையற்ற மனிதர்களின் அலைத்துயரம் தாண்டி
அப்பாலுக்கு அப்பால் ஆழ்கடல் நோக்கி
மிதந்தது தோணி…….!

மூலம்: யுவான் சுவாங்.

தமிழாக்கம் : புதுவை ஞானம்.
———————————–

———————————————————————————————————————-

கற்பதை விட்டொழி -உந்தன்
தொல்லைகளுக்கு முடிவு கட்டு.

ஆம் என்பதற்கும்
இல்லை என்பதற்கும்
வேறுபாடு ஏதாவது இருக்கிறதா ?

நல்லது என்பதற்கும்
கெட்டது என்பதற்கும்
வேறுபாடு ஏதாவது இருக்கிறதா ?

மற்றவர்கள் அஞ்சுவதைக் கண்டு
நானும் அஞ்ச வேண்டுமா ?
இது என்ன முட்டள் தனம் ?

எருதைப் பலியிட்டு விருந்தைச் சுவைக்கின்றனர் சிலர்
பூங்காவுக்குச் செல்கின்றனர் வசந்தத்தில் சிலர்
சிகரங்களில் ஏறிச் சாதிக்கின்றனர் சிலர்
எங்கிருக்கிறேன் என்பதே புரியாமல்
தடுமாறுகிறேன் நான் மட்டும்.

இன்னும் சிரிக்கக் கற்றுக் கொள்ளாத
அப்போது தான் பிறந்த பச்சிளம் குழந்தை போல
எங்கும் போவதற்கின்றி தவித்துத்
தடுமாறுகிறேன் நான்.

தேவைக்கு மேலேயே இருக்கிறது மற்றவர்க்கு
எனக்கு என்று எதுவுமே இல்லை.
நான் ஒரு முட்டாள் ஆம், குழம்பிப் போனவன்.
தெளிவாகவும் பிரகாசமாகவும் இருக்கிறார்கள் மற்றவர்கள்
நான் மட்டும் தான் இருட்டில் தடுமாறுகிறேன்
கூர்மையாகவும் புத்தியாகவும் மற்றவர்கள்
நான் மட்டும் தான் தத்தளிக்கிறேன் கடலலை போல்
போக்கற்றும் ஓய்வற்றும்.

சுறுசுறுப்பாய் மற்றவர்கள்
நோக்கமற்றும் மன இறுக்கத்தோடும்
வித்தியாசமானவன் நான்
இயற்கை அன்னையால்
சீராட்டப் படுபவன்.
——————————————————————————

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்