தேம்ஸ் நதியின் புன்னகை

This entry is part [part not set] of 33 in the series 20080313_Issue

வ.ஐ.ச.ஜெயபாலன்


பாலத்தின்கீழே
வாழிய தேம்ஸ் நதியே என்றபடி இறங்கியபோது
`நீர் லில்லி` இலைகள் பரப்பிய உன் கரை
கண்ணாடியாய் நெழிய
அன்னங்களின் கீழே
நீ அன்று தூக்கத்தில் நடந்தாய் தேம்ஸ்.

மென்காற்றில் குனிந்து
வசந்தப் பூ முகம் பார்க்க நெரியும்
கரையோர மரங்களின்கீழ் நடந்துவந்தோம்.
கழுத்தை நெழித்து சிறகை அகட்டி
நீர்மீது ஓடி வான் எழுந்த
அன்னப் பறவை ஒன்றின் கர்வத்தோடு
மோனத் தவத்தில் முகில்களின்மீது
எந்தன் கவிமனசு.
சிறுமியோ நனவுகளின் புல்வெளியில் நடக்கின்றாள்.

நானோ தேம்ஸ் அமைதியின் தேவதை என்றேன்.
”என் அம்மா மாதிரி நம்ப முடியாதவள் மாமா” என்று
அந்தச் சிறுமி உன்னைக் கிண்டல் செய்தாள்..
இதே தேம்ஸ் இதே இதே இதே தேம்ஸ்
வெறிகொண்டு வெள்ளப் பெருக்காய் எழுந்து வந்து
எங்கள் வீட்டு வேலிக்கு உதைத்ததை
நம்புவாயா மாமா எனக் கேட்டாள்.
சின்ன வயதில் உணவுமேசையில்
அடம்பிடித்தபோதெல்லாம்
சாப்பிடு இல்லையேல் தேம்ஸ் நதி மீண்டும்
வீட்டுக்கு வந்திடும் என்று
அம்மா மிரட்டுவாள் என்று சிரித்தாள்
அந்த தேம்ஸ் நதிக்கரையின் நனவான பெட்டை.

ஆயிரம் ஆயிரம் `டாண்டிலியன்கள்` பூத்த
நதிக் கரைப் புல்வெளியில்
அகாலமாய் முற்றி விதைப் பஞ்சான
பூக்களைத் தேடிப் பறித்துப் பறித்து
காற்றினில் ஊதிக் களித்தபடி
பூகளின் தேனையும்
வண்ணத்துப்பூச்சிகளின் சிறகுகளையும்
விலகி விலகி நடக்கிறாள்.
முகில் மலைகளையும் புல் மேடுகளையும்
விலகி விலகி வருகின்ற தேம்ஸ் நதியே
அவள் உன்னுடைய கபிலநிறச் சிற்றருவி.

எப்போதும் தயாராக உனது கதைகளை
தன் இளைய மனம் நிறைத்து வைத்துள்ளாள்.
கொஞ்சக்காலம் இங்கிலாந்தின் மலக்குடலாய்
நாறிய தேம்ஸ் நதி
இன்று துய்மையில் உயிர்த்து
மீண்டும் இங்கிலாந்தின் புன்னகையாய் நெழிகிறதாம்.
இல்லாதுபோன மீன்களும் நீர்நாய்களும்
மீண்டு வந்துவிட்டது மாமா என்று
வீட்டுக்குத் தோழிகள் வந்ததைச் சொல்வதுபோல்
சொல்லிக் குதூகலித்தாள்.

பார் முன்னும் பின்னும் அப்பா அம்மா அன்னங்கள்
பாதுகாப்பாகக் குஞ்சுகள் நடுவே பார் என்று
நேர்கோட்டில் அணி பெயர்ந்த
அன்னக் குடும்ப அழகைக் காட்டியபோது
மலாரா முகத்துடன்
”அன்னங்கள் நல்ல பெற்றோர்கள்” என்றாள்.
இரண்டும் ஒன்றாகக் கூடுகட்டி
இரண்டும் ஒன்றாக முட்டைகளை அடைகாத்து
பாருங்கள் மாமா
இரண்டும் ஒன்றாகக் குஞ்சுகளைப் பேணுகிற பேரழகை
என்கிற போதவள் குரலுடன் மனசும் உடைந்தது.
அப்பா அம்மா பிரிந்தபோது நான்
இக்குஞ்சுகள்போலச் சிறுமி என்றாள்.
பாட்டிதான் என்னை வளர்த்தது என்றாள். .

தேம்ஸின் இரைச்சல் பிடிக்கும் மாமா
என்றவள் கரங்களைப் பற்றி
நதி இரையவும் புலம்பவும் இல்லை என்றேன்.
நதிகள் எப்பவும் காலத்தெருவின்
நாடோடிப் பாடகர்கள் என்றேன்.

தேம்ஸ் நதியின் ஒவ்வொரு திவலையும்
ஒவ்வொரு காலத்தின் பாடலை இசைக்கிறது
சில ரோமானியப் படைகளை எதிர்த்து
ஆங்கில ஆதிவாசிகள் பாடிய
எழுச்சிப் பாடல்களுடன் செல்லும்
வேறுசிலதோ
பைபிளோடு வந்தவர்களின்
முதல் பாடலைப் பாடும்.
இன்னும் சில இசைப்பதோ
இரத்தம் தோய்ந்த வாழ்களோடுயர்ந்த
நாடாளுமன்ற வாதிகளின் போர்ப் பாடல்.
எங்கள் மூதாதைரிடம் யுத்தத்தைக் கொடுத்துவிட்டு
வாழ்வைச் சுருட்டிக்கிக் கொண்ட
கிழக்கிந்தியக் கம்பனியாரின்
மமதைப் பாடலும் ஒலிக்கிறதடி என்றேன்.
குளோப் அரங்கின்முன் தரித்துக் கேட்ட
சேக்ஸ்பியரின் காதல் பாடல்களை
இந்த மாநதி இசைக்காத நாளுமுண்டோ.
காவிரிக் கரையில் மாதவிபாடிய
கானல் வரிகளாய்
காலமெல்லாம் நதிகள் இடத்தில் ததும்புகிற
முடிவிலிக் கீதம்
கரையோரங்களில் நாயகர் நாயகிகள் விட்டுச்செல்கிற
காதல் பாடல்கள்தான் என்றேன்.

பெருகு பெருகு தேம்ஸ் நதியாகப் பெருகு
என் கை பற்றிய சின்ன நதியே பெருகு
பெருகு போரின் மாசுகள் அகன்று பெருகு என்றேன்.
உன் நாட்களிலாவது நமது தாய்நாட்டுக்கு
சமாதானம் வரட்டும் என்றேன்.
பீரங்கிக் குழலாய் சிதைகிற எங்கள் கனகராயன் ஆறும்
மீண்டும் வந்து பறவைகள் பாட
மீண்டும் உயிர்த்து மீன்கள் துள்ள
நடக்கட்டும் வழிய என்றேன்.
மீன்களும் பறவைகளும் மின்ன
ஈழத்தின் புன்னகையாய் நெழியட்டும் வாழிய என்றேன்.

அவளுக்கு எங்களூர்ச் சிற்றாறை தெரியவில்லை.
என்தாய்நாடு இங்கிலாந்துதானே மாமா என்றாள்.
சற்று நேர மெளவுனம் குலைய
ஆனால் ஒன்று செய்யலாம் என்றாள்.
வளர்ந்ததும் தேம்ஸ் நதியின் துடைப்பங்களோடு
என் பாட்டி நாட்டின்
சிற்றாறுகளைப் பெருக்க வருவேன் என்றாள்.
தேம்ஸ் நதியே தேம்ஸ் நதியே
உன்னை உயிர்ப்பித்த அமுதங்களை
போர் குதறிய எங்கள் சிற்றாறுகளுக்கும் தா என்றேன்.
என்னைக் காதல் வசப் படுத்திய தேம்ஸ்
அந்தச் சிறுமியில் புன்னகையாய் நெழிந்தது.

* 1642 ஆண்டு இந்ங்கிலாந்தின் உள்ள்நாட்டுப்போரில் கேம்பிறிஜ் நாடாளுமன்ற உறுப்பினர் குறொம்வெல் (Oliver Cromwell 1599 – 1658) தலைமையில் சாள்ஸ் மன்னனுக்கு எதிராக எழுந்த படை.
** தேம்ஸ் நதியின் தென் கரையில் 1599 சேக்ஸ்பியர் சேர்ந்து கட்டிய அரங்கம்
visjayapalan@gmail.com

Series Navigation