அஜீவன்
தமிழ் திரைப்படங்கள் அல்லது தமிழ் வீடியோ திரைப்படங்கள் என்றதும் தமிழர்கள் மனதில் திரையாக விரிவது தென்னிந்திய அதாவது தமிழ்நாட்டுத் திரைப்படங்கள் என்ற எண்ணம்தான். நாம் பழக்கப்பட்ட அல்லது வளர்ந்த வாழ்க்கை முறையிலிருந்து எப்படி உடனடியாக விடுபட முடியாதோ அதே போல்தான் இதுவும்.
எனக்குத் தெரிந்தவிதத்தில் இலங்கையிலும் சரி, மலேசியாவிலும் சரி , சிங்கப்பூரிலும் சரி, தமிழர்கள் வாழும் ஏனைய நாடுகளிலும் சரி, உருவாக்கப்பட்ட தமிழ் வீடியோ அல்லது திரைப்படங்கள் பெரும்பாலும் தென்னிந்திய பாணியைத் தழுவியதாகவே இருந்திருக்கின்றது. ஒரு சில படங்கள் வித்தியாசமாக இருக்க முற்பட்டாலும் முழுமையாக என்று கூறமுடியாது. இலங்கையில் உருவான ஒரு சில தமிழ்பேசும் சினிமாக்கள் சிங்கள சினிமாவின் தாக்கத்தைப் பெற்றிருந்ததையும் குறிப்பிட்டேயாகவேண்டியுள்ளது. அதற்கு காரணம் சிங்கள தொழில்நுட்ப கலைஞுர்கள் அப்படங்களில் முக்கியபங்கு வகித்ததும், அவற்றை தமிழ் – சிங்களம் எனும் இரு மொழிகளிலும் வெளியிட எத்தனித்ததும்தான். தமிழீழத்தில் தற்போது உருவாகும் பல வீடியோ திரைப்படங்கள் மாறுபட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
இக்கருத்துக்கள் சிலசமயம் ஆரம்பத்திலேயே தென்னிந்திய – உலக சினிமாக்களுக்கு எதிரான எண்ணத்தை உருவாக்க முற்படுவதாக எண்ணத்தோன்றும். பிரச்சனை இதுவல்ல. தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் ஏனைய புலம்பெயர் சமூகங்கள் போல நாமும் புலம் பெயர் தமிழ் சினிமா ஒன்றை ஜெனிக்கவைப்பதற்கு ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கும் நல்லதொரு சமயத்தில் தேவையான சில உண்மைகளை தெரிந்து கொள்வதும், அவற்றின்பால் தெளிவு பெறுவதும் இன்றியமையாதது.
சாதாரணமாகவே பொழுதுபோக்கான சினிமாவுக்கு கொடுக்கும் வரவேற்பை யதார்த்தமாக சினிமாவுக்கு மக்கள் கொடுக்காதது வருத்தத்திற்குரியதுதான். ஏனைய சமூகங்களை விட தமிழ் சமூகம் பொழுதுபோக்கிற்கான சினிமாவைத்தான் விரும்புகின்றது. யதார்த்தமான அல்லது பரிசு பெற்ற படம் என்றாலே திரையரங்கு பக்கமே தலைகாட்டாத காலமும் இருந்ததை எவரும் மறுக்க முடியாது. தொலைக்காட்சி நாடகங்கள் தமிழில் தயாரிக்கப்படத் தொடங்கிய பின் இந்நிலையில் சற்று மாறுதல் ஏற்பட்டுத்தான் இருக்கின்றது.
இதுவரை யதார்த்த சினிமா பற்றி ஏனோ என்ற மனோநிலையில் சிந்திக்க மறந்துவிட்டாலும்கூட, அது சற்று மாற்றம் பெற்றிருப்பதாகவே எண்ணத்தோன்றுகின்றது. அதற்கு இன்றைய எமது அரசியல் மற்றும் புலம்பெயர் மாற்றங்களும் புதிய சிந்தனைகளும் ஒருவகையில் காரணிகளாகலாம்.
புலம்பெயர் தமிழ் சினிமா எதிர்நோக்கும் பிரச்சனைகளை ஆராய முற்படும்போது முதன்முதலாக என் எண்ணத்துக்கு வருவது தென்னிந்திய வியாபார தமிழ் சினிமாவும் அதன் பாதிப்பும்தான்.
தென்னிந்திய கனவுலக சினிமாவுக்கு பழகிப்போன சாதாரண மக்களை யதார்த்த சினிமாவுக்குள் தள்ளி அதை ரசிக்கவைப்பது மிக மிக கடினமான ஒன்றுதான். அதாவது சர்க்கரையை அதிகமாக உட்கொண்டு பழக்கப்பட்டவரிடம், இப்போதிருந்து சர்க்கரையை நிறுத்திவிடுங்கள் போன்றதுதான் இதுவும்.
உண்மை கசக்கும். அதற்காக உண்மைகளை மறைத்து உணர்வு அடிப்படையில் துவேசமாக செயல்பட்டு மனிதநேயத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் எண்ணாது, இக்கட்டுரைபற்றி யதார்த்தமாக சிந்திக்க வேண்டுகின்றேன்.
புலம்பெயர் தமிழ் சினிமா ஒன்று உருவாக வேண்டுமென்று ஆதங்கப்படுபவர்கள், தமிழக சினிமாவை எதிர்ப்பதா, ஆதரிப்பதா, அங்கிருந்து எதையாவது கற்றுக்கொள்வதா எனும்கேள்வியை முதலில் தமக்குத்தாமே எழுப்ப வேண்டும்.
இந்தியாவிலும் உலகின் ஏனைய நாடுகளிலும் பரந்துவாழும் இந்தியத் தமிழர்களை மட்டுமல்ல, ஏனைய நாட்டுத் தமிழ்போசும் மக்களையும் கவரும் விதத்தில் தென்னிந்திய தமிழ் படங்கள் வரவேற்பையும் வளர்ச்சியையும் பெற்றிருப்பதை எவராலும் மறுக்க முடியாது. தமிழக ஒளிப்பதிவாளர்களும் இசையமைப்பாளர்களும் கூட ஆங்கில படங்களில் பணியாற்றுமளவுக்கு தகுதி பெற்றிருக்கின்றார்கள். தமிழர்களை ஏளனமாக எண்ணிய இந்திக்காரர்கள் கூட சிறந்த தொழில்நுட்பத்திற்காக தமது படங்களை சென்னையில் உருவாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள். தென்னிந்திய தமிழ் படங்களில் நடித்தால் புகழ் பெறும் தன்மை உண்டாகிறது எனும் நிலை பிறமொழி நடிக – நடிகையர் மனதிலும் ஏற்பட்டிருக்கின்றது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையிலுள்ள சினிமா தொழில்நுட்பக்கூடங்கள் ஆசியாவிலேயே சிறந்த தொழில்நுட்பக்கூடங்களாகத் திகழ்கின்றன. இங்கே தயாரிக்கப்படும் திரைப்படங்கள் ஆங்கிலப்படங்களுக்கு கிடைக்கும் வசூலை பெறாவிடினும், ஆங்கிலப் படங்களிற்கு நிகரான தொழில்நுட்பம் பெற்றிருப்பதை எவராலும் மறுக்க முடியாது. சர்வதேச அளவிலும் ஒரு சில படங்களே பேசப்படுகின்றன. யதார்த்த சினிமா சர்வதேச அளவில் பேசப்படுவதுபோல் கனவுலக சினிமா சர்வதேச அளவில் பேசப்படாததால் இந்தியாவில் தயாராகும் சினிமா எண்ணிக்கையின் அடிப்படையில் யதார்த்த சினிமாவின் எண்ணிக்கை போதாதென்றுதான் கூறத் தோன்றுகின்றது. இந்தியர்களின் பொழுதுபோக்கு சினிமா என்பதால் இப்படியான நிலை ஏற்பட்டிருக்கின்றது என்றுதான் கூற வேண்டும். புலம்பெயர்ந்து வாழும் எம்மவரின் முக்கிய பொழுதுபோக்கும் வீடியோ படங்கள் பார்ப்பதுதான். எனவே யதார்த்த சினிமாவை விட கனவுலக சினிமாவின் தயாரிப்பு பார்வையாளர்களின் ஏற்றுக்கொள்ளல் மூலம் அதிகரித்து இருக்கின்றது. ஆகவே தென் இந்திய – திரைப்படங்களை ஆதரித்தாலும் எதிர்த்தாலும் அவர்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்திவிடப்போவதில்லை. எதிர்ப்பு என்பது குரோத மனப்பன்மை ஒன்றை வளர்க்குமே தவிர வேறு எந்தவொரு சாதனையையும் படைத்துவிடாது. அணு ஆயுத பிரச்சனையில் இந்திய மக்களின் நிலைப்பாட்டை நாமும் ஒருமுறை நினைவு கூருவது நல்லதென்றே கருதுகின்றேன். தமிழ்பேசும் மக்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்கள் எமது சகோதர இன மக்கள் எனும் எண்ணமில்லாவிடில் நாம் நம்மை ஏமாற்றும் விதத்தில் நான் எனும் அகந்தையில் வாழ்வதாக ஆகிவிடும்.
இதுதவிர புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழ்பேசும் மக்களை, தென்னிந்திய தமிழ் படங்களைப் பார்க்காதீர்கள் என்றால், அவர்களுக்காக உருப்படியாக ஏதாவது படைப்புக்களை கொண்டு வருகிறோமோ என்றால் வாய்மூடி மெளனமாவதைத் தவிர வேறு வழி கிடையாது. தமிழ்படங்களை தவிர்த்தால் நாம் வாழும் நாடுகிளில் திரையிடப்படும் ஆங்கில அல்லது நாம் வாழும் நாட்டின் திரைப்படங்களை மட்டுமே பார்க்க வேண்டிவரும். நாம் சத்தமிடும் கலை கலாச்சாரம் புலம்பெயர் நாடுகளில் என்னாவது ? அநேகமான படித்த தமிழர்கள் கெளரவத்துக்காக ஆங்கிலத்தில்தான் வீட்டிலும் உரையாடுகின்றார்கள். புலம்பெயர்ந்து நாட்டின் பிரச்சினை காரணமாக வெளியேறிவிட்ட அநேக தமிழர்களுக்கு ஆங்கில அறிவு குறைவுதான். அவர்கள் தாம் வாழும் நாட்டின் மொழியைத் தெரிந்து கொள்கின்றார்கள். இவர்கள் தமிழ் மொழியை மறக்காவிடினும் இவர்களுக்குப்பிறக்கும் எதிர்காலக் குழந்தைகள் நிச்சயம் எமது மொழியையும் கலாச்சாரத்தையும் மறந்துவிடுவார்கள்.
இக்கருத்து கலாச்சாரத்தை காக்க முற்படுவதான சாயத்தை பூச எத்தனித்தாலும், ஊர்க்குருவி உயரப்பறந்தாலும் பருந்தாவதில்லை என்பதுபோல் நாம் எங்கு எப்படி வாழ்ந்தாலும் நமது அடையாளம் மாறப்போவதில்லை.
எனவே தென்னிந்திய – மற்றும் உலக சினிமாக்களை எதிர்ப்பதை விட்டு, அவற்றிலிருந்து சினிமா ஒன்றை படைக்கவும், அதை வேறுபடுத்திப் பார்த்து ஆதரவளிக்கவும் அனைவரும் முன்வரவேண்டும்.
சொல்வது சரிதான். இவை பார்வையாளனுக்கு போய்ச் சேருமா ? உடனடியாக போய் சேராதுதான். ஆனால் பத்திரிகைகள், வானொலிகள், புத்தகங்கள், கருத்தரங்குகள் வழி போய் சேர வகை செய்யலாம். இவை அனைத்துக்கும் கலைஞர்கள் வரிசையில் முதன்மை பெற்றவர்கள் மனம் திறந்து பேசி ஒன்று சேரலாம். புதியவர்களுக்கு வழிகாட்டலாம்.
தன்னை சுயவிமர்சனம் செய்து கொள்பவனும், ஏனையோரின் விமர்சனங்களை திறந்த மனதுடன் ஏற்றுக்கொண்டு செயல்படுபவனும் மட்டுமே ஒரு நல்ல கலைஞனாக – படைப்பாளியாக பரிணமிக்க முடியும். அப்படியில்லாவிடில் எப்போதும் போல் பழைய பல்லவியைத் தொடரவேண்டியதுதான்.
புலம்பெயர்ந்து வாழும் மக்கள் மத்தியிலிருந்து அத்தி பூப்பதுபோல் ஆண்டொன்றுக்கு ஏதோ ஒன்று இரண்டு படைப்புகள் வந்து வெற்றி பெற்றுவிட்டால் அது ஒரு சாதனை என எண்ணுவது மடமையானது. அனைத்துப் பகுதியிலிருந்தும் படைப்புகள் புதிது புதிதாக உருவாக்கம் பெற வேண்டும். வேறுபட்ட நாடுகளில் இருந்து மாறுபட்ட அனுபவங்களாக அவை அமையும்போது அவை வித்தியாசமாகவே இருக்கும். அவை நிச்சயம் மக்களால் வரவேற்கப்படும்.
இலங்கையிலும், தென்னிந்தியாவிலும் சினிமாக்களில் பணியாற்றிய பல கலைஞர்கள் புலம்பெயர் நாடுகளில் இருக்கின்றார்கள். இவர்களில் ஒரு சிலருக்கு சினிமாதுறை பற்றிய கல்வி அறிவு அல்லது அனுபவம் இருக்கிறது. இவர்களது பெரிய குறை அனைத்தும் தமக்குத் தெரியும் என்று தமக்குத்தாமே கிரீடம் சூடிக் கொள்கின்றார்கள். இதனால் இவர்கள் ஏனைய திறமையுள்ள கலைஞுர் ஒருவருடன் சேர்ந்து எதுவும் செய்யாது, தனது தலையில் அனைத்தையும் போட்டுக்கொண்டு செயல்படத் துடிக்கிறார்கள். இதற்கு மிக முக்கிய காரணம் தான் அடுத்தவன் முன் தாழ்ந்து விடுவேனோ எனும் தாழ்வு மனப்பான்மைதான். அத்துடன் ஒரு குழுவாக சேர்ந்து செய்யும்போது அனைத்துக்கும் தானே முழு உரிமையும் கோர முற்பட்டு, அடுத்தவர்களை மலினப்படுத்தி படைப்புகளை புஸ்வாணமாக்கி விடுகிறார்கள்.
அப்படியுமில்லாவிட்டால் எதுவுமே தெரியாத அப்பாவி புதிய கலைஞுர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து தன் சுய விளம்பரத்துக்காக அவர்களை பலிக்கடாவாக்கி தப்பிக்கொள்வது. இப்படிப்பட்டவர்களுக்கும் மூன்றாம் தர அரசியல்வாதிகளுக்கும் எந்த வேறுபாட்டையும் நான் கண்டதில்லை. இன்னுமொருசாரார், கதை – திரைக்கதை இயக்கம் ஆகியவற்றோடு கதாநாயகனாகவும் நடிக்க வேண்டுமென்று நினைப்பவர்கள். இப்படியான சிலர் கதை சொல்லி ஒரு இயக்குனர் போல் பல பகுதிகளை சொல்லிக்கொண்டு வரும்போது எங்கோ பார்த்த சில படங்களை ஞாபகத்துக்கு கொண்டு வந்து சிரிப்பை வரவழைக்கின்றது.
எமது கலைப்படைப்புகள் எவருக்கு போய்சேர நாம் செய்கிறோம் என்பதைக்கூட சிந்திக்காமல் ஒரு பெரிய இயக்குனர் போல் பேசுவது பரிதாபத்துக்குரியது. இவர்கள் திருமண பிறந்தநாள் விழக்களை படம்பிடிப்பது போல் சினிமாவையும் நினைப்பது கேலிக்குரியது. ஒளிப்பதிவுக் கருவியால் பொம்மை வந்தால்போதும் என்று மட்டும் நினைக்கின்றார்கள்.
சினிமா சில நெறிமுறைகள் மற்றும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு உருவாகும் ஒருகலை. நினைத்ததை நினைத்த இடத்தில் புகுத்தும் ஒரு கலையல்ல. அப்படியான விதிமுறைகளை தவிர்த்தால் ஏதோவொரு படைப்பாக இருக்குமே தவிர, அது எவராலும் பேசப்படாததாகப் போய், படைத்தவர் தன் வீட்டில் வைத்து தானே போட்டுப் பார்த்து ரசிக்க வேண்டியதாகிவிடும்.
இதுதவிர மேடை நாடகத்துக்கும் – சினிமாவுக்கும் உள்ள வித்தியாசத்தைக்கூட பலரால் வேறுபடுத்திப் பார்க்கமுடியாமலிருக்கின்றது. புலம்பெயர் தமிழ் சினிமா என வந்த படைப்புகளில் உள்ள பெரியதொரு குறை இலங்கைத் தமிழையும், இந்தியத் தமிழையும், நாடகவசன நடைகளையும் புகுத்தி பார்வையாளனை பைத்தியக்காரனாக்க முற்படுவது. இப்படியான ஒரு சில படங்களை பார்வையிடும் பார்வையாளர்கள் படும் அவஸ்தையும் – நகைப்பும் புலம்பெயர் சினிமா ஆர்வலர்களை புண்படுத்துகின்றது.
பணபலமும், ஆர்வமும் மட்டுமே ஒருவனை படைப்பாளியாக்கி விடுவதில்லை. ஒரு திரைப்படத்தை பார்த்துவிட்டு அப்படத்தின் கதையைச் சொல்வது கடினமல்ல. ஒரு கதைக் கருவை பார்வையாளன் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் திரையில் செதுக்குபவன் மட்டுமே படைப்பாளியாக முடியும். மனித எண்ணங்களில் தோன்றும் அனைத்தையும் திரையில் காட்ட முடியாது. உதாரணமாக மாலைப்பொழுதின் மயக்கத்தில் தத்தளிக்கும் ஆதவனுக்கு ஆறுதலளிக்கும் எண்ணத்தில் அவள் தன் பொன்னிற கூந்தலை மேனியில் படரவிட்டவாறு அன்னமாக நடந்து வந்து கொண்டிருந்தாள் என்பதை பாட்டிலோ> எழுத்திலே வடித்துவிடலாம். ஆனால் அதை திரையில் வடிப்பது மிக கடினம். ஏன் முடியாது என கேட்கத் தோன்றும் ?
சற்று முயன்றுபார்த்தால் மட்டுமே விபரீதம் புரியும். மாலைப் பொழுதில் ஆதவன் மறைவதையும், அவள் நடந்து வருவதையும் காட்டலாம். அது ஒரு பெண் கூந்தலை மேனியில் படரவிட்டவாறு, மாலை நேரத்தில் நடந்து வருவதைத்தான் சொல்லுமே தவிர, ஆதவன் மயக்கத்தில் தத்தளிப்பதையோ, அவள் அன்னமாக ஆதவனுக்கு ஆறுதல் தர வருவது போன்றோ ஒருபோதும் எடுத்துக்காட்டாது. கற்பனைக்கும் சினிமாவுக்கும் நிறையவே வித்தியாசமுண்டு. எந்தவொரு நிகழ்வையும் மூளை கிரகித்துக்கொள்ள சிறிது காலமெடுக்கின்றது. அது ஆளுக்கு ஆள் வித்தியாசப்படுகின்றது. சினிமா பல்வேறு தரப்பட்ட மக்களை ஈர்க்கும் ஒரு கலை. எனவே எல்லா ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளும் தன்மைக்கு ஏற்பவே ஒரு படைப்பை மக்கள் முன் வைக்க வேண்டியிருக்கின்றது. சமூகத்துக்கு போய்சேராத, பார்வையாளனின் ஏற்றுக்கொள்ளல் மூலம் அங்கீகரிக்கப்படாத எந்த ஒரு கலைவடிவமானாலும் அது பயனற்றது என்பதே என் கருத்து. எனவே செய்யும் கலை பற்றிய கல்வியறிவும், அனுபவமும், சிந்தனையும் நிச்சயம் தேவை. அதை விடுத்து விலையுயர்ந்த சாதனங்கள் பிரமாண்டமான வெற்றிகரமான திரைப்படமொன்றை தரும் என்ற கருத்து என் உடன்பாட்டுக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கின்றது.
இதையெல்லாம் ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால், சிலரது செய்கைகளால் படும் வேதனைகள் எழுதி மாளாது. ஒரு சிலர் தானும் ஒரு படம் தயாரிக்க வேண்டுமென்று ஒரு கதையை எடுத்துக்கொண்டு தானே கதாநாயகனாக நடிக்கப்போவதாகவும், தன்னால் இப்படத்தை இயக்க முடியும் நீங்கள் ஒளிப்பதிவு செய்து தந்தால் போதும், மூன்று மணித்தியாலங்களுக்குள் முடிக்கலாமா ? என்று கேள்வியும் கேட்கின்றார்கள். இவர்கள் திரைப்படத்தை மேடைநாடகமாக நினைத்து வருகின்றார்கள். இவர்களிடம் கதைகேட்டால் நாலைந்து படங்களில் கேட்ட கதைகள் இடம்மாறி உல்ட்டா பண்ணப்பட்டிருப்பது அப்படியே தெரியும். இவர்களைவிட இவர்களோடு வருவோர் புகழ்பெற்ற இயக்குநர்போல் பேசத் தொடங்கிவிடுவார்கள். இதில் யார் இயக்குநர், யார் நடிகர் என்று புரியாது தலையை பிய்த்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.
இதுபோன்ற இடைய+றுகள் மத்தியில் ஒரு சில படைப்புகள் அத்தி ப+த்தாற்போல் ப+க்க முயன்று மொட்டிலேயே கருகிவிடுவது மிக மிக வேதனையானது. அப்படி வரும் படைப்புகள் பற்றிய விமர்சனங்கள்கூட மிகவும் அரிதாகவே எழுதப்படுகின்றன. சிலர் படைப்பை விமர்சிப்பதை விடுத்து படைப்பாளியை விமர்சிக்கத்தொடங்கிவிடுகிறார்கள். ஒரு சிலர் படைப்பாளியின் படைப்பைவிட அவனது பூர்வீகத்தை தெரிந்து கொள்ளவே பிரயத்தனபடுகிறார்கள்.
இங்கே அந்தக் கலைஞுன் எந்த சாதியில் பிறந்தான் என்பதிலிருந்து அவனது தற்போதைய அரசியல் நிலைப்பாடுவரை தேடிக் கண்டுபிடித்து ஒரு புதிய கலைஞுனின் வரவை தடுப்பதை முக்கிய குறிக்கோளாக கொள்கிறார்களே தவிர, புதிய வரவொன்றாக ஆதரிப்பதை தவிர்த்து வருவதால், இன்றுவரை சிறந்த புதிய கலைஞர்கள் முகம் நினைவில் நிற்கும் முன்னே முகமிழந்துவிடுகின்றார்கள்.
பணவசதி படைத்த ஒரு சிலரும், எதையாவது சாதித்தே ஆகவேண்டும் என்ற ஒரு சிலரும் மின்மினிகள் போல் தலைகாட்டி உதிர்ந்து போய்விடுகிறார்கள். இதற்கெல்லாம் பார்வையாளர்கள் அல்லது ரசிகர்கள் மேல் பழி – பாவத்தை போட்டு விடுவதை நான் எதிர்க்கிறேன். எமது மக்கள் தொடர்பு சாதனங்கள், மற்றும் ஊடகங்கள் இவற்றை மக்கள் முன் கொண்டு வந்திருந்தார்களேயானால் இன்று பெருவாரியான கலைஞர்களும், கலைப்படைப்புக்களும் எம்முன் இருந்திருக்கும். எனவே இனியும் இக்குறுகிய நோக்கத்தை மாற்றும் பொறுப்பு எமது புலம்பெயர், மக்கள் தொடர்பு சாதனங்கள் மற்றும் ஊடகங்களுக்கும், விமர்சகர்களுக்கும் உண்டு. இவர்களுக்கிடையிலும் புதுப்புதுப் படைப்புகள் உருவாக அவா கொள்ளும் மனதநேயமிக்க ரசிகர்களும் விமர்சகர்களும் பல கலைஞுர்களுக்கு உரமாக இருப்பது ஆறுதலான விடயம்தான்.
எனவே கலைஞர்களில் பயிற்சியும், தேர்ச்சியுமுள்ள கலைஞர்கள் தான் என்ற ஈகோ மாயையிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டு கூட்டமாக கலைப்படைப்புக்களை மக்கள் முன் கொண்டு வர முயல வேண்டும். கூட்டாகப் பணிபுரியும்போது கருத்து மோதல்கள் ஏற்படத்தான் செய்யும். அதற்காக ஜால்ரா அடிப்பதைத்தவிர்த்து உண்மைகளை விமர்சித்து உண்மைகளையும், நியாயங்களையும் ஏற்றுக்கொண்டு கரம்கோர்த்து படைக்க நினைப்பவர்கள் மட்டுமே உண்மை கலைஞுர்கள். தனி மனிதனாக எதையும் சாதித்தவர்கள் உலகில் இல்லை என்பதை மறக்கக்கூடாது. ஒருவனின் வெற்றிக்குப் பின் பலர் நிழல்போல் துணையாக இருக்கின்றார்கள். மனம்விட்டுப் பேசுங்கள். பணம் படைத்தவர்கள் முன்வந்து புதுவரவுகளுக்கு உதவலாம்.
இவை வியாபார நோக்கமாகிவிட்டால் தோல்வியையும், மன உளைவையும் ஏற்படுத்தும், உலகில் தன் படைப்பு மட்டும் தெரிய வேண்டும், வரவேண்டும் என்னும் நிலை மாறி ஏனைய புதிய படைப்புகளும் வரவேண்டும் என்ற எண்ணம் எம்மிடம் ஏற்பட்டால் மட்டுமே தொடர்ந்து படைப்புகள் வெளிவர வாய்ப்பாக அமையும்.
எனவே ஏனைய உலக படைப்புகளை வரவேற்று அவர்களிடமிருந்து புதியவற்றை கற்றுக்கொண்டே எமது படைப்புக்களை உருவாக்க முயல வேண்டும். சினிமா பற்றிய அறிவைப்பெற புத்தகங்கள், கல்லூரிகள், கருத்தரங்குகள் ஆகியவற்றின் மூலம் பெற்றுக்கொள்ளலாம். ஆரம்ப அறிவை தெரிந்து கொள்ளாமல் ஒரு உருப்படியான திரைவடிவத்தை உருவாக்க முடியாது. அதை சினிமாத்துறை சார்ந்தோர் உடனடியாக செய்ய வேண்டும்.
விசயம் தெரிந்தவர்கள் ஒன்று சேர்ந்து படைப்புகளை உருவாக்குவதன் மூலமும், புதியவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பதன் மூலமும், விசயம் தெரிந்தவர்களை ஆதரிப்பதன் மூலமும் எமது படைப்புகள் வெளிவரக்கூடிய நிலையை உருவாக்கும்.
புதுவரவுகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தால் மட்டுமே எமது புலம்பெயர் படைப்புக்களுக்காக மக்களை ரசிகர்களை ஏங்க வைக்கலாம். அது தவறும் பட்சத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு வேறுபக்கம் திரும்பிவிடும்.
***
ajeevan@lycos.com
www.ajeevan.com
- முறையாய் முப்பால் குடி!
- காலச்சுவடு கண்ணன் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல்
- வேர்களை வெட்டி நந்தவனம் – ‘புலிமலைச் சூழ்ச்சி ‘ – சீனப் புரட்சிக் கூத்துத் திரைப்படம்
- பாரதி இலக்கிய சங்கம்
- ஆசையும் அடிப்படைக் குணமும் – (எனக்குப் பிடித்த கதைகள் -31 -நகுலனின் ‘ஒரு ராத்தல் இறைச்சி ‘)
- தக்காளி கறி
- எலுமிச்சை மகிமை
- சிம்பன்ஸி vs சாம்ஸ்கி – மனிதனை தவிர மற்ற குரங்கினங்களில் மொழியின் வெளிப்பாடுகள்
- ஐன்ஸ்டைனுடன் பணி ஆற்றிய சத்யேந்திர நாத் போஸ் (1894-1974)
- அறிவியல் மேதைகள் சர் ஜகதீஷ் சந்திர போஸ் (Sir Jagadish Chandra Bose)
- மஞ்சள் மகிமை
- மூலம்: சுவாமி விவேகானந்தரின் கவிதை ‘அன்னை காளி ‘
- வேதனை
- சினேகிதி
- வாசங்களின் வலி
- காதல் பகடை
- குறும்பாக்கள் !
- புல்வெளி மனது
- வேர்களை வெட்டி நந்தவனம் ‘புலிமலைச் சூழ்ச்சி ‘ – சீனப் புரட்சிக் கூத்துத் திரைப்படம்
- தென்னிந்தியத் திரைப்படங்களின் தாக்கம்
- நாஸா கண்டுபிடித்த இராமர் கட்டிய பாலம் ?
- காவிரி – மறுக்கப்பட்ட உரிமைகள்*
- காதல் பகடை
- Where are you from ?
- நான்காவது கொலை !!!(அத்யாயம் 11)