தெப்பம் – நாடகம்

This entry is part [part not set] of 59 in the series 20050318_Issue

அரியநாச்சி


முன்மேடையை நோக்கி ஒருவன் மிக அழகிய ஒரு பெண்ணின் முகமூடியை அணிந்து வருகிறான். பார்வையாளர்களைப் பார்த்து மெல்ல புன்னகைக்கிறான். பின் வளைந்து நெளிந்து பெண்ணின் அசைவுகளை வெளிப்படத்திக்கொண்டு சிறிது நேரம் இருந்துவிட்டு சட்டென முகமூடிய கழட்ட, அவனது முகம் மிகக்கோரமான அருவருக்கத்தக்க ஒரு ஆணின் முகத்தை காட்டுகிறது. அவனது அலரல் பார்வையாளர்கள் மிரளும் வண்ணம்இருக்க தலைமுடியை விரித்துப்போட்டு மேலாடைகளைக் கிழித்தபடி மேடை முழவதும் சுற்றிச்சுற்றி ஓடுகிறான். அலறுகிறான். அடிக்குரலில் அவன் போடும் ஓலம் பார்வையாளர்களை மிரட்சிக்குள்ளாக்குகிறது.

வெகுநேரம் இப்படியாக இருந்த அவன், ஆடி ஓய்ந்து முன் மேடை மையத்தில் போடப்பட்டிருந்த ஒரு நாற்காலியில் சோர்ந்து அமர்கிறான். பின் சட்டென மீண்டும் எழுந்தவன் எதையோ யோசித்தவனாக இருந்துவிட்டு மீண்டும் நாற்காலியில் அமர்வதற்குபோகும் போது அங்கே நாற்காலி இல்லாததுகண்டு நாற்காலியைத்தேடுகிறான். மீண்டும் அலறல், ஓட்டம். பிறகு சற்று ஓய்ந்தவனாக முன்மேடை மைய விளிம்புக்கு வந்து அமர்கிறான், சோர்ந்து. அவன் அமர்வதற்கும் பின்மேடையிலிருந்து அவன் போட்ட அலறல் போல் இன்னொருவனின் குரல் கேட்பதற்கும் சரியாக இருக்கிறது. புதியகுரல் மெல்ல உருவத்தோடு மேடைக்குள் நுழைகிறது. அவனும் சோர்ந்து முதலாமவனின் அருகே வந்து அமர்கிறான். இதுபோல் பலர் வருகின்றனர். ஒவ்வொருவரும் ஒருசிலரோடு கூட்டு சேர்ந்து குழுக்குழுவாக அமர்கின்றனர். அப்போது அவர்களில் இருவர் (நபர்1 மற்றும் நபர்2 என்போம்) மெல்ல எழுந்து முன்மேடைக்கு வந்து நிற்க, பின்மேடையிலிருந்துஒரு ஊழியன் உள்ளே வந்து அவர்களைப் பார்த்துவிட்டு மீண்டும் உள்ளே சென்றுவிடுகிறான். அப்போது,

நபர்1 : எல்லாரும் வந்துட்டாங்க நாடகத்தத்தொடங்குவோமா ?

நபர்2 : குடிக்கத்தானே போறோம்!

நபர்1 : ஆமா.

நபர்2 : நாடகம்னு சொன்னமாதிரி இருந்துதே ?

நபர்1 : குடிகாரர்களா நடிக்கப்போறோமில்லியா ?

நபர்2 : குடிகாரர்களா நடிக்கத்தான் போறோங்கறதுதான் தெரியுமேஆனா இப்ப குடிக்கப் போறோம் இல்லியா ?

நபர்1 : என்ன சரக்கு உள்ள போறதுக்குள்ளியே கொழப்பத்தொடங்கிட்ட.

நபர்2 : அதான் நவீனம்.

நபர்1 : இப்படி கொழப்புறதா.

நபர்2 : ஆமா. நடிக்கத்தான் போறோம். குடிக்கத்தான் போறோம். குடிக்கப்போற நாம, நடிக்கவும் போறோம். நடிக்கும் போது குடிக்கப்போறோம். இப்ப சொல்லு. நாம என்ன செய்யப்போறோம்.

நபர்1 : குடிக்கப்போறோம்.

நபர்2 : இல்ல நடிக்கப்போறோம்.

நபர்1 : புரியுது, புரியுது. குடிகாரங்களா நடிக்கப்போறப்போ குடிக்கப்போறோம்.

நபர்2 : இல்ல குடிகாரங்களா நடிக்க குடிக்கப்போறோம்.

பின்மேடையில் மெல்ல ஒளி வருகிறது. அங்கே சில மேசைகளும் சில நாற்காலிகளும் போடப்பட்டிருக்க அவற்றில் ஒரு மேசையைச் சுற்றி போடப்பட்டிருந்த நாற்காலிகள் மட்டும் காலியாக இருக்கிறது. மற்றவர்கள் குடித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது ஊழியன் உள்ளே வந்து அவர்கள் இருவரிடமும்

ஊழியன் : சார் உங்க இடம் ரெடி.

நபர்1 : தோ வந்துட்டோம்.

நபர்2 : இவனுக்கு நம்மல நல்லா அடையாளம் தெரியுது.

நபர்1 : இவனுக்கு எல்லா குடிகாரர்களையும் அடையாளம் தெரியும்.

நபர்2 : எல்லா குடிகாரர்களையுமா ?

நபர்1 : ஆமா

நபர்2 : இங்க குடிக்கவராதவனுங்கள ?

நபர்1 : குடிக்கவர்றவனுங்களத் தெரியுங்கிறபோது குடிக்க வராதவனுங்களையும் தெரியும்னுதான அர்த்தம்.

நபர்2 : சர்தான். திருடனுங்கள புடிக்க நாய்கள நம்பற மாதிரி குடிகாரங்கள கண்டுபுடிக்க இவன வேலைக்கு வச்சுக்களாம்.

நபர்1 : நிச்சயமா.

நபர்2 : இவன் குடிகாரர்களை மட்டுமில்லாமல் வேறு எதையாவது கண்டு பிடிக்க முடியுமா ?

நபர்1 : இருக்கு… ஆனா அத சொல்லக்கூடாது. அத சொல்லிட்டா அவன் இங்க வேலை செய்ய முடியாது.

நபர்2 : ஏன் ஆப்படி சொல்ற ?

நபர்1 : அவனும் வாழனுமில்லியா.

நபர்2 : என்னப்பா நான் கேட்டதுக்கும் அவன் வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம் இருக்கு ?

நபர்1 : எல்லாத்துக்கும் இருக்கு.

நபர்2 : எனக்கு சொல்றதுக்கென்ன. நான் தெரிஞ்சிக்கக்கூடாதா.

நபர்1 : தெரிஞ்சிக்க. ஆனா வேற யார் கிட்டயும் சொல்லாத.

நபர்2 : சரி.

நபர்1 : அவனுக்கு இங்கு வர்ற எல்லாரோட குடும்பத்தப்பத்தியும், அவவனோட சம்பாத்தியத்தபத்தியும். எண்ணத்தப்பத்தியும், லட்சியத்தப்பத்தியும். லஜ்ஜையப்பத்தியும் தெளிவாத் தெரியும். ஆனா அவன் யாருகிட்டியும் யாரப்பத்தியும் சொல்லமாட்டான். சொன்னதில்ல. அதனால தான் அவனால இங்க வேல செய்ய முடியுது. ஒருத்தனப்பத்தி இன்னொருத்தங்கிட்ட சொல்றதோ அல்லது ஒருத்தனோடு பலவீனத்த பயன்படுத்திறதோ இவன்கிட்ட கிடையாது.

நபர்2 : அப்படிப்பாத்தா இவன் உலகத்துல உள்ள எல்லாரையும்விட பெரிய மனுசனா தெரியறானே.

நபர்1 : பெரிய மனுசன்தான். எவ்ளோ பேத்தல்கள், எவ்ளோ அசிங்கங்கள்னு அவனுக்குள்ள உரஞ்சிருக்குத்தெரியுமா ? இவன்னு இல்ல, பார்ல வேலைசெய்யறவங்கள்ல பெரும்பாலானவங்க குடிக்கமாட்டாங்க. எங்கியாவது ஒருத்தர் இரண்டே பேர் இருக்கலாம்.

நபர்2 : முக்கால்வாசிப்பேர் குடிக்காதப்ப அந்த ஒரு சிலர் மட்டும் ஏன் குடிக்கிறாங்க.

நபர்1 : கஷ்டந்தான். மனக்கஷ்டம். அவங்களால நிறைய சுமக்க முடியல. யாரம் அதிகமாயிடுச்சி. நாமலாயிருந்தா என்ன செய்வோம் மத்தவங்கமேல பாரத்தப்போட்டுட்டு நாம தப்பிச்சிக்குவோம். ஆனா அவங்க அப்படிச் செஞ்சிடாங்கன்னு வச்சிக்கோ அப்புறம்.

நபர்2 : (வருத்தத்தோடு) அப்புறம் என்ன தெருவுல நிக்கவேண்டியதுதான்.

நபர்1 : இன்னொன்ன தெரிஞ்சிக்க இப்படி பார்ல வேல செய்யறவங்க தெருவுல நிக்கிறாங்கன்னு வச்சிக்க தெருவுல போற இவனத்தெரிஞ்ச அல்லது இவனுக்குத் தெரிஞ்ச குடிகாரனுங்கல்லாம், இவன தனக்குத் தெரியாததுபோல கண்டுங் காணாமலும் போயிடுவானுங்க. ரகசியத்தச் சுமந்துகிட்டு அவன் குடிகாரனுவோல கோவமா சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கிறமாதிரி தோணுறதால் ஒடிஒளிஞ்சிக்குவானுங்க.

நபர்2 : பாவமில்ல.

நபர்1 : எனக்கு பாவம்னு தோணல. ஆனா இப்படி சிலர்ன்னுதாங்கற ஒரு அபிப்பிராயம்.

நபர்2 : கல்நெஞ்சக்காரண்டா நீ.

(ஊழியன் உள்ளே நுழிகிறான். அவர்கள் இருவரையும் பார்த்து பவ்யமாக)

ஊழியன் : சார் என்ன ஆர்டர் சார் ?.

நபர்2 : ஆர்டரா. போயி மகாபாரதத்த எழுதனாம்பாரு அந்த ஆள கூட்டுட்டுவா. முடியுமா ?

ஊழியன் : (குழம்பியவனாக) என்னா சார்.! ?

நபர்2 : பின்ன என்ன. ஆா;டர் போட்றதுக்கா இங்க வந்துருக்கோம். குவர்டர் போட வந்துருக்கோம்யா.

(ஊழியன் சிரித்துக்கொள்கிறான். பின் அவர்கனை நோக்கி பவ்யமாக குணிந்து)

ஊழியன் : சரி சார்ர்ர்ர். என்ன சார் வேணும் அத்த சொல்லுங்க.

நபர்2 : அப்டிக்கேள். இனிமேட்டுக்கு யாரிடமும் ஆர்டர் போடுங்க சார்ன்னு கேக்காத. ஆர்டர் போட்டவனும் போயிட்டார். சாருங்கிரியே அவனும் போயி அம்பதுவருசம் தாண்டிடுச்சி. (பின் சாவகாசமாக அவனைப்பார்த்து கிண்டலாக) அவன்வன் குடிக்கத்தான் வந்துருக்கானுவ. காசி கொழுத்துருச்சி. குடிக்கிறானுவ. நீ அவனுவோளுக்கு உதவி செய்யற. அவனுக்கு வேண்டியத உன் மொதலாளிகிட்ட சொல்லி வாங்கிவந்து தர்ற. அவ்ளோதான். அதுக்கு கூலி தர்றான். அதனால நீ அவனவிட ஒன்னும் தாழ்ந்துபோயிடல. அவரு ஒன்னும் பெரிய புடுங்கியுமில்ல, கடவுளுமில்ல, உன் மொதளாலியுமில்லை. என்ன புரிஞ்சுதா. (நபர்1யைப் பார்த்து) சரி என்ன வேணும் சொல்லு.

நபர்1 : (நபர்2ஐ பார்த்து) போதும்பா நிறுத்து. (ஊழியனைப் பார்த்து) எம் சி குவார்ட்டர், ரெண்டு வாட்டர் பாக்கட் நாலு பில்டர் கோல்ட் ஒரு பொட்டலம்.

நபர்2 : கிளாச கழிவிக்கொண்டா என்ன ?

ஊழியன் : சரி சார்

(இருவரும் சிரிது நேரம் எதைப்பற்றியும் பேசாமல் மெளனமாக அங்கும் இங்கும் பார்த்தவண்ணம் இருக்கிறார்கள். மேடையில் பேச்சின் ஒலி மெல்ல கேட்கிறது. அவர்களைச் சுற்றி அமர்ந்திருப்போரையும் அவர்களது சம்பாஷனைகளையும் கூர்ந்து கவனிக்கிறார்கள். பின்)

நபர்1 : இந்த சின்ன இடத்தில இவ்ளோ பேர் குடிக்கிறாங்களே இத மாதிரி எத்தினியோ பாருங்க இருக்கச்ச. . . எவ்ளோ பேர் இப்படி இருப்பாங்க!

நபர்2 : பார்லன்னா . . . ஊர்ல உள்ளவனுங்கள்ல பத்து பெர்சன்ட்டு. வீட்ல சரக்கடிக்கிறவனுங்கல சேத்துசொல்லல.

நபர்1 : வீட்ல தண்ணியடிக்கிறவனுங்க எவ்ளோ பர்சென்ட் இருக்கும் ?

நபர்2 : என்ன மிஞ்சி மிஞ்சி போனா ரெண்டு பெர்சண்ட் பார்ல குடிங்கரவனுங்கலவிட கூட இருக்கும். மொத்தத்துல…

நபர்1 : மொத்தம்னா இந்த உலகமுழுக்கவா

நபர்2 : உலகமுழுக்க . . . இருவது இருவத்தஞ்சி பெர்சண்ட் இருக்கும். கெழக்க கணக்கெடுத்தா அதிகமாயிருக்கும் தெரியும்ல. அதுங்கள்லாம் குடும்பங்குடும்பமா குடிக்குங்க.

நபர்1 : உன் கணக்கு புதுசா ? பழுசா ? எனக்கென்னமோ உலக கணக்கெட்டுத்தா நீ சொன்னதுக்கும் அதுக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கும்னு நெனக்கிறேன்.

நபர்2 : சும்மா ஒரு அல்லுபுள்ளி கணக்குத்தான் சொன்னேன். சரியா எல்லாத்தையும் கணக்கெடுத்தோம்னா சராசரியா பதினைஞ்சிலேர்ந்து இருவதுவரைக்கும் இருக்கும்.

நபர்1 : அடேங்கப்பா.

நபர்2 : என்ன அடேங்கப்பா. சரியாருக்கும்ல!.

நபர்1 : புள்ளிவெவரத்த நீ சொல்லிட்டு, சரியாருக்குமான்னு என்ன கேக்குறயே. சரியா இல்லாட்டித்தான் என்ன குடியாமுழுகிடப்போவுது ?

ஊழியன் : சார்.

(ஒரு அட்டைப்பெட்டியில் அவர்கள் கேட்டதைக்கொடுத்துவிட்டு தன் பையிலிருந்து ஒரு தீப்பெட்டியை அவர்களது மேசைமீது வைத்துவிட்டு சென்றுவிடுகிறான்.)

நபர்1 : வந்து . . .ஒண்ணு சொல்லனும்னு நெனக்கிறேன். அத எப்படி சொல்றதுன்னுதான். ம்கும் எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தான் தெரியல.

நபர்2 : சும்மா அல்லிவுடு

நபர்1 : அள்ளிவிட்றவா

நபர்2 : ம். வாய்ச்சொல்லுதான. காசா பணமா.

நபர்1 : அதவிட ரொம்ப முக்கியமானது எதுவும் இல்லியா என்ன ?

நபர்2 : இருந்துச்சு ஆனா இப்ப இல்ல. ஒருகாலத்துல பண்டமாத்துமுறைன்னு ஒன்னு இருந்ததா சொல்றாங்களே. இப்பத்திய நெலமைக்கு உண்மையா இருக்குமோன்னு தோணுது.

நபர்1 : ஏன் ?

நபர்2 : இல்ல. . . பண்ட மாற்று முறையில உடனடி பயன்பாட்டுக்குத் தேவையானது பண்டமாத்துல கெடைக்காதுன்னு, இப்பயிருக்கிற நெலைக்கு மாறியிருப்பாங்களோன்னு நெனக்கிறேன்.

நபர்1 : இருக்கலாம். என்ன இருக்கலாம். அதான் உண்மையாயிருக்கும். புண்ணாக்க கொடுத்து எவனும் புழுக்கைய வாங்க மாட்டான். வாங்கினான்னா ஒரு வேல எருவுக்கு ஆகுமோன்னு வாங்கிருக்கலாம். இப்ப இருக்கறதுதான் சரி. பணத்த கொடுத்து எங்கிட்ட இருக்கறத, தேவையானவன் வாங்கிக்கிறான். அந்த பணத்த வச்சிக்கிட்டு வேற எவன்கிட்டயாவது கெடைக்கும் எனக்கு தேவையானத, நான் வாங்கிக்கிறேன். இது நல்லமுறைதான்.

நபர்2 : எல்லாத்துக்கும் இது சரியான்னு கொஞ்சம் யோசிச்சிப் பாறேன்.

நபர்1 : சரியா இருக்கும்னுதான் தோணுது.

நபர்2 : இல்ல இப்ப பொருளுக்கு மட்டும் பணம் கைமாறல எல்லாத்துக்கும் கைமாறுது. அன்புக்கு பாசத்துக்கு கோவத்துக்கு பழிவாங்கறதுக்கு ஏன் ஜெயிக்கிறதுக்கும் தோக்கடிக்கிறதுக்கும் பணம் கைமாறுது.

நபர்1 : புரியல.

நபர்2 : புரியும். ஆனா இதுதானா அதுன்னு குறிப்பிட்டு சொல்ல முடியாம இருக்கும்.

நபர்1 : அதவுடு இத ஆரம்பி.

(என்று சொல்லியபடி புட்டியைத்திறந்து இரண்டு கிளாசுகளிலும் கால்வாசி கால்வாசி ஊற்றிவிட்டு மீதியை எடுத்துவைக்கிறான். பின் இரண்டிலும் தண்ணீரை ஊற்றிவிட்டு ஒன்றை எடுத்துக்கொள்கிறான். மற்றவன் இன்னொன்றை எடுத்துக்கொண்டு சந்தோஷமாக)

நபர்2 : இடிச்சிக்கோ

நபர்1 : இடிச்சிக்கிறேன்.

நபர்2 : சியார்ஸ்ன்னு சொல்றதவிட இடிச்சிக்கோங்கறது, கேக்க நல்லா இருக்கில்ல ?

நபர்1 : அது மட்டும் நல்லா இருந்தா போதாது சரக்கும் நல்லா இருக்கனும்.

(இருவரும் சப்பதமாக சிரிக்கிறார்கள். சுற்றியிருப்பவர்களில் ஒன்றிரண்டு பேர் இவர்களை வேடிக்கைப்பார்க்கிறார்கள்.)

நபர்1 : ராந்நாந் எக்சிபிஷன் போனியா (அவன் போனதாக தலையாட்டுகிறான். அதைக்கவனிக்காமல்) போயிருக்கனும். என்ன அர்புதமான படைப்புகள். அதுக்கெல்லாம் தனியா ஒரு ரசனைக்கண் வேணும். உனக்கு ரசனை ஏது ? எவன் மூட்டைய நவுத்துவான். எவன் எவ்ளோ காசத்தருவான்னு இருக்கறவனாச்சே நீ.

நபர்2 : மூட்டயை நேசிக்கிறவன் கூடவா உக்காந்திருக்க ?

நபர்1 : மூட்டைய காதலிக்கறவன்கூட என் நேரத்த செலவு செய்ய மனசுவராது.

நபர்2 : இப்ப.

நபர்1 : சும்மா சொன்னேன். திடார்ன்னு அப்படி வாய்தவறி வந்துடுச்சி

நபர்2 : இதமாதிரி வேற யார்க்கிட்டேயும் வார்த்தைய தவறவிட்டுடாதே.

நபர்1 : என்ன ஆவுங்கற

நபர்2 : உனக்கு ஒன்னும் அவாது. யாருக்கிட்ட அப்படி நீ சொன்னியோ அவன் தன்னோடு நண்பர்கள்ல ஒருத்தன ஒதுக்கிடுவான். அவ்ளோதான்.

நபர்1 : நீ அப்படி நெனக்கிறியா ?

நபர்2 : நான் நெனப்புலேயே வாழறவன் கெடையாது. செய்றவன். செஞ்சிடுவேன்.

நபர்1 : அப்பாடி. நான் தப்பிச்சேன். எனக்கு மன்னிப்பு கெடைச்சிடுச்சி.

நபர்2 : மன்னிப்பு தானா ஒருத்தன் எடுத்துக்கறது இல்லப்பா. பாதிக்கப்பட்டவன் பாதிச்சவனுக்கு கொடுக்கிறது. இனி அதமாதிரி பேசாதே.

நபர்1 : பேசமாட்டேன். (பின் தனக்குள் ) வாங்கிக்கொடுக்கிறவன் நீ குடிக்க வந்திருக்கறவன் நான். உன்ன கோவிச்சிக்குவனா. என்னை என்ன அவ்ளோ பெரிய முட்டாள்னா நெனச்சிக்கிட்டே.

ஊழியன் : சார் கூப்டிங்களா ?

(நபர்1 விழுந்துவிழுந்து சிரிக்கிறான்.)

நபர்2 : ஏன் சரிக்கிற.

நபர்1 : சிரிப்பு வருதுப்பா. சிரிக்கிறேன். சிரிக்கமுடியாம எத்தனபேர் கஷ்டப்படாறானுவ. எனக்கு சிரிப்புவர்றது சந்தோசம்தான. (அவன் முகத்தை ஒருமுறை பார்த்துவிட்டு) ஏன் சிரிச்சா உனக்கு கஷ்டமா இருக்கா ?

நபர்2 : ஆமா. நான் ஒரு கருத்தப்பேசிக்கிட்டு இருக்கும்போது. அதுசம்பந்தமா இல்லாம வேற எதுக்காகவோ சிரிக்கத்தோணுதுன்னா மனசுக்கு என்னவோ மாதிரிதான இருக்கும்.

நபர்1 : நீ ஏன் அந்த மாதிரி எடுத்துக்கற. உன் கருத்துக்கு சிரிக்கலன்னு உனக்கே தெரியறப்போ கவலப்படவேண்டியதில்லியே. உன் வேலைய எது தடுக்குது ? ஆங், உனக்கு அந்த சிரிப்புக்கான அர்த்தம் வேணும். உனக்கும் அந்த சிரிப்புக்கும் தொடர்பு வேணும். அதான. உனக்கு ஒண்ணும் பெரிசா ஆயிடப்போறதில்ல அந்த சிரிப்பால. உனக்கு பங்கில்லாதது நடக்கும்போது உனக்கு எந்த வருத்தமும் வரக்கூடாது. வருத்தம்னும் உள்வாங்கிக்கக்கூடாது. உன் எண்ணத்தோட போயிகிட்டே இருக்கனும். அப்ப சிரிக்கிறவனுக்கும் கஷ்டமில்ல, உனக்கும் கஷ்டமில்ல. ரெண்டுபேரும் நிம்மதியா இருக்கலாம். அத செய்ய முடியுமா உன்னால.

நபர்2 : முடியாது. முடியல. என்னால அப்படி இருக்க முடியல. எல்லாத்திலேயும் என் கவனம் இருக்கனும். எல்லாத்துலேயும் என் பங்கு இருக்கனும். அப்படி இருக்கும் பட்சத்துலதான் நான் உயிரோடு இருக்கறதாவே உணர்ரேன். இல்லன்னா. ஏதோ தனியா மரஞ்செடிகொடி இல்லாத காட்டுல காலுரெண்டையும் சொருகிக்கிட்டு அங்கேயே இருக்கற மாதிரி இருக்கு.

நபர்1 : (கிண்டலாக) சரி சரி நின்னதுபோதும் விசயத்த உள்ளபோடு.

(இருவரும் வெகுநேரம் குடிப்பதிலேயே கவனத்தைச் செலுத்துகிறார்கள். அவ்வப்போது அவர்களைச் சுற்றி நடப்பதில் கவனத்தைச் செலுத்துபவர்களாக இருக்கிறார்கள். பின்)

நபர்1 : காலப்பதரைப் பத்தி என்ன நெனைக்கிற ?

நபர்2 : யாரு பத்தாம் நூற்றாண்டுல வாழ்ந்த கவிஞுனப்பத்தியா.

நபர்1 : இல்ல. அவருபேர வச்சிருக்கற இப்பத்திய பல ஓவியர்கள்ல ஒரு ஓவியரப்பத்தி.

நபர்2 : எனக்கு கலையில ஒரு பெரிய கேள்வி இருக்கு.

நபர்1 : என்ன ?

நபர்2 : எதுக்காக ஒரு ஓவியமோ, சிற்பமோ, நாடகமோ கவிதையோ கதையோ படைக்கப்படுதுங்கறதப் பத்தி

நபர்1 : எதுக்காகன்னு தெரியல. ஆன எப்டின்னுவேனா சொல்லலாம். அதாவது, அவனவன் மனசு எத லயிச்சிதோ அதுல எத பதிவு செய்யமுடிஞ்சிதோ அது கலையாகுது, படைச்சவன் படைப்பாளியாவும் ஆகுறான்.கொஞ்சம் ஜாக்கிரதையா சொல்லனும்.. படைத்தவள் படைப்பாளி ஆகிறாள்.. இதுல எந்த கலையாவது பிரிஆக்குபைடு மனசோடு திட்டவட்டத்தோடு ஆக்கபடுதான்னா, அதான் இல்ல. உருவானபின்னாடி அதுக்கு அடையாளம் கொடுக்கப்பட்டிருக்கு. நான் சொல்றது நேர்மையான கலையப்பத்தி. கடைசரக்கப்பத்தியி;ல்ல. கடை சரக்குலதான் யாருக்கு என்ன தேவையோ அது செய்யப்பட்டு விளம்பரப்பட்டுத்தப்பட்டு கைமாறுது. முன்னதுங்கறது. கண்டுபிடிப்பு. பின்னது மோல்டு. அவ்வளவுதான். இதில் எதுக்காக படைக்கப்படுதுங்கற உன் கேள்விக்கு பதில் இருந்தால் திருப்தி படுத்திக்கோ.

நபர்2 : இல்ல. இந்த ரெண்டு வகையிலயும் கலைங்கற பேனர் தொங்குது. அந்தப் பக்கம் போக்கும்போதெல்லாம் எனக்கு கொழப்பமா இருந்தது அதனால கேட்டேன். இப்ப சொல்லு யாரு அந்த காலப்தர். எனக்கு அவரப்பத்தி தெரியாது ?

நபர்1 : தெரிஞ்சிக்கனும்னு ஆசையா இருக்கா.

நபர்2 : இரு இரு அவரப்பத்தி சொல்றதுக்கு முன்னாடி அவரோடு படைப்புகளப்பத்தி பேசு அதுக்கு பின்னாடி அவரப்பத்தி அதிகமா தெரிஞ்சிக்கனுமா வேணாமான்னு முடிவு செஞ்சிக்கறேன். என்ன.

நபர்1 : என் நண்பனுக்காக. கலாப்தர் சமீபமா ஒரு நாடகத்த எழுதியிருக்காரு. அது ஒரே சமயத்துல புத்தகமாவும் மேடை நிகழ்வாவும் வந்திருக்கு. இதுவரையிலும் படிச்ச… பார்த்த … நாடகங்கல்ளேயே மிகச்சிறந்ததா எனக்குத் தோணுது. ஏன்னா நெறையா நாடகங்கள் ஏதாவதொரு வாழ்க்கைய படம் புடிச்சிக்காட்டும். காட்டுகிற விதம் இந்த இசம் அந்த இசம்னு சொல்ல ஏதாவதொரு வகைக்குள்ளாற புகுந்து வெளிப்படும். ஆனா இது முழுக்கமுழுக்க மனசுக்குள்ளாற போய் உட்காந்துக்கக்கூடியதா இருக்கு. பாக்குற அத்துன பேரோடு மனசுக்குள்ளேயும் அது தனக்கான ஒரு இடத்த எடுத்துக்குதா, இல்ல ஏற்கனவே இருக்கற இடத்தோடு சேர்ந்து கரைஞ்சிடுதான்னு தெரியல. அப்படி ஒரு நாடகம். நம்ம மனசுக்குள்ளாற அப்பாவுக்கு ஒரு இடம் அம்மாவுக்கு ஒரு இடம் நம்ம ஆசைக்கும் வெறுப்புக்கும் தேவைக்கும் தேவையற்றதுக்கும்னு இருக்கற இடங்க மாதிரியான ஒரு நெருக்கத்த அந்த நாடகம் எற்படுத்துது. இது எப்படி சாத்தியமாச்சு. அப்படில்லாம் ஆராயக்கூடாதில்ல. ஏதாவது ஒரு நல்ல விஷயம் வந்தா உடனே அத அக்குவேற ஆணிவேறன்னு ஆராயத்தொடங்கிட்ரோம்ல. அதுநல்லதுக்குத்தான் இல்லியா. இல்லன்னா. உலகத்துல ஒரேயொரு நல்லவன் ஒரேயொரு கெட்டவன் மட்டும் தான் இருக்க முடியும். இப்ப நெரையா நல்லவங்களும் நெரையா கெட்டவங்களும் இருக்கறுதுக்குக் காரணமே ஆராய்ச்சிதான். ஆராய்ச்சியால, இருக்கறதுதான் மாறிமாறி வருதே ஒழிய புதுசா எதுவும் வரல. ஏன் தெரியுமா.

நபர்2 : ஆராய்ச்சி செய்யறதுக்கு வகுப்பு நடத்துறதால.

நபர்1 : ஆமா. ஆராய்ச்சிக்கு எதுக்கு வகுப்பு. கேட்டா முறைப்படுத்துவதுக்குங்கறானுங்க. எத முறைப்படுத்தப்போறாங்க உலகத்துல. முறைக்குள்ள அடங்காத இந்த உலகத்துல.

நபர்2 : இவன் செத்தா உலகம் இல்லன்னுவான். அவன் செத்தா நான் தான் உலகம்ன்னு தைரியமா மார்தட்டிக்குவான். போதும் போதும் நீ கலாப்தரப்பத்தி சொல்லுப்பா. ஒரு கதைய கேட்ட மாதிரியவது இருக்கும்..

நபர்1 : இதான் கலாப்தர். மிகச்சுதந்திரமான ஒரு மனிதனை அவனது எழுத்தின் மூலமா அவனது நாடகத்தின் மூலமா என்னால உணர முடியுது.

நபர்2 : இப்பல்லாம் கலைஞுர்கள் அடையாளப்படுத்தப்படுவது அவர்களது படைப்புகள்னு போயிடுச்சி. அவன் முதல்ல தன்ன ஆதரிக்கக்கூடிய குப்பைகளை(குசுகுசுப்பாக) சுயபுத்திய இல்லாத மனுசங்கள…(என சொல்லிவிட்டு மீண்டும் சாதாரணக்குரலில் தொடர்கிறான்) முதலில் உருவாக்கிக்கிட்டு அவங்களுக்காக அவங்களோட விருப்பத்துக்கு அவன் எத வெளியிடுரானோ அது கலையாகிறது. அவன் கலைஞுனாகிறான். இது ஒரு வித்து வாங்கி, வாங்கி வித்துன்னு போறது.

நபர்1 : ஆமா இது ஆரம்பகாலத்துல இல்லியே.

நபர்2 : ஆரம்ப காலம்னு எதுவும் இல்லப்பா. உனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட முதல் அறிமுகக்காலம் எல்லாருக்குமான ஆரம்ப காலமில்ல. திரும்பவும் சொல்றேன். உனக்கு ஆரம்பிச்ச காலத்த அறிமுகப் படுத்தியவன் ஒரு ஆராய்ச்சியாளன். கல்வெட்டையோ காஞ்ச ஓலையையோ லேசருக்கடியில வச்சி இத்தனவருமா ஆவுதுன்னு சொல்லிட்டா அப்பத்தான் இது ஆரம்சிசதுன்ன எப்படி ஏத்துக்கறது. அதுக்கு முன்னாடி இருந்தது கெடைக்காத வரைக்கும். அதனால ஆரம்பம்னு ஒரு காலமும் இல்ல முடிவுங்கற காலமும் வரப்போறதில்ல. போயிகிட்டே இருக்க வேண்டியதுதான். உன்ன ஆரம்பம்னு சொல்ல வச்ச அந்த ஆரம்பமானது அந்த ஆரம்பத்துக்குக்காரணமான ஒரு இறதியிலேர்ந்துன்னு சொன்னா நீ புரிஞ்சிக்கிவியா. இல்ல உன் அந்த ஆரம்பத்தின் இறுதிக்கும் ஒரு ஆரம்பம்னு ஒரு இருக்குன்னானும் புரிஞ்சிக்கிவியா. ஒரு விசயத்துக்கு பல ஆரம்பமும் பல இறுதியும் இருக்குன்னா அது ஒரே விசயமா அல்லது ஒரேவிசயமா தோன்ற பல விசயத்தின் கோர்வையா. இல்ல. நமக்குத் தெரிஞ்ச ஒற்றை விசயங்களெல்லாம் ஒற்றைவிசயங்களில்ல எல்லாம் பல விசயங்களோட கோர்வைன்னா விளங்குமா… போயிகிட்டே இருக்க வேண்டியதுதான். அடிமுடி தேடி கண்ணு குருடாகிறவரைக்கும் அலையாம.

(நபர்1 தனக்கு இன்னும் கொஞ்சம் ஊற்றிக்கொண்டு அதைத் தூக்கிப்பிடித்தபடி)

நபர்1 : போயிகிட்டே இருக்க வேண்டியதுதான்.

(அவாகள் பேச்சில் அவர்களது அசைவில் தளர்வும் தள்ளாட்டங்களும் ஏற்படுகிறது)

நபர்2 : என்ன போயிகிட்டே இருக்கவேண்டியது. நான் ஒருத்தன் எவ்வளோ பெரிய விஷயத்த பெசிக்கிட்டு இருக்கேன் நீ பாட்டுக்கு கிண்டல் செஞ்சிக்கிடே இருக்கியே.

நபர்1 : என்ன . . . ? என்ன . . . இப்போ ?. நீ சொல்றதுக்கெல்லாம் நான் தலையட்டிகிட்டு இருக்கனும்ங்கறது என்ன சட்டமா ?. போடா.

நபர்2 : இங்க பார். இதுக்குத்தான் சொல்றது. வார்த்தய கொட்டாதன்னு.

நபர்1 : இரு இரு. இதுக்குத்தான்சொல்றதுன்னு சொன்னியே . எதுக்குத்தான் சொல்றது. எதச் சொல்றது. சொல்லு சொல்லு.

நபர்2 : ஓவரா போற.

நபர்1 : யாரு ஓவரு. (சிரிக்கிறான்)

(பின்மேசையில் இருந்த இருவரில் ஒருவன் பாட மற்றவன் அதுக்கு ஏற்றாற்போல் மேசையைத் தட்டி தாளம் போடுகிறான்.)

ஏண்டியம்மா மொரைகை¢கிற

எதுக்க வந்த நிக்கிற

வாடிபோன மாமன் இங்கு

சரக்கில் மூழ்கும் சோக்குல.

போகிற உன்போக்குல ஒன்ன மட்டும் செய்யேன்டி

வேலையிருக்குன்னு வெட்டியான்கிட்ட சொல்லிவிட்டு போயேன்டி

(இருவரும் கோபம் ஆறினவர்களாக அவர்களை கவனிக்கிறார்கள். பேச்சை சற்று நிறுத்திவிட்டு அவர்கள் இருவரும் குடிப்பதில் கவனம் செலுத்துகிறார்கள்.)

(பின் நபர்2 தன் நாற்காலியிலிருந்து எழுந்து சுற்றுமுற்றும் பார்க்கிறான். அவனது செய்கை இப்போது முற்றிலும் வினோதமாக இருக்கிறது)

நபர்2 : இந்த கானகத்தில் தொலைந்துபொன அத்தனை மான் குட்டிகளையும் மீட்க ஒரு சபை அமைக்கப்பட்டிருந்ததே. அது எந்த திசையை நோக்கிச் சென்றிருக்கிறது.

(அவனே தொடர்ந்து யாருடனோ பேசுவதுபோலவும் அதற்கு அவர்கள் பதிலளிப்பதுபோலவும்)

ஆங்.அப்படியா. வந்ததும் என்னைச் சந்திக்கச்சொல்லுங்கள். நான் இப்போது 2005ம் ஆண்டில் பிப்ரவரி மாதம் 5ம் தேதியில் இயங்கிக்கொண்டிருக்கும் உலகில் இப்போதைய என் இல்லத்திற்கருகே உள்ள ஒரு பாரின் மாடியில் இருக்கிறேன். சந்திக்கச் சொல்லவும். வருவதற்குக் காலதாமதம் ஏற்பட்டால் அந்த தாமதத்திற்குள் மாறியிருக்கும் வெறொரு இடத்தில் இருப்பேன் கண்டுகொள்க.

(நபர்1யைப்பார்க்கிறான்)

என்ன அப்படி பாக்குற. நீ நெனைக்கிற ஆள் இல்ல. நான். அதே போல நான் தொடர்ந்து வர்ற ஆளும் இல்ல நீ. இப்போ நாம இங்கே. அப்புறம்னு வந்தா நீ (அவனை சுட்டிக்காட்டி) நான்குறத(தன்னைச்சுட்டிக்காட்டி) இயக்குகிற தொடர்பு நான்|யை (தன்னை சுட்டிக்காட்டி) பொறுத்தது நீயும் நானும்.

நபர்1 : அப்படின்னா இந்த கடற்கரையில எத்தனையோ நண்டுக கொடுக்கு ஓடபட்டு ஓடிபோயிருக்கு தெரியுமா ?. அதுல ஏதோ ஒரு விஷ நண்டுனோட கொடுக்குமேல இப்ப நீ உக்காந்திருக்க. ஏதோன்னு சொன்னது நண்டுகளுக்கெல்லாம் ஒரு அடையாளம் இருக்குது. இல்லன்னாலும் அடையாமில்லாதத அடையாளமா சொல்லிக்கிட்டு அலைங்சிககிட்டு இருக்கும். இப்ப நீ உக்காந்திருக்கிற நண்டு என்ன அடையாளத்தோடு இருக்குங்கறது தெரியல. தெரிஞ்சா கொல காரன்கிட்டேர்ந்து எப்படியாவது தப்பிச்சிக்கலாம். நல்லவனா கெட்டவனான்னு தெரியாத மாதிரி இருக்கிற ஒருத்தன்கிட்டேர்ந்து தப்பிக்கவே முடியாது. காப்பாதிக்கணும்னா கொஞ்சம் நவுந்து ஒக்காரு. கவலயில்லன்னா இன்னும் அழுந்திகூட உக்காந்துக்க.

நபர்2 : உன்னோடு நண்டுகள பத்தி நெனைக்கும்போது எனக்கு கவலயா இருக்கு. அதுங்க நண்டுகளா மாறுறதுக்கு முன்ன கடல ஆதிக்கம் செஞ்சத மறக்க முடியுமா. நீலகண்ட கதைகள் அப்போ ஏற்பட்டிருக்கலாம்னு நெனைக்கிறேன். இல்லன்னா அதுங்களோட ஓட்டல கூட்டலோ, பெருக்கலோ சில்லுமாதிரியோ குறி ஏற்பட்டிருக்கலாம்.

நபர்1 : காலம்மாறிகிட்டேதான் இருக்கும். ஆனா. . .

ஊழியன் : சார் ?

நபர்2 : நீ போயி ஒரு கப்பல வரச்சொல்.

நபர்1 : கப்பல் வாணாம். ஒரு குவார்ட்டர். போதும்.

ஊழியன் : இன்னிக்குமா சார். (சிரித்துக்கொண்டே சென்றுவிடுகிறான்)

நபர்2 : ஏய் இன்னிக்குமட்டுமில்லடா. என்னிக்குமே. என்னிக்குமே இந்த கடல்ல கப்பல் வரும் போவும். எல்லாருக்கும் அதுல ஏறிக்கிற உரிம இருக்கு. ஆனா, யாரு தடுக்கிறது. யாரு தழுவுறதுங்கறத பாத்துக்கிட்டே இரு. நீ நிக்கிற கப்பல். நான் போயிகிட்டே இருக்கிற கப்பல். என்ன நோக்கி வர உனக்கு என்ன தெரியும் ?. நான் தேடிப்போயி புடிக்கிறவன். தேடித்தேடி புடிக்கிறவன்.

(ஊழியன் திரும்பிப்பார்த்து சிரித்துவிட்டு இ;னனொருத்தரின் அழைப்பின் பேரில் நின்று அவர்களிடம் தேவையானதைக் கேட்டுக்கொண்டிருக்கிறான். அந்த இன்னொருவரானவர். சற்று முன் பாட்டு;பபாடினவராவார். அவர் ஊழியனிடம் எதையோ விசாரிக்க. அவன் அதற்கு பதிலளிக்க. அவர் மீண்டும் பாடத்துவங்குகிறார்)

கொக்கு பறக்குதடி

என் மனசுக்குள்ள

என் மனசுக்குள்ள

கொடிமல்லி வாட, வீசுதடி.

வாய் திறந்த பேசினதெல்லாம்

வயத்துக்குள்ள கரையுதடி.

வயத்துக்குள்ள கரையுதடி,

வாக்கப்பட்டவளே நான் வெறுக்கும் சின்னவளே.

நபர்2 : இந்த மாலுமியினோட பாடல்வரிகள்ல அவன் தொலைச்சிருந்த காதலப்புரிஞ்சிக்கமுடியுது. என்ன ஒரு அபத்தமான வாழ்க்க பாரு ? ஒருத்திய கட்டிக்கிட்டு வாழ் நா பூரா இப்படி உழளுணும்னு தலையெழுத்து.

நபர்1 : நண்டு கொடுக்கு இப்ப அவன் இடுப்புக்குக்கீழ.(சொல்லிவிட்டு விழுந்து விழுந்து சிரிக்கிறான். பிறகு சில நிமிடங்கள் அமைதியாய் இருந்துவிட்டு)

ஆயிரம் பாம்புகள் தீண்ட

ஆட்டங்காணாத நானு

அரைநொடி பேச்சக்கேட்டு

ஆயிபுட்டேனே வீணு

டமுக்கு டமுக்கு டமுக்கு டமுக்கே. . .

(இந்த வரிகளையே தொடர்ந்து பல்வேறு விதங்களில் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் இருக்க அவனோடு மற்ற குடிகாரர்களும் சேர்ந்து ஆடுகிறார்கள். முன்பு பாடினவனும் அவர்களோடு சேர்ந்து. இவர்கள் பாடின வரிகளே மீண்டும் மீண்டும் பாடப்படுகிறது. பின், வரிகள் முன்னும் பின்னுமாக மாற்றிப்பாடப்படுகிறது. சேர்ந்திசையாகிறது, ஒரு நேரத்தில். பின் சேராதிசையாகிறது. அதன் பின், தாளத்தில் அமைந்த வரிகளற்ற கூச்சலாகிறது. பின் வெறும் கூச்சலாய் மாறி எல்லோரும் சோர்ந்து அவரவர் இடத்தில் இல்லாமல் மேசை நாற்காலிகள் இடமாறி விழுந்து உடைந்து என ஒரு ஒழுங்கற்ற நிலையில் மாறிவிடுகிறது, மேடை.

அவர்களில் ஒரு சிலர் வெளியேறிவிடுகின்றனர். ஒருசிலர் தாருமாறாக அமர்ந்து குடித்துக்கொண்டிருக்கின்றனர்.)

(அப்பொழுது நபர்1ம் நபர்2ம் தீவிரமான சிந்தனையில் இருப்பவர்களாகவும் பொறுப்பாக எதையோ செய்ய முனைப்பாக இருப்பவர்களாகவும் தென்படுவதும், அவர்கள் தங்கள் உடைகளை மாற்றி புராதான உடைகளை பாரின் கூரையிலிருந்து பிடுங்கி எடுத்து போட்டுக்கொள்வதும், சுற்றி தாறுமாராக கிடக்கும் குடிகாரர்களின் பிரதிநிதிப்போல அவர்களுக்கு ஏதோ நல்லது செய்யப்போவதாகவும் அவர்களது பாவனை இருக்கிறது.)

நபர்1 : எதிர்கொள்ளும் எல்லாவற்றையும் நாம் நம்முடையதாக ஆக்கிக்கொள்ளவோண்டும் என்ற நினைப்பிலிருந்து மாற மறுக்கிறோம். அதன் விபரீத வெளிப்பாடு வேதனையளிக்கிறது. அதனால்

(அப்போது அவர்கள் அமர்ந்திருக்கும் மேசைக்கருகே ஒரு பூனை வருகிறது. பின் அவர்களைக்கடந்து அவர்களுக்கு அருகிலிருந்து மேசையில் தூங்கிக்கொண்டிருந்த ஒரு குடிகாரனின் தட்டில் இருந்த உணவை உண்ணத்தொடங்குகிறது. நபர்2 அந்தப்பூனையையே பார்த்துக்கொண்டிருக்கிறான். அவன் கொஞ்சம் கொஞ்சமாக ஆத்திரம் அடைகிறான். திடாரென எழுந்து வெறியோடு சப்தமாக)

நபர்2 : இந்த பூனையின் ஈரலை உறிஞ்சிவிடும் வெறி எனக்குண்டாகிறது. அதனை நான் வெல்ல வேண்டும். ஒருபோதும் அது என் வாழ்க்கையில் குறுக்கிடக்கூடாது. அதனால் தான். . . அதனால் தான் . . . நான் என்னை வெறியேற்றிக்கொள்கிறேன். அதனைக்கொல்ல அலைகிறேன்.

நபர்1 : சுத்தமான மொழியில் உன் பேச்சு மாறியிருப்பது விநோதமாக இருந்தாலும் அதற்குபதில் தரும் நானும், உன்னைப்போலவே மாறியிருப்பதை அறியும்போது உனது மாற்றமொன்றும் விநோதமில்லை என்ற முடிவுக்கு வருகிறேன். (சிறிது இடைவெளிக்குப்பின்) என்ன செய்தாலும் பூனையை உன்னால் கொல்ல முடியாது. ஏன் தெரியுமா. அதுக்கு உன்னை விட, (சிறிது யோசித்த பின்) அதுக்கு சாதகமாக வாழ எது தேவையோ அதைத்தெரிந்து வைத்திருப்பதுதான். உன்னால் அதற்கு எந்த தீங்கும் செய்ய முடியாது ஏன் தெரியுமா ? அது நீ என்ன நினைக்கிறாயோ அதை உடனடியாக உணர்ந்துகொள்ளும் சக்தியோடு இருப்பதுதான். அதனால் நீ அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிடு.

நபர்2 : கைவிட்டுவிட்டால் . . .

நபர்1 : உனக்குத் துன்பமில்லை

நபர்2 : துன்பம் ?

நபர்1 : ஆம் துன்பம் தான். எல்லாமே துன்பம் தான். வாழ நினைப்பதே துன்பம். அதிலும் நல்ல நிலையில் எல்லோரும் பாராட்ட வேண்டும். போகும் போதும் வரும் போதும் எல்லோரும் வாழ்த்தவேண்டும் என்று தன்னை மாற்றி;க்கொண்டு வாழும் விதமும் துன்பத்தை வரவேற்கும் தாழ்பாளில்லா கதவுதான்.

நபர்2 : பிறப்பும் துன்பம் இறப்பும் துன்பம்.

நபர்1 : இறப்பு துன்பமில்லை. ஏனென்றால் . . .

நபர்2 : துன்பமா இன்பமா என்று நிர்ணயிக்கமுடியாத நிலை.

நபர்1 : அப்படித்தான் என்றாலும். அதை வேறொரு பார்வையிலும் பார்க்கலாம். யாரும் அந்த நிலையை அறிவதற்கில்லை எனலாம். (நபர்2 அவனை அதிசயமாகப்பார்க்கிறான்) அப்படிப்பார்க்காதே. அது என்னை எல்லா உண்மைகளையும் கக்க வைத்துவிடும்.

நபர்2 : கக்கு.

நபர்1 : நாம் மற்றவர்க்காக வாழுகிறோம். அது துன்பத்திற்கான காரணம். உனக்காக இப்பொது நான். இந்த சூழலுக்காக நாம் இருவரும். இந்த சூழலை நிறைத்திருக்கிற எல்லா யோசிக்கும் ஜீவராசிகளுக்குமாக.. நாம் நமக்காக ஒருபோதும் வாழ்வதே இல்லை. நாம் யோசிக்கும் ஒவ்வொரு துளியையும் யோசித்துப்பார். என்ன யோசிக்கிறோம். என்ன திட்டம் போடுகிறோம். எல்லாம் நம்மைவிட்டு மற்றவற்றைக் கணக்கெடுக்கும் நிலையில்தான். மற்றவர்கள் நம்மை எப்படி பார்க்கவேண்டும். எப்படி நம்மோடு உறவாடவேண்டும் என்ற கணக்கில் தான் நாம் வாழ்கிறோம். வாழ்க்கையில் எல்லா கணத்தையும் செலவிடுகிறோம். சாவுதான் இலக்கு அதனை எப்படி அடையவேண்டும் என்ற திட்டங்களைத் தீட்டி அதன்படி நடக்க எல்லா விருப்பு வெறுப்புகளையும் வடிவமைத்துக்கொண்டு வாழ்நாள் முழுவதையும் செலவு செய்து அதனை அடைகிறோம். அவ்வளவுதான் மனிதன் வாழ்கிறான். வேறென்ன ?

நபர்2 : வேறென்ன.

நபர்1 : வேறென்ன ?

நபர்2 : வேறென்ன. . .ஒன்றுமில்லை.

நபர்1 : அதனால் சொல்கிறேன். உனக்கு எப்படி வாழத்தோன்றுகிறதோ அதன்படி வாழ முயற்சி செய். எல்லா வெளி அவலங்களையெல்லாம் வெளியவே வைத்துவிடு. அது உனக்கு எந்த துன்பத்தையும் தராது. ஆனால் மற்றவர்க்கு ஒருவேளை இடறாக இருக்கலாம். காலம் செல்லச் செல்ல அவர்களும் தமது தவறால்தான் உன் நியாயம் தமக்கு தவறாகத்தோன்றுகிறது என்று மாறிக்கொள்வர். உன்னிடம் பாவமன்னிப்பும் கேட்கலாம். அப்போது அவசரப்பட்ட மன்னிப்பு வழங்கிவிடாதே. ஏனென்றால். உனக்கு யாரையும் மன்னிக்கும் ;அருகதைகிடையாது. அதை புரிந்துகொள்ளவேண்டும். நீ உனக்காக வாழ்ந்தாய். அவர்கள் அவர்களுக்காக வாழ முயற்சிக்கிறார்கள். அதனால் உன்னால் தான் எல்லாம் நடந்தது நீதான் எல்லாவற்றுக்கும் கர்த்தா என்று வெளிப்படுத்தி கடவுளாகிவிடாதே. அப்படி ஒரு கால் நீ அந்த தவற்றைச் செய்தாயென்றால் நீ மீண்டும் இன்னொரு கடவுளைப் படைத்தாவனாகவோ அல்லலது கடவுளாகவோ உருவாகி உலகை கெடுத்தவனாகிவிடுவாய். அதனால் நீ நீயாயிரு. அவர்கள் அவர்களாகிவிடுவார்கள். அப்படி அவர்கள் தம்மைத்தாமே புரிந்துகொள்ளாவிடினும் கவலையில்லை. நீ உன் வேலையைப் பார். அவ்வளவுதான்.

நபர்2 : அதுதான் சரி. அவர்ரவர் அவரவர் பணியைச்செய்தால் எல்லாம் சரியாகத்தான் போகும். இப்போது நான் என் பணியைச்செய்யப்போகிறேன்.

நபர்1 : என்ன ?

நபர்2 : பூனையைக் கொல்வது.

நபர்1 : உன்னை நீ கொன்றுகொல். ஆனால் பூனையைக் கொல்ல நீ யார் ?

நபர்2 : பூனையை நான் கொல்லாமல் வேறு யார் கொல்வது.

நபர்1 : உனக்கு உரிமை யில்லை.

நபர்2 : யார் எனக்கு உரிமை தருவது. உரிமை என்றால் என்ன ?

நபர்1 : உனக்குச் சம்பந்தமில்லாததோடு நீ சம்பந்தம் கொள்ள கொடுக்கப்படும் சுதந்திரம்.

நபர்2 : ஆஹ்ஹஹ்ஹா! எனக்கு யாரும் உரிமை கொடுக்கத் தேவையில்லை. நான் உரிமை பெற்று இந்த பூமிக்கு வரவில்லை. உரிமைபெற்று வெளியேரப்போவதுமில்லை. பாஸ்போர்ட் இல்லாமல் தான் இந்த நாட்டிற்குள் வந்தேன். பாஸ்போர்ட்டில்லாமலே சென்றுவிடுவேன். (சப்தம்போட்டு சிரிக்கிறான்.) எல்லாம் தெரியாத ஒரு நிலையில் எல்லாம் இயக்கப்படுகிறது. தெரியாத ஒருவரால். அது பலராகக்கூட இருக்கலாம். அதனால் உரிமை பெறவேண்டிய அவசியம் எனக்கில்லை. வேண்டுமானால் அந்தப் பூனை யாரிடமாவது உரிமை பெற்றுக்கொண்டு முடிந்தால் உயிரோடு இருக்க முயற்சிக்கட்டும். அந்த உரிமையை நான் தரப்போவதில்லை. எனக்கு அந்த பூனை சாகவேண்டும். அதுவும் நான்தான் கொல்ல வேண்டும். இப்போது உன் பேச்சையும் நான் கேட்கப்போவதில்லை. உன் பிரசங்கம் உன்னைப் பின்பற்ற நினைக்கும் எதனோடாவது நடக்கட்டும். நான் போகிறேன்.

நபர்1 : போ. போ. ஆனால் ஒன்று. நீ பூனையைக் கொல்லப்போகிறாயா. அல்லது பூனையைக்கொல்லப்போகும் நீ சாகப்போகிறாயா என்று பார்ப்போம்.

(நபர்2 சட்டென நிற்கிறான். பின் நபர்1யை நோக்கிவந்து)

நபர்2 : என்ன சொன்னாய்.

நபர்1 : நீ பூனையைக் கொல்லப்போகிறாயா. அல்லது பூனையைக் கொல்லப் போகும் நீ சாகப்போகிறாயா என்று பார்ப்போம் – என்றேன்.

நபர்2 : நான் சாக வேண்டிவருமோ ?

நபர்1 : வரலாம். சாவு நிகழ வேண்டி ஒரு செயல் முடுக்கம் பெற்றுவிட்டால், ஒன்றோ அல்லது அதற்கு மேலோ சாவு நிகழலாம்.

நபர்2 : நான் கொல்லத்தானே போகிறேன்.

நபர்1 : இல்லை. சாகடிக்கப்போகிறாய்.

நபர்2 : இரண்டும் என்ன வித்தியாசம் இருக்கிறது.

நபர்1 : முதலில் உடல் மட்டும் போகும். இரண்டாவதில் எல்லாமும் போகும்.

நபர்2 : உடல் போனால் எல்லாமும் போனதாகத்தானே அர்த்தம்.

நபர்1 : காந்தி போனார். அவர் போனாரா.

நபர்2 : காந்தி போனார். காந்தி போய்விட்டார் அல்லவா.

நபர்1 : காந்தி போனார். அவர் சிந்தனை ?

நபர்2 : அவராகத்தான் எல்லோரும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நீ என்ன பெரிய காந்தியா என்று சாதாரணமாகப் பயன்படுத்தப்படுகிறது அவரது பெயர்.

நபர்1 : இல்லை. சாதாரணமாகப் பயன்படுத்தப்படுகிறார் காந்தி. இது பொருத்தமாகும். இப்போது சொல். கொல்லப்போகிறாயா. சாகடிக்கப்போகிறாயா ?

நபர்2 : கொன்றால் மட்டும் போதாது சாகடிக்கவேண்டும் என்று என் எண்ணத்தை மாற்றிக்கொள்கிறேன்.

நபர்1 : உன்னால் பூனையை சாகடிக்கமுடியாது. பூனை எப்போதும் இருக்கும்.

நபர்2 : மனிதன் இருக்கும் வரைக்குமா அல்லது பூனை இருக்கும் வரைக்குமா.

நபர்1 : நம்மால் மனிதன் இருக்கும் வரைக்கும் தான் பேச முடியும். அதனால் மனிதன் இருக்கும் வரைக்கும் பூனை இருக்கும்.

(மிகவும் குழம்பியவனாக)

நபர்2 : இங்க பார். இந்த பார்லேர்ந்தாவது அத வெரட்டிடனும். அதுக்க என்ன செய்யலாம் சொல்லு. இனியும் நாமாட்டுக்கும் பழைய மொரையில பேசிக்கிட்டு இருக்கமுடியாது. வெட்டுஒன்னு துண்டுஒன்னுன்னு சொல்லிடு. என்ன.

நபர்1 : அதான் சொல்லிட்டியே. வெரட்டிடனும்னு. ஒனக்கு ஒத்தாசையா இருக்கறன். இந்த விசயத்துலமட்டும். என்ன ? பூனய வெரட்டிட்ட பின்னால பூனய திருப்பிக்கொண்டான்னு கேக்கக்கூடாது. சரியா ?

நபர்2 : சரி..

(இருவரும் பூனையை விரட்டுகிறார்கள். பூனை அங்கும் ஒளிந்து மறைந்து மேல ஏறி கீழே குதித்து என ஆட்டங்காட்டுகிறது. அதை விரட்டும்போது அவர்கள் மற்ற மேசை நாற்காலிகளைத் தள்ளிவிடுகிறார்கள். மற்றவர்களும் பூனையை விரட்டும் பணியில் தள்ளாடியபடி ஈடுபடுகிறார்ககள். எல்லாமும் உடைந்து துரத்தினவர்கள் சோர்ந்து போகும் வரை விரட்டுவது நடக்கிறது. பின் அனைவரும் கீழே விழுகிறார்கள் மயங்கி. பின் பூனை மெல்ல வந்து ஒரு மேசைமீது ஏறி எல்லோரையும் சுற்றி பார்க்கிறது. ஊழியன் வந்து அதனை சூ என விரட்டுகிறான். அவன் சொன்ன சூ என்ற சொல் பேரொலியாக கேட்கிறது. எல்லோருக்கும். எல்லோரும் காதுகளை மூடிக்கொண்டு ஓரக்கண்ணால் ஊழியனின் செயலைப் பார்க்கிறார்கள். பூனை ஓடிவிடுகிறது. உரைந்து போகிறார்கள் அனைவரும். அந்த உரைநிலையை நபர்கள் இருவரின் செயலால் உடைபடுகிறது)

நபர்1 : காத்தடிக்குது. போர் வரும். போயிடுவோமா ?

நபர்2 : நேத்திருந்த காத்து. நேத்து யாருக்காகவோ அடிச்சிகிட்டு இருந்த காத்து. இப்ப இந்த இடத்துல அடிக்குதுன்னா. எவனோ இங்க வெத்தெடத்த ஏற்படுத்திட்டு வேறெங்கியோ ஓடிபோயிட்டான்னுதான் அர்த்தம். அவன கொண்டுவரச்சொல்லட்டா. இல்ல கொன்று வரச்சொல்லட்டா.

நபர்1 : மணிக்கணக்கா காத்திருக்கனுமோ.

(காதில் வாங்காத நபர்2)

நபர்2 : வரச்சொன்னாலும் அவன் வரமாட்டான். அவன வரச்சொல்ல எவனும் போவவும் மாட்டான். நான் போயிட்டா. . . அப்புறம் போர் ஆரம்பிச்சிட்டா. . . உன்ன யார் காப்பாத்துரது. கவலையா இருக்கு. நான் இங்கியே இருந்து உன்ன பாத்துக்கறேன்.

(காதில் வாங்காத நபர்1)

நபர்1 : ஊசி வித்துடலாம் இந்த இடத்துல. உன்ன வித்துடமுடியுமா.

(காதில் வாங்காத நபர்2)

நபர்2 : உலகம் தெரியாத பயலுவ. மனுசன மனுசன் தின்னுகிட்டு இருக்கிறது புரியாதவனுங்க.

(காதில் வாங்காத நபர்2)

நபர்1 : பக்கத்து ஊர்ல ஒரு ரயில நிப்பாட்டிட்டானுவலாம். கூட்ஸ் வண்டி. ரெண்டு நாளா நிக்கிது. இப்ப போயி பாத்தா இருக்குமா.

(காதில் வாங்காத நபர்2)

நபர்2 : எதுவும் யாருக்காகவும் நிக்காது. கெழக்க உள்ள நாட்டில, காரெல்லாம் சீமாட்டிகள நல்ல இடத்துக்கு ஏத்திட்டுபோவுது தெரிஞ்சிக்க. நான் கூட ஒரு சீமாட்டிய என் ஊட்டுக்கு கூட்டுட்டு வந்துடலாம்னு நெனக்கிறேன். உனக்கு அப்படிப்பட்டவளுங்க தேவன்னா என் கூடவா.

(காதில் வாங்காத நபர்1)

நபர்1 : இப்பயே போயி பாக்கப்போறேன்.

(காதில் வாங்காத நபர்2)

நபர்2 : நானும் வரேன். ஆனா அவளுங்களுக்கு காரப்பாத்தா தான் கண்ணுதொரக்கும். பரவாயில்லையா.

(காதில் வாங்காத நபர்1)

நபர்1 : ஓட்டுனவனும் ஓடிபோயிட்டான். வெறும் வண்டி வெகுநேரமா நிக்கிதுன்னா. இப்ப வெறும் வண்டியாத்தான் இருக்கும். நான் போவல.

(காதில் வாங்காத நபர்2)

நபர்2 : இது தேவயில்லைதான். இருந்தாலும் கிளிமாதிரி இருக்க நம்;மவங்க கொரங்குமாதிரி ஒன்ன வச்சிக்குவாங்களாமே.

(ஊழியன் குவார்ட்ரைக் கொண்டு வர நபர்1 பேச்சை நிறுத்திவிட்டு ஒரே தாவாக தாவி பாட்டிலை பிடுங்காக்குறையாக வாங்கி அப்படியே ராவாக குடித்துவிட. அதைக்கண்ட நபர்2யும் நபர்1 மீது தாவி மீதி குடிக்கிறான். பின்)

நபர்1 : டேய் என்கிட்டியே மோதரியா.

நபர்2 : நான் மோதருக்குத் தகுதியா இந்த உலகத்துலேயெ வேற யாருமில்லடா. உன் கிட்ட தான் மோதமுடியும். இன்னொருதாட்டி மோதிக்குவோமா. வா. வாடா வா.

(தள்ளாடி தள்ளாடி இருவரும் ஒருவரையொருவர் முட்டிக்கொள்கிறார்கள். விழுகிறார்கள். ஊழியன் வந்து அவர்கள் பைகளில் உள்ள பணத்தை எடுத்துக்கொண்டு. அவர்களது வாட்சு மற்றும் பொருட்களை அவிழ்த்துக்கொள்கிறான். பின் இரண்டு மூன்று ஊழியர்கள் வந்து அவர்கள் இருவரையும் அப்புறப்படுத்துகிறார்கள்.)

பிறகு அவன் மூவரும் (ஊழியர்கள்) முன் மேடைக்கு வந்து

ஊழியன் 1: அப்புறப்படுத்திக்கொண்டே இருக்கிறோம்.

ஊழியன் 2. மீண்டும் மீண்டும் வருகிறார்கள்.

ஊழியன் 3. வராவிட்டாலும் வருத்தம்தான்.

நாடகத்தின் முதல்மனிதன் (நாகடத்தின் ஆரம்பத்தில் வந்த முகமூடி அணிந்து வந்தவன்) : மீண்டும் மேடைக்குள் வருகிறான். மூக்கைப்பிடித்துக்கொண்டு. பார்வையாளர்களைப் பார்த்து யாரும் சத்தம் போடக்கூடாதுன்னு விரலை வாயில் வைத்து சைகை செய்கிறான். மேடையில் ஒளி குறைந்து இருள் சூழ்கிறது.

அயபணைாயஅ@சநனகைக.உழஅ

Series Navigation

அரியநாச்சி

அரியநாச்சி