தைவான் நாடோடிக் கதைகள் 6 பெண்புலி மந்திரக்காரி (ஹொ கொ பொ)

This entry is part [part not set] of 45 in the series 20071227_Issue

தமிழில் மதுமிதா


வெகுநாட்களுக்கு முன்பு தைவான் மக்கள் கடவுள், தேவதை, பேய், சூனியக்காரி எனப் பலவித சக்திகளை நம்பினர். அவர்கள் சூரியக்கடவுள், நிலவுக் கடவுள், பூமிக்கடவுள், பாறைக் கடவுள், மரக் கடவுள் இன்னும் விலங்கு தெய்வங்கள் என பலவற்றை நம்பினர். மேலும் விலங்குகள் வயதான
பிறகு அவற்றுக்கு மனிதனாக மாற இயலும் சக்தி கிடைக்கும் எனவும் நம்பினர்.

ஒருமுறை தைவானில் ஒரு பெண்மணி இருந்தாள். தன் இரு பெண்குழந்தைகளுடன் மலை வீட்டில் அவள் வசித்து வந்தாள்.

பெரியவள் அகிம்; சின்னவள் அஜியோக். அவர்கள் ஏழைகள். ஆனால் மனநிறைவுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

ஒருநாள் நகரத்துக்கு அம்மா செல்ல வேண்டியிருந்தது. மகள்களின் பாதுகாப்பை எண்ணி கவலைப்பட்டாள் அவள். ”நான் வெளியில் சென்றிருக்கும்போது யாரேனும் வந்தால் கதவைத்திறக்க வேண்டாம்,” என சொல்லிச் சென்றாள்.

தாய் வெளியே சென்றாள். இருவரும் தாய் சொன்னபடியே நடந்தனர்.

விரைவிலேயே யாரோ கதவை சத்தமாகத் தட்டும் ஓசை கேட்டது. “பாங்,
பாங் பாங்.”

முதலில் எழுந்தவள் பெரியவள் அகிம் பயந்தாள். சின்னவளை இறுக அணைத்துக் கொண்டாள். என்ன செய்வதென இருவருக்கும் தெரியவில்லை. வெளியே கதவைத் தட்டியவரின் பெரும் குரல்.

“கதவைத்திற, கதவைத்திற, அம்மா வந்திருக்கிறேன்.”

கதவுக்கு அருகில் சென்ற சகோதரிகள், “நீ எங்கள் தாய் இல்லை. நீ இவ்வளவு விரைவாக வரமாட்டாய்” என்றனர்.

ஆனால், வெளியே கதவைத் தட்டியவளோ இன்னும் வேகமாகக் கதவைத்தட்டினாள். “நான் உங்கள் அம்மாதான். நீங்கள் பயப்படுவீர்கள் என்று வேகமாக உங்களைப் பார்க்க வந்துவிட்டேன்!”

உண்மையாக இருக்குமென நம்பி சகோதரிகள் கதவைத் திறந்தனர்.

கதவுதிறந்ததும் வெளியே இருப்பது தங்கள் தாயல்லவென்று தெரிந்தது.

கதவை மூட முயன்றனர். ஆனால் அதற்குள் காலம் கடந்துவிட்டது. வெளியே இருந்தவள் கதவைத் தள்ளித் திறந்து வேகமாக உள்ளே வந்துவிட்டாள்.

அவளுடைய முடி பனி போன்று வெண்ணிறத்திலிருந்தது. முகம் பூனையைப்போல் சுருக்கம் விழுந்திருந்தது.

“நீ யார்?” சகோதரிகள் கேட்டனர்.

“பயப்படாதீர்கள். நான் உங்கள் பெரியம்மா. மலைக்குப் பின்னால் வசித்துவந்தேன். வெகுகாலம் நான் இங்கே வரவில்லை. இன்று உங்கள்
வீட்டைக் கடந்து சென்றதால் உங்களைப் பார்க்க வந்தேன்.” என்றாள்.

விளக்கம் கேட்டதும் கொஞ்சம் பயம் தெளிந்தது சகோதரிகளுக்கு.

அஜியோக் சின்னவள் என்பதால் பெரியம்மாவைக் கண்டதும் மிகவும் மகிழ்ந்தாள். ஆனால் அகிம் கொஞ்சம் பெரியவள் என்பதாலும், கொஞ்சம் புத்திசாலியானதாலும் நம்பவில்லை.

அகிம் ‘ஏன் தங்கள் தாய் தமது பெரியதாயார் குறித்து ஒருமுறைகூட சொல்லவேயில்லை’ என வியந்தாள்.

ரொம்ப நேரமானதால் அஜியோக் தூங்க விரும்பினாள். பெரியம்மாவுடன் படுத்துக் கொண்டாள்.

அகிம் சந்தேகத்துடன் அடுத்த அறையில் சென்று தனியாகப் படுத்துக் கொண்டாள்.

நடுஇரவில் அஜிலோக் தூங்கும் பக்கத்து அறையிலிருந்து வரும் வினோதமானதொரு சத்தம் கேட்டு அகிம் விழித்துக்கொண்டாள்.

“சங்க், சங்க்”

வறுத்த பட்டாணி சாப்பிடுவதுபோல் அல்லது நாய் எலும்பை சுவைப்பதுபோல் சத்தம்.

அகிம் சத்தமாய், “பெரியம்மா என்ன சாப்பிடுகிறாய்?” என்று கேட்டாள். பெரியம்மா அகிம் இப்படி கேட்பாள் என்பதை எதிர்பார்க்கவில்லை.

வியந்தவள் உடனே பதில் சொன்னாள்,” இஞ்சி வேரை மெல்கிறேன். ரொம்ப கடினமாயிருக்கிறது. காரம், உவர்ப்பாயிருக்கிறது. குழந்தைகள் சாப்பிடுவதுபோல் இல்லை” என்றாள்.

அகிம் பெரியம்மாவை நம்பவில்லை. அவள் வற்புறுத்தி தனக்கும் சாப்பிட வேண்டுமெனக் கேட்டாள்.

பெரியம்மா ஒரு துண்டை அகிமை நோக்கி வீசினாள். அகிம் அதை எடுத்தாள். அது விரல் துண்டு.

“ஓ! பெரியம்மாவாக நடித்து உள்ளே வந்த பெண்புலி மந்திரக்காரியால் தங்கை அஜியோக் சாப்பிடப்பட்டுவிட்டாள். நான் தப்பிக்க வேண்டும்” என உணர்ந்து கொண்டாள்.

சிறிது நேரம் கழித்து அகிம் பெரியம்மாவிடம் நடித்து, “பெரியம்மா. கழிவறைக்குப் போகவேண்டும் கைகளைக் கழுவ” என்றாள்.

“இல்லை. போகக்கூடாது” என்ற பெரியம்மா தன் சுயரூபம் காட்டினாள். வயதான பெண்புலி மந்திரக்காரியாய்.

“நீ எனக்கு காலை உணவாக வேண்டும். உன்னை எப்படி அனுப்புவேன். நீ தப்பிக்க நினைத்துவிட்டால்?… நான் உன்னை விடமாட்டேன்!”

அகிம் ரொம்ப புத்திசாலி. அவள் பதில் சொன்னாள். “நான் தப்பிக்கக்கூடாதென்று நினைத்தால், என் காலில் ஏன் கயிறு கட்டக்கூடாது. அப்போது என்னால் தப்பிக்க முடியாதல்லவா?”

பெண்புலி மந்திரக்காரி ஒரு நிமிடம் யோசித்தாள். இந்தக் காரணம் பொருத்தமானதுதான்…

ஒரு கயிறை அகிம் காலில் கட்டி தன் கையில் இன்னொரு முனையைப் பற்றிக்கொண்டு அகிமை கை கழுவ அனுப்பினாள்.

அறைக்குச் சென்றதும் அகிம் காலிலிருந்து கயிற்றைக் கழற்றி தண்ணீர் பாத்திரத்தில் கட்டிவிட்டாள்.

ஜன்னல் வழியாகத் தப்பிச் சென்று ஒரு மரத்தின்மேல் ஏறிக்கொண்டாள்.

பெண்புலி மந்திரக்காரி வெகுநேரம் காத்திருந்தாள். பின் சந்தேகத்துடன் கயிறை இழுத்தாள்.

தண்ணீர் பாத்திரம் கொட்டி தண்ணீர் சிதறும் சத்தம் கேட்டது. இன்னும் கொஞ்சநேரம் காத்திருந்தாள், விரலைச் சுவைத்துக்கொண்டு. பிறகு ஏன் அகிம் இன்னும் வரவில்லையென்று அவளைத் தேடிப் போனாள்.

அகிம் தப்பித்ததை உணர்ந்தாள்.

அகிமின் காலடியைத் தொடர்ந்து சென்று அவள் மரத்தில் ஒளிந்திருப்பதைக் கண்டுபிடித்தாள்.

பெண்புலி மந்திரக்காரியால் மரம் ஏறமுடியாது. மரத்தின் அடிப்பாகத்தை தன் கூரிய பற்களால் கடித்தாள்.

அகிம் கீழே பார்த்தாள். இன்னும் கொஞ்சம் மரத்தை அவள் கடித்துவிட்டால் தான் கீழே விழுந்துவிடுவோம் என்பதை உணர்ந்தாள்.

அமைதியாக ஒரு முடிவுக்கு வந்தாள்.

“பெரியம்மா. நீ இவ்வளவு கடினமாக மரத்தைக் கடிக்கவேண்டாம். நான் விரும்பி உனக்கு உணவாக கீழே வருகிறேன். ஒரே பிரச்சினை நான் அதிக பசியோடிருக்கிறேன். இப்போது என்னை நீ சாப்பிட்டால் நான் பசிப்பேயாக அலைவேன். உன்பின்னே வந்து இம்சை செய்வேன். நீ ஒருவாளி பட்டாணி எண்ணெயை எனக்காகக் காய்ச்சிக் கொடுத்தால், இங்கிருக்கும் பறவையை வறுத்து சாப்பிடுவேன். எனக்கு வயிறு நிறைந்ததும் கீழே வருவேன். நீ கவலையின்றி என்னைச் சாப்பிடலாம்.” என்றாள் அகிம்.

பெண்புலி மந்திரக்காரி, இது நல்ல உபாயம் என நினைத்தாள்.

பெண்புலி மந்திரக்காரி ஒருவாளி பட்டாணி எண்ணெயைக் காய்ச்சி மேலே அகிமுக்கு அனுப்பினாள்.

சிறிது நேரத்தில் அகிம் அழைத்தாள். “நான் தயாராகிவிட்டேன் கீழே குதிப்பதற்கு. வாயைத்திற” என்றாள்.

பெண்புலி மந்திரக்காரி இதைக் கேட்டதும் பெரிதாக வாயைத் திறந்தாள், அகிமை சாப்பிடுவோமென்று.

ஆனால் அகிம் காய்ச்சிய எண்ணையை மேலிருந்து பெண்புலி மந்திரக்காரிமேல் ஊற்றினாள்.

பெண்புலி மந்திரக்காரி வாய்நிறைய சூடான பட்டாணி எண்ணெய் பெற்றதால் உடனே இறந்து போனாள்.

அகிமின் புத்திசாலித்தனம் அவளைக் காப்பாற்றியது.


mathuramitha@gmail.com

Series Navigation

மதுமிதா

மதுமிதா