(1)
தொடரும் பயணம்
எழுதத் தொடங்கி 50 வருடங்களாகி விட்டன. இப்படி ஏதும் அவதார லட்சியங்களோடு எழுதத் தொடங்கவில்லை தான். எத்தனையோ விஷயங்கள் பற்றி பொதுவில் வைக்கப்பட்ட ஒப்புக்கொள்ளப் பட்டவற்றுக்கு மாறாக, அவ்வப்போது மனதில் தோன்றுவதைப் சொல்லத் தோன்றும். கேட்பதற்கு பள்ளி நாட்களில் ஒர் நண்பன் கிடைத்தான். ஒரே ஒருவன். அவன் ஒரு கவிஞன். தமிழ்ப் பாடப் புத்தகத்தில் தமிழ் அறிஞர்கள் என்ற அறிமுகத்துடன் வந்த பாடங்களில் சில அப்படி இருந்தன. “சண்முகம். இந்த ஆள் எப்படிய்யா அறிஞர் ஆனான்?” என்று கேட்பேன். அவன் சிரித்துக் கொள்வான். பின்னாட்களில் ஹிராகுட்டில் நண்பர்களிடையே சர்ச்சை. பிரபலமான பெரும்புள்ளிகளை பெரும்புள்ளிகளாக ஒத்துக்கொள்ள முடியாத்தற்கான வாதப் பிரதி வாதங்கள். சாந்தி என்று ஒரு பத்திரிகை. அதில் சிதம்பர ரகுநாதன் கல்கியை மிக கடுமையாக விமர்சித்திருப்பார். அதைப் படித்ததும், இப்படிப் பட்ட சிந்தனைகளில் நான் ஒன்றும் தனியன் இல்லை. என்னைப் போல் சிந்திக்கிறவர்களும் இருக்கிறார்கள். அதை, அறை நண்பர்களிடையே சண்டை போட்டுக்கொள்வதற்கு மட்டுமல்லாமல் அச்சிலும் சொல்லலாம் என்ற தைரியம் வந்தது. அதே ரகுநாதன் பின்னாட்களில், வெகு சீக்கிரம், தனக்கென சிந்திப்பவரில்லை, கட்சி சொல்வதை ஒலிபரப்பும் கருவிதான் என்று அவர் கதைகள், கட்டுரைகளில் தெரிந்ததும் அவரை உதறி விடுவதற்கு தைரியம் என ஒன்று எனக்குள் சொல்லிக்கொண்டு பெறவேண்டியதாக இருக்கவில்லை. என்னுள்ளிருந்து எழும் இயல்பே போதுமானதாக இருந்தது. இதெல்லாம் 1959 வரை நண்பர்களிடையேயும் மனதுக்குள்ளும் நடந்தவை தான்.
1959-ல் தில்லி கரோல் பாகில் ஒரு வீட்டின் கார் ஷெட்டில் தொடங்கப் பட்டிருந்த ரீடிங் ரூமில் எழுத்து பத்திரிகை கிடந்தது. அந்த வீட்டுச் சொந்தக்காரர் இலக்கியரசிகர் அல்லர். செல்லப்பாவுக்குத் தெரிந்தவர். அவ்வளவே. அப்படி அங்கு வந்து சேர்ந்த அந்த எழுத்து பத்திரிகை என்னைக் கவர்ந்தது. அப்போது நான் தில்லியிலிருந்து ஜம்முவுக்கு மாற்றலாகி பயணத்துக்குத் தயாராகிக்கொண்டிருந்த நேரம். ஜம்முவுக்கு எழுத்து என்னைத் தொடர்ந்தது. அதில் எனக்கு ஒரு விஷயத்தில் கருத்து மாறுபாடு இருந்த போது, அப்போது அதைப்பற்றிப் பேச ஜம்முவில் எனக்கு இன்னொரு தமிழன் கிடைக்கவில்லை. ஜம்முவில் ஒரே தமிழன் நான். செல்லப்பாவுக்கு எழுதினேன். அவர் அதை அச்சில் போட்டு விட்டார். பின் என்னைத் தொடர்ந்து எழுதச் சொல்லிக் கடிதமும் எழுதினார். நானும் என் மனதில் தோன்றியதை எல்லாம் எழுதி வந்தேன்.. அது எழுத்து பத்திரிகையுடன் தொடர்பு கொண்டிருந்த சிலருக்கு பிடித்தும் போயிற்று. சிலரைக் கடுப்பேற்றவும் செய்தது. அக்கடுப்பு எனக்கு சுவாரஸ்யமாகவும் இருந்தது.
இப்படித்தான் என் எழுத்துலக, கருத்துலக அவதாரம் நிகழ்ந்தது. ஐம்பது வருடங்களுக்கு முன். திட்டமிட்ட செயல்பாடு எதுவும் என்றும் இருந்ததில்லை. எல்லாம் தற்செயல் விளைவுகள். ஒவ்வொரு கட்ட நகர்வும் எதிர்பாராத தற்செயல் திருப்பங்களால் விளைந்தது தான். நான் திட்டமிடுபவனில்லை. திட்டமிட்டு செயல்படுவது என்னால் இயலாது. அவ்வப்போதைய சில சின்னச் சின்ன திட்டமிட்ட செயல்கள் கூட நடந்ததில்லை. எழுத்துலகில் நுழைந்தது மாத்திரமல்ல. என் எழுத்தும் எந்த வகைப்பட்டதும் அல்ல. அது என் இயல்பில் தானே வந்தது. என் அனுபவங்களும் ரசனையும் எந்த வகைப்பட்டதும் அல்ல். எல்லாம் ஆன ஒரு கலவை. அந்தக் கலவை ஒரு முகமான, ஒன்றேயான, அந்த ஒன்றின் பல ரூப வெளிப்பாடுகளால் ஆன கலவை. அந்த கலவையும், ஒரு முகப்படுதலும் ஏதும் தேடிச் சென்றதல்ல. என் போக்கிலான, திட்டமிடாத, எதையும் தேடிச்செல்லாது, என் பயணத்தில் எதிர்ப்பட்ட பல் வகை அனுபவங்களாலும் ரசனையாலும் என்னில் தாமே உருவான ஒரு கலவையும் ஒருமுகப்பட்ட வெளிப்பாடுமாகும். ஒரு பாதையில் செல்லும்போது எதிர்ப்படும் பல கிளைப்பாதைகளும் எதிர்ப்படுகின்றன. இவையும் தாமாக, தற்செயலாக நிகழ்வதே.
இதன் காரணமாகவே பார்வை, அனுபவ, கருத்து வேறுபாடுகள் தோன்றுகின்றன. அத்தொடக்க காலத்தில், இலக்கிய பூர்வமாக எனக்கு மிக அருகில் இருந்தவர்கள் க.நா.சுப்ரமண்யமும், செல்லப்பாவும் தான். இருவரும் தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய திருப்பத்தை, இல்லை பெரும் மாற்றத்தைக் கொணர்ந்தவர்கள். இந்த இருவரும் சேர்ந்து அமைத்த பாதையில் தான் நான் என் பயணத்தைத் தொடர்ந்திருக்கிறேன். இந்த இருவரிடமும் நான் கொண்ட கருத்தொற்றுமையும் நிறைய. கருத்து வேறு பாடுகளும் நிறைய. அவற்றை நான் அவர்களுடன் எப்போதும் சர்ச்சித்தே வந்திருக்கிறேன். க.நா.சு. “ஊம். அப்படியும் சொல்லலாம்..” என்று சொல்லி நகர்ந்து விடுவார். ஓர் அளவுக்கு மேல் அதிகம் விவாதிக்க மாட்டார். ஆனால், செல்லப்பாவுடனான சர்ச்சைகள், நாங்கள் இருவரும் ஏதோ ஜன்ம பகைமையில் சண்டை போடுகிறோமோ, வெட்டு குத்து என்று முடியுமோ என்ற ரகத்தில் இருக்கும். ஆனால், இருவரும் என்னிடம் ஒரு போதும் பகைமை கொண்டதில்லை. மறுநாளும் அவர்களிடம் நான் விவாதத்தைத் தொடங்கலாம்.
ஆனால் இத்தகைய விவாத சுதந்திரமும், உறவுப் பிணைப்பும் வேறு எங்கும் எனக்கு கிடைத்ததில்லை. அவர்கள் இருவரின் மறைவுடனேயே அவையும் மறைந்துவிட்டன. இப்போது என் சினேகங்கள், நான் யாரைப் புகழ்கிறேனோ அவர்களுடன் தான் நிலைத்திருக்கின்றன பெரும்பாலும். ஏதும் மாறான ஒரு அபிப்ராயத்தை தொடர்ந்த சினேகத்தினிடையில் சொல்லிவிட்டால், அத்துடன் அந்த சினேகம் முறிவடைகிறது. பகைமை தொடங்குகிறது. நேற்று வரை உயர்வாக மதிக்கப்பட்ட சாமிநாதன், இன்று “நீ அயோக்கியன்” என்று வசை பாடப்படுவது நிகழ்ந்து விடுகிறது.
இப்போதெல்லாம் கருத்து பரிமாறல் என்ற பண்பாடே மறைந்து வருகிறது. தன்னைப் பாதிக்காத வரையில் ஒருவரது கருத்து என்னவாக இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. ஐம்பது வருடங்களுக்கு முன் இருந்த சூழலில் “என்னை இத்தனை லட்சம் பேர் வாசிக்கிறார்கள். ஆகையால் இவர்களது கண்டனங்கள் எனக்கு ஒரு பொருட்டல்ல” என்ற சொல்லி கண்டனத்தை உதறித் தள்ளியிருக்கிறார்கள். இதிலும் இலக்கிய ரீதியான மோதல் இல்லை என்றாலும், பகைமைக்கு, சமூக விரோதங்களுக்கு இட்டுச் செல்லவில்லை. இன்று போல், அன்று சமூக உறவுகளில் விஷ விதைகள் விதைக்கப் படவில்லை. இருவரும் அவரவர் உலகில் வாழ முடிந்திருக்கிறது. இந்த 50 வருட கால நீட்சியில், எவ்வளவோ கருத்துக்களும் அனுபவங்களும் இலக்கிய, கலை வெளிகளில் வைக்கப் பட்டுள்ளன. ஆனால் கருத்துப் பரிமாற்றங்கள், நிகழவில்லை. முன் வைக்கப்படும் கருத்துக்களும் அனுபவங்களும், சாதி, கட்சி, குழு போன்ற காரணிகளால் நிராகரிக்கப்படுகின்றன, அலட்சியப்படுத்தப் படுகின்றன. வெளிவைக்கப்பட்டவை இல்லாதது போல் பாவனை மேற்கொள்ளப்படுகிறது.
ஒரு பெரும் பண்பாட்டு வீழ்ச்சி நம் கண்முன்னே தொடர்ந்து வருகிறது. அது உணரப்படவில்லை. அதுவே கலை என்று கொண்டாடப்படுகிறது. கட்சிக்காக, பணத்துக்காக, பிராபல்யத்துக்காக, அதிகார வட்டத்தின் கருணை மிக்க பார்வைக்காக, வாழ்வதும் எழுதுவதும், கௌரவம் பெற்றுள்ளது. ஒரு காலத்தில் இருட்டில் திருட்டுத்தனமாகப் பார்க்கப்பட்ட ரிகார்ட் டான்ஸ் இன்று டிவியில் சினிமாவில், கலைவிழாக்களில் கூட்டம் கூட்டமாகப் பார்க்க்ப்படுவது போல. மதிப்புகள் மாறிவிட்டன. சரிந்து விட்டன.
பின் எதற்காக எழுத வேண்டும்? என்று கேட்கலாம். என் வெளிப்பாடுகள் எவரையு,ம் எதையும் திருத்தும் நோக்கத்தோடு தொடங்கவுமில்லை. தொடரவும் இல்லை. எனக்குத் தோன்றியவற்றை நான் சொல்கிறேன்,. எழுதுகிறேன். அதனிலேயே அது நிறைவு பெறுகிறது. அதற்கு மேல் அதன் விளைவுகள் என்ன என்பது என் திட்டத்தில் என்ன, நினைப்பிலேயே இல்லை. அன்றும் நான் எதிர்பாராத இடங்களிலிருந்து ஒரு சிலர் என் எழுத்துக்களை ஆர்வத்துடன், சம்மதத்துடன் கவனித்தார்கள். இன்றும் நான் எதிர்பாராத, கேட்டிராத இடங்களிலிருந்து கூட என் எழுத்துக்களை ஆர்வத்துடன், சம்மதத்துடன் தொடர்பவர்கள் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. எனக்குத் தெரியாது இருப்பவர்களும் இருக்கக்கூடும்.
அதனால் என்ன? தொடர்ந்து என்னால் பேசமுடிகிறது. எழுத முடிகிறது. அது போதும். கீதாசார்யனே சொல்லியிருக்கிறான் என்பதால் அல்ல. பகவத் கீதை ஸ்லோகம் ஒன்று சொல்கிறது என்பதற்காக ஒருவர் அப்படி வாழ முனைய முடியாது. என் இயல்பில் நான் வாழ்கிறேன். அதன் விளைவுகள் என் வசம் இல்லை.
பயணம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
_____________________________________________________________________________
‘தொடரும் பயணம் – இலக்கிய வெளியில்’ – முதல் தொகுதி, திரிசக்தி பதிப்பகம், சாஸ்திரி நகர், அடையார், சென்னை – 20 விலை ரூ. 80
(2)
மீண்டும் சில வார்த்தைகள்
பயணம் தொடர்கிறது. இதில் இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முன் எழுதியவையும் இப்போது சமீபத்தில் எழுதியவையும் உள்ளன. இடைப்பட்டனவும் இருக்கின்றன. எல்லாம் நான் தான். எல்லாம் எழுதப்பட்ட பொருளின் எழுதப்பட்ட காலத்தின் சூழலையும் எழுதப்பட்டவர் சந்திக்க நேர்ந்த சூழலையும் என் சூழலையும் சொல்வன. எதுவும் காற்றுப்புகாத சூன்யத்தில் இருப்பதல்ல. இதைச் சொல்லவேண்டிய, நிர்ப்பந்தமும், இது ஏதோ புதிய செய்தி போலவும் அது சர்ச்சிக்கப்பட வேண்டிய பொருள் போலவும் இருப்பதும் இன்றைய சூழலின் குணத்தைச் சொல்லும். எழுதச் சொல்லிக் கேட்டவர் என்னை மதிப்பவர். ஆனால் எழுதிய பிறகு அதை ஏற்க அவருக்கு தயக்கங்கள் இருந்தன. இப்போதும் அவர் என்னை மதிப்பவர் தான். என் மதிப்பில் அவரும் தாழ்ந்துவிடவில்லை. இப்படி பல அனுபவங்கள் எனக்கு. எழுதப்பட்டது பற்றிய கருத்து வேற்றுமைகள் ஏது தடையாக இருக்கவில்லை, ஆனாலும் அதை வெளியிடுவதில் தயக்கம் காட்டிய இன்னொருவரின் தயக்கங்கள் எனக்குப் புரிந்தது. இவரும் என்னை மிகவும் மதிப்பவர். எங்கள் நட்பில் ஏதும் பிளவு இல்லை. எங்கள் கருத்துக்களுக்கு எதிரான சக்திகள் சூழலில் இருப்பது இருவருக்கும் தெரிந்தது.
‘உங்கள் கருத்துக்களோடு எனக்கு உடன் பாடு இல்லை. இருப்பினும் உங்கள் கருத்துக்களைச் சொல்லும் சுதந்திரத்திற்காக நான் போராடுவேன் என்று ஒரு சிந்தனையாளர் இன்னொரு சிந்தனையாளருக்குச் சொன்ன நாகரீகமும் பண்பாடும் பெற்ற சூழலும் தேசமும் வேறு. இந்த மகத்தான சுதந்திர வாக்கியத்தைச் சொல்வதில் ஒரு வீர உணர்வு உண்டு. அந்த வீர உணர்வைச் சொல்லி மகிழும் மனிதர்கள் இங்கு உண்டு. ஆனால் அதை நேரில் சந்திக்கும் போது அதைக் கடுமையாகத் தாக்கும் குணத்தை அதைச் சொல்லி மகிழும் மனிதர்களிடம் இருப்பதைத் தான் தமிழ்ச் சூழலில் காண்கிறோம். கோஷமிடுவதற்கே உரிய வாக்கியம் இது, நடைமுறைக்கு அல்ல என்பது கோஷங்களையே வாழ்க்கையாக மாற்றியுள்ளவர்கள் தம்மை முன்னோடிச் சிந்தனையாளர்களாக பாவித்துக்கொள்வதும் இச்சூழலில் தான்.
தனிமனிதனாக நாம் ஒவ்வொருவரும் வாழ, சிந்திக்க, மனதில் பட்டதைச் சொல்ல அதைக் கேட்க சமூகம் வரவேற்கத் தயாராக இருக்கும் ஒரு மரபை, நாகரீகத்தை நாம் என்று வளர்க்கப் போகிறோமோ தெரியவில்லை.
எந்த ஒரு மரபும், நாகரீகமும், பண்பும் முதலில் ஒரு தனிமனிதனின் தனித்த சிந்தனையாகத் தான் பிறப்பெடுக்கிறது. அதன் நீண்ட கால வாழ்வில், பரவலில், கருத்து பரிமாற்றத்தில் தான் அது ஒரு சமூகப் பண்பாடாகவும், சிந்தனை மரபாகவும், வாழ்க்கைப் பார்வையாகவும் வளர்கிறது.
உரத்துக் கேட்கும் கோஷங்களே மொழியும் சிந்தனையும் என்று நம்பப்பட்டு வாழ்க்கையுமாகி விட்டால், .. ஆகி விட்டால் என்ன, ஆகி விட்டது. கோஷங்கள் கோஷங்களாக நின்று விடுகின்றன. அவை பொருளற்ற சாவிகளாகி விடுகின்றன.
இந்தக் கவலைகள் இங்கு தரப்பட்டுள்ள ஒவ்வொரு பக்கத்திலும் பரவியுள்ளதை உணரலாம். எனக்கு மகிழ்ச்சி தந்த கணங்களும் விஷயங்களும் உண்டு வேதனையே யாகிவிட்டவையும் உண்டு.
பகிர்ந்து கொள்கிறேன். வள்ளலார் சொன்னது போல நானும், ‘கடை விரிக்கிறேன்.”
_____________________________________________________________________________
தொடரும் பயணம் – இலக்கிய வெளியில் – தொகுதி 2: திரிசக்தி பதிப்பகம், சாஸ்திரி நகர்,
அடையாறு, சென்னை-20 விலை ரூ. 80.
வெங்கட் சாமிநாதன்/20.1.2010
- மொழிவது சுகம் 11-: நமக்குள் உள்ள இன்னொருவன்
- ஓட்டை பலூன்
- பாவனைப்பெண்
- வேத வனம் விருட்சம் 76
- நித்யானந்தாவும் நேசக்குமாரும்
- மகளிர் தினம்
- எஸ்ஸார்ஸி – அக்கிரஹாரத்தில் இன்னொரு அதிசயப் பிறவி
- இந்திய மொழிச் சிறுகதைகளில் பெண்கள் படைப்பில் பெண்கள்
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -5
- செல்வராஜ் ஜெகதீசன் – மனக் குறிப்புகளின் புத்தகம்
- தொடரும் பயணம், இரண்டு புத்தகங்களும் அவற்றின் இரண்டு முன்னுரைகளும்
- ஐன்ஸ்டைனுடன் பணி ஆற்றிய சத்யேந்திர நாத் போஸ்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -5 பாகம் -3
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சூரியனுக்குக் கீழே கவிதை -24 பாகம் -1
- முக்காட்டு தேவதைகள்
- எனது மண்ணும் எனது வீடும்
- எப்போதும் முந்துவது…
- கனவு தேசம்
- எச்சரிக்கை……!
- அவர்கள் காதலிக்கட்டும்..!
- மதியழகன் சுப்பையா கவிதைகள்
- முப்பத்து மூன்று!
- மொழிக் குறிப்புகள்
- அர்சால்
- முள்பாதை 20
- துப்பாக்கி இல்லாமல் ஒரு துப்பறியும் கதை
- ஒரு மகள்.
- எங்கோ பார்த்த முகம்
- அங்கையற்கன்னியின் திருமணமும் ஐந்தாண்டு திட்டங்களும்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -8
- உதிர்ந்த இலைகள்