தெய்வ மரணம் – 2

This entry is part [part not set] of 40 in the series 20080522_Issue

எஸ். ஜெயலட்சுமி



சூர்ப்பனகை வருகை
ஒரு நாள் வஞ்ச மகள் சூர்ப்பனகை பஞ்சவடிக்கு வருகிறாள்.இராமனைப் பார்த்து அவன் அழகில் ஈடுபடுகிறாள்.அதிசயிக்கிறாள்.இவன் யார்?மும்மூர்த்திகளுள் ஒருவனோ?அப்படியானால் இவனிடம் சங்கு சக்கரமோ
சூலமோ இல்லையே.ஒருவேளை மன்மதனோ? அவந்தான் மீண்டும் உயிர் பெற்று வந்துவிட்டானோ? என்றெல்லாம் வியக்கிற றாள்.காமம் கொண்டவள் இராமனிடம் தன்னை மணக்கும் படி வேண்டுகிறாள். ஆனால் ஏகபத்தினி விரதனான இராமன் மறுத்து விடுகிறான்.காமவசப்பட்ட சூர்ப்பனகை மறுநாளும் வருகிறாள்.சீதையைப் பார்க்கிறாள். அவள் அழகைக் கண்டு
“அரவிந்த மலருள் நீங்கி அடியிணை படியில் தோய
திரு இங்கு வருவாளோ?
”கண்பிற பொருளில் செல்லா,கண்ட பெண்பிறந்தேனுக்கு என்றால்
என்படும் பிறருக்கு?

என்று வியந்து போகிறாள்.இவள் இருக்கும்வரை இராமன் என்னை ஏறெடுத்தும் பாரான்.எனவே எப்படியாவது இவளை
அப்புறப்படுத்த வேண்டும் என்ற எண்னத்தோடு சீதையைத் தூக்கிச் செல்ல நினைக்கிறாள்.அங்கு வந்த இலக்குவனால்
மூக்கறுபடுகிறாள்கப்படியே நேராகத் தன் அண்ணனான இராவணேஸ்வரனிடம் சென்று முறையிடுகிறாள்.அவனிடம் சீதையின்
அழகைப் பற்றி விரிவாகச் சொல்லி அவன் நெஞ்சில் காமத்தீயை மூட்டிவிடுகிறாள்.
காணவேண்டும் லக்ஷம் கண்கள் சீதாதேவியின்
காலுக்கு நிகரோ பெண்கள்.
சேணுலகெங்கும் வாட்டி திசையெங்கும் கீர்த்தி நாட்டி
திரியும் ராவணா உந்தன் இருபது கண்போதுமோ?
குவளை விழிகளோ பாணம் அவள்தன் வார்த்தை
கொண்டால் அதுவே கல்யாணம்

”இராவணா இப்படிப்பட்ட அழகுள்ள பெண்னை உனக்காகத் தூக்கிவர முயற்சி செய்தபோது தான் எனக்கு இந்த நிலை ஏற்பட்டது” என்று முறையிடுகிறாள்.கரனையும் தங்கை மூக்கையும் மறந்த இராவணன் கேட்ட நங்கையை மட்டும் மறக்க
முடியாமல் காமத்தால் தவிக்கிறான்.

ஜடாயுவின் சீற்றம்
மோகம் கொண்ட இராவணன் மாமனாகிய மாரீசனை மான்வடிவில் அனுப்பி வஞ்சனையால் இராம
இலக்குவர்களைப் பிரித்து அவர்கள் இல்லாத நேரம் கபட சந்யாசியாக உருவெடுத்து சீதையைப் பர்ணசாலையோடும்
தூக்கிச் செல்கிறான்.அப்போது சீதை மனம் கலங்கி”இறையோனே,இளையோனே என்று கூப்பிடுகிறாள்.தரும தேவதையே,
நீயே தஞ்சம்.மான்களே,மயில்களே,யானைகளே,கோதாவரியே நீங்கள் எல்லோரும் சென்று என் நாயகனுக்கு என் நிலை
மையைச் சொல்லுங்கள்.
”சரண் எனக்கு யார்கொல் என்று ஜானகி அழுதுசாம்ப
அரண் உனக்கு ஆவேன் வஞ்சி அஞ்சல்”

என்று அருளோடு வந்து சேருகிறான் ஜடாயு.நிலைமையைப் புரிந்து கொண்டவன்”எங்கடா போவது நில்” என்று இராவண
னின் புஷ்பக விமானத்தைத் தொடருகிறான்.மேருபர்வதமே விண்ணில் பறந்து வருவதைப் போலப் பறந்து வந்து தாக்கு
கிறான்.கண்களிலே தீப்பொறி பறக்கிறது.அடே,என்ன காரியம் செய்தாய்?உன் வாழ்வை நீயே சுட்டாய்.உன்கிளை யொடும்
கெட்டாய்.இவளைவிட்டால் நீ பிழைப்பாய்”,என்று அறிவுறை சொல்கிறான்.ஆனால் அவையெல்லாம்’கல்லாப் புல்லோர்க்கு
நல்லோர் சொன்ன பொருள் எனப்போயிற்று.கேவலம் ஒரு பறவை தன்னை எதிர்த்து அறிவுரை சொல்வதைக் கண்ட
இராவணன்”அடே அற்பப் பதரே!என் அம்புகள் உன்மேல் படுமுன் இங்கிருந்து போய்விடு.என்வசப்பட்ட இவளை யாராலும்
விடுவிக்க முடியாது.”என்று அதட்டுகிறான்.இதைக் கேட்ட ஜடாயு இராவணனின் வீணைக் கொடியை அறுத்து விடுகிறான்.
பின் அவனுடைய கவசங்களை ஒடித்து விடுகிறான்.

இதனால் சீற்றமடைந்த இராவணன் அம்புகளை எய்ய ஆரம்பிக்கிறான்.ஆனால் ஜடாயு வேகமாகப் பறந்து வந்து இராவணனின் வில்லை முறித்துவிடுகிறான்.இதனால் ஆத்திரமடைந்த இராவணன் ஜடாயுவின் மேல் வேலைச் சுழற்றி வீசுகிறான்.ஜடாயு அவ்வேலை இறுமாந்து ஏற்கிறான்.வேல் வந்த வழியாகத் திரும்புகிறது.இதன்பின்
இராவணன் தண்டாயுதத்தால் தரையில் விழுந்த ஜடாயு மீண்டும் எழுந்து பறந்துவந்து இராவணனின் சாரதியின் தலையைப்
பறித்து விடுகிறான்.இனியும் இவனை விட்டுவைத்தால் ஆபத்தாக முடியும்.மேலும் இராம இலக்குவர்களும் திரும்பிவிடலாம்
என்ற எண்ணத்தில் அரன் தந்த வாளால் ஜடாயுவின் இறக்கைகளை வெட்டி வீழ்த்துகிறான்.மலைபோலக் கீழே விழுகிறான்
ஜடாயு.இனி அவனால் பறக்க முடியாது.இதைக்கண்ட சீதை
”அல்லல் உற்றேனை வந்து அஞ்சல் என்ற இந்
நல்லவன் தோற்பதே?நரகன் வெல்வதே
வெல்வதும் பாவமோ?வேதமும் பொய்க்குமோ?
இல்லையோ அறம்?”

என்று கதறுகிறாள்.இதற்குள் இராவணன் அதி விரைவாகப் புஷ்பகவிமானத்தைச் செலுத்துகிறான்.

இராமன் சோகம்
இராம இலக்குவர்கள் திரும்பி வருகிறார்கள் வரும் வழியில் சண்டை நட்ந்ததற்கான தடயங்கள் தெரிகி
றது.ஒடிந்துபோன கொடி,வீழ்ந்த சாரதி இவற்றையெல்லாம் பார்க்கிறார்கள்.சிறிது தூரத்தில் இரத்தவெள்ளத்தில் ஜடாயு
வீழ்ந்துகிடப்பதையும் பர்ணசலையோடு சீதை கடத்தப் பட்டதையும் தெரிந்து கொள்கிறார்கள்.வெள்ளிமலை மேலே நீலமலை
விழுந்ததுபோல ஜடாயுவின் உடல் மீது ராமன் வீழ்ந்து கதறுகிறான்.
தன் தாதையரை தனயன் கொலை நேர்ந்தார்
முந்தை யாரே உளர்?முடிந்தானே முன்னொருவன்
எந்தாயோ எற்காக நீயும் இறந்தாயே
அந்தோ வினையேன் அருங்கூற்றமானேனே”

அன்று தனயன் வனம்சேர்ந்தான் என்று கேட்ட உடனேயே தசரதன் உயிரை விட்டான்.இன்றோ அதே இராமன் மனைவி
சீதையின் மானம் காக்கும் முயற்சியில் ஜடாயு வீழ்ந்து கிடக்கின்றான்,இராமனுக்குத் தன் மேலேயே கோபமும் ஆத்திரமும்
ஏற்படுகிற்து.
”என் தாரம் பற்றுண்ண ஏன்றாயைச் சான்றோயைக்
கொன்றானும் நின்றான் கொலையுண்டு நீ கிடந்தாய்
வன்தாள் சிலையேந்தி வாளிக்கடல் சுமந்து
நின்றேனும் நின்றேன் நெடுமரம் போல் நின்றேனே”

என்று தன்னையே மிகவும் வெறுத்துப் பேசிக் கதறுகிறான்.

ஜடாயு அறிவுரை.
இராம இலக்குவர்களின் அழுகுரல் கேட்டுச் சிறிது கண்விழிக்கிறான் ஜடாயு.இற்ற இருசிறகும் இன்னுயிரும்,ஏழுலகமும் பெற்றது போல் மகிழ்கிறான் ஜடாயு.சீதையைக் காப்பாற்ற முடியா விட்டாலும் அவள் இராவணனால்
கவரப்பட்ட செய்தியை அவர்களிடம் சொல்லிவிட வேண்டுமென்ற எண்ணத்தோடு தன் உயிரைக் கெட்டியாகப் பிடித்து வைத்திருக்கிறான்.”புண்ணியரே வம்மின் வம்மின்’என்று இருவரையும் அணைத்துக் கொள்கிறான்.”அஞ்சொல் மயிலை,
அருந்ததியைத் தன்னந்தனியே விட்டுவிட்டுப் போகலாமா? என்று உரிமையோடு கண்டிக்கிறான்.இலக்குவன் மூலமாக நடந்த
வற்றையெல்லாம் அறிந்து கொள்கிறான்.இராவணன் சீதையைப் பர்ணசாலையோடு தூக்கிச் சென்றதையும் எதிர்த்த தன்னை
அரன் தந்த வாளால் வீழ்த்தியதையும் சொல்கிறான்.இதைக்கேட்ட இராமன் கொதித்தெழுந்து இந்த உலகத்தையே
அழித்து விடுவேன் என்று ஆவேசமடைகிறான்.இதைக் கண்ட ஜடாயு தந்தையின் நிலையிலிருந்து இராமனுக்கு அறிவுரை
சொல்கிறான்.
”வம்பிழைக் கொங்கை வஞ்சி தமியள் வைக
கொம்பிழை மானின் பின் போய்க் குலப்பழி கூட்டிக் கொண்டீர்
ஆயும் காலை
உம்பிழை என்பதல்லால் உலகம் செய் பிழையும் உண்டோ?”

“குழந்தைகளே நன்கு யோசித்துப் பாருங்கள்.நீங்கள் செய்த தவறுக்கு உலகைக் கோபித்து என்ன பயன்?மேலும் வருவது
வந்தே தீரும்.அதை யாராலும் தடுக்க முடியாது.மேலே நடக்க வேண்டியதைப் பாருங்கள்”, என்று அறிவுரை சொல்லி
அமைதிப் படுத்துகிறான்.இந்த வார்த்தைகள் தந்தை தசரதனின் வார்த்தைகளாகவே தோன்று கின்றன இராமனுக்கு.”அந்தக்
கள்ளவாளரக்கன் எங்கே போனான்? என்று இராமன் கேட்க ஜடாயு பதில் சொல்லத் தொடங்குகிறான்.ஆனால் அவன்
அறிவும் உணர்வும் மழுங்க ஆரம்பிக்கிறது.அந்தத் தள்ளாத வயதிலும் தசமுகனை எதிர்த்துப் போரிட்ட களைப்பும்,சீதையைக்
காப்பாற்ற முடியவில்லையே என்ற குற்ற உணர்வும் மேலிட அவனால் பேச முடியவில்லை.பதில் சொல்லாமலே உயிர் பிரி
கிறது.
நாட்டிலே சத்தியத்தைக் காக்க உயிர் விடுகிறான் தசரதன்.காட்டிலே தன்னையே தியாகம் செய்கிறான் ஜடாயு.
நாட்டிலே தந்தைக்கு ஈமக் கடன்களைச் செய்யமுடியாத இராமன், காட்டிலே தன் தந்தையாக வரித்த ஜடாயுவுக்கு, அவன்
முன்பே கேட்டுக் கொண்டபடி ஈமக்கடன்களைச் செய்கிறான்.

நெட்டை மரங்கள்.

அன்றொருநாள் அஸ்த்தினாபுர அரசவையிலே சூதாட்டத்தில் பணயமாக வைக்கப்பட்டு சூதில் விலை பேசப்பட்ட துருபதன் மகள் பாஞ்சாலியை மாடு நிகர்த்த துச்சாதனன் மைக்குழல் பற்றியிழுத்து வர
“வழிநெடுக மொய்த்தவராய் என்ன கொடுமையிது
என்று பார்த்திருந்தார்.
ஊரவர் தம் கீழ்மை உரைக்கும் தரமாமோ?
வீரமிலா நாய்கள்,விலங்காம் இளவரசன் தன்னை மிதித்துத்
தராதலத்தில் போக்கியே
பொன்னை அவளை, அந்தப்புரத்தினிலே சேர்க்காமல்
நெட்டை மரங்களென நின்று புலம்பினார்
பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ”?

என்று பாரதி சீறுவானே, அதுபோல் ஜடாயு நெட்டை மரமாக நிற்கவில்லை.நாட்டிலே அத்தனை ஆண்மகன்களுக்கு
நடுவிலே அந்த அநியாயம் நடந்ததே.!அதைத் தட்டிக் கேட்க எந்த ஆண் மகனுக்கும் துணிவில்லை.!சபையிலே எத்தனை
யெத்தனை பெரியவர்கள்! பிதாமகரான பீஷ்மரென்ன,குலகுருவான கிருபர் என்ன,அரசனான திருதராஷ்டிரர் என்ன,ஆசாரிய்
ரான துரோணரென்ன எத்தனை பேர்கள்’?ஒருவராவது அந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்டார்களா?தடுத்தார்களா?தாலி
கட்டிய கணவன் என்று ஒருவரல்ல ஐவர் இருந்தனர். என்றபோதும் துவாரகையிலிருந்த கண்ணன் அல்லவா ஓடிவந்து
பாஞ்சாலியின் மானம் காத்தான்!
ஆனால் காட்டிலோ
”சரண் எனக்கு யார்கொல் என்று ஜானகி அழுது சாம்ப
அரண் உனக்கு ஆவேன் வஞ்சி அஞ்சல்”

என்று ஓடிவந்து உதவுகிறான்,ஜடாயு அந்தக் குரல் சீதையின் குரல் என்று தெரியாமலேயே,அது ஒரு பெண்ணின் அபயக்குரல் என்று தெரிந்து இயற்கையாக எழுந்த ஜீவகாருண்ய உணர்வினால் உந்தப்பட்டு உதவ ஓடி வருகிறான்.எதிரி தசமுகன் என்று தெரிந்தபோதும் பின்வாங்கவில்லை.அந்த வீரமெங்கே?சராசரி மனிதாபிமானமும் இல்லாமல் நெட்டை
மரங்களென நின்ற கோழைத்தனம் எங்கே?

தியாக வீரம்
சொல்லின் செல்வனான அனுமனும் பாராட்டுகிறான் இந்த தியாக வீரத்தை
”சீறி, தீயவன் ஏறு தேரையும்
கீறி தோள்கள் கிழித்து அழித்தபின்
தேறி, தேவர்கள் தேவன் தெய்வ வாள்
வீற, பொன்றினன் மெய்மையோன்”

சீதையைத் தேடிக் களைத்துப் போன வானர வீரர்கள் உயிரை விட்டு விடுவோம் என்கிறார்கள்”.உயிர் விட்டா லும் ஜடாயுவைப்போல் உயர்ந்த நோக்காத்திற்காக உயிர் விட வேண்டும்,அதுவல்லவா உயர்ந்த மரணம்” என்கிறான்
அனுமன்.சுக்ரீவனோ,தான் இராமனுக்கு ஒரு உதவியும் செய்யவில்லையே என்று வருந்துகிறான்.அனுமனையும் அங்கதனையும்
போல் தூதும் செல்லவில்லை.ஜடாயுவைப் போல் இராவணனை எதிர்த்தாவது இராமனுக்கு உதவி செய்தேனா?அதுவும்
இல்லையே
”காட்டிலே கழுகின் வேந்தன் செய்தது காட்ட மாட்டேன்”

என்று தன்னையே நொந்து கொள்கிறான்.

தெய்வமரணம்.
ஜடாயுவின் தியாகம் இராமன் மனதில் அப்படியே பதிந்து விடுகிறது.சரணம் என்று வந்த விபீஷணனைச்
சேர்த்துக் கொள்வதா வேண்டாமா என்ற விவாதம் எழுந்த போது அனுமனைத் தவிர அத்தனை பேரும் விபீஷணனைத்
தங்களோடு சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று சொல்கிறார்கள்.அப்பொழுது இராமன் ஜடாயுவின் தியாகத்தைப் பாராட்டு
கிறான்.”சரண் என்று ஒரு குரல் கேட்டதுமே அரண் என்று ஓடிவந்தானே ஜடாயு! அவன் வாழ்க்கையைப் பார்த்தாவது நாம்
கற்றுக் கொள்ள வேண்டாமா?சரண் என்று வந்தவர்களைக் காப்பாற்ற வேண்டாமா?” என்கிறான்.

”சரண் எனக்கு யார்கொல் என்று ஜானகி அழுது சாம்ப
அரண் உனக்கு ஆவேன் வஞ்சி அஞ்சல் என்று அருளின் எய்தி
முரணுடைக் கொடியோன் கொல்ல மொய்யமர் முடித்து தெய்வ
மரணம் என் தாதை பெற்றது என்வயின் வழக்கன்றாமோ?”

என்று இராமன் பெரிதும் போற்றிப் புகழ்கிறான் ஜடாயுவின் தெய்வ மரணத்தை.தெய்வ மரணம் அடைந்த ஜடாயுவை
நாமும் போற்றிப் பணிவோம்.


vannaijaya@hotmail.com

Series Navigation

எஸ் ஜெயலட்சுமி

எஸ் ஜெயலட்சுமி