தேரா மன்னா! செப்புவது உடையேன்!

This entry is part [part not set] of 41 in the series 20060616_Issue

நாக.இளங்கோவன்


————————–
சன்னல் பதிவில் மாலனின் பகுத்தறிவு வெள்ளமாய் ஓடுகிறது.
அதுவும் கண்ணகி என்றவுடன் கரைபுரண்டு காட்டு வெள்ளமாயும் ஓடுகிறது.
(http://jannal.blogspot.com/2006/06/blog-post.html )

சிலப்பதிகாரம் பெருமிதம் கொண்ட காவியம் என்கிறார்.
அதில் உள்ள பல கூறுகளைப் பெருமிதம் என்கிறார்.
காவுந்தி அடிகள் முதல், அக்காப்பியத்தில் வரும் புல் பூண்டு வரை எல்லாமே

பெருமிதம் என்கிறார் மாலன். எல்லாவற்றையும் விட அதன் ஆசிரியர்

இளங்கோவடிகளை மிகவும் போற்றுகிறார் மாலன். ஆனால் அக்காப்பியத்தின்

தலைவி கண்ணகி மட்டும் இவருக்கு ஆக மாட்டேன்கிறாள் 🙂

முரண்பாடு!

இவரின் பார்வையில் கண்ணகி என்ற பாத்திரம் மோசம்! ஆனால்
அதனை ஆக்கிய படைப்பாளியும், காவுந்தியடிகள் முதல்
வேண்மாள், செங்குட்டுவன், கயவாகு வரையிலான கண்ணகியைப் போற்றும்

அத்தனைப் பாத்திரங்களும் மாலனுக்கு உயர்வு. முரண்பாடு!

>>மாலன் எழுதியது<<< கவுந்தி அடிகள் குரல் அவரது குரல்தான் என்றால் அதில் காணப்படும் முதிர்ச்சிக்காகப் பெருமிதம் கொள்ளலாம். >>>>>>>>>>>>>>>>>>
காவுந்தி அடிகளாரை அவரின் முதிர்ச்சிக்காகப் பெருமிதம் கொள்ளலாம்
என்று சொல்கிறார் மாலன். உண்மைதான். அவர் ஒரு உயர்ந்த
கதாப்பாத்திரம். “காவுந்தி அடிகள் என்ற அந்த உயர்ந்த பெண்மணிதான்
கண்ணகி அம்மையை மிக உயர்வாகப் போற்றியவர்.”

சிலம்பில் காவுந்தியாரின் குரல்தான் இது:

“இன்துணை மகளிர்க்கு இன்றியமையாக்
கற்புக் கடம் பூண்ட இத்தெய்வம் அல்லது
பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலமால்;”

கண்ணகிக்கு “கற்புக் கடம் பூண்ட பொற்புடைத் தெய்வம்” என்ற
வடிவத்தைக் கொடுப்பதே காவுந்தியாரின் குரல்தான்!

கண்ணகியின் உயர்ந்த குணநலன்களைக் கொண்டு,
அவளை கற்புக்கரசியாகவும், தெய்வமாகவும்
காப்பியத்தில் வடிவம் கொடுக்கும் இளங்கோவடிகளார்,
அதை முதலில் செய்தது, காவுந்தியடிகள் என்ற பாத்திரத்தின்
மூலம்தான்!

அதேபோல அவளுக்கு காவுந்தி அம்மையாரும், அடிகளாரும்
கற்புக்கரசி வடிவமும் தெய்வ வடிவும் கொடுத்தது, கோவலன்
மறைவுக்கு முன்னாடியே!

அப்பொழுது கண்ணகி நீதி கேட்டிருக்க வில்லை!
நெடுஞ்செழியன் மாண்டிருக்கவில்லை!
மதுரை எரிந்திருக்க வில்லை!
கண்ணகியும் மாண்டிருக்கவில்லை கோவலனும் மாண்டிருக்கவில்லை!

அப்படி கண்ணகியைத் தாங்கிய காவுந்தியார் உயர்ந்தவராம்;
உயர்ந்த காவுந்தியார் தாங்கிய கண்ணகி அப்படியெல்லாம்
இல்லையாம் – மாலன் சொல்கிறார். முரண்பாடு!

உயர்ந்தோர் ஏற்றுவது எப்பொழுதும் உயர்வையேதான்!
காவுந்தியம்மை உயர்ந்த குணம் உடையவர்.
அவரால் கண்ணகியை மிக உயர்வாகப் பார்க்க முடிந்திருக்கிறது.

ஞாநிகளுக்கும், மாலன்களுக்கும் அது ஏனோ முடியாமற் போயிருக்கிறது.

படைத்தவனை விடவா பாத்திரம் பெரிது? என்று கண்ணகிக்கு பதில்
இளங்கோவடிகளைப் போற்றலாமே என்று பரிந்துரைக்கிறார்.
மணிமேகலைக்கு சிலை வைத்திருக்கலாமே என்றெல்லாம் புலம்புகிறார்.

மணிமேகலைக்கோ, இளங்கோவடிகளாருக்கு சிலைகள் வைத்தால்
போற்றினால் மேலும் மகிழ்ச்சிதான். ஆனால் கண்ணகிக்கு வைத்தது
தவறு என்ற இவரின் வாதம் முரண்பாடுகள் நிறைந்தது – அடிப்படைக்
குறைகள் கொண்டது.

வேண்டுமானால் மாலனும் ஞாநியும் ஆத்திரேலிய கிரிக்கெட்
அணியின் “சேண் வார்னே”யின் முன்னாள் பெண்டாட்டிக்கு
சிலை வைத்துக் கொள்ளட்டும். நாம் வேண்டாம் என்று சொல்லவில்லை.

அதேபோல, தன் கணவனால் பாதிக்கப் பட்டவுடன் கொதித்தெழுந்து
பல வீர தீரங்கள் செய்த சிவகாசி செயலட்சுமிக்கு சிலை வைத்துக்
கொள்ளட்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை.

>>>>மாலன் எழுதியது<<<<<< கணவன், வேறு ஒரு பெண்ணின் பால் ஈர்க்கப்பட்டு அவள் வீடே கதி என்று பல ஆண்டுகள் கிடந்த போது கண்ணகி வருந்தி அழுதாளே தவிர, அவளை விட்டு விலகி வாழ்வதைக் குறித்து எண்ணிக்கூடப் பார்க்கவில்லை >>>>>>>>>>>>>>>>>>>>>>>

ஞாநி செய்த அதேத் தவறை மாலனும் செய்திருக்கிறார்.
கண்ணகியை விட்டு, கோவலன் “பல ஆண்டுகள்” பிரிந்திருந்ததாகச்
சொல்கிறார். அது தவறு என்றும் ஓராண்டுக்குக் கீழேதான் பிரிவின் காலம்
என்று திரு.ஞாநிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

முனைவர் இராம.கி ஐயா, பல படிகள் மேலே போய், ஒரு ஒப்பற்ற
சிலப்பதிகார ஆய்வை, பல தளங்களில் நின்று செய்து, மாதவியுடனான
வாழ்வு ஒரு வருடம் அல்லது அதற்கும் கீழே என்று விவரித்திருக்கிறார்.

சிலப்பதிகாரத்தையும் கண்ணகியும் விமர்சிக்கும் முன்னர் ஒவ்வொருவரும்
valavu.blogspot.com டுரைகளை அவசியம் படிக்கவேண்டும்.

மாலனும் ஞாநியும் இவ்வாய்ப்பை நிச்சயம் தவறவிடமாட்டார்கள்
என்று நம்புகிறேன்.

கண்ணகியின் கணவன் கொலை செய்யப்பட்டதற்கு மதுரையில்
ஏன் அத்தனை பேர் சாவதற்குக் காரணம் ஆக வேண்டும் என்று
கவலைப்படுகிறார். அப்படிப் பட்டப் பெண்மணி மூர்க்கத்தனமானவள்
அல்லவா? என்கிறார்.

அசோகவனத்தில் சீதையை, தேடிக் கண்டுபிடித்து விடுகிறார் அனுமன்.
வாம்மா, தங்களைக் கொண்டு போய் இராமனிடம் சேர்த்து விடுகிறேன்
என்று சொல்கிறார் அனுமன்.

மாலன் மற்றும் பலரின் வினாவையும் ஒப்ப நாமும் வினா வைத்தால்,
இப்படித்தான் கேட்கத் தூண்டும்.

“ஏம்மா சீதா!, அனுமன் கூப்பிட்டானே, அவன் கூடப் போய்
இராமனைச் சேர வேண்டியதுதானே… “! என் கணவனின் வில்லுக்கு அது
இழுக்கு” என்று வசனம் பேசி விட்டு நீ பாட்டுக்கு
உட்கார்ந்திருந்ததால்தான் பல வானரங்கள், கரடிகள், மற்றும் இலங்கை
வாழ் அத்தனை பேரும் செத்தார்கள்?! இது ஞாயமா என்று கேள்வி
கேட்கத் தூண்டும். இப்படி யாரும் கேள்வி கேட்டு விட்டால் உடனே
அவர்களுக்குக் கருப்புச் சட்டை போட்டு விட்டு, திராவிடம், தமிழ்,
பெரியார், நாத்திகம், வெறி, என்று வாய்க்கு வந்தபடி கரித்துக்

கொட்டுவார்கள் பல எழுத்தாளார்கள்.

இளைய தலைமுறை கற்றுக் கொள்ள என்ன இருக்கிறது கண்ணகியிடம்
என்று வினா வைக்கிறார் மாலன்!

மாலன், ஞாநி போன்ற முதிய/மூத்த தலைமுறைகள் சிலப்பதிகாரத்தைச்
சரியான தளங்களில் இருந்து பார்க்கத் தவறி,
பாண்டியன் நெடுஞ்ச்செழியனின் காவலர்கள் போல
“இளைய தலைமுறைக்கு ஒன்றுமேயில்லை
கண்ணகியிடம் இருந்து” என்று, சிலப்பதிகாரத்தைத் தீர ஆயாமல்,
தீர்ப்பை எழுதிவிடுவது நிற்குமானால் இளைய தலைமுறைக்கு
நிறைய பயனளிக்கும் என்று நிச்சயமாகச் சொல்லலாம்.

சிலப்பதிகாரத்திற்கும் மாலன்,ஞாநி கட்டுரைகளுக்கும் ஒரு ஒற்றுமை
இதுதான். சிலப்பதிகாரத்தில் பாண்டியன் நெடுஞ்செழியனின் காவலர்கள்
தீர ஆயாமல், விசாரிக்காமல் கோவலனைக் கொன்று விடுகிறார்கள்.

மாலனும் ஞாநியும் சிலப்பதிகாரத்தைத் தீர ஆய்வு செய்யாமல்,
தவறான செய்திகளைத் தங்களின் மதிப்பிற்குரிய வாசகர்களுக்குச்
சொல்லி கண்ணகியைக் கொன்று விடுகிறார்கள்.

காவலர்கள் கோவலனைக் கொன்றது அக்காலம்!
எழுத்தாளர்கள் கண்ணகியைக் கொல்வது இக்காலம்!

அக்காலத்திலும் சரி, இக்காலத்திலும் சரி “தீர ஆய்வு அல்லது தேவையான
ஆய்வு” என்பதனைச் செய்பவர்கள் குறைவாகத்தான் இருக்கிறார்கள்!

மாணவர்கள் முதல், பெரியவர்கள் வரை சிலப்பதிகாரத்தைக் குறித்து
ஏதாவது பேசினால் உடனே வரும் சிலம்பு வரி,
“தேரா மன்னா! செப்புவது உடையேன்!”.

அவ்வரியையே மாலன் அவர்களையும் ஞாநி அவர்களையும்
நோக்கிச் சொல்ல வேண்டியிருக்கிறது.

அன்புடன்
நாக.இளங்கோவன்
15/சூன்/06

Series Navigation

நாக.இளங்கோவன்

நாக.இளங்கோவன்