தேய்பிறைக் கோலம்!

This entry is part [part not set] of 29 in the series 20060303_Issue

சி. ஜெயபாரதன், கனடா


அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில்
முற்றுப் பெறாத தேனாறு மீது,
சுற்றி வந்தோம் சொர்க்கப் படகில்!
வளர்பிறைக் காலம்!
வசந்த காலம்!
எமக்குள் முளைத்த
ஒற்றுமை வேர்களைக்
கற்றுக் கொண்டு கதைகள் பேசினோம்!
வெண்திரைப் படம் பார்த்து
கண்ணால் கவி பாடி,
மண்ணில் கால் படாது,
தாகம் மிகுந்து
மோகத் தெப்பத்தில் மூழ்கினோம்!
விதியின் ஆசியால் முடிந்த தெங்கள்,
அதிசயத் திருமணம்!
தேனிலவில் தடம்வைத்து,
சொர்க்க புரியின் உச்சியில் ஏறிய பின்
தர்க்க புரியில் இறங்கினோம்!
கரு நிலவின் நிழல்
காலைச் சுற்றிக் கொண்டது!
எமக்குள் தீ மூட்டும்
வேற்றுமைத் தேனீக்கள்
சீறிக் கொண்டு போரிடக் கிளம்பின!
சேயிழைக்கும் காயம்!
நாய கனுக்கும் காயம்!
தேய்பிறைக் கோலம்!
முறிந்த தெங்கள் பாலம்!
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவில்
முற்றுப் புள்ளி உதயம்!
அத்தமிக்கும் கருவானில்
தொத்தி வரும் புதுநிலவு!

++++

jayabarat@tnt21.com [S. Jayabarathan (Feb 26, 2006)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா