தேவலோகத்தில் ஒரு கடிதப் போக்குவரத்து

This entry is part [part not set] of 72 in the series 20040415_Issue

சொதப்பப்பா


முதல்கடிதம்

***

பெறுநர்

விஷ்ணு

அனுப்புனர்

நாரதர்

பொருள்: தமிழக அரசியல்

கருணை கூரும் பிரபோ,

நேற்று தமிழ்நாடு போயிருந்தேன். ரஜினி பூந்து கலக்குகிறார். (ராகவேந்திரராக வேஷம் போட்ட அதே ஆள்தான்). ராமதாஸ் ஜெயித்தாலும் ஜெயிக்காவிட்டாலும் நான் தான் ஜெயித்தேன் என்பதுமாதிரி எல்லாவற்றையும் பூர்வ ஜென்மப் புண்ணியத்தின் மீது பழி போட்டுவிட்டு அடித்தாரே ஒரு அடி.. (இந்த சமாச்சாரமெல்லாம் தமிழ்நாட்டில் போய்விட்டது என்று நினைத்தேன்..ம்ஹ்.ம்.. அப்படியே இருக்கிறது) அதைவிட அதிர்ச்சியான செய்தி ஒன்று உண்டு பிரபோ. கருணாநிதி முதல் ஜெயலலிதாவரை சனிபகவான் அவரவர் வாயில் பூந்து புறப்பட்டுக்கொண்டிருக்கிறார். என்ன விஷயம் என்று சனியை சிவபெருமானிடம் சொல்லி சற்றே விசாரியுங்கள்.

உங்கள் காலடிப்பொடி

நாரதன்

***

இரண்டாம் கடிதம்

***

பெறுநர்

சிவபெருமான்

அனுப்புனர்

விஷ்ணு

பொருள்: தமிழக அரசியல்

பிரபோ,

சமீபத்தில் மைக்ரோசாஃப் அவுட்லுக் போட்டதில் ஏகப்பட்ட வைரஸ்கள். துர்வாசரைக் கூப்பிட்டு எல்லா வைரஸ்கள் மீதும் சாபம் விடச்சொன்னேன். (அவரோ பூமிக்குப் போங்கள் என்று சாபம் விட்டுவிட்டார்). என்னவாயிற்று என்று தெரியவில்லை. சமீபகாலமாக நாரதரிடமிருந்து வரும் கடிதங்கள் எல்லாம் ஆச்சரியமாகவும் அபத்தமாகவும் இருக்கின்றன. போன வைரஸ்கள் எல்லாம் தமிழ்நாட்டுக்கே நேரடியாகப் போய் சேர்ந்துவிட்டனவா என்று தெரியவில்லை.

உதாரணமாகப் பாருங்கள். நம் அருமைச் சினேகிதர் கருணாநிதி சனிபகவான் பெயரை அடிக்கடிச் சொல்கிறாராம். அப்புறம் விசாரித்ததில், செல்வி ஜெயலலிதாவை சனியன் என்று சொல்லியிருப்பதாக அறிந்தேன். அந்தம்மாவுக்கு சொல்லியா தரவேண்டும். ஒரே மேடையில் ஒரே பேச்சில் 24 முறை கருணாநிதியை சனியன் சனியன் சனியன் என்று சொல்லியிருக்கிறார்கள் போலிருக்கிறது. தமிழ்நாட்டில் என்றுமே ஜனநாயகப் பாரம்பரியம் கிடையாது. ராஜாஜி இதனைக் கேட்டு நொந்து நூலாகி விட்டார் (சரி சரி அவர் ஏற்கெனவே நூல் போலத்தான் இருப்பார் என்று கிண்டல் வேண்டாம்) தமிழ்நாட்டில் கொஞ்சம் நஞ்சம் இருக்கும் ஜனநாயகப்பாரம்பரியத்தைக் கெடுக்க சனி ஏதும் வேலை செய்கிறாரா என்று சற்றே விசாரித்து சொல்லவும்.

உங்கள் மச்சான்

விஷ்ணு

***

பெறுநர்

சனிபகவான்

அனுப்புனர்

சிவன்

பொருள்: தமிழக அரசியல்

அன்புடைய சனி அவர்களே,

உங்களது பெயர் தமிழக அரசியல்வாதிகள் வாயில் அடிக்கடி அடிபடுகிறது. என்ன விஷயம் ? நம்மை நம்பாத திரு கருணாநிதி கூட உங்கள் பெயரை அடிக்கடி உபயோகித்து செல்வி ஜெயலலிதாவை குறிப்பிடுகிறார். நம்மை நம்பும் ஜெயலலிதாவோ உங்களது நல்ல குணத்தைப் புரிந்து கொள்ளாமல் அவமரியாதை செய்கிறார். நீர் ஏதும் நமக்குத் தெரியாமல் காரியம் செய்கிறீரா ? முக்கால பார்வையை நாம் அடிக்கடி உபயோகப்படுத்துவது இல்லை. ஆகையால், உடனே இதற்கு பதில் போடும்படி கட்டளை

இப்படிக்கு

சிவன்

***

இரண்டாம் கடிதம்

***

பெறுநர்

சிவன்

அனுப்புனர்

சனிபகவான்

பொருள்: தமிழக அரசியல்

கருணைகூரும் பிரபோ,

ஐயா தெரியாதய்யா… நான் இங்கே ஈராக்கில் கொஞ்சம் மும்முரமாக இருக்கிறேன். எனக்கு வேலை வைக்காமல் அமெரிக்க அரசாங்கமே முக்ததா அல் சதாவை சீண்டிக்கொண்டிருக்கிறார்கள். நேற்று ஒரு பாவமும் அறியாத ஜப்பானியர்களை விடுவிக்க ஒரு வெடிக்காத வெடிகுண்டை வெடிக்கும் வேலை வந்துவிட்டது. இந்த மும்முரத்தில் நான் ஏன் தமிழ்நாட்டுக்குப் போகிறேன் ? இது நாரதர் வேலையாக இருக்கும். அல்லது அவரது தொண்டரடிப்பொடி சோ அவர்களின் வேலையாக இருக்கும். சற்றே நாரதரை கதவைத் தாளிட்டுவிட்டு விசாரிக்கவும்.

அடியேன் உங்கள் காலடியில்,

சனி

***

பெறுநர்

பிள்ளையார்

அனுப்புனர்

சனிபகவான்

பொருள்: தமிழக அரசியல்

கருணை கூரும் பிரபோ,

உங்கள் சாப்பாட்டுக்கு இத்துடன் இரண்டு வண்டி கொழுக்கட்டைகளும், மூன்று வண்டி சுண்டலும் அனுப்பியிருக்கிறேன். (லோக்கல் மக்டொனால்டில் ஒரு கொழுக்கட்டைதான் கேட்டேன். சூப்பர்சைஸ் செய்துவிட்டார்கள்) எனக்கு அப்படியே சற்று உதவி செய்தால் நன்றாக இருக்கும். உங்கள் தந்தையார் என் மீது கோபம் கொண்டு எனக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். தமிழ்நாட்டில் என் பெயரை சொல்லி பெருந்தலைவர்கள் ஒருவரை ஒருவர் திட்டிகொள்கிறார்கள் போலிருக்கிறது. நாரதர் என் வேலை என்று பற்றவைத்திருக்கிறார். நான் இங்கே ஈராக்கில் கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன். இல்லையெனில் நேரடியாக சிவபெருமானை சந்தித்து அவர் காலடியில் விழுந்து விளக்கியிருப்பேன். தயவுசெய்து என் சார்பாக சிவபெருமானிடம் பேசவும். இல்லையேல் ஒரு கடிதமாவது என் சார்பில் போடுங்கள்

உங்கள் அடியேன்

சனி

***

பெறுநர் சிவன்

சிசி: விஷ்ணு

அனுப்புனர்: விநாயகன்

பொருள்: தமிழக அரசியல்

அன்புள்ள அப்பா,

நான் தமிழ்நாட்டில் மூலை முடுக்கெல்லாம் காற்று வெயில் பனி என்று பாராமல் எல்லா பறவைகளின் காலைக்கடன் கழிக்க வசதியாக உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். என்னிடம் கேட்கக்கூடாதா ? நீங்கள் அனுப்பிய கடிதத்தைப் பார்த்து சனி அரண்டுவிட்டார்.

விஷயம் இதுதான். தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கிறது. அந்தத் தேர்தலில் ஜெயிக்கவேண்டுமென்றால் உங்களுக்கே தெரியும் என்ன என்ன நாடகம், மெகாசீரியல், வில்லன் எல்லாம் பண்ணவேண்டும் என்று. அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த நீ சனி, உங்கப்பன் சனி உங்கம்மா சனி போன்ற வசையாடல்கள் எல்லாம். தமிழ்நாட்டு ஜனநாயகப் பாரம்பரியம் ஊழலில் இருக்கிறது. தேர்தல் முடிந்ததும், வழக்கம்போல உனக்கு 10 சதவீதம் எனக்கு 15 சதவீதம் என்று ஜனநாயகத்தைக் காப்பாற்றச் சென்றுவிடுவார்கள். நீங்கள் அஞ்ச வேண்டாம்.

உங்கள் மூத்தபிள்ளை

விநாயகன்

பின் குறிப்பு: இதன் படிவத்தை மாமாவுக்கும் அனுப்பியிருக்கிறேன்

**

Series Navigation

சொதப்பப்பா

சொதப்பப்பா