தேர்தல் 2004 (தொடர்ச்சி) – முதல் 3 தோல்விகள்

This entry is part [part not set] of 46 in the series 20040520_Issue

நாக.இளங்கோவன்


—-

இந்தியா ஒளிர்கிறது என்றார்கள் பா.ச.க வினர். பலர் உண்மை என்றார்கள்;

பலர் இல்லை என்றார்கள். நான் கூட இருமுகிறது என்றேன். ஆனால்,

இந்தியா ஒளிர்கிறது என்று பா.ச.க சொன்னதில் எந்தச் சேதியுமே

இல்லை; அது பா.ச.க கிளப்பி விட்ட ‘புரளி ‘. ஒரு புரளிக்குப் போய் உண்டு/இல்லை

என்று வாதிடுகிறோமே, வாதிடுகிறார்களே என்று எண்ணிய போது நகைப்புதான் வருகிறது.

இந்தத் தேர்தலில், சோனியா வெளிநாட்டுக் காரர் என்பதை மட்டுமே வைத்து

பா.ச.க வாக்கு கேட்டது. வெளிநாட்டுக் காரர் என்று உள் நாட்டில் அமைந்து

விட்ட சோனியாவை ஆளவிடலாமா என்று கேட்டதற்கு,

‘அதில் ஒன்றும் தப்பில்லை; உங்களை விட அவர் பரவாயில்லை ‘

என்று மக்கள் சொல்லியிருக்கிறார்கள்.

ஆமாம் – இந்தியாவுக்குள் இருந்து கொண்டு, தம்மைவிட வலு குறைந்த

இந்தியர்களான சிறுபான்மைச் சமூகத்தினரோடு எந்நேரமும் போர் தொடுப்பதையே

குறிக்கோளாகக் கொண்டும், தம்மை எங்காவது எதிர்த்தால், தீயில் கொளுத்துவதையும்

சூலத்தால் குத்திக் கிழிப்பதையும் வாடிக்கையாகக் கொண்ட பா.ச.க பரிவாரத்தைவிட

இதை செய்யக் கூடியவர் அல்ல என்று நம்பக் கூடிய அடிப்படையில் சோனியா பிரதமராவதில்

என்ன பிழை இருந்து விடப் போகிறது ?

நரேந்திரமோடியின் ‘குசராத் வதத்தை ‘ வரலாறு தவற விடாது.

தம்நாட்டு மக்களை வதைக்கின்ற, பகையாகக் காண்கிற பா.ச.கவிற்கு

சோனியாவை ஆளத் தகுதியில்லாதவர் என்று சொல்ல உரிமை எங்கிருக்கிறது ?

பா.ச.க, இத்தாலிப் பெண்மணி ஆளக்கூடாது என்று சொன்னதை யாரும் பொருட்படுத்தவில்லை.

ஆனால், அந்த இத்தாலிப் பெண்மணி, ‘பா.ச.கவின் கொள்கைகளால், இந்தியாவின்

தேச ஒற்றுமைக்கு ஊறு வரும் ‘ என்று அழுத்திச் சொன்னதை மக்கள் தெளிவாகப் புரிந்து

கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

இந்தத் தேர்தலில் மொத்தம் மூன்றே தோல்விகள்தான் மிக முக்கியமானவை.

முதலும் தலையும் ஆனதாகக் கொள்ளலாம் என்றால், அது பா.ச.க அரசின்

கல்வி மந்திரியாக இருந்த ‘முரளி மனோகர் சோசி ‘ யின் தோல்வி.

வஞ்சக உணர்வோடு, இந்தியாவின் வரலாற்றையே மாற்றி, திரித்து

எழுதி வைப்பதையும், கல்வியை காவி வண்ணமாக்கி, சமக்கிருத மயமாக்குதலையும்

பணியாகக் கொண்ட சோசி அவர்கள் பா.ச.கவின் ஏமாற்று அரசியலுக்கும்

இனவெறி அரசியலுக்கும் சான்று ஆவார்.

இரண்டாவது தோல்வி, குசராத்திலும் பீகாரிலும் பா.ச.கவின்

குறைந்து போன வெற்றிகள். மோடியின் லீலைகள் புரிந்து கொள்ளப் பட்டதும்,

லல்லுவின் தேவை உணரப்பட்டதுமே இதற்குக் காரணம். கர்நாடகத்தில் கூட

ஆட்சிக்கு எதிரான அலை வீச, பீகாரில் ஆட்சிக்கு ஆதரவாகவே அலை

வீசியிருக்கிறது.

மூன்றாவது தோல்வி, பா.ச.கவின் முதிர்வற்ற நரி குணத்திற்கு கிடைத்த தோல்வி;

தனது அரசுக்கு ஒரு நிலைத்த ஆதரவை, தன் கொள்கையை மீறி,

திராவிடக் கட்சிகள் பா.ச.க அரசுக்கு அளித்தும், அவர்கள் செயலலிதாவால்

அளவு கடந்த கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டும் கூட, ஒரு சிறு அசைவைக் கூட

காட்டாத அந்த பா.ச.கவின் சுயநல நரித்தனத்திற்கு தமிழ் நாட்டில் கிடைத்த

தோல்வி. இப்பொழுது புரியும் பா.ச.கவிற்கு – தமிழ்நாட்டில் தனது

கூட்டணி தர்மத்திற்கு எதிராக, கூட இருந்தே குழி பறித்த அந்த

குணத்திற்கு கிடைத்த பரிசு.

கருணாநிதி தாக்கப் பட்டது, வைகோ, பழ.நெடுமாறன் போன்றோர்

கொடுஞ்சிறையில் அநியாயமாகத் தள்ளப் பட்டது, தமிழ் அர்ச்சனைகளுக்கு

எதிராக சங்கரக்குரல்கள் ஒலித்தது போன்றவைகள் மற்றும் இன்னபிற

தமிழ் நாட்டு வரலாற்றில் பா.ச.கவின் பங்காகவே காணப்படும்.

தேர்தல் முடிவுகளில், பா.ச.க கூட்டணிக்கும், பேராயக் கட்சிக் கூட்டணிக்கும்

இடையேயான அந்த இடைவெளி வெறும் 30 இடங்கள்தான். அந்த முப்பது இடங்கள்,

மிகச் சரியாக திராவிட, தமிழ்க் கட்சியினர் தமிழ்நாட்டில் பெற்ற இடங்கள்.

கலைஞரை அடித்தது, பொடாவின் கொடுங்கரங்கள் நீண்டது போன்ற

எல்லாவற்றிற்கும் வேடிக்கை பார்த்து விளையாட்டுக் காட்டி வந்த

பா.ச.க தம் கூட்டணிக் கட்சியினரை கண்ணியமாக நடத்தியிருந்தால்,

இன்று, இந்த 30 இடங்கள் இடம் மாறி யிருக்கும். ஆனால், கூடவே வைத்துக் கொண்டு

கயமைத்தனத்துடன் நொண்டிச் சாக்குகளோடும், நடந்து கொண்ட பா.ச.கவிற்கு

தக்க பாடத்தை தமிழ்க்கட்சிகள் தந்திருக்கின்றன என்றால் அது மிகையல்ல.

கூட்டணியில் இருந்து தி.மு.க விலகியபோது, இல.கணேசன் ‘பழையன கழிதலும்,

புதியன புகுதலும் ‘ என்று ஒரு தரம் தாழ்ந்த வருணனையைச் செய்தார். தற்போது

அவருக்குப் புரியும், பா.ச.க எடுத்துக் கட்டிக் கொண்டது புதியன அல்ல,

பழைய கந்தலையே அதுவும் கசக்காமலே எடுத்துக் கட்டிக் கொண்டனர் என்பது.

வெங்கைய நாயுடுவின் ‘300 இடங்கள் ‘ என்ற கனவில் அனைவரும் மயங்கிக் கிடந்தனர் போலும்.

திமுகவும், மதிமுகவும், பாமகவும் கிழிந்த துணிகளா என்ன- பழையன கழிதல் என்று சொல்ல ?

கூட்டணிக் கட்சிகளை நாகரிகமற்ற முறையில் பேசிய, நடத்திய இந்தப் போக்கின் விலையை

கட்டாயம் பா.ச.க கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கும்.

கணக்கை, திமுக வெளியே வந்த கடந்த திசம்பர்-20 முதல் மறக்காமல் கொஞ்ச

நாளைக்கு பார்த்துக் கொண்டிருக்கும் பா.ச.க.

—-

elangov@md2.vsnl.net.in

Series Navigation

நாக.இளங்கோவன்

நாக.இளங்கோவன்