சேவியர்
அரசியல்க் கொப்பறைகளில் இப்போதெல்லாம்
பழி வாங்கும் படலம்.
எந்தப் படலத்தின் கடைசியிலும்
பலி வாங்கப்படுவதென்னவோ பாமரப் பட்டாளம் தான்.
மன விலங்குகள் கைவிலங்கு அனுப்பி
மனிதாபிமானத்தை
படுக்கைஅறைக்குள்ளேயே படுகொலை செய்கின்றன.
நீதி மன்றத்தில் குற்றவாளிக்கூண்டில்
நீதிபதிகள்.
கண்களைக் கட்ட கரன்சிக்கட்டுகள்,
படலம் படலமாய், பாளம் பாளமாய் பகைப் படுகைகள்
கொடுங்கோல்க் குடைகீழ்
நீதிக்கு நிதமும் கடுங்காவல்த் தண்டனை.
இந்தியாவின் முதல் முகம் வறுமை
இரண்டாம் முகம் இயலாமை
இன்னொரு முகமோ அறியாமை…
மூர்க்கத்தனத்தின் முழங்கை மோதி மோதி
எல்லா முகத்திலும் விழுப்புண்கள்.
குற்றங்கள் விற்பனை செய்து செய்தே
கொற்றவனனின் ஆட்சி.
வியாபாரத் தரகர்களுக்குள் எல்லை பிாிப்பதில் போட்டி.
இன்னும் ஏழை தெருக்களின் ஓரங்கள்
நிர்வாணத்தை விட்டு நகரவேயில்லை.
கொஞ்சமேனும் சிந்தியுங்கள்.
வாக்குப்பெட்டிக்குள் இறைக்கப்பட்டவை எல்லாம்
எங்கள் இறவாத நம்பிக்கைகள்.
உங்களுக்கு குளிர்காய்வதற்காய் இன்னும் எங்கள்
விலா எலும்புகளை உருவாதீர்கள்.
தேர்தல் காலங்களிலெல்லாம் எங்கள் பாதங்களுக்கு
பட்டுக் கம்பளம் அளித்துவிட்டு
காட்சி முடிந்ததும் கால்களை வெட்டி விட்டுக்
கடந்து போகாதீர்கள்.
எங்கள் மூச்சுக்காற்றின் மூன்று பக்கமும்
வேதனையின் வாசம்.
எங்கள் பிரதிநிதி நீங்கள்
ஏன் எப்போதும் ஏழைகளின் எதிர்கட்சி ஆகிறீர்கள் ?
கரங்களுக்குப் புத்தகம்,
சிரங்களுக்கு நிழல் அறை,
பசிக்கும் போது போஜனம்
எத்தனை முறைதான் எங்கள் நம்பிக்கைகளுக்கு
சலிக்காமல் சவப்பெட்டி அனுப்புவீர்கள் ?
தேவதை ஒன்று அழகாய் தரையிறங்கி
அமுதசுரபி அளிக்கும் எனும் கனவில்தால்,
இன்னும் எங்கள்
பருக்கைத் தேடல்கள் தொடர்கின்றன.
என்முன்னால்,
ஆகாசத்திலிருந்து ஓர் வரம் விழுந்தால்
அரசியல் இல்லாத ஓர் அரசாங்கம் கேட்பேன்.
பூமியிலிருந்து ஒரு வரம் எழுந்தால்
வறுமை இல்லாத ஓர் வரலாறு கேட்பேன்.
- செக்குமாடு (குறுநாவல் கடைசிப்பகுதி)
- அஹிம்சையில் எதிர்ப்பு -1
- இந்த வாரம் இப்படி – சூலை 7, 2001
- நான் திரும்பி வரமாட்டேன்
- தொடர்ச்சியாய் சில தவறுகள்.
- நாட்டு நடப்பு
- நகரத்து மனிதாின் புலம்பல்
- எதிர்நிலைகள்
- எதிர் வினைகள்
- க்ரெக் மக்கா (McCaw) செய்த செல்லுலார் தொலைபேசி புரட்சி
- செவ்வாய்: ஒரு விண்வெளி ஆராய்ச்சியாளரின் கதை
- நம் எதிர்காலத்தை புரட்சிகரமாக மாற்றும் ஒரு புதிய சில்லு(chip)
- காய்கறி சூப்
- எலும்பு சூப்
- ஜெயமோகனின் ‘கன்னியாகுமாி ‘