தேவகாந்தனின் கனவுச் சிறை -நாவல் :ஓர் விமர்சன அறிமுகம்……

This entry is part [part not set] of 27 in the series 20021001_Issue

முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் நா.சுப்பிரமணியன்


1. வரலாற்றுக் காட்சியான ஒரு படைப்பாக்கம்

நாவலிலக்கியம் என்பது ஒரு சமூகத்தின் இயங்குநிறையின் வரலாற்று வடிவம் ஆகும். அதில் கதை இருக்கும். ஆனால் கதை கூறுவது தான் அதன் பிரதான நோக்கம் அல்ல. சமூகத்தின் அசைவியக்கத்தின் பன்முகப் பரிமாணங்களையும் இனங்காட்டும் வகையில் குறிப்பிட்ட ஒரு காலகட்ட வரலாற்றுக் காட்சியைத் துல்லியமாக எழுத்தில் வடிப்பதே நாவலாசிரியனொருவனின் முதன்மை நோக்கம் ஆகும். இந்த நோக்கினூடன செயற்பாங்கின் ஊடாக ஒரு கதை முளை கொண்டு வளர்ந்து செல்லும். இக்கதை குறித்த ஒரு சில மாந்தரை மையப் படுத்தியதாகவும் அமையலாம் அல்லது சமூகத்தின் பன்முக உணர்வுத்தளங்களையும் இனங்காட்டும் வகையில் பல்வேறு மாந்தர்களின் அநுபவ நிலைகளையும் பதிவு செய்யும் வகையில் விரிந்து பல்வேறு கிளைப்பட்டு வளர்ந்தும் செல்லலாம். இவ்வாறு விரிந்தும் வளர்ந்தும் செல்லும் கதையம்சங்களினூடாக ஈழத்துத் தமிழர் சமூகத்தின் ஒரு காலகட்ட – கடந்த ஏறத்தாழ கால் நூற்றாண்டுக் காலகட்ட – வரலாற்றுக் காட்சியை நமது தரிசனத்துக்கு இட்டு வரும் செயற்பாங்காக அமைந்த முக்கிய படைபாக்கம் தேவகாந்தன் அவர்களின் கனவுச்சிறை என்ற இந்த மகாநாவல்.

திருப்படையாட்சி, வினாக்காலம், அக்னி திரவம், உதிர்வின் ஓசை, ஒரு புதிய காலம் ஆகிய தலைப்புகள் கொண்ட ஐந்து பாகங்களாக 237 அத்தியாயங்களில் 1247 பக்கங்களில் விரியும் இவ்வாக்கம் 1981 முதல் 2001 வரையான இருபத்தொரு ஆண்டுக்கால வரலாற்றியக்கத்தைப் பேசுவது. இந்த வரலாற்றுக் கட்டம் ஈழத்துக் தமிழர் சமூகத்தின் இருப்பையும் பண்பாட்டுணர்களையும் கேள்விக்குட்படுத்தி நின்ற கால கட்டம் ஆகும். பெளத்த சிங்கள பேரினவாதப் பாதிப்புக் குட்பட்ட நிலையில் ஈழத்துத் தழிழ் மக்கள் மத்தியில் ஆயுதப் போரட்ட உணர்வு தீவிரமடைந்த காலப்பகுதி இது. அதே வேளை மேற்படி பேரினவாதக் கொடுமைகளிலிருந்து தற்காத்துக் கொள்ளும் நோக்கில் ஈழத்தமிழர் பலர் புலம் பெயர்ந்தோடி அனைத்துலக நாடுகளில் தஞ்சம் புகுந்து வாழ்வை நிலைப்படுத்திக் கொண்ட காலப்பகுதியாகவும் இவ்வரலாற்றுக் காலகட்டம் அமைகின்றது. இவ்வாறு போராட்டச் சூழல் சார் அநுபவங்களுமாக விரிந்து சென்ற வரலாற்றியக்கத்தை முழூ நிலையில் தொகுத்து நோக்கி, அதன் மையச் சரடுகளாக அமைந்த உணர்வோட்டங்களை நுனித்து நோக்கி இலக்கியமாக்கும் ஆர்வத்தின் செயல்வடிவமாக இவ்வாக்கம் அமைந்துள்ளது. மேற்படி உணர்வோட்டங்களை விவாதங்களுக்கு உட்படுத்திக் கதையம்சங்களை வளர்த்துச் சென்ற முறைமையினால் ஒரு சமுதாய விமர்சன ஆக்கமாகவும் இந்நாவல் காட்சி தருகின்றது.

குறிப்பாக, தமிழீழ விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடும் இயக்கங்களின் உணர்வுநிலை மற்றும் செயன் முறை என்பவற்றுக்குப் பின்னால் உள்ள நியாயங்கள் மற்றும் புலம் பெயர்ந்துறைபவர்களின் சிந்தனைகள், செயற்பாடுகள் என்பவற்றின் பின்னால் உள்ள நியாயங்கள் என்பன இந்நாவலில் முக்கிய விவாதமையங்கள் ஆகின்றன. இவற்றோடு பேரினவாத உணர்வுத்தளமும் இந்நாவலில் விவாதப் பொருளாகின்றது. அதன் மத்தியில் நிலவும் மனிதநேய இதயங்களும் கதையோட்டத்திற் பங்கு பெறுவது நாவலுக்குத் தனிச் சிறப்புத் தரும் அம்சமாகும். போராட்டத்தின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் இருப்பு சார்ந்த உணர்வோட்டங்கள் மற்றும் அவல அநுபவங்கள் ஆகியனவும் விவாதப் பொருள்களாகின்றன.

1981 – 2001 காலகட்ட வரலற்றியக்கத்தை தான் இந்நாவல் பேச முற்பட்டுள்ளது எனினும் கதை மாந்தரின் நினைவோட்டங்களினூடாக ஈழத்து வரலாற்றின் பல்வேரு காலகட்டங்களும் கதையம்சத்தில் பதிவு பேறுகின்றன. இவ்வகையில் ஈழத்துத் தமிழர் சமூகம் தொடர்பான முழு நிலையிலான பண்பட்டு வரலாற்றுக் காட்சியை வாசகர் முன் வைகவும் அவர் விழைந்துள்ளமை தெரிகின்றது. ஈவ்வாறான செயற்பாங்கால் இந்நவால் சமகாலத்தை மையப் படுத்தி நின்று ஒட்டு மொத்த வரலற்றையும் உள்ளடக்கிக் காட்டும் முழுமை நோாக்கிலான படைபாக்கமாகவும் திகழ்கின்றது.

2. கதையம்சம் – களம் – கட்டமைப்பு

சமுதாய வரலாற்றின் தசைவியக்கம் இலக்கியத்துகுப் பொருளாகும் பொழுது சமுதயதின் புறநிலை நிகழ்வுகள் மற்றும் அகநிலை உணர்வோட்டங்கள் என்பன ஒன்றில் ஒன்று நிகழ்த்தும் தாக்கங்கள் அநுபவச் செழுமையுடன் பின்னிப் பிணைந்து செல்லும் வகையில் கதையம்சம் கட்டமைக்கப் பட வேண்டியது அவசியமாகின்றது. இவ்வாறு ஒன்றில் ஒன்று நிகழ்த்தும் தாக்கங்கள் ஊடான சமூகப் ப்ர்மாண்ங்களுமே நாவலியக்கியத்தின் கதையம்சமாக விரிகின்றன என்பது இலக்கியவியலாரின் பொதுக் கருத்தாகும்.

இந்த நாவலைப் பொறுத்தவரை அதன் காலகட்டம் புறநிலை சூழல் பேரினவாதத்தால் நிகழ்ந்த அழிவுகளும் உயிரைக் காத்துக் கொள்வதற்கான அவலமும் மலிந்த ஒன்றாக அமைந்தது என்பது வெளிப்படை. இந்த அழிவுகளையும் அவளங்களையும் எதிர் கொண்ட ஈழத்தமிழர் சமுதாயம் – குறிப்பாக ஈழத்தின் வடபுல சமுதாயம் – பாரம்பரியமான பண்பாட்டுணர்வுகளால் கட்டுப்பட்டுக் கிடந்த ஓன்றகும். ஆணாதிக்கம் பொருளியல் ஏற்றத்தாழ்வுணர்வு மற்றும் சாதியுணர்வு முதலியவற்றின் பிடியில் அச்சமுதாயம் நீண்டகாலமாகவே முடக்கப்பட்டுக் கிடந்தது. இன்னும் கூட அந்நிலையில் பெரு மாற்றங்கள் நிகழவில்லை. இவ்வாறு கட்டுப்பெட்டித்தனமானதாக – கால உணர்வுடன் ஒத்த வளர்ச்சி எய்தததாகப் பின் தங்கி நின்ற இச் சமுதாயத்தில் மேற்படி பேரிடவாதக் கொடுமைகளால் குறிப்பிடத்தக்க சில உணர்வுநிலை மாற்றங்கள் நிகழ்கின்றன. சாதியுணர்வின் பிடி தளைச்சியடைவது ஆணாதிக்க மனப்பாங்கு சார்ந்த கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுக்கநிலை மதிப்பீடுகள் என்பவற்றினின்று பெண்ணிமை தன்னை விடுவித்துக் கொண்டு சுயமாக இயங்க முயற்படுவது என்பனவாக இந்த உணர்வுநிலை மாற்றங்கள் அமைகின்றன.

இவ்வகை மாற்றங்களின் உந்து சக்திகளாகத் திகழ்ந்தவை இரண்டு. ஒன்று, தமிழரின் உரிமைகளை மீட்டெடுக்கும் நிலையிலான விடுதலைப் போராட்டம். இது தமிழீழம் என்ற குறிக்கோள் கொண்டதாக அமைந்தது. மேற்படி குற்க்கோளை முன்வைத்து உருவான உணர்வெழுச்சியில் பொருளியல், சாதி மற்றும் ‘ஆண்-பெண் ‘ என்ற வெறுபாட்டுணர்வுகள் அற்ற நிலையில் ஒரு ஒருங்கிணைப்பு நிகழத்தொடங்கியது. மேற்படி ஊனர்வுநிலை மாற்றங்களுக்கு வழிகோலிய மற்றொரு காரணி புகலிட வாழ்வியற் சூழல்கள் ஆகும். இவை புதிய அநுபவங்களையும் பண்பாடு பற்றிய மறு மதிப்பீடுகளையும் தோற்றுவித்தன. இவ்வாறான உணர்வெழுச்சிகளும் பண்பாட்டு மறு மதிப்பீடுகளும் பல தளங்களில் பல்வேறு படி நிலைகளில் நிகழ்ந்தன. இவற்றைப் பிரதி பலிக்கத்தக்க வகையிலும் இந்நாவலின் கதையம்சம் உருப்பெற்றுள்ளது. இவ்வாறான ஒருங்கிணைப்புக்கு ஏற்ற வகையில் ஈழம், (இந்தியா (குறிப்பாக தமிழகம்) ஐரோப்பிய நாடுகள் குறிப்பாக பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பானியா மற்றும் ஸ்கந்தினேவிய நாடுகள்), அவுஸ்திரேலியா, கனடா ஆகிய பல்வேறு புவிச் சூழல்களும் தொடர்புபடும் வகையில் கதையம்சம் பல கிளைகளக விரிந்துள்ளது. இவ்வாறு இந்த ஐந்து பாக நாவல் ஈழத்துத் தமிழரின் வாழ்வியற் சூழல்களின் பெரும் பகுதியைத் தழுவிச் செல்கிறது.

இந்நாவலின் மையக் கதையம்சம் யாழ்ப் பாண்ப் புவிச் சூழலில் நயினாதீிவு என்ற கிராமத்தில் தொடங்குகின்றது. அக் கிராமத்தைச் சார்ந்த ராஜி (ராஜ லட்சுமி) என்ற இளம் பெண்ணின் குடும்பக் கதையாக இது தொடங்குகின்றது. அவளது வாழ்வியல் எதிர் பார்ப்புக்கள், அபிலாசைகள் என்பன கானல் நீராகும் சோக அநுபவங்களுக்கு முதற் காரணம் சூழலில் நிலவிய ஆணாதிக்கம் சார்ந்த குறுகிய மனப்பாங்கு ஆகும். பருவமடைந்த பெண்கள் பிற ஆடவர்களுடன் நட்பு ரீதியகப் பழகுதல் உதவிகளைப் பெறுதல் என்பன நடத்தைல் குறைபாடுகளாக கணிக்கப்படும் சமூக மனப்பாங்கு அவளது முதலாவது திருமண முயற்சியைப் பாதிக்கின்றது. புற நிலயில் விடுதலைப் போருக்கான வீரம் விளையத் தொடங்கியிருந்த அம்மண்ணின் அக நிலை எந்த அளவுக்குப் பிற்போக்குத் தனமானதாக காலத்தை ஒட்டி வளர்ச்சியடையாததாக இருந்தது என்பதைக் கோடிட்டுக் காட்டும் வகையில் இக் கதைத் தொடக்கம் அமைவதை நோக்க முடிகின்றது.

இவ்வாறு ராஜியின் திருமண முயற்சி தோல்வியடையும் நிலையில் அதற்கு மாற்றாக இன்னொரு திருமண முயற்சி மேற்கொள்ளப் பட்ட போது திருமணப் பதிவு நிகழ்ந்த பின் தாலிகட்ட வேண்டியவன் போராட்ட இயக்கமொன்றில் சேர்ந்து விடுகிறான். இது அவளது ஏமாற்றங்களின் தொடர்ச்சியாகும். இவ்வாறு போரளியானவன் கடத்தல் போன்றவற்றில் ஈடுபட்டுப் பொருளீட்டும் முயற்சிகளில் வழிதவறிச் சென்ற நிலையில் அவளது குடும்ப வாழ்வு பற்றிய நம்பிக்கைகல் கேள்விக் குறியாகின்றன. இந்நிலையிலும் அவள் சோர்ந்து விடாமல் ஒரு கொள்கைத் தெளிவோடு வழ முற்படுகிறாள். தமிழீழ விடுதலையில் திட நம்பிக்கை கொண்டவளாகவும் சமூகம் சேவைகளில் நாட்டம் கொண்டவளாகவும் அவல் தன்னை வளர்த்துக்கு கொள்கிறாள். இவ்வகையில் ஈழ விடுதலையை ஆதரிக்கும் தமிழ்ச் சமூகத்தின் மனசாட்சி எனத் தக்கவாறு ராஜியின் பாத்திரப் பண்பு பரிணாமம் பெறு வதைக் காண முடிகிறது.

இவ்வாறு அமைந்த (ராஜியின்) மையக் கதையம்சத்தில் பல துணைக் கதைகல் கிளைவிடுகின்றன. ராஜியின் எழுதப்பட்ட கணவனாக அமையும் ‘சுதன் ‘ என்ற சுதந்திரனின் தடுமாற்றக் கதை, அவனது உடன் பிறப்பான ‘அரசி ‘ அனப்படும் தமிழரசியின் கதை, இவர்களின் நண்பனான ‘திரவி ‘ எனப்படும் திரவியத்தின் கதை, நயினைப் புத்த விகாரையின் குருவாகிய சங்கரானந்த தேரரின் கதை, ஐரோப்பிய சூழலில் வாழும் பிரபு, சந்திரமோகன் என்போரது கதை முதலியனவாக இத்துணைக் கதைகள் விரிந்து பரந்து செல்கின்றன. புலம் பெயர் சூழ் நிலையில் முதலில் இந்திய (தமிழக) மண்ணில் குடியேறியிருந்து கொண்டு பலரின் கதைகளும் இம்மையக் கதையம்சத்திற் கலக்கின்றன. பெளத்தசிங்கள பேரினவாதத்தின் குறியீட்டாகக் குணானந்ததேரர் என்பாரின் கதையும் இதில் இடம் பெறுகின்றது. இவ்வாறாக பெருந்தொகையான கதை மாந்தர்களின் வாழ்வியல் அநுபவங்கள் இந்நாவல் ஊடாக நமது காட்சிக்கு வருகின்றது.

இவ்வாறு அமையும் பலரது அநுபவ நிலைகளும் கால அடிப்படையில் திட்டப்பாங்குடன் கதைவடிவம் கொண்டுள்ளன. வரலாற்று நிகழ்வுகளையும் அவற்றின் விளைவுகளான சூழ்நிலை மற்றும் குண நிலை மாற்றங்களையும் கருத்துட் கொண்டு இந்த நாவலின் 21 வருடக் கதை வளர்ச்சி கட்டமைக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் ஒரு வரலாற்று ஆவணமாகவும் இந்நாவலின் கதையம்சம் காட்சிதருகின்றது. பல்வேறு களங்களில் நிகழும் கதைச் சம்பவங்களும் உரையாடல்களும் அவ்வக் களங்களின் இயற் பண்புடன் வெளிப்படுத்தப் பட வேண்டும் என்பதில் ஆசிரியர் தனிக்கவனம் செலுத்தியுள்ளமை தெரிகிறது. இது மேற்படி ஆவணப் பண்புக்கு வலுச் சேர்த்துள்ளது எனலாம்.

3. குறியிட்டுப்பாங்கும் விமர்சன அணுகுமுறையும்

கலை, இலக்கியம் என்பன அநுபவங்கள் மற்றும் உணர்வு நிலைகளின் குறியீடுகள் என்பது பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்ட கருத்து நிலை ஆகும். இவ்வகையில் இந்த ஐந்து நாவலும் குறியீட்டுப் பண்பு கொண்டதாகவே நமக்குக் காட்சி தருகின்றது. கடந்த கால் நூறாண்டுக்கால ஈழத்துத் தமிழரின் வாழ்வியலை – குறிப்பாக அம்மண்ணின் வடபுல மாந்தரின் வாழ்வியலைக் காட்ச்ப்படுத்த முயன்ற இவ்வாக்கம் அவ்வாழ்வியலின் அடி நாதங்களாகத் திகழ்ந்த உணர்வோட்டங்களைப் பிரதிபலிக்கும் வகையில் குறியிட்டுப் பாங்கான கதை மாந்தரை எம்முன் நிறுத்துவது தெரிகின்றது. மேற்படி உனைவோட்டங்கள் ஒன்றோடொன்று மோதி முரண்படும் நிலைகளைக் காட்டும் வகையில் உரையாடல்களையும் விவாதங்களையும் ஆசிரியர் அமைத்துச் செல்வதை உய்த்துணர முடிகிறது.

குறிப்பாக ராஜி என்ற கதாபாத்திரப் படைப்பு சமகாலத் தமிழ் மக்களின் மனசாட்சியின் வெளிப்பாடாக அமையக்காணலாம். பல்வேறு பேச்சு வார்த்தைகள், ஒப்பந்தங்கள், அரசியல் நலவடிக்கைகள் என்பவற்றில் தோல்வி கண்ட பின்னரே ஈழத்துத் தமிழினம் ஆயுதம் ஏந்தும்போராட்ட நிலைக்குத் தள்ளப்பட்டது என்பது வரலாறு. அவ்வாறு போராட்ட நிலைக்கு அது பரிணாமம் பெற்ற போது தமிழருக்கான தனி நாடு அல்லது அதற்கு நிகரான சுயநிர்ணய உரிமை கொண்ட ஒரு ஆட்சி நிலை என்பன அதன் மையக் குறிக் கோள்களாக அமைந்தா என்பது வெள்ப்படை. அக்குறிக்கோள்களை எய்துவதற்கான போரில் உயிர்த்தியாகம் செய்யும் இளைய தலைமுறையொன்றைத் தோற்றுவித்த இத்தமிழினம், அத்தலைமுறையின் வீரத்திலும் தியாகத்திலும் பெருமதிப்பு வைத்துப் போற்றியது.

போராட்ட இயக்கங்களில் ஈடுபட்டவர்கள் சிலர் தம்முன் முரண்பட்டுச் சகோதரக் கொலைகள் நிகழ்த்திய போதும் அனைத்துலகமட்டத்தில் கடத்தல் முதலிய செயற்பாடுகளில் வழிதவறிச் சென்ற போதும் ஈழத் தமிழினம் மனம் கலங்கியது. உண்மையான தியாக வீரத்தை மட்டும் போற்றிப் பேணுவதில் கவனம் செலுத்தியது. அண்மைக்காலம் வரையான போராட்ட வரலாற்று சூழலின் ஈழத்தமிழினத்தின் மனசாட்சி இதுதான்.

தனது இளம் பருவ் வாழ்வியல் அபிலாசைகள் பலவற்றில் தொடர்ந்து தோல்விகண்ட ராஜி ஒரு குறித்த கட்டத்திலே விடுதலைக்கான போரின் தியாகவீரத்தின் மீதான தனது மதிப்பை வெளிப்படுத்துகிறாள்: போர்ச்சூழலிற் பாதிப்புற்றவர்களின் சேவையில் தன்னை ஈடுபட்டுத்திக் கொள்கிறாள். வழிதவறிச் சென்ற சுதன் தனது எழுதப்பட்ட கணவனாக இருந்த போதும் கூட அவனை நிராகரிப்பதில் அவள் காட்டிய உறுதிப்பாடும் போர் மறவனான யோகேஷ்க்கு ஒரு நாள் அவள் தன்னைக் கொடுத்த உணர்ச்சிகரமான கட்டமும் அகதிகளின் சேவையில் அவள் தன்னை இணைத்துக் கொண்ட செயற்பாடும் அவளை ஈழத் தமிழினத்தின் மனசாட்சியின் குறியீடாகக் காட்டி நிற்பன.

வழிதவறிச் சென்ற சுதன் தன்னை மறுமதிப்பீடு செய்து திருந்தி மீண்ட போது ராஜி நீண்ட யோசனையின் பின் அவனை எற்றுக் கொள்கிறாள். இது இழத்தமிழர் சமூகம் ஒரு அநுபவ நிலையில் எய்திய முதிர்ச்சியை உணர்த்துவது எனலாம்.

சுதனுடைய வழிதவறிய செயற்பாடுகள் மற்றும் ராஜியின் தம்பியாகிய ராஜேந்திரனின் சட்டத்துக்குப் புறம்பான தொழில் முறைகள் என்பன போராட்டச் சூழலில் திசைமாறிப் போன பலரைப் பற்றிய குறியீடுகளாக அமைகின்றன.

பொதுவாகவே பொருளீட்டும் ஆர்வத்தில் வெளிநாட்டுப் பயணத்தில் ஆர்வம் கொண்டிருந்த ஈழத்தவர் பலர் போராட்ட உணர்வெழுச்சிச் சூழலில் தமது அந்நோக்கைச் செயற்படுத்திக் கொண்டனர்; தமிழகத்துக்கு அகதிகளாக வந்தடைந்து அங்கிருந்து கொண்டே மேலை நாடுகளுக்கான பாதைகளை அமைத்துக் கொண்டனர். இத்தகைய பொருள் சார் முனைப்புடன் செயற்பட்ட தமிழர் சமூகத்தின் குறியிடுகள் எனத்தக்க வகையில் தம்பி ராஜா, ஷீலா-மாலா-சேனன் குடும்பத்தினர் நமது கவனத்துக்கு வருகின்றனர்.

வாதம் சூழல மற்றும் விடுதலைப் போராட்ட உணர்வுச் சூழல என்பவற்றின் மத்தியில் வாழ்ந்து கொண்டே மனித நேயத்தைப் பேனவும் நியாயத்துக்குக்காகக் குரல் கொடுக்கவும் தயாராக இருந்த ஒரு சமூகம் திரவியாகவும் சங்கரானந்த தேரராகவும் அனில் ஐயா ஆகவும் இந்நாவலில் நம் காட்சிக்கு வருகின்றது. போரட்டச் சூழலின் ஈழத்துப் பொதுமனித அவலம் இவ்வாறான பாத்திரங்களின் உணர்வுகளுடாகப் பதிவு பெறவும் காணலாம்.

மேலை நாடுகளிலும் இந்திய – தமிழக – மண்ணிலும் வாழும் புலம் பெயர் தமிழர்கள் தம் க்லாசார அடையாள்த் தேடலின் செயல்வமவங்களாக கருத்தரங்குகளையும் மகாநாடுகளையும் திட்டமிடுகின்றார்கள். இவற்றின் ஊடாக ஈழத்துத் தமிழினத்தின் பண்பாட்டுச் சிந்தனைகள் புதிய பரிணாமங்களை எய்துகின்றன. இவற்றை உணர்த்துவதற்கான வகை மாதிரிப் பாத்திரங்காளாகவே பிரபு, சந்திரமோகன் மற்றும் ஆனந்தி முதலிய கதாபாத்திரங்கள் நாவலில் காட்சி தருகின்றன. இவ்வறான கலாசார முயற்சிகள் தமிழீழம் என்ற அறவியற் கருத்து நிலையை உள்ளடாக்கியனவாக அமைய வேண்டுமா ?. வேண்டாமா ?. என நீண்ல் விவாத்ங்கள் நடைபெற்றுள்ளன. இப் பாத்திரங்களின் செயற்பாடுகளுடாக இந்த வகையான விவாதங்களும் இந்நாவலில் இடம்பெறுகின்றன.

இவ்வாறான விவாதங்கள் ஊடாக சமகால ஈழ விடுதலைப் போர் மற்றும் அதில் முன்னிற்பவர்களின் செயன் முறைகள் தொடர்பான விமர்சனங்களும் நாவலில் தலை காட்டுகின்றன. போர் என்பதே முடிந்த டிபாக அமைய முடியுமா ?. யுத்தத்தின் வளர்ச்சி யுத்தவெறியாக அமைய வேண்டுமா ?. என்ற வகையிலான கருத்தோட்டங்களையும்

வினாக்களையும் மையப்படுத்தி விவாதங்கள் நிகழ்கின்றன. குறிப்பாக அனைத்துலகில் – மேற்கு நாடுகளில் – புலம்

பெயர்ந்துறைந்து வாழ்ந்தவர்கலின் அடுத்த தலைமுறை இவ்வினாக்களை முன்வைப்பது குறிப்பிடப் பட வேண்டிய ஒன்றாகும். இப்பரம் பரையின் வகை மாதிரிப் பாத்திரமாக இந் நாவலின் ஈற்றில் அறைமுகமாகும் ஆனந்தி என்ற பென் ஒரு வகையில் சமகால ஈழத் தமிழினத்தின் மனசாட்சியின் குரலாகவும் அதே வேளை நாவலாசிரியரின் ஆத்மாவின் குரலாகவும் ஒலிப்பதாக நான் கருதுகிறேன்.

இயக்கப் போராட்டங்களுக்காக கலாசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுப் பணம் சேர்த்து அனுப்பியவள் இப் பேண். இவ்வாறு போராட்டாத்தை சூதரித்த ஒரு இளம் தலைமுறை இலங்கை நாட்டைக் காண விழைகின்றது என்பது ஆசிரியர் இந்நாவலில் அழுத்தமாகத் தெரிவித்துள்ள ஒரு முக்கிய செய்தியாகும். தமிழீழமும் ஸ்ரீலங்காவும் இணைந்த ஒரு பெரு நிலைப்பரப்பாகிய இலங்கை அமைதி நிலவும் மண்ணாக மாற வேண்டும் என்பது நாவலின் தொனிப் பொருளாக அமைகிறதா ?. இந் நாவலைப் படித்தபின் என்னுள் எழும் வினா இது. இது மேலும் சிந்திப்பதற்குரியது.

4. நிறைவாக..

1200 பக்கங்களுக்கு மேலே விரிந்து செல்லும் இப்படைப்பாக்கத்தைப் பற்றியச் சில பகங்களுல் முழு நிலையில் திறனாய்வுரை எழுதுவது சாத்தியமில்லை. எனவே திறனாய்வுக்கு அடிப்படையான சில முக்கிய கூறுகள் மட்டுமே முன்னைய பக்கங்களில் தொட்டுக் காட்டப்பட்டன. எதிர் காலத்தில் இந்நாவல் பற்றி நான் எழுத் கூடிய ஒரு முழு நிலைத் திறனாய்வுரைக்கான முன்னீடாகவே இதனை வாசகர் முன்வைக்கிறேன். இவ்விடத்த்லே நிறைவுக்குறிப்பாக சில மதிப்பீடுகளைப் பதிவு செய்வது அவசியமாகின்றது.

ஈழத்துத் தமிழ் நாவலிலக்கிய வரலாற்றிலே குறிப்பாக செ. கணேசலிங்கன், கே. டானியல் முதலிய சிலருக்கு முக்கிய இடம் உண்டு. குறிப்ப்ட்ட காலகட்டங்களின் சமுதாய வரலாற்றுச் செல் நெறிகளைத் த்ங்கள் நாவல்களின் பதிவு செய்ய முயன்றவர்கள் அவர்கள். குறிப்பாக சாதி மற்றும் பொருளியல் ஏற்றத் தாழ்வுகள் சார் பிரச்சினைகளை மையப் படுத்தி அவர்கள் சமூதாய வரலாற்றை நோக்கியவர்கள். மார்க்கிய சார்பான சமூக நோக்கு அவர்களது எழுத்துக்களின் இயக்குவிசையாக அமைந்திருந்தது. இவ்வகையில் கணேசலிங்கனின் நீண்ட பயணம், செவ்வானம் முதலியன டானியலின் பஞ்சமர் வரிசை நாவல்களும் – குறிப்பாக கானல், அடிமைகள் – வரலாற்றில் நிலைத்த இடம் பெறும் ஆக்கங்களாகும்.

இவர்களை அடுத்த சமூகவரலாற்றைக் கருத்துட் கொண்ட படைப்பாளிகளில் முக்கியமான ஒருவராகத் தேவகாந்தன் வரலாற்றில் இடம் பெறுவார் என்பதை உறுதி செய்து அமைவது இந்த கனவுச்சிறை மகாநாவல். பேரினவாத இனக் கொலைச் சூழலின் தமிழர் பிரச்சினைகளும், போராட்டச் சூழலின் அவலங்களும், புலம் பெயர் சூழல்களின் அநுபவங்களும் பெருந்தொகையான படைப்பாளிகளால் எழுத்து வடிவம் பெற்றுள்ளன என்பதை இத்தொடர்பில் நாம் மனதிற் கொள்ள வேண்டும். இவ்வகைப் படைப்பாளிகள் பலருள்ளும் முதல்வரிசைக் கணிப்புக்கு உரிய ஒருவராகத் திகழ்பவர் என்ற கணிப்பை இந் நாவல் தேவகாந்தனுக்குத் தரப் போகின்றது என்பதே எனது மேற்படி கணிப்பின் தொனிப் பொருளாகும்.

தேவகாந்தனது படைப்பாற்றலின் முக்கிய அம்சம்களிலொன்று அவரது முன்நிபந்தனைகட்கு உட்படாத – கொள்கைத் திட்டங்களுக்கு உட்படாத – மனித நேயப்பார்வை. பிரச்சினைகள் பலவற்றையும் அவற்றின் இயல்பான தளத்தில், இயல்பான கோணத்தில் இவர் நோக்குகிறார். ஒவ்வொன்றின் நுணுக்க விவரங்களையும் கவனத்துட்கொள்கிறார். அவற்றின் காரண பார்வையால் இவரது படைப்புக்களுக்கு இயற்பண்பு, யதார்த்தம் என்பன பொருந்தியனவாக வெளிப்படுகின்றன.

இந்த நாவலைப் பொறுத்தவரை தேவகாந்தன் அவர்கள் ஒட்டு மொத்த ஈழத்தமிழர் சமூதாயத்தையும் (கிழக்கிலங்கை மற்றும் மலையகம் நீங்கலாக) ஒரு கதையம்சத்தில் பொருத்திநோக்க முற்பட்டிருப்பது தெரரிகிறது. மலையகம் சார் பாத்திரமொன்று இந்நாவலில் நம் காட்சிக்கு வந்துள்ளதெனினும் மலையக வாழ்வியல் இந்நாவலில் கவனத்திற் கொள்ளப் பட்டதாகக் கூறமுடியாது. எனவே வடபுலம் சார்ந்த ஈழத்தமிழர் சமுதாயமும் அதன் புலம் பெயர் – புகலிட்வாழ்வியலுமே இவரது பார்வைப் பரப்புக்குள் வருகின்றன. சமகாலப் படைப்பாளிகளில் வேறு எவராவது இவ்வாறு சமகால ஈழவாழ்வியல் மற்றும் புகலிட வாழ்வியல் என்பவற்றை ஒரே கதையம்சத்தில் இவ்வளவு விரிவாக நோக்க முற்பட்டுள்ளார்களா என்பது தெரியவில்லை. அவ்வகையில் தேவகாந்தனது இப்படைப்பு ஒரு வரலாற்றுச் சாதனை எனக் கணிக்கப்பட வேண்டியதாகின்றது.

இந்த நாவலைப் படைப்பதற்கு தேவகாந்தன் அவர்கள் மிகச் பேரிய டளவு தயாரிப்பு முயற்சிகள் மேற்கொண்டிருப்பார் என்பதை இந் நாவலை வாசிப்போர் உணரமுடியும். திரட்டிய தகவல்கள் அனைத்தையும் ஒரு நாவற்கட்டமைப்புக்குள் கொண்டுவர அவர் முயன்றுள்ளார் எனத் தெரிகின்றது. நாவல் ஆயிரம் பக்கங்களுக்கு மேல் விரிந்து செல்வதற்கு இது ஒரு காரணம் எனலாம். இன்னொரு முறை இந் நாவல் திருப்பி எழுதப்பட முடியுமாயிருப்பின் வடிவச் செம்மை நோக்கில் பக்கங்கள் குறையலாம்.

தேவகாந்தன் அவர்கள் தாம் இந்த நாவலைப் படைத்தமைக்காக மனநிறைவு அடையலாம். பல ஆண்டுகளாக எழுத்துத்துறையில் ஈடுபட்டு வந்துள்ள அவர் தமது வாழ் நாட்சாதனையாக இதனைப் படைத்துள்ளார்.

இந்த நாவலுக்கு ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கிய இடம் உண்டு. ஈழத்துத் தமிழிலக்கியத்தின் ஒரு வளர்ச்சி நிலையான புலம் பெயர் இலக்கிய வரலாற்றிலும் நிலையான இடம் இதற்குக் கிடைக்கும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்த மகா நாவல் சமகாலத் த்மிழகத்தின் தரமான முதல் வரிசைப் படைப்பாக்கங்களுடன் வைத்துக்கணிக்கப் படக்கூடிய தகுதி கொண்டது.

(முற்றும்)

(கோவையில் 22/09/02 இல் விஜயா பதிப்பகம் சார்பில் நடைபெற்ற விமர்சனக் கூட்டத்தில் வாசிக்கப்பெற்ற கட்டுரை)

Series Navigation

முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் நா.சுப்பிரமணியன்

முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் நா.சுப்பிரமணியன்