தொகுதிப் பங்கிடு-ஒரு கற்பனை

This entry is part [part not set] of 46 in the series 20060331_Issue

கோவி.கண்ணன்


கட்சித் தலைவரை பார்க்க வந்த பல்வேறு அமைப்புகளிலிடம் மாவட்ட செயலாளர் சொல்லிக்கொண்டு இருந்தார்.

மாவட்ட செயலாளர் : எல்லோரும் பொறுங்க, அம்மா எல்லோரையும் பாக்கிறேன்னு சொல்லியிருக்காங்க !

அமைப்புத் தலைவர்கள் ஒவ்வொருவராக சொன்னார்கள்,

அமைப்புத் தலைவர்கள் : சீக்கரம் ஏற்பாடு பண்ணுங்க, இல்லேன்னா நாங்க எதிர்கட்சிகாரங்கள சந்திக்க வேண்டியிருக்கும்,

மா.செ : கொஞ்சம் பொறுங்களைய்யா, அம்மா தான் பாக்கிறேன்னு சொல்றாங்கல்ல …

அ.த : என்ன மா.செ எங்க வேல்யூ தெரிஞ்சு, எங்கள காக்கவெக்கறது நல்லா இல்லை …

மா.செ : யோவ்… என்னைய்யா வேல்யூ … நாங்க பாக்காத வேல்யூ வா… வேலூருல்லேர்ந்து நேரா இங்க வந்தவங்களுக்கே இங்க வேல்யூ இல்லை, இவனுங்க வந்துட்டானுங்க

என்று கோபமாக சொன்னார்

அதற்குள் கட்சித் தலைவி அம்மாவின் உதவியாளர் வெளியில் வந்து,

உதவியாளர் : மா.செ அண்ணே, அம்மா உங்களை, ஓவ்வொரு அமைப்பின் தலைவர்களை மட்டும் கூப்பிட்டுக்கிட்டு உள்ள வரச் சொன்னாங்க …

மா.செ : யோவ் .. வாங்கைய்யா, தலைவன் யாரோ அவன் மட்டும் தான் வரனும், அங்க வந்து கைய கட்டிட்டிக்கிட்டு நிக்கனும், கேட்டா மட்டும் பதில் சொல்லனும் என்ன ?

அமைப்புத் தலைவர்கள் : அப்படியே செய்யிறோம் மா.செ அண்ணே

மா.செ : சொல்லிட்டா போதுமா, கோசம் போடனும்மய்யா …. நீங்கள் எல்லாம் சீட்டு வாங்கி … சே எல்லாம் என்னோட தலையெழுத்து …

உடனே

அமைப்புத் தலைவர்கள் : தலைவி வாழ்க … தலைவி வாழ்க …

மா.செ : சரி சரி வாங்க … சொன்னது ஞாபகம் இருக்கட்டும் …

என்று அழைத்துக்கொண்டு உள்ளே சென்று கட்சித் தலைவியின் முன், மூக்கு வாயை மூடியபடி எல்லோரும் நிற்கிறார்கள்

கட்சித் தலைவி : சொல்லுங்க மா.செ இவுங்களுக்கு என்ன வேண்டுமாம் …

மா.செ : அது வந்தும்மா … இவங்களுக்கு சீட்டு வேண்டுமாம் …

கட்சித் தலைவி : சரி பரிசீலிக்கலாம், இவங்க தகுதி என்னனென்னு தெரிஞ்சுக்களாமா ?

மா.செ : சொல்லறம்மா … அதோ அழுக்கு வேட்டியோடு நிக்கிறாரே அவரு தான் பிச்சக்காரர்கள் சங்கத்தலைவர் பிச்சாண்டி, 234 தொகுதியிலும் அவங்களுக்கு சங்கம் இருக்காம்.

கட்சித் தலைவி : அப்பறம் ? அதுக்கு ?

ஆச்சர்யத்துடன் மா.செ வை ஏறிட்டார்

மா.செ : அம்மா அவுங்களுக்கு தமிழ் நாடு முழுவதும் வாக்கு வங்கி இருக்காம்

என்று சொல்லிவிட்டு, பிச்சக்காரர்கள் சங்கத்தலைவர் பிச்சாண்டியைப் பார்கிறார்

பிச்சாண்டி : அம்மா, எங்க சங்கம் 234 தொகுதியிலும் ஸ்டாரங்கா, இருக்கு, தொகுதிக்கு குறைஞ்சது 1000 பேராவது இருப்போம்

கட்சித் தலைவி : மிஸ்டர் பிச்சாண்டி, ஒரு தொகுதிக்கு 1000 பேர் என்பது ரொம்ப குறைவானது… அதுக்கு சீட்டெல்லாம் கொடுக்க முடியாது. வேனும்னா, நான் ஆயிரம் பேருக்கு மா.செ கிட்ட செல்றேன், இலவச பாத்ரம் அதுவும் புது பாத்திரமா தரச்சொல்கிறேன் வாங்கிட்டு கட்சிக்கு ஓட்டப் போடுங்க …

என நிறுத்த …

பிச்சாண்டி : அப்படியெல்லாம் ஒரேடியாக சொல்லிடாதிங்கம்ம, ஒரு தொகுதிக்கு 1000 பேர்தான் ஒத்துக்கிறேன், அந்த ஆயிரம் பேரும் 300 தெருவ கவர் பண்ணுகிறாங்க … தெரியுமா ?

கட்சித் தலைவி : அதுக்கு …

பிச்சாண்டி : அதாம்மா சொல்லவர்றேன்.. 300 தெருகாரங்களும் ரெகுலரா எங்களுக்கு பிச்ச போடரவங்க… எங்காளுங்க ஓட்டு போடச்சொல்றவங்களுக்குத்தான் போடுவாங்க … மொத்தத்துல எங்க சங்கம் மட்டும் தான் தமிழ்நாடு முழுவதும் வெற்றி தோல்வியை நிர்ணயுக்கும் சங்கமா இருக்கு.

கட்சித் தலைவி மா. செ வைப்பார்த்து,

கட்சித் தலைவி : என்ன மா.செ ? இவுரு சொல்றது …

தலையை சொறிந்தபடி

மா.செ : ஆமாம்மா, இவுங்க ஆளுங்க மட்டும் இல்லேன்னா, பழைய கொழம்பும், சோறு வீனாப் போயிடும்னு பொதுமக்கள் நினைக்கிறாங்க, அதுனால இவங்க சங்கத்து ஆளுங்க கைகாட்டும் கட்சிக்குத்தான் பொதுமக்கள் ஓட்டுபோடு போறதா பேசிக்கிறாங்க. இத கேள்விப்பட்டுத்தான் இவுங்களை வலைச்சு புடுச்சி கூட்டிட்டு வந்தேன்.

கட்சித் தலைவி : நீங்க சொல்றது சரிதானா ?

மா.செ : 100 சதவீதம் சரிதாம்மா, போன வாரம், இவங்க ஆளுங்கெல்லாம் ஒருநாள் வேலை நிறுத்தம் பண்ணினாங்க, அதனால ஜெனங்க பழைய சாதத்தெல்லாம் என்ன செய்றதுன்னு தெரியாம … தெருவுல கொட்டி… அதுனால ஊரே நாறிப்போச்சு … ஒரே ஈத்தொல்லை .. அப்புறமா… கூட காலையில இட்லியும் சேர்த்துப் போடுறோம்னு பேச்சு வார்த்தை நடந்ததால போரட்டத்தை திரும்ப வாங்கிட்டாங்க… இவங்க சொன்னால் ஜெனங்க கண்டிப்பா கேட்பாங்க … அவுங்க கேட்கிற 45 சீட் வேண்டாம்… நான் பேசிட்டேன் … ஒரு சீட் கொடுத்துட்ட போதும் … நம்ப கட்சிதான் அடுத்த ஆட்சி.

கட்சித் தலைவி : சரி… இவங்களுக்கு ஒரு தொகுதியை ஒதுக்கிடுறேன்.

மா.செ : அம்மா, அவுங்களே தொகுதிய முடிவுப்பண்ணிட்டாங்க …

கட்சித் தலைவி : என்னது முடிவுபண்ணிட்டாங்களா ? என்ன தொகுதி ?

மா.செ : அம்மா, அது வந்தும்மா… ஆண்டிமடம் தான் இவுங்க கேக்கிற தொகுதி.

கட்சித் தலைவி : சரி சரி ஒதுக்கிடாலாம் … பிரச்சாரத்த ஆரம்பிச்சிட சொல்லுங்க

மா.செ : அப்புறம் வந்து அம்மா… அவுங்க சங்க சின்னம் திருவோட நீங்கதான் மக்கள் கிட்ட அறிமுக படுத்தனும்.

மா.செ : யோவ். போட்டோ கிராபர் … இவங்களையெல்லாம் சேர்த்து ஒரு போட்டோ எடு …

பிச்சாண்டி : அம்மா, தாயே நீங்க நல்லயிருக்கனும் !

மா.செ : இங்கேயும் இதே பாட்ட பாடாதேயா, கேக்கவே நாரசமா இருக்கு, உங்காளுங்ககிட்ட சொல்லி தமிழ் நாடு முழுவதும் … இனிமே காலையிலே ஓட்டக்காட்டி சோத்து பிச்ச கேட்கிறப்ப … எங்க கட்சிக்கு ஓட்டும் சேத்து கேட்கனும் சரியா ?

பிச்சாண்டி : அப்படியே கேட்டுடுறோம் சாமி…

எல்லோரும் கட்சித்தலைவியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுச்செல்கிறார்.

அடுத்ததாக, மா.செ கிளிஜோசியர் சங்கத் தலைவரையும், பாம்பாட்டிகள் சங்கத் தலைவரையும், தலைவிக்கு அறிமுகப்படுத்துகிறார்.

கோவி.கண்ணன்

Series Navigation

கோவி.கண்ணன்

கோவி.கண்ணன்