டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி
ஒரே கம்பி இணைப்பின் மூலம் தொலைக்காட்சி, தொலைபேசி, இணையம், தொலை நகலி (fax) ஒளியுரு (video), இசையொலி ஆகிய அனைத்துச் சேவைகளையும் ஒருங்கே பெற முடிகின்ற ஒரு நிலையைக் கற்பனை செய்து பாருங்கள். இன்றைய நிலையில் இவையனைத்திற்கும் தனித் தனிக் கருவிகள் அல்லது சாதனங்கள் பயன்படுத்தப் பெறுகின்றன. ஆனால் விரைவில் மேற்கூறிய கற்பனை உண்மையிலேயே செயல் வடிவம் பெற இருக்கிறது. தகவல் தொழில்நுட்பத்தில் இதனைக் “குவியம் (convergence)” என்பர். இக்குவியத்தில் தனியாள் கணினி (personal computer – pc), தொலைத் தொடர்பு (telecommunication), தொலைக் காட்சி (television) ஆகிய சேவைகள் பலவும் ஒருங்கிணைக்கப் பெறுகின்றன.
குரலொலி (voice), தரவுகள் (data), ஒளியுரு (video) ஆகிய மூன்றும் தற்போதைய முக்கியமான தொடர்பு முறைமைகளாக உள்ளன. இவை முறையே தொலைபேசி, இணையம், தொலை மாநாடுகள் (teleconferencing) வாயிலாகத் தனிதனியே பெறப்படுகின்றன. வலையக் குவியத்தின் (network convergence) வாயிலாக இவையனைத்தும் ஒரே வலைய அமைப்பாக ஒருங்கிணைக்கப்பட்டு வீட்டிலிருந்தவாறே மேற்கூறிய மூன்று தொடர்புகளையும் நம்மால் பெற இயலும். இதற்காக நாம் செலவழிக்க வேண்டியது சில ஆயிரம் ரூபாய்கள் மட்டுமே. மேலும் இக்குவிய அமைப்பு தற்போதைய அலைவரிசை அகலத்தை (band width) முழுமையாகப் பயன்படுத்தி உயரளவு பயன்பாட்டை அளிப்பதுடன், தொலைதூரத் தொடர்புகளை மிகக் குறைந்த செலவில் வழங்க முடியும் என்பதும் அனைவரது எதிர்பார்ப்பாகும்.
முன்னேற்றத்தின் தொடக்கம்
சுமார் 270 ஆண்டுகளுக்கு முன்னர், 1870 ஆம் ஆண்டில் தந்தி அனுப்பும் முறை கண்டு பிடிக்கப்பட்ட போது தொலைத்தொடர்புத் துறையின் முன்னேற்றம் தொடங்கியது எனலாம். இக்கண்டுபிடிப்பினால், செய்திகளையும், தகவல்களையும் பரிமாறிக் கொள்ளுவதில் ஊர்களுக்கிடையே உள்ள தொலைவு ஒரு பொருட்டாக அமையவில்லை. அடுத்த 50 ஆண்டுகளில் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் தனிப்பட்ட இருவர்க்கிடையே மேலும் நெருக்கமான தொடர்பு உருவாயிற்று. இதனால் இரண்டு நண்பர்கள் ஒருவர்க்கொருவர் நேரடியாகச் சந்தித்துக் கொள்ளமலேயே தகவல் பரிமாற்றமும், தொடர்பும் மேற்கொள்ள முடிந்தது. இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட அறிவியல் முன்னேற்றத்தின் விளைவால் எளிதாகவும், விரைவாகவும் தொலைதூரத் தகவல் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு மேலும் மேலும் பெருகிற்று. செயற்கைக் கோள்கள், கடலடிக் கம்பிகள் வாயிலாக ஏற்பட்ட இவ்வறிவியல் முன்னேற்றத்தின் விளைவாக கண்டம் விட்டுக் கண்டம் வாழும் மக்கள் ஒருவர்க்கொருவர் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முடிந்தது. தொலைபேசிக் கம்பிகளைப் பயன்படுத்தி அச்சடிக்கப்பெற்ற செய்திகளையும் படங்களையும் இடம் விட்டு இடம் அனுப்பும் தொலை நகலி (facsimile) முறை பின்னர் புழக்கத்திற்கு வந்தது.
இவற்றிற்கிடையில் வானொலி, தொலைக்காட்சி ஆகியன செய்திகளை அறிவதிலும், பொழுதுபோக்குத் துறையிலும் பெரும்பங்கு வகித்தன. செயற்கைக் கோள்கள், நுண்ணலைத் தொடர்புகள் (microwave links) வாயிலாக நாடுகட்கிடையே தொலைக்காட்சி ஒளிபரப்பை மேற்கொள்வது எளிதாயிற்று. கிரிக்கெட் ஆட்டம் முதற்கொண்டு, அமெரிக்க அதிபர் பதவியேற்பு வரை அனைத்தையும் நேரடியாகக் காணும் வாய்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. கம்பித் தொலைக்காட்சி (Cable TV) வந்த பின்னர் மேற்கூறிய அனைத்தையும், நம் வரவேற்பறையில் அமர்ந்துகொண்டே காணவும் முடிகிறது.
இவை அனைத்தும் வியத்தகு முன்னேற்றங்கள் என்பதில் ஐயமில்லை; ஆனால் இவையெல்லாம் தற்போது தனித்தனியாக இயங்கி வருபவை. தொலைபேசி இயக்கம், வானொலி ஒலிபரப்பு, தொலைக் காட்சி ஒளிபரப்பு ஆகியனவெல்லாம் ஒன்றோடொன்று இணையாமல் தனித்தனித் தொழில் நுட்பத்தில் பணிபுரிகின்றன. எடுத்துக்காட்டாக வானொலி, தொலைக்காட்சி மூலம் நாம் நண்பர்களுடன் உரையாட இயலாது; தொலைபேசி வாயிலாக வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்க முடியாது. இவற்றையெல்லாம் ஒருங்கிணைக்கக் கூடிய குவியத் தொழில்நுட்பம்தான் நாம் இப்போது எதிர்பார்ப்பது. மின்னணுக் கணினிகள் மற்றும் தகவல்களை இலக்கமயமாக்கல் ஆகியவை வாயிலாக இது உருவாகி வருகிறது. இதனால் தகவல்களையும், தரவுகளையும் விரும்பியவண்ணம் பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனியாள் கணினியின் செயலாக்கமும் இணையத்தின் பயன்பாடும் இம்முன்னேற்றத்திற்குக் காரணங்களாக அமைகின்றன எனலாம்.
இரும இலக்க முறை
மின்னணுக் கணினிகளில், செயலாக்கத்தின்போது தகவல்கள் இரும இலக்கங்களாக – அதாவது 0, 1 என்ற இரண்டு இலக்கங்களாக – மாற்றம் பெறுகின்றன என்பதை நாம் அறிவோம். ஆனால் தொலைபேசி, வானொலி மற்றும் தொலைக் காட்சி ஆகியவற்றின் சமிக்கைகள் (signals) ஒப்புமை முறையில் (analog mode) செலுத்தப் பெறுகின்றன. இச்சமிக்கைகளுக்கு கணினியுடன் தொடர்பு கொள்ள தனியான இடைமுகம் (interface) தேவைப்படுகிறது. தகவல்களையும், செய்திகளையும் இரும இலக்கங்களின் அதாவது ‘பிட் ‘ (bit – binary digit) களின் சரங்களாக (strings) மாற்றுவதன் மூலம் மேற்கூறிய தேவை நிறைவு செய்யப்படுகிறது. கிளாட் ஷேனன் (Claude Shannon) என்ற பொறியாளர் 1947 ஆம் ஆண்டிலேயே மாசாசூட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (Massachusetts Institute of Technology) இது தொடர்பாக ஆய்வு செய்யத் துவங்கினார். தகவல் மற்றும் தரவுகளைச் செலுத்துவதற்கு அவரது ஆய்வுகள் அடிப்படையாக அமைந்தன. இலக்கமயமாக்கப் பெற்ற சமிக்கைகளை கம்பி அல்லது நுண்ணலைத் தடங்களின் வழியே எவ்வித இழப்புமின்றி அனுப்ப இயலும் என்பது உறுதி செய்யப்பட்டது; இதுவே பல்வேறு தொழில்நுட்ப இணைப்புக்கும் வழிகோலியது.
தொழில்நுட்பங்களின் குவியத்திற்கு முதற்படியாக அமைந்தது இணைய அமைப்பேயாகும். வானொலி, தொலை பேசி, கணினி மற்றும் செயற்கைக் கோள்கள் ஆகியவற்றின் பல்லாண்டு வளர்ச்சியின் விளைவாக உருவானதே இணையம். 1960 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இராணுவ இரகசியங்களைப் பாதுகாக்கவும், எதிரிகளின் தாக்குதல்களை முறியடிப்பதற்கும் அந்நாட்டுப் பாதுகாப்புத் துறையில் உருவாக்கப்பட்டதே இணையச் சேவையாகும். இன்று உலகளாவிய நிலையில் கணினி வலையமைப்புகளை உள்ளடக்கியதாக இணையச் சேவை வளர்ந்துள்ளது. தரவுகளைச் சிறுசிறு பொட்டலங்களாக (tiny pockets) மாற்றி, பல்வேறு வழிகளின் வாயிலாக அவை செல்ல வேண்டிய இடத்திற்கு அனுப்புவதன் மூலம் பல நன்மைகள் உண்டு. இத்தகைய பொட்டல நிலைமாற்று வலையம் (pocket switched network) அணு ஆயுதப் பேரழிவில் இருந்தும் கூட காப்பாற்றக்கூடிய திறமை வாய்ந்ததாகும். தரவுப் பொட்டலங்கள் அனுப்பப்படும் வழிகளில் ஏதேனும் ஒன்று அடைபட்டிருந்தாலும் கூட, சரியாக உள்ள வேறு வழிகளில் அவை பயணம் செய்ய இயலும்.
1993 ஆம் ஆண்டு புழக்கத்திற்கு வந்த பல்லுடக (multimedia) இணையம் மற்றுமொரு குறிப்பிடத்தகுந்த முன்னேற்றமாகும். சில மென்பொருட்களை (software) நிறுவுவதன் வாயிலாக, படங்கள், ஒலி, ஒளிகளுடன் கூடிய ஆவணங்களை, இணைய உலாவில் சுட்டியைச் சொடுக்கி எளிதாகப் பெறமுடிந்தது. இணையம் என்பது மின்-மடல்கள் அனுப்புவது, தேவையான கோப்புகளைப் பதிவிறக்கம் (download) செய்வது என்ற நிலையில் இருந்து உயர்ந்து, பல்வேறு தகவல்களுக்கான களஞ்சியமாக மாறியது. பொதுமக்களைப் பொறுத்தவரை இணையம் என்பது தகவல்களை உடனடியாகப் பெறவும், தொடர்புகளை விரும்பியபோது ஏற்படுத்திக் கொள்ளவுமான சாதனமாகவே இன்னும் இருந்து வருகிறது. வைய விரிவு வலையில் (world wide web – www) உடனடித் தொடர்பு வசதியின் மூலம், இணையப் பயனாளர், இவ்வுலகத்தில் தமக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் பெற இயலும்; இசை, ஒளியுருக்கள் (video) போன்ற பல்லூடக வசதிகளுடன் விரும்பிய தகவல்களை, விரும்பிய நேரத்தில் அடைய முடியும்.
இணையத்தின் பயன்பாடு விரைந்து நமக்குக் கிடைப்பது, நாம் எதன் வாயிலாக இணையச் சேவையுடன் தொடர்பு கொள்கிறோம் என்பதைப் பொறுத்ததாகும். தொலைபேசி வாயிலாக இணையச் சேவையைப் பெறுவதே இன்றைய நிலையில் செலவு குறைந்தது; ஆனால் இம்முறையில் நாம் நெடு நேரம் காத்திருக்க வேண்டும்; சிறு கோப்புகளைப் பதிவிறக்கம் செய்வதற்குக்கூட நீண்ட நேரம் ஆவதால் சலிப்பேற்படுவது தவிர்க்க இயலாததாகிறது. ஒலி/ஒளிக் கோப்புகளைப் பதிவிறக்கம் செய்வதற்குள் வாழ்க்கையே வெறுத்துவிடும். தொலைபேசிக் கம்பிகள் வழியே இலக்க முறைத் தரவுச் சரங்கள் மிக மெதுவாகப் பெறப்படுவதே இத்தாமதத்திற்குக் காரணம்; பெரும்பாலும் ஒரு வினாடிக்கு 1 முதல் 2 கிலோ பைட் தகவல்களே பெறப்படும். இவ்வேகத்தில் ஒரு மெகா பைட் அளவுள்ள கோப்புகளைப் பதிவிறக்கம் செய்யக் குறைந்தது கால் மணி நேரமாவது ஆகும். ஒரு சிறிய சந்தில் ஒரே நேரத்தில் பல பேருந்துகளைச் செலுத்துவது போன்ற நிலையே இது. இம்முறையில் எந்தப் பேருந்தும் விரைந்து செல்ல இயலாது. எல்லாப் போக்குவரத்துக்கும் ஒரே வழித்தடத்தை நம்பி இருப்பதில் மிகுந்த பயன் விளையாது. ஒருங்கிணைந்த இலக்கமுறை வலையமைப்புச் சேவையில் (Integerated Services Digital Network – ISDN) அகலத் தட (broad band) வசதியும், பல வழிப் போக்குவரத்தும் இருப்பதால் தொலைபேசி வழிச் சேவையை விட 20/30 மடங்கு விரைந்து பணியாற்ற இயலும். ஆனால் இதனை நிறுவும் செலவு மிகமிக அதிகம்; எனவே வீட்டுப் பயன்பாட்டுக்கு இம்முறை ஏற்புடையதன்று. இந்நிலையில்தான் கம்பித் தொலைக்காட்சி நடத்துவோரின் (Cable TV Operators) உதவி முக்கிய பங்கை வகிக்கிறது. கம்பித் தொலைக்காட்சி நடத்துவோருக்கும் தொலைபேசி இணைப்பகத்திற்கும் உள்ள முக்கியமான பொதுக்கூறு என்னவெனில் சந்தாதாரர்களுடன் தொடர்பு கொண்டு அவர்கள் தேவையை நிறைவு செய்தல். முக்கியமான வேற்றுமை என்னவெனில், கம்பித் தொலைக்காட்சி சந்தாதாரர்கள் ஒருவரோடொருவர் தொடர்பு கொள்ள இயலாது. ஆனால் ஒன்றிய அச்சுக் கம்பியைப் (coaxial cable) பயன்படுத்தும் கம்பித் தொலைக்காட்சி முறையில், தொலைபேசிச் செப்புக் கம்பியைப் பயன்படுத்துவதன் மூலம் கிடைப்பதைவிட பெரிய அளவிலான அலைவரிசை அகலம் (bandwidth) கிடைக்கிறது. அண்மைக் காலமாக இவ்வேற்றுமையும் விரைவாக மறைந்து வருகிறது. பெரும்பாலான நாடுகளில் கம்பித் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒளியிழைக் கம்பி வரிசைக்கு (optical fiber line) மாறி வருகின்றன. இதன் மூலம் தொலைபேசிச் சேவையையும் அவைகளே அளிக்கத் துவங்கி உள்ளன. இதன் விளைவாக தொலைபேசிப் பயனாளர்களுக்குச் சிறந்த சேவை அளிக்கப்படுகிறது. மேலும் உயரளவு அலைவரிசை அகலத்தைக் கொண்டு, கம்பித் தொலைக்காட்சி நிறுவனத்தால் மிகுந்த எண்ணிக்கையிலான ஊடாட்ட ஒளியுருச் சேவையையும் (interactive video service) அளிக்க இயலுகிறது. இதனால் காட்சித் திரைகளின் ஊடாட்டப் பயன்பாடு பெருகி செய்திகளையும், படங்களையும் வீட்டிலிருந்தோ அலுவலகத்திலிருந்தோ அனுப்பவும் பெறவும் முடிகிறது.
குவிய ஒழுங்குமுறை
இணையத்தின் சிறப்புக்கூறு என்னவெனில், அதற்கு உரிமையாளர் என்று யாரும் கிடையாது. வைய விரிவு வலையில் எதைச் சேர்ப்பது, தவிர்ப்பது என்ற கட்டுப்பாடும் இல்லை. தற்போதைய சட்டங்கள் மூலம் வலை சார்ந்த ஒலிபரப்புகளைக் கட்டுப்படுத்தவோ, சட்டத்தை மீறுவோர்க்கு தண்டனை வழங்கவோ இயலாது. தொழில்நுட்ப வளர்ச்சியும், அதன் விளைவாகப் பல்வேறு தொலைத்தொடர்பு முன்னேற்றங்களும் ஏற்படும்போதெல்லாம் ஒலிபரப்பு, தொலைத்தொடர்புச் சட்டங்களிலும் மாற்றங்களைப் புகுத்தவேண்டிய கட்டாயம் உண்டாகிறது. இந்நிலையை எதிர்கொள்ளும்பொருட்டு அரசு ஏற்கனவே தொலைத் தொடர்புச் சட்டம் 2000 (Communication Convergence Act 2000) என்ற சட்ட முன்வரைவை வெளியிட்டுள்ளது. குழப்ப நிலையை நீக்கிச் சில கட்டுப்பாடுகளை இத்துறையில் அறிமுகப்படுத்துவதே இதன் முக்கியமான குறிக்கோள். இச்சட்டவரைவின்படி தொலைத் தொடர்பு ஆணையம் (Communications Commission) ஒன்றை அமைத்து, அதன் கட்டுப்பாட்டிற்குள் தொலைத் தொடர்பு, ஒலிபரப்பு, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளைக் கொண்டுவர வேண்டும். தேவையான உரிமங்களை வழங்குதல், தகுந்த சட்டங்களை இயற்றி நடைமுறைப் படுத்தல், அலைவு எண் கட்டுப்பாடு, தரக் கட்டுப்பாடு, வரிவிதிப்பு போன்றவற்றில் மேற்கூறிய ஆணையம் முழு உரிமை பெற்றிருக்கும். தேசப் பாதுகாப்பு, நாட்டின் பண்பாடு ஆகியவற்றிற்கு ஊறு நேராமல் பார்த்துக் கொள்வதும் இந்த ஆணையத்தின் பொறுப்பே
இச்சட்டத்தின் இறுதி வடிவம் எவ்வாறிருக்கும், பயன் எந்த வகையில் அமையும் என்பதற்கெல்லாம் காலம்தான் பதில் கூறவேண்டும். குவியம் நடைமுறைக்கு வரும்போது, தற்போதுள்ள வலையமைப்புகள் மூலம் குரல் பரிமாற்றம், தரவுப் பரிமாற்றம் ஆகிய இரண்டையும் நடைமுறைப்படுத்த முடியும் என்பதால், பொதுத்துறை நிறுவனங்களுக்குசெலவு பெருமளவு குறையும் என்பது மட்டும் உறுதி. பொதுமக்களைப் பொறுத்தவரை, குவியம் பல நன்மைகளை அவர்களுக்கு வழங்க இருக்கிறது. விரைவான இணையச் சேவை, குறைந்த கட்டணத்தில் தொலைத் தொடர்பு வசதி, கல்வி, வாணிகம், பொழுதுபோக்கு ஆகியவற்றிற்கு ஏராளமான ஒலி/ஒளி பரப்புச் சேவைகள் போன்றவை மக்களுக்கு கிடைக்க இருக்கும் பயன்களுள் சில.
***
டாக்டர் இரா விஜயராகவன்
பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி
மொழிக் கல்வித் துறை (தமிழ்)
வட்டாரக் கல்வியியல் நிறுவனம்
மைசூர் 570023
Dr R Vijayaraghavan
BTech MIE MA MEd PhD
Dept. of Language Education (Tamil)
Regional Institute of Education
Mysore 570023