தொடர்ந்து ஒலிக்கும் குரல் – (வெங்கட் சாமிநாதனின் உரையாடல்கள் )

This entry is part [part not set] of 41 in the series 20050415_Issue

பாவண்ணன்


இத்தொகுப்பில் எட்டு உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் ஆறு உரையாடல்கள் வெ.சா. மற்றவர்களுடன் நிகழ்த்தியவை. இரண்டு உரையாடல்கள் வெ.சா.வுடன் மற்றவர்கள் நிகழ்த்தியவை. பரதநாட்டியம், தெருக்கூத்து, இலக்கியம், திரைப்படம் என வெவ்வேறு தளங்களையொட்டி இந்த உரையாடல்கள் அமைந்துள்ளன. இலக்கியமாக இருந்தாலும் ெருக்கூத்தாக இருந்தாலும் ஓவியமாக இருந்தாலும் எதையும் தனித்துறையாகப் பார்க்காமல் ஒட்டுமொத்தக் கலாச்சாரத்தின் பகுதியாக பார்ப்பதையே தன் பார்வையாக வெ.சா. கொண்டிருப்பதை கடந்த பல ஆண்டுகளாக எழுதப்பட்டுவரும் அவருடைய கட்டுரைகள்மூலம் அறிந்துகொள்ள முடியும். இந்த உரையாடல்களும் அந்தப் பார்வைக்கு வலிமை சேர்ப்பதாகவே உள்ளன.

தெருக்கூத்தையொட்டி கண்ணப்பத் தம்பிரானோடும் சுப்பரமணியத் தம்பிரானோடும் வெ.சா. நிகழ்த்திய உரையாடல்கள் ஒரு சிறுகதை அல்லது நாவலின் பகுதியொன்றில் இடம்பெறக்கூடிய உரையாடல்களுக்குச் சமமாக அமைந்துள்ளன. கூத்தில் கலந்துள்ள செவ்வியல் அம்சங்களைப் புரிந்துகொள்ள உரையாடலில் இடம்பெறும் சில கேள்விகளும் பதில்களும் துணைபுரிகின்றன. தொடக்கத்தில் பரதநாட்டியத்தில் இருந்த தெருக்கூத்துப் பாணியைப்பற்றிய குறிப்பு இடம்பெறுகிறது. இடையில் தெருக்கூத்தில் பயிற்சி பெற்ற ராமசாமி கிரேக்க மொழிபெயர்ப்பு நாடகத்தில் வெளிப்படுத்திய திறமையில் கூத்தின் பாணி இடம்பெற்றிருப்பதைப்பற்றிய குறிப்பும் இடம்பெறுகிறது. இந்தப் பரிமாற்றங்கள், ஏற்றுக்கொள்ளல்கள் கலாச்சாரத்தின் எல்லாத் தளங்களிலும் தன்னை வளப்படுத்திக்கொள்ளும் வகையில் நிகழ்ந்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று தோன்றுகிறது. பாரதக்கதையின் கருவொன்றிலிருந்து தற்காலக் கருத்தியலான சுற்றுச்சூழலின் அம்சத்தை மையப்படுத்தும் கதையை வளர்த்தெடுத்த விதத்தைப்பற்றியும் எந்த உரையாடலின் இடையிலும் அந்தந்த காலம்சார்ந்தும் நெருக்கடிகளைச் சார்ந்தும் பொருத்தமான முறையில் கற்பனைக்குத் தகுந்தபடி சில உரையாடல்களை இணைத்துக்கொள்ளும் சுதந்தரம் உள்ள ஒன்றாக தெருக்கூத்தின் வடிவம் நெகிழ்ச்சியோடு இருப்பதைப்பற்றியும் மிகச்சிறப்பாகவே விவாதிக்கப்படுகின்றன.

திரைப்படங்களைப்பற்றி ரவீந்திரனோடு நிகழ்த்திய உரையாடலும் நல்ல அனுபவத்தைக் கொடுக்கக்கூடியவை. இருவரும் சமஅளவில் இந்த உரையாடலில் பேசுகிறார்கள். காலிக் ஸித்திக் என்னும் அரபு நாட்டின் திரைஇயக்குநர் ஒருவரைப்பற்றிய குறிப்பொன்று இந்த உரையாடலில் இடம்பெறுகிறது. இவர் இந்தியாவில் பூனா இன்ஸ்டிட்யூட்டில் படித்தவர். பட்டம் பெற்றபிறகு தன் நாட்டுக்குத் திரும்பி அவர் எடுத்த படங்கள் சர்வதேசத் திரைப்படவிழாவில் கலந்துகொள்ளும் தகுதியுடன் வெளிவந்திருப்பதையும் அவருடன் பயின்றவர்கள் நம் நாட்டில் வியாபாரத் திரைப்படங்கள் எடுத்துக்கொண்டிருப்பதையும் அறிந்துகொள்ளும்போது இருவருக்கும் உருவாகும் ஆற்றாமையை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அவர் தரத்துக்கு இணையாகச் சொல்ல சத்யஜித் ரேவைத் தவிர யாரும் இல்லை என்ற குறிப்பையும் இணைத்துப் படிக்கும்போது ஸித்திக்கின் படத்தைத் தேடிப் பார்க்கும் ஆவல் தானாகவே எழுகிறது. அந்த ஆவலைத் துாண்டும் விதத்தில் ஸித்திக்கின் படமொன்றின் கதைக்குறிப்பு காணப்படுகிறது. அந்தப் படத்தின் பெயர் ‘ த வெட்டிங் ஆப் ஜீன் ‘ (The wedding of zein). ஜீன் ஓர் அப்பாவி இளைஞன். கிராமத்தில் எல்லாருடைய கேலிக்கும் கிண்டலுக்கும் இரையாகுபவன். அந்த ஊருக்க வருகிற ஒரு சூஃபி அவன்மீது மிகவும் பிரியமாக இருக்கிறார். மதத்தைத் தன் சுயநலத்துக்காக தவறான விதங்களில் பயன்படுத்திக்கொள்பவனாக இருக்கிறான் கிராமத்து முல்லா. கடவுளின் அன்புக்குரியவர்களாக அந்த அப்பாவி இளைஞனும் சூஃபியும் மட்டுமே இருப்பதாக உணரும்படி காட்சிகள் முன்வைக்கப்பட்டுள்ளன. விவரிக்கப்படும்போதே இக்காட் சியின் நுட்பத்தையும் சிக்கலையும் நம்மால் உள்வாங்கிக்கொள்ளமுடிகிறது. காலமெல்லாம் வழிபட்டபடியிருக்கும் பாதிரியாருக்கும் தேவாலயத்தைச் சேர்ந்த பெருங்குடிமக்களுக்கும் கிட்டாத ஒரு தரிசனம் காட்டில் மறைந்து வாழும் கள்வனொருவனுக்கும் அவன் குடும்பத்தினருக்கும் மிக இயல்பாகக் கிடைப்பதைச் சித்தரிக்கும் ஸெல்மா லாகர்லாவின் ‘தேவமலர் ‘ சிறுகதையின் காட்சியொன்று நம் மனத்தில் ஒரே ஒரு கணம் வந்துபோகிறது. யுத்தப்பின்னணியில் எடுக்கப்பட்ட ஜோல்டன் ஃபாப்ரியுடைய ‘ஹங்கேரியன்ஸ் ‘ (Hungarians) திரைப்படமும் ருமேனியாவில் எடுக்கப்பட்ட ‘ரேஜ் ‘ (Rage) திரைப்படமும் உரையாடலில் நினைவுபடுத்திக்கொள்ளப்படுகின்றன. ரேஜ் ஒரு கிழ விவசாயியின் கதையைச் சொல்லும் படம். அவன் தன் பிள்ளைகள் ஒவ்வொருவரையும் அடுத்தடுத்து யுத்தத்துக்கு அனுப்பி வைக்கிறான். கிராமத்தில் பெண்களைத் தவிர, வயோதிகர்களைத் தவிர வேறு யாரும் இல்லை. எல்லாமே அழிந்துபோகிறது. தனக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்று கிழவன் நினைக்கிறான். இந்த அவலம் ஏன் ஏற்பட்டது ? நான் என்ன செய்வேன் ? எதற்காக இந்த ய,த்தம் ? யாருக்காக இந்த யுத்தம் ? இக்கேள்விகளுடன் மனப்பிறழ்வுக்கு ஆளாகும் கிழவன் யுத்தம் முடிந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட வீட்டுக் கொல்லைப்புறத்தில் வைக்கோல் பரணில் தன் பிள்ளைகள் வரக்கூடும் என்று காத்திருக்கிறான். உரையாடல் முழுக்க ரவீந்திரனும் வெ.சா.வும் மாற்றிமாற்றி தாம் பார்த்த நல்ல படங்கள் கொடுத்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். கதையம்சம், நடிப்பு, இசை, படங்களைப் பார்த்தபிறகும் மனத்தில் தங்கியிருக்கும் கேள்விகள் என விரிவாகவே பேசிக்கொள்கிறார்கள். இந்தியப் படங்கள் சார்ந்து அவர்கள் வெளிப்படுத்தும் சோர்வு வருத்தமளிப்பதாக இருந்தாலும் துருக்கி தேசத்து ‘மத்தான் ‘ (Maddan) திரைப்படத்தையும் மிருணாள்சென்னின் பரசுராம் படத்தையும் ஒப்பிட்டு இந்தச் சோர்வைப் பகிர்ந்துகொள்கிறார்கள். அதுவே உண்மையாக இருப்பதால் நம்மால் வேறொன்றும் செய்ய இயல்வதில்லை.

தி.ஜானகிராமனுடன் நிகழ்த்தப்பட்ட உரையாடலில் சங்கீதம் சார்ந்த அவரது ஈடுபாடுகளைப்பற்றிய பகுதி படிக்கச் சுவையாக உள்ளது. தன் தந்தையார்பற்றியும் தனக்கு இசையைக் கற்பித்த உமையாள்புரம் சுவாமிநாத ஐயர்பற்றியும் பத்தமடை சுந்தரமய்யர் பற்றியும் தி.ஜா. நினைவுகூர்ந்து பகிர்ந்துகொள்ளும் பகுதிகள் நெகிழ்ச்சி தருவதாக உள்ளன. ஒலிகள் அனைத்தையும் சங்கீதத்தின் பகுதியாகப் பார்க்கும் தி.ஜா.வின் மனவளத்தின் பின்னணியை இப்பகுதிகள் புரியவைக்கின்றன.

நுாலின் இறுதியில் இடம்பெற்றிருக்கும் இரண்டு உரையாடல்கள் வெ.சா.வின் நேர்காணல்கள். சுபமங்களாவில் ஜெயமோகனும் சுந்தரசுகன் இதழில் அவ்விதழ்க்குழுவினரும் பதிவு செய்து வெளியிட்டவை. ஆரோக்கியமான கலைச்சூழலோ, இலக்கியச் சூழலோ கருத்துச் சூழலோ என்பது வெ.சா.வின் உள்ளக்கிடக்கையாக வெளிப்படுகிறது. மிகந்த ஆதங்கத்தோடும் ஆற்றாமையோடும் சொல்லப்படுகிற சொற்களாகவே இவை வெளிப்படுகின்றன. வங்க மொழியிலும் இந்தி மொழியிலும் கன்னட மொழியிலும் நிகழ்ந்துவரும் முன்னேற்றங்களையும் சாதனைகளையும் தொடர்ந்து கவனித்துவரும் ஒரு மனம், அச்சாதனைகளைப்பற்றிய தெளிவின் வெளிச்சத்தில் தன் சூழலில் தன்னைத்தானே மெச்சிக்கொண்டு நெஞ்சை நிமிர்த்திக்கொள்கிற சொத்தையான ஆக்கங்களையொட்டி கடுமையான கசப்புகளில் அமிழ்வது தவிர்க்க முடியாதது. ஒரு உயர்வுகளையும் மறுபுறம் தேக்கங்களையும் தேக்கத்துக்கான காரணங்களைக்கூட தெரிந்துகொள்ள விரும்பாத சோம்பலையும் அடுத்தடுத்து கவனிக்கநேரும் தருணங்களில் இக்கசப்புகள் பலமடங்காகப் பெருகிவிடவே வாய்ப்புகள் உண்டு. நம்மிடம் இருக்கும் அம்சங்களைத் தொடர்ந்து பரிசீலனைசெய்தபடி இருப்பது, புதிய விஷயங்களை வரவேற்று விவாதிப்பது, கோபதாபமின்றி ஆரோக்கியமான கருத்துப் பரமாற்றங்களை நிகழ்த்துவது ஆகிய செயல்கள்மூலமாகவே புதிய படைப்பாக்கங்கள் சாத்தியப்படும். பரிசீலனைகளுக்கும் விவாதங்களுக்கும் தொடர்ந்து அக்கறையுடன் துாண்டிக்கொண்டே இருக்கும் ஒரு குரலாக வெ.சா.வை மதிப்பிடலாம் என்று தோன்றுகிறது. ‘அனுபவம்தான் பெரிது. அந்த அனுபவத்தைத் தேடிப் பெறுவதுதான் தன் முயற்சி ‘ என்று ஒரு பதிலில் பகிர்ந்துகொள்கிறார் வெ.சா. அவர் பார்வைக்கு அடித்தளமாக உள்ளன இந்த வார்த்தைகள். ஒருவகையில் அவருடைய விமர்சனங்களுக்கான அடிப்படையும் ஊற்றுக்கண்ணும் இதுவே என்பதை உணரலாம். இதுவே இவருடைய வலிமை.

(உரையாடல்கள்-வெங்கட் சாமிநாதன். வெளியீடு: விருட்சம், 7, ராகவன் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை-33. விலை. ரூ 50)

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்