எஸ். ஷங்கரநாராயணன்
/3/
மறுநாள் சொன்னபடி ரங்கசாமி வருவான், பணத்தை எடுத்து, பத்திரம், என்று தந்து விடலாம், அத்தோடு விஷயம் முடிந்து விடும், என்று நினைத்திருந்தான் சபேசன். மறுநாளும், அதற்கு மறுநாளுங் கூட அவன் பணத்தை வாங்கிக் கொள்ள வரவில்லை.
வீட்டில் பணம் மயில்க்கண் வேஷ்டிக்குள் பத்திரமாய் இருந்தது. ஒரு லட்சம். பீரோவில்தான் எல்லாருடைய துணிமணிகளும் இருந்தன. யார் வந்து பீரோவைத் திறந்தாலும், போச்சு, இப்ப மாட்டிக்கப் போறோம்… என்று கலவரமாய் இருந்தது. பணம் இருக்கிறதா, இருக்கிறதா என்று அவ்வப்போது சரி பார்த்துக் கொண்டான். முழுக்கத் திறந்து பார்க்க முடியாது. பீரோவைத் திறந்து உள்ளே கையால் அமுக்கிப் பார்ப்பான். இருந்தது. அதில்கூட ஒருகட்டு, ரெண்டுகட்டு குறைந்தால் ?… என்று பதட்டமாய் இருக்கும். நான் வேற எண்ணி வாங்கவில்லை. எண்ணாமல்… யோசிக்காமல் வாங்கி விட்டேன். வெளியே பொட்டலத்தை எடுத்து துணியை விரித்துப் பார்த்தால் நல்லது. போச்சு. வேற வினையே வேணாம். ஆளாளுக்கு அவனைக் குடைய ஆரம்பித்து விடுவார்கள். பயமுறுத்த ஆரம்பித்து விடுவார்கள்… எற்கனவே, அவனே, பயந்திருக்கிறான்.
சபேசன் ஆளே பித்து பிடித்தாற்போல ஆகிப்போனான். அவனில் ஒரு ரகசியம் உறங்கிக் கிடந்தது. அதை யாரிடமாவது உளறிக் கொட்டிவிடுவோம் என்று பயமாய் இருந்தது. அவன் பேச்சு குறைந்து விட்டது. துாக்கமே இல்லை. யார் என்ன கேட்டாலும் – ஆமா. இல்லை. வேணாம்…. ஒற்றை வார்த்தை பதில். ஒரு திகைப்பான முழி!
எவ்வளவு உற்சாகமான ஆள் அவன். வெற்றிலை, பன்னீர்ப் புகையிலை, கூடவே மகாராஜபுரத்தின் துக்கடா அதக்கித் திரிவான். ‘வெள்ள்ளைத் தா-ஆ.மரை… பூவில் இருப்பாள். ‘ பளிச்சென்று சாற்றைத் துப்புகிறதைப் போல பாட்டின் இடைவரி ஏதாவது மின்னல்போல துள்ளியோடி வரும். சுதா ரகுநாதன் மாதிரி ‘துன்பம் நேர்கையில்… ‘ பாட முடியுமா என்பான் திடாரென்று – வை.கோ. பற்றி எதிராளி எதாவது பேசிக் கொண்டிருப்பார். தலையாட்டுவான் இவன், உள்ளே பாட்டு குபீரிட்டுக் கொண்டிருக்கும்.
கிணற்றடியில் குளிரக் குளிரத் தலைக்குக் கொட்டிக் கொள்ளும்போது பாட்டு. தொடர்கதை போல, விட்டுவிட்டு அவன் அடுத்த வாளியை ஊற்றிக் கொள்ளும் போது பாடுவான். அடுத்த வரி கண்ணாடி பார்த்துத் தலைவாரிக் கொண்டபடி. ‘அப்பா என் பேனாவைப் பார்த்தியா ? ‘ – ‘ம்ஹும். சூரிய சந்திரரோ ? ‘
யம்மாடி சுதா. அவனுக்கே இப்ப துன்பம் நேர்ந்திட்டதே…
மெளனம் அவனைச் சுற்றி வளைத்துக் கொண்டது. அச்சுறுத்தலான மெளனம். யாரோடும் பேசவே பயந்தான். ஏன் வரவில்லை ரங்கசாமி ? இன்று வந்துவிடுவான், நாளை வந்துவிடுவான், என்று பார்த்துப் பார்த்து ஒரு வாரம் ஓடிவிட்டது. வீட்டில் சொல்லவில்லையே என அவனில் கவலை குடைய ஆரம்பித்து விட்டது. ச். சொல்லலாம் என்றால் முதலிலேயே சொல்லி யிருக்க வேணாமா ? கிழவியும் சுமமா இருக்க மாட்டாள். ‘ஐயையோ ‘ என்றுதான் அவள் விஷயத்தையே ஆரம்பிப்பாள். ‘ஏன்டா நான் சொல்றேன்னு மட்டும் உனக்கு ஆத்திரம் வரதே, இப்ப நீ பண்ணீர்க்கற காரியத்துக்கு என்ன அர்த்தஞ் சொல்லு ? என்ன தெரியும் உனக்கு ? யாராவது ஆக்கிப் போட்டா நன்னா மூக்குப் பிடிக்க ஷாப்டுவே… ‘ சனியன் பேச ஆரம்பித்தால் நிறுத்தவே மாட்டாள். அவளை மறுத்துப் பேச, பதில் சொல்ல முடியாத திணறலே அவனுக்குப் பெரிசாக இருந்தது. கிழவி வாயை அமுக்கிவிட வேண்டுமாய் எரிச்சல் வரும்.
இப்ப என்ன பண்ண ? இந்த அவஸ்தை அவனை நெருப்பில் நிறுத்தியது. பேசாம இந்தப் பணத்தை வேஷ்டி முடியோடு கிணற்றில் எறிந்து விட்டால் கூடத் தேவலை. ‘ஏண்டா ஒருமாதிரி இருக்கே ? வயித்தை கியித்தை வலிக்கறதா ? வெளில எதாவது சாப்ட்டியா ? ‘ என்று கேட்கிறாள் பாட்டி. ஒண்ணில்ல, என்று சொல்ல நினைத்தவன், ஆமாம் என்று தலையாட்டினான். அழுகை வந்துவிடும் போலிருந்தது. ‘சுக்கு வெந்நீர் குடி. வாயு உபத்திரவத்துக்கு நல்லது ‘ – பேசாமல் வாங்கிக் குடித்தான்.
வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை. வெளியிறங்கிப் போய் ரங்கசாமியைத் தேடி, இந்தாப்பா உன் பணம், ஆளை விடு, என்று கொடுத்து விடலாம் என்றிருந்தது. அவன் வீடு தெரியாது… அவனைப் பற்றிய விவரங்கள் எதுவுமே தெரியாது… பணத்தை வீட்டில் யாருக்கும் தெரியாமல், இனி வெளியே எடுத்துப் போவதிலும் ஆயிரம் பிரச்னை. குளத்தங்கரையில் சுத்து வட்டாரத்தில் மயில்க்கண் வேஷ்டியும் பண முடிச்சுமாய் அலைகிறதா ? எவனாச்சும் நம்மட்டேர்ந்து அபேஸ் பண்ணிட்டானா ? பணத்தை வீட்டில் விட்டுவிட்டு தான் வெளியே போய்வரவும் தைரியங் கிடையாது!
பரவாயில்லை, என்று வெளியே கிளம்பினான். வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தது தாள முடியாதிருந்தது. ‘என்னய்யா உன்னை ஆளையே காணம் ? ‘ என்று சிநேகிதர்கள் விசாரித்தார்கள். தலையைக் கூடச் சரியாய் வாரிக் கொள்ளாமல் அவனைப் பார்க்க அவர்களுக்கு ஆச்சரியம். அடாவடியும் கலகலப்புமான சபேசன்… என்ன ஆச்சு அவனுக்கு. யாரிடமும் அவன் முகங் கொடுத்துப் பேசவில்லை. அவனை நம்பி ஒரு லட்சம் கொடுத்துவிட்டு, திரும்ப வாங்கிக் கொண்டு போனான்!… என்றால் எவ்வளவு உற்சாகமாய் இருக்கும். முகமே இப்போது அருளற்று இருந்தது. குகை மிருகம் போல உள்ளே திகில். இருள்.
எய்யா, ரங்கசாமி, நீ எங்கருக்கே ?
* * *
ஆகா என எழுச்சி கொண்டான் சபேசன். அதோ படபடவென்று பைக்கில் வருவது… அது ரங்கசாமிதான்! தெய்வமே, என எழுந்து கொண்டு அவனைப் பார்க்க ஓடினான். ‘அண்ணா! அண்ணா! ‘
பைக் நின்றது. குளிர் கண்ணாடியைத் தளர்த்தியபடி ரங்கசாமி திரும்பிப் பார்த்தான். ‘அப்பா! உங்களை இன்னிக்குப் பிடிச்சிட்டேன்! ‘ என்றான் சபேசன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு. அவனுக்கு மூச்சிறைத்தது. ‘என்ன இப்பிடிப் பண்ணிட்டாங்க ? ‘ என்றான். மூச்சிறைத்தது.
‘என்னாச்சி ? ‘
‘என்ன ஆச்சா ? ‘ என்று புன்னகைத்தான் சபேசன். சர்த்தான், பணங் குடுத்தையே மறந்துட்டாப்லியா ? என்ன இவ்ள அப்ராணி சுப்ரமணியா இருக்கான் – என அவனில் எகத்தாளம். உற்சாகம் மீள ஆரம்பித்திருந்தது அவனுக்கு. ‘அந்தப் பணம்… ‘
‘அது உங்களுக்குதான் சாமி… ‘ என்று புன்னகைத்தான் ரங்கசாமி.
‘எனக்கா ? ‘ அவனுக்குத் திகைப்பாய் இருந்தது. ‘ஐய விளையாடாதீங்கண்ணா… ‘
‘இல்ல நிஜந்தான். அந்தப் பணம் உங்களுக்கேதான்… ‘
‘வேறெதாவது லாட்ரில ரெண்டு லட்சம் விழுந்ததாக்கும்! ‘ என்று சபேசன் சிரித்தான்.
‘சாமி நீங்க நம்மாளு. இங்க யாரையும் நம்பத் தரமா இல்ல… கேட்டாங்களா ? ‘ என்றவன், ‘வாங்க காபி சாப்ட்டுக்கிட்டே பேசுவம்… ‘ என்று பைக்கை நிறுத்தி விட்டு வந்தான்.
சபேசனுக்கு அவன் பேசுவது புரியவில்லை. கூடவே போனான். ‘உங்ககிட்டேர்ந்து அந்த இடத்தை வாங்கீறணும்னு நிறையப் பேர் திரியறாங்க. தெரியுதுங்களா ? ‘
‘இந்த சபேசன்கிட்ட அது நடக்காது! ‘
‘அவங்க என்ன ரேட் பேசறாங்க சொல்லுங்க… ‘
‘கிரவுண்டு அம்பதுன்னு பேசறாங்க… நம்மது ஒண்ணரை. வேஸ்டேஜ் இல்லாத சதுரத் தரை! ‘
‘கரெக்டு. பணத்தாசை காட்டுவாங்க. ரெடி கேஷ்ம்பாங்க. ரெடி கேஷ் அறுபது வாங்கினாலும் உங்களுக்கு நஷ்டம்… ‘
‘அதெப்பிடி ? ‘ என்றவன் சுதாரித்து ‘சரி, அதெல்லாம் நான் வித்தாதானே ? ‘ என்றான் விரைப்புடன்.
‘காபி எடுத்துக்கங்க ‘ என்றான் ரங்கசாமி. அவன் காபி குடித்து முடிக்கும்வரை எதுவும் பேசவில்லை.
‘நீங்க நம்ப சாமி. அதான் நான் இன்னொரு திட்டம் வெச்சிருக்கேன்… ‘
‘திட்-டமா ? ‘ என்று கேட்டான் சபேசன். நாக்கு உள்ளிழுத்துக் கொண்டாற்போல உள்ளே இருட்டிக் குமுறியது. தயக்கமாய் ‘நீங்க ரியல் எஸ்டேட்டா ? ‘ என்று கேட்டான்.
‘அதுவும் பண்றதுதான். இன்ன தொழில்ன்னில்லை ‘ என்றான் ரங்கசாமி. அவனைப் பார்க்க சபேசனுக்கு அடிவயிற்றில் சிலீரென்று குளிர் தட்டியது.
‘வெறும் நிலத்தைக் கிரயம் பண்ணினா அறுபதுதான் கிடைக்கும் பார்த்துக்கிடுங்க. நாம என்ன பண்ணலாம், அதுல நான் ஃப்ளாட் (flat) கட்டி, அத்தனையும் வித்ததுல, பாதி உங்களுக்கு, பாதி எங்களுக்கு. ‘ அவன் சபேசனைப் பார்க்கவே யில்லை. எதோவொரு ஜ்வல்லரி பேர் போட்ட பையிலிருந்து கால்குலேட்டரை வெளியே எடுத்து விறுவிறுவென்று எதோ கணக்கு போட்டான். உங்களுக்கு ஒரு கோடி ருவ்வாய்க்குமேல வரும் இதுல, பாத்துக்கிடுங்க… ‘
‘கோடியா! ‘ என்று அதிர்ந்தான் சபேசன். திரும்பவும் ‘அதெல்லாம் சரிதான். நான் அதை விக்கிறதா இல்லையே… ‘
‘நல்லா யோசிங்க சாமி. வேற யார்ட்டியாச்சும் மாட்டிக்கிட்டு பைத்தாரத்தனம் பண்ணிறாதீங்க… ‘ என்றவன் மேற்கொண்டு எதோ பேசவந்த சபேசனை நிறுத்தி ‘நாலு பேர்கிட்ட விசாரிச்சுப் பாருங்க ரங்கசாமி பத்தி… ‘ என்றவன் சற்று ஆவேசமாய், ‘நான் எடுத்தா எடுத்த காரியத்தை முடிக்காம விடமாட்டேன்… ‘ சட்டென அந்தக் கண்கள் சிவந்தன. குடித்திருந்தானோ ? அதில் காணப்பட்ட வெறி, சபேசனுக்குத் திகைப்பாய் இருந்தது. ‘மத்த ஆளுங்களை மாதிரியில்லை நான், பாதில ஒரு காரியத்தை விட்டு விலகிட மாட்டேன்னு சொல்ல வந்தேன். இந்த ஃப்ளாட்லியே உங்களுக்கும் ஒரு ஃப்ளாட் தரலாம்னிருக்கேன். சாமி நீங்க நம்மாளு. இந்த இடத்தை விட்டுட்டுப் போறமேன்னு நீங்க விசாரப் பட வேணாம்… கட்டி முடியற வரையில வேற வீடு வாடகைக்கு பக்கத்லியே நான் ஏற்பாடு பண்ணித் தரேன். வேற யாரும் இப்பிடிச் செய்ய மாட்டாங்க ‘ என்றவன் நிறுத்திவிட்டு, ‘வேற ஏதாச்சும் சாப்டறீங்களா ? ‘ என்று புன்னகை செய்தான். ‘இல்ல வேணாம் ‘ என்றான் சபேசன் அவசரமாய். யய்யா, இதுவே வயித்தைக் கலக்கினாப் போல இருக்கு.
எழுந்து வெளியே வந்தார்கள்.
‘நீங்க சொல்றதெல்லாம் சரி. ஆனா இடத்தை நான் விக்கிறதா இல்லை, ‘ என்றான் சபேசன் திரும்பவும். அதை ரங்கசாமி காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. சபேசனுக்குப் படபடப்பாய் இருந்தது. மயக்கம் வரும் போலிருந்தது. ‘அண்ணா, நாளைக்கு வீட்டுக்கு வந்து உங்க பணத்தைத் திரும்ப வாங்கிட்டுப் போயிடுங்கோ ‘ என்றான். முடிந்தவரை அழுத்தமாய்ச் சொன்னதாய்த்தான் நினைத்தான்.
‘சாமி என்னை மாதிரி ஒரு நல்ல ஆளு கிடைச்சானேன்னு சந்தோசப் படுங்க ‘ என்றபடி ரங்கசாமி பைக்கில் ஏறி பைக்கைக் கிளப்பினான். ஐயோ, பணத்தைக் கையில் கொண்டு வந்திருக்க வேண்டும் நான், என அவன் மனம் அலறியது. பணத்தை இந்த நிமிடம் இவன் முகத்தில் விட்டெறிய முடிந்திருந்தால் எத்தனை நன்றாய் இருக்கும்…
இப்ப என்ன பண்ண. இரு பதட்டப் படாதே. நிதானமாய் இதுபற்றி யோசி. வீட்டை விற்பது என்றால் இன்னும் ஆயிரம் விஷயம் இருக்கிறது. அவன் அந்தப் பணத்தை அட்வான்ஸ் என்று தரவில்லை! அக்ரிமென்ட் போடவில்லை!… ஹா, யாரென்று நினைத்து விட்டான். என்னை அவ்வளவு ஏமாளியாகவா எடை போட்டு விட்டான்…
ஒருவேளை அவன் நினைத்ததை சாதித்து விடுவானோ, என நினைக்கவே பகீரென்றது. அடச் சனியனே, யாரோ ஒருவன், வந்து நம்மிடம் பணந் தந்தால் பல்லை இளிச்சிண்டு வாங்கிண்டுடறதா ? இடத்தின் விலையே அறுபது எழுபது… அதற்கு அட்வான்ஸ் என்று வெறும் ஒரு லட்சம்! யாராவது வாங்குவார்களா ?
* * *
நடந்ததை வீட்டில் சொல்ல வேளை வந்து விட்டது. எல்லாரும் கத்துவார்கள். கத்தாதீங்கடி சனியங்களா. இதில், இந்தத் துாண்டிலில் நான் மாட்ட மாட்டேன்! எப்படிச் சமாளிக்கிறேன் பாருங்கள். பார்த்து விட்டுச் சொல்லுங்கள், நான் ஏமாளியா புத்திசாலியா என்று.
யோசனை குடையக் குடைய குளத்தங்கரையில் நடந்தான். ஒருபாட்டம் அழுதுவிடலாம் போலிருந்தது. இதை எப்படிச் சமாளிக்க தெரியவில்லை. சட்டென்று உக்கிரமான ரங்கசாமியின் கண்கள்… பயமாய் இருந்தது. விவகாரம் இப்பிடித் திரும்பும் என்று எதிர்பார்க்கவேயில்லை. ஒரு கோடி! இத்தனை பணம் இருக்கிறதா இதில். ஒரு கோடி பணத்தை என்ன செய்வார்கள் தெரியாது அவனுக்கு. அன்னிக்கு ஒரு லட்சம்! – அதைப் பார்த்தே பிரமிப்பாய் இருந்தது… பேசாமல் அவன் சொன்னாப் போல உட்கார்ந்து ஆயுசு பூராச் சாப்பிடலாம் போலிருக்கிறதே!… ஐயோ நான் ஏன் இப்படி நினைக்கிறேன்… இடத்தை விற்கக் கூடாது. நான் விற்க மாட்டேன். இடத்தையும் காலி செய்து கொடுக்க மாட்டேன். சொந்த வீட்டை வைத்துக் கொண்டு நான் ஏன் வாடகை வீடு தேடிப் போக வேண்டும் ? நான் எப்படி இருக்க வேண்டும் என்று நீ யாரடா யோசனை சொல்ல ?
சபேசன் வீடு திரும்பும்போது ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டு வாசலில் ‘ரங்கசாமி ரியல் எஸ்டேட் ‘ போர்டு பார்த்ததுமே திக்கென்றது. பரபரப்புடன் உள்ளே போனான். பாட்டி, இவள், கீதா, ரமணி எல்லாரும் பேயறைந்ததுபோல் உட்கார்ந்திருந்தார்கள். ‘கண்டவன் வந்து போர்டு வெச்சிட்டுப் போறான். இதை எல்லாருமாப் பாத்திட்டிருந்தீங்களாக்கும்… ‘ என்று கத்த வந்தவன், பேச வாயற்று அப்படியே நின்றான். மேஜையில் அவன் மயில்க்கண் வேஷ்டி முடி பிரித்திருந்தது.
‘என்ன இதெல்லாம் ? ‘ என்று பாட்டி நேரடியாக ஆரம்பித்தாள்.
‘இதோ பாருங்கோ. இப்ப ஒண்ணும் ஆயிடலை. நான் வீட்டை விக்கிறதா இல்லை. புரியறதா ? ‘
‘அப்ப ஏன் பணம் வாங்கினே ? ‘
‘இது அதுக்கு வாங்கின அட்வான்ஸ் இல்லை. போதுமா ? ‘
‘அவன் அட்வான்ஸ்ன்றானே ? ‘
‘எவன் ? ‘ என்றான் ஆத்திரமாய்.
‘சாமிட்ட ரேட்டுல்லாம் பேசியாச்சி. அட்வான்ஸ் குடுத்தாச்சி. எண்ணெய்க்காரத் தெருவில் உங்களுக்காக வாடகைக்கு வீடும் பார்த்திருக்கு… அவன் என்னவெல்லாமோ சொல்லிட்டு ஃப்ளாட் ஃபார் சேல்-னு போர்டையும் வெச்சிட்டுப் போறான். நாங்க என்ன பண்றது ? ‘
‘அதெல்லாம் என்ட்ட நடக்காது. பாட்டி, அவன் ஒரு ஃப்ராடு… ‘
‘அதான் நான் முதல்லியே சொன்னேனேடா… ‘ என்றாள் பாட்டி இடைமறித்து. ‘சபேசா உனக்கு ஒரு மண்ணும் தெரியாது… ‘
‘இதுக்கெல்லாம் நான் மாட்ட மாட்டேன்… ‘ என்று தொடர்ந்து பேச முடியவில்லை. நெஞ்சு எகிறிக் கொண்டிருந்தது. விறுவிறுவென்று வாசலுக்கு வந்தான். ஒரு விநாடி அந்த போர்டைப் பிடுங்கி எறிந்து விடுவோமா, என்று ஆவேசமாய் யோசித்தான். வேணாம், சமாதானமாய்ச் சொல்லிப் பார்ப்போம். முடியலையா, இருக்கவே இருக்கு, போலிஸ் ஸ்டேஷன். இதை நான் விடறதா இல்லை…
ஒவ்வொரு யோசனைக்கும் உள்ளே யானைகள் புரண்டு படுத்தாப்போல யம்மாடி என்ன கன நகர்ச்சி!
உள்ளே வந்தான். எல்லாரும் அவனையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாப் போல இருந்தது. ‘இன்னும் ஒண்ணும் ஆயிடல. சும்மா காபரா பண்ணாதீங்க. காலைல அந்த ரங்கசாமி வந்தா அவன் மூச்சில பணத்தை விட்டெறிஞ்சடறேன்… தெரிஞ்சுதா ? ‘ என்றான் பாட்டியைப் பார்த்து. எல்லாரும் பாட்டி பேசும்போது கூடப் பேசவேண்டாம் என்று இருந்தார்கள்.
‘அவன் வரமாட்டான்! ‘ என்றாள் பாட்டி. ‘அவன்ட்ட எப்ப பணம் வாங்கினே ? ‘
‘ஆச்சி. ஒரு வாரம் ஆச்சி! ‘
‘ஈஸ்வரா! ‘
‘சரி அதெல்லாம் முடிஞ்சி போச்சு. இந்த இடத்துக்கு அட்வான்ஸ்னு அவன் சொல்லல. சொல்லியிருந்தா நான் ஏன் வாங்கிக்கப் போறேன்… ‘
‘அவன் யாருன்னு தெரியுமா உனக்கு ? ‘
‘தெரியாது ‘ என்றவன், சற்று தயங்கி ‘ரியல் எஸ்டேட் ஆள்னு தெரியாது ‘ என்றான்.
‘அவன் ஏன் உனக்கு ஒரு லட்ச ரூபாய் தரணும் ? ‘
‘ச், அதெல்லாம் உங்களுக்குப் புரியாது. நாளைக்கே நான் அதைத் திரும்ப விடடெறிஞ்சுருவேன். போதுமா ? எல்லாரும் நிம்மதியா இருங்கோ. ‘
மேலே பேச முடியவில்லை. அவனுக்கே படபடப்பாய் இருந்தது. மாடிக்குப் போனான். அங்கேயிருந்து இருளில் போர்டு தெரிந்தது. ‘ரங்கசாமி ரியல் எஸ்டேட் ‘ – என்ன தைரியம்! ஒரு கோடிக்கு மேலே பிராஜெக்ட் எஸ்டிமேட்! பெரிய பிராஜெக்ட். அவன் சொன்னபடி அதில் என் வருமானம் மாத்திரம் ஒரு கோடி! மயக்கமாய் இருந்தது – இதற்கு ஒரு லட்சம், வெறும் ஒரு லட்சம் அட்வான்ஸ்1 நான் ஏமாளியா என்ன ? ரங்கசாமியின் கோபமான முகம் உடனே ஞாபகத்தில் வந்தது. அவனுக்கு பயமாய் இருந்தது. சனி வந்து சுற்றி வளைக்கும் என்கிறது இதுதானோ ? அவனே சனிப்பெயர்ச்சி பலன் புத்தகங்கள் விற்றிருக்கிறான்… இந்த வீடு இந்த இடம்…. இது என் கையை விட்டுப் போய்விடுமோ ? ஹோவென்று உள்ளே இரைச்சல் கிளம்பியிருந்தது. மெல்ல ரங்கசாமி கயிறால் தன் கழுத்தை இறுக்குவது போல பீதி. சீச்சி, பயப்படாதே. ஒன்றும் ஆகாது. அந்தக் கபாலீஸ்வரன் இருக்கிறான். பாட்டி சரியாய்த்தான் சொன்னான் – இவன் மூஞ்சி நன்னால்லை, இவனை நம்பாதே! நுாத்தில் ஒரு வார்த்தை. நான் ஒரு குழந்தை… எனக்கு என்ன தெரியும் ? ஓவென்று அழுகை வந்தது. பய அழுகை.
வெட்கத்தை விட்டு அந்த இரவில் அழ ஆரம்பித்தான். சட்டென்று துடைத்துக் கொண்டு பார்த்தான். பாக்கியலெட்சுமி. ‘அம்மாவுக்கு உடம்பு ரொம்ப முடியல. மூச்சு முட்டறது. ஆஸ்த்மா மாறியிருக்கு… ‘
அவசரமாய்க் கீழேயிறங்கிப் போனார்கள். ‘என்ன பண்றது உங்களுக்கு ? ‘ என்று போய் அவள் கையைப் பிடித்துக் கொண்டான். ‘இப்பிடிப்போய்க் காரியம் பண்ணிட்டியேடா… ‘ அவன் அதை சட்டை பண்ணவில்லை. ‘வேணா டாக்டரைப் பார்ப்போமா ? ‘ என்றான். என்ன பேசுகிறான் என்று தனக்கே தெளிவாய் இல்லை.
ஹ்ம் ஹ்ம் என்று திணறித் திணறி அவள் மூச்சு விட்டாள். அவனால் தாள முடியவில்லை. ஜெகதாம்பாள் படுத்து அவன் பார்த்ததேயில்லை. ‘ரமணி ஒரு ஆட்டோ பிடி ‘ என்று கத்தினான். பாட்டி வேண்டாம் வேண்டாம் என்று சொல்லச் சொல்லக் கேட்காமல் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனார்கள்.
பெரிய ஆஸ்பத்திரிதான். செலவு என்ன ஆகும் தெரியாது. டாக்டருக்கு ஃபோனில் சொன்னார்கள் – அவசரப் பார்வை. அவர் வர அரை மணி நேரம் ஆனது. அதற்கு சிறப்புக் கூலி தர வேண்டும். ‘நான் படிச்சிப் படிச்சிச் சொன்னேன். நீ கேக்கலியேடா… ‘
‘அதெல்லாம் அப்பறம் பார்த்துக்கலாம். நீ பேசாமக் கண்மூடித் துாங்கும்மா ‘ என்றாள் பாக்கியலெட்சுமி.
நடந்தது எதுவும் போகட்டும். அதெல்லாம் பரவாயில்லை… இந்த வீட்டின் துாண் அவள். கிழவி பிழைத்தெழுந்து வர வேண்டும். அதுதான் இப்போது முக்கியம். எப்பவாவது குளிர் மழை என்று அவளுக்கு ஆஸ்த்மா வரும்தான். இந்த அதிர்ச்சி அவளைத் துாக்கி யடித்து விட்டது.
கிழவி பிழைக்க வேண்டும். அவன் கடவுளை வேண்டிக் கொண்டான். இதுக்கெல்லாம் காரணமான அந்த ரங்கசாமி எதிரே இருந்திருந்தால் நரசிம்மாவதாரம் எடுத்திருப்பான். நான் அவனுக்கு இடத்தை விற்கப் போவதில்லை – என ஆவேசமாய் மாரில் அறைந்து கொண்டான். இடத்தைக் காலி செய்யவும் மாட்டேன்… என்னதான் செய்கிறான், அதையும் பார்த்து விடலாம். நானாச்சி, அவனாச்சி…
பாட்டியைப் பார்ப்போம், என்று தன்னை உலுக்கிக் கொண்டான். எத்தனை செலவு ஆனாலும் பாட்டியை எழுப்பி உட்கார வைத்து விட வேண்டும். வந்த டாக்டர் அத்தனை ஆசுவாசமாய்ப் பேசவில்லை. அவர் சொல்லி இன்னொரு டாக்டர் வந்தார். நர்ஸ் அவர்கள் கூடவே இங்கே அங்கே என்று பரபரத்துக் கொண்டிருந்தாள்.
கவலையாய், பயமாய், ரொம்ப பயமாய் இருந்தது. கிழவி இல்லாமல் அவனால் என்ன செய்ய முடியும் ? அந்த வீட்டின் அச்சாணி அவள். எப்படியாவது கிழவி பிழைக்க வேண்டும். அதற்கு என்ன செலவானாலும் பரவாயில்லை…
பணம் கொண்டு வந்திருந்தான். இருபதாயிரம் ரூபாய். மீதி எண்பதாயிரம் வீட்டில் இருந்தது, மயில்க்கண் வேஷ்டிக்குள் பத்திரமாய்.
/தொ ட ர் கி ற து/
storysankar@gmail.com
- நால்வருடன் ஐவரானேன்
- பின்நவீனத்துக்குப் பின்:அதிநவீனத்துவம் (Hypermodernism) சில குறிப்புகள்
- மஸ்ஸர்ரியலிசம்(MASSURREALISM)இலக்கியத்தில்
- புராண நிகழ்வை பிறிதொரு தளத்தில் விரிவடையச் செய்யும் புத்துருவாக்கம்
- கொற்றவை – ஒரு பச்சோந்திப் பார்வை
- மாற்று அரசியலில் கட்டுடையும் பெண்ணியம்
- அலையாத்திகாடுகளில் நுழைந்து திரியும் பட்டாம்பூச்சிகள் : முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் அளித்த ‘நெய்தல் மண்ணுக்கோர்சாசனம் ‘
- தொகுதிப் பங்கிடு-ஒரு கற்பனை
- நேரம் கேட்டால்கூடச் சொல்லாதே!
- “ஹால் டிக்கெட்”
- தீம்தரிகிட மாத இதழ் இணைய இதழாகிறது
- உலகமயமாக்கலில் எழும் சில சந்தேகங்கள்
- வனப்பிரஸ்தம் – குந்தியின் தனிமையும், தேடலும்
- பெரியாரும், சிறியாரும்
- நம்பமுடியாமல்…
- இந்திரா பார்த்தசாரதியுடன் ஒரு நாடகப் பயிற்சி முகாம்
- யேல் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் திரைப்படங்கள்
- தேயும் விரல்களும், தோய்ந்த நஞ்சும்
- சான்றோர் சமூகமும் கோவில் நுழைவுப் போராட்டமும்
- கடிதம் – ஆங்கிலம்
- கடிதம் ஆங்கிலம்
- கடிதம்
- கடிதம் ஆங்கிலம்
- தமிழகக் குடும்ப வாழ்க்கை (நேற்று – இன்று – நாளை)
- அறிவியல் புனைக்கதை : என்னை யாரென்று எண்ணி எண்ணி
- வேம்பு
- ஒரு மயானத்தின் மரணம்
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 14
- தொ ட ர் க தை- ராகு கேது ரங்கசாமி -3
- ‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் ஏழு: ‘கோட்டை வாசலும், கோட்டையடியும் வெயிலுகந்தபிள்ளையார் ஆலயமும் ‘
- புலம் பெயர் வாழ்வு (6)
- உயிரா வெறும் கறியா ?
- வாசிப்புக் கலாசாரம்
- சிறு தெய்வங்களுக்கு நேர்ந்துள்ள அபாயம்
- ஸ்டாலின் முதலமைச்சர் ஆனால் என்ன தப்பு ?
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-14) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- இறை மறுப்பாளர் நீட்சேயின் இன்ப அறிவியல் (GAY SCIENCE BY FREDRICH NIETZSCHE)
- கீதாஞ்சலி (66) எனது கடைசிக் காணிக்கை! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- கவிதை
- பெரியபுராணம் – 82 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- கவிதைகள்
- அலறியின் கவிதைகள்
- முதலாம் பிசாசின் நடத்தை
- நினைவலையில் காற்றாலை
- வெண்ணிலவை நோக்கி மீண்டும் விண்வெளிப் பயணங்கள்!
- சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -3 (சென்ற வாரத் தொடர்ச்சி)