துவாரகனின் ‘மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்’ கவிதைத் தொகுதி பற்றி ஒரு சாதாரண வாசகனின் மனப்பதிவுகள்

This entry is part [part not set] of 37 in the series 20080925_Issue

புலவர் சீடன்


துவாரகனின் ‘மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்’
கவிதைத் தொகுதி பற்றி ஒரு சாதாரண வாசகனின் மனப்பதிவுகள்

– புலவர் சீடன் –

கட்டுரை கதை நாடகம் ஆகியவற்றில் படைப்பாளி தான் சொல்லவரும் விடயத்தை மிகச் சுலபமாகச் சொல்லிவிட முடியும். ஆனால் ஒரு பக்கத்தில் ஒரு கவிதை மூலமாகச் சொல்வதென்பது மிகக் கடினமாக பணியாகும்.

கவிஞன் தான் கண்டதை, கேட்டு அறிவு பூர்வமாக அறிந்ததை, தனது கற்பனைத் திறத்தினால் கவிதையாகப் படைத்து விடுகிறான். முற்றுப் பெறமுடியாது போன விடயங்களை, பல நாட்கள் பல மாதங்கள் பல வருடங்கள் ஆகியும் தீர்வு காண முடியா விடயங்களை, மற்றவர்கள் புரியும் வண்ணம் உணர்வு பூர்வமான காட்சியாக வாசகர் மனதில் பதித்திடும் திறன் படைத்தவன். அந்த வகையில் கவிஞர் துவாரகன் சளைத்தவர் அல்ல.

பேராசிரியர் எஸ் சிவலிங்கராஜாவின் அணிந்துரையுடனும் கவிஞர் சுவிஸ் ரவியின் முன்னுரையுடனும் துவாரகனின் ‘மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்’ என்ற கவிதைத் தொகுதி யாழ்ப்பாணத்திலிருந்து ‘தினைப்புனம்’ வெளியீடாக வந்துள்ளது. ஓவியர் தா. சனாதனனின் அர்த்தமுள்ள ஓவியம் நூலை மிகக் காத்திரமாக்குகின்றது. மூத்த ஓவியர் கோ. கைலாசநாதன், எஸ். நேசன் ஆகியோரின் கோட்டோவியங்கள் கவிதைகளுக்குச் சமாந்தரமாகப் பயணிக்கின்றன.

எளிமையான வார்த்தைகளைத் தனக்கே உரிய ஆளுமையுடன் இவர் கையாள்கிறார். சொல்வளம் அப்படியே சௌகரியமாக உட்கார்ந்திருக்கிறது. கவிதையின் அழகு எங்கிருந்து வருகிறது எனப் பார்க்கும்போது உள்ளடக்கத்திலிருந்து வருகிறதா? உத்திமுறையில் இருந்து வருகிறதா? உருவகமாக வருகிறதா? படிமம் குறியீடு ஓசைநயம் வார்த்தைப்பின்னல் இவற்றிலிருந்துமா? உண்மைநிலை யாதெனில் கவிஞனின் அடிமனதின் அனுபவச் செழுமையின் சத்திய வெளி;ப்பாடாகவே துவாரகனின் கவிதைகள் வெளிவருகின்றன. அவரின் இலட்சிய வேட்கை தென்படுகிறது. இங்கிருந்து படிப்போருக்குக் கண்ணீர் பெருக்கெடுக்கும் புலம்பெயர்ந்தோர் படிக்கின்றபோது உறவுகளின் வீழ்ச்சி தெரியும். தமிழகத்தில் வாழ்வோர்க்கு தன்மானம் மிக்கோர் சூழ்நிலையின் கைதிகளாக தடுமாறுவது தெரியும்.

கவிஞர் கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்துமதத்தில் துன்பத்திலிருந்து விடுதலை பெற ஒரு வழியினைக் கூறியுள்ளார். துன்பம் மேலோங்கி இருக்கிறபோது நல்ல விடயங்களில் கவனத்தைச் செலுத்தவேண்டும். அந்த எண்ணங்களை வளர்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என்;றும் கூறுகிறார். அதே முறையினைத்தான் துவாரகன் கையாண்டிருக்கிறார். இவருக்கு மனம் அதிக இறுக்கமாக இருந்திருக்கிறது. இந்த இறுக்கத்திற்கான காரணம் போர்க்காலச் சூழல் ஆகும். ‘குதித்தோடும் மனசு’ என்ற கவிதையில் இந்த இறுக்கம் எவ்வாறு விலகுகின்றன என்பதைப் பாருங்கள்

மனசு இலேசாயிருக்கிறது.
தோட்டவெளி
ஓற்றைப் பூவரசமர இலைகள்
கரும்பச்சை நிறத்தில் மதாளித்து
காற்றில் அசைந்தாடும்போது.
புதிதாய்ப் பிடுங்கிப் போட்ட
கோரைப் புல்லை ‘மொறுக்’ கென
ஆடுகள் கடித்து
அசைபோடும் போது.
சலசலத்தோடும் வாய்க்கால் நீரில்
முக்குளித்து எழுந்து
சிறகசைக்கும் மைனாக்களைக்
காணும் போது…
மனசு இலேசாயிருக்கிறது.
கருமேகம் சூழ்ந்த
எங்கள் வான்பரப்பின்
நிர்மலமான
இந்த அழகைக் காணும்போதெல்லாம்
சிட்டுக்குருவி மனசு
விண்ணில் இறக்கை கட்டுகிறது.
இதுவே எப்போதும் வேண்டும்!

பட்டுப்போன முள்முருக்கில்
பட்டை உரித்து
கால்களில்…
பந்தாகச் சுருட்டிக் கொண்டோடு;ம்
அந்த வால்நீண்ட
எங்கள் மாமரத்து அணில்களைக்
காணும்போதும் கூட,
இந்த மனசும்
பின்னால்
வால் முளைத்துக்
குதித்தோடி விடுகிறது.

என்கிறார் கவிஞர். மனசுக்கும் வால்முளைக்கிறது. இயற்கையைப் பற்றிப் பாடும் கவிஞர்களில் ஒருவர் வில்லியம் வோர்ட்ஸ்வொர்த். அவர் தனது வசந்த காலக்கவிதை ஊடாக@ ஒருநாள் சோலையில் மகிழ்ச்சியாக அமர்ந்திருக்கிறபோது பறவைகள் எழுப்பிய இனிய ஒலிகள் ஒன்றோடொன்று கலந்து அவர் செவியில் தேனாகப் பாய்ந்ததாகவும், செடி கொடிகள் மலர்கள் இயற்கையோடு உறவாடி மகிழ்ச்சியாக இருந்தன எனவும், மனிதன் மட்டும் இயற்கையின் மகிழ்ச்சியோடு தன்னை இணைத்துக் கொள்ளாமல் இருக்கிறானே என்றும் கவலை கொள்கிறார்.

இவ்வாறே துவாரகனும் இயற்கையோடு உறவாடிக் கொள்வதை குதித்தோடும் மனசு கவிதையில் புலப்படுத்தி நிற்கின்;றார். இக்கவிதையை உள சம்பந்தமானதாகக் கொள்ளவேண்டும். மன உளைச்சல்களைப் போக்க சின்னச்சின்ன மகிழ்ச்சிதான் அவசியமானது என்பது மனவியலாளர்களின் கருத்தாகும். இக்கவிதையானது உளநலனுக்கான சிகிச்சையாகக் கொள்ளலாம்.

இதே போல் நீட்சி என்ற கவிதையின் ஊடாக எமது நடைமுறை வாழ்வு பற்றி சிலந்திப்பூச்சியினூடாக உணர்த்துகின்றார்.

ஒவ்வொரு விடுமுறையின் பின்னரும்
எனது தூசிபடர்ந்த அறையை
துடைப்பத்தால் சுத்தம் செய்யும்போது
தலைதெறித்து ஓடும்
சிலந்திகளும் பூச்சிகளும்
என் வாழ்வை
எனக்கே கற்பிக்கின்றன.

எட்டுக்கால் ஊன்றி
சுவர்களில் ஏறித் தப்பிக் கொள்ளவும்
கூரையின் மர இடுக்குகளில்
மறைந்து விடவும் மட்டுமே
தெரிந்தவை அவை.

வாழ்வின் நீட்சியை மோகிக்கும்
இந்த ஆத்;மாவோ
நான்கு புறமும் இழுத்துக் கட்டப்பட்ட
கூரையின் படங்குபோல்
காற்றில் அலைப்புறுகிறது.

என்று தவிப்பை வெளிக்காட்டி நல்ல சூழலில் சஞ்சரிக்கவே ஆத்மா பிரயாசைப்படுகிறது என்று எடுத்துக் காட்டுகிறார்.

இன்னொரு கவிதையில் கவிஞர் மனிதனைத் தேடுகிறார். தேடு.. தேடு.. தேடிக் கொண்டேயிரு எனத் தட்டிக் கொடுத்து தேடவைப்பவர். இத்தேசத்தின் அவலங்களை சுட்டிக்காட்டி மனிதமே தொலைந்த தேசத்தில் மனிதனைத் தேடுகிறாயா? என்று கேட்கிறார். மனிதனைத் தேடினான் அறிஞன் அன்று. இன்று கவிஞன் மனிதனைத் தேடுகிறான்.

முதலில் இந்த விளக்கை அணைத்து வை
உன் உள்ளொலியைத் தூண்டு

என்ற வரிகளில் வள்ளுவனின் குறள் ஒன்றின் ஆழமான கருத்தைச் சுட்டிக் காட்டுவது பொருத்தமானது என்று நினைக்கிறேன்.

‘புறத்தூய்மை நீரினால் அமையும் அகத்தூய்மை
வாய்மையாற் காணப்படும்’

அகத்தூய்மையின் முக்கியத்துவத்தை தனது மனிதத்தைத் தேடி கவிதை ஊடாகப் புலப்படுத்தி உண்மையான மனிதனை, அவனிடம் இருக்கும் மனிதத்தைத் தேடுகிறார். உள்ளொளியைத் தூண்டும்போது மனித இனம் மனத்தூய்மை பெறும் வாய்ப்புக் கிட்டும். இன்று அந்த அகத்தூய்மை எல்லாத்தரப்பிலும் இல்லாமல் இருப்பது கவலைக்குரியதாகிவிட்டது.

ஓவியன் ஒருவன் தான் கண்ட காட்சியைத் தீட்டுகிறான். கவிஞனும் இயற்கைக் காட்சி ஒன்றை அப்படியே வழங்குகிறான். ஆனால் அது மட்டும் அவனது கலையின் நோக்கமாக இருக்கவில்லை. கவிஞன் மழையைக் கண்டான். அதைக் கவிதை ஓவியமாகத் தருகிறான்

என் கால்களைச் சுற்றி
வட்டமிட்டு ஓடுகிறது
மழை விட்டுச் சென்ற ஓவியம்

கால்களில் குழைந்து
மர இடுக்குகளி;ல் சிலிர்த்து
இலைகளில் பளிச்சிட்டு
மண்ணில் உள்ளொடுங்கி
ஓடுகிறது
மழை விட்டுச் சென்ற ஓவியம்

எந்தனூர்க் குளம் நிரப்பி
ஊருக்கு அழகு செய்த
மழை இதுதான்
பின்னர் வாழைத்தோட்டத்துள் புகுந்து
வேரை ஈரமாக்கியதும் இந்த மழைதான்
ஆனாலும்@
ஒருபொழுது வானத்தில் பறந்து வந்த
தூதனின் பார்வையால்
மேகம் பார்க்கத் தொடங்கிய வீட்டில்
இந்த மழை கொட்டும் போதெல்லாம்
வீட்டுக்குள்ளே வரையப்படுகின்றன
மழை தூவிய ஓவியங்கள்

இந்த வரிகளில் நாம் காண்பதற்கு மேல் மற்றொன்றும் உண்டு. கவிஞன் எமது பிரதேசத்தின் அனேக வீடுகளில் போர்க்கால நிலமையையும் மக்களின் வறுமையான வாழ்வையும் காட்டுகிறார்.

இன்றைய கால கட்டத்தில் எம்மை எந்த வடிவத்தில் துன்பம் தீண்டவில்லை. எல்லா வகையிலும் நொந்து நொடிந்து போய் எமது பிரதேசம் இருக்கிறது. பெருஞ் செயலை ஆற்றுவதற்கு முதலில்; தேவைப்படுவது தன்னம்பிக்கை என ஆங்கில இலக்கிய மேதை சாமுவேல் ஜான்ஸன் கூறுகிறார். அதே கருத்தினை கவிஞர் துவாரகன் மரம், தூக்கணாங்குருவிக்கூடு ஆகிய கவிதைகள் ஊடாக தன்னம்பிக்கையைத் தூண்டும் விதத்தில் எடுத்துக் காட்டுகிறார். இதனால்த்தான் உனக்குள் அளவற்ற ஆற்றலும் அறிவும் வெல்லமுடியாத சக்தியும் குடிகொண்டிருக்கின்றன என்று நீ நினைப்பாயானால் அந்தச் சக்திகளை உன்னால் வெளியே கொண்டு வரமுடியுமானால் நீயும் என்னைப் போல் ஆகமுடியும் என்று தன்னம்பிக்கை பற்றி சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்.

துவாரகனின் தொகுப்பில் நான்கு காதற் கவிதைகள் உள்ளன. ஞாபகம், என்னருகில் நீ இல்லாதபோது ஆகிய இரண்டு கவிதைகளிலும் காதலின், பிரிவின் சாயல் வெளிப்படுவதனைக் கண்டுகொள்ளலாம்.

இரவின் ராகத்தை மீட்கும்
பூச்சிகளின் சில்லென்ற இரைச்சல்.
மெல்லத் திரை விலக்கி
உள்ளம் சேர்த்து வைத்த
உன் நினைவுப் பொதியின்
முடிச்சுக்களை
அவிழ்த்துக் கொட்டுகிறது.
அவை போத்தலிலிருந்து கொட்டிய
மாபிள்களாக
நாலாபக்கமும் சிதறி வீழ்கின்றன.

இந்த வரிகளில் காணப்;படும் உவமைகள் மிகச் சாதாரண வாசகனும் புரிந்து கொள்ளும் விதத்தில் அமைந்துள்ளன. என்னருகில் நீ இல்லாதபோது என்ற கவிதையில்

உன் வட்டக் கருவிழிகளின்
ஆழத்தில்
என் வார்த்தைகளைத் தொலைத்துவிட்டேன்.
தட்டுத் தடுமாறி முட்டிமோதி
என் சத்தமற்ற வார்த்தைகள் எல்லாம்
உன் விழிகளுடன் பேசிவிட்டு
ஏதோ பதில்களுடன்
திரும்பி வருகின்றன.
உதட்டசைப்பால் மட்டும்
பேசிடும் வார்த்தைகளை விட
உன் விழியசைப்பால்
பேசிடும் வார்த்தைகள் அதிகமடி.

எனத் தொடரும் கவிதையைப் படிக்கும்போது வேறு எங்கோ யாரோ பாடியதாக நினைவுக்கு வரும். படித்து முடித்ததும் மற்றவரிடத்தினின்றும் வேறுபட்டு விளங்குகிறார் என்பது புலனாகிறது. இவ்வாறாக தாம் சொல்லும் முறையிலே தம் கவித்திறத்தை கவிஞர் காட்டுகிறார்.

நானும் நாட்களும், உனக்கும் எனக்குமான இடைவெளி, ஆகிய கவிதைகள் திருமணத்திற்குப் பின்னரான காதலை உணர்த்துகின்றன. திறந்த வீதி பற்றிய பதிவாக இருப்பினும்

அந்தப் பெருவீதியின் சந்தடியிலிருந்து
நீங்கியாயிற்று
கிளை பிரிந்தோடும் ‘கிரவல்’ செம்மண் பாதை
எனது பழைய சைக்கிள் பயணம்
தனிவழிப் பயணம்
இன்று ஞாயிற்றுக்கிழமை
நாளைக் காலைப் பொழுதின்
கடமைக்கான பயணம்
‘ஏன் திங்கள் காலை போனால் என்ன?’
அவளின் கேள்வியூடே கலங்கிய மனது

தலைவனைப் பார்த்து தலைவி இரஞ்சுகிறாள். நிச்சயமற்ற பயணங்கள் தலைவன் திரும்ப வீடு வந்தால்தான் நிச்சயமானது. இது ஆயிரம் ஆயிரம் குடும்பத் தலைவிகளின் உள்ளத்தில் கேள்வியாக நி;றைகின்றது.

இன்று எமது வாழ்வில் அதிலும் கணவன் மனைவி உறவில் எத்தனையோ பிரச்சனைகள் எத்தனையோ முரண்பாடுகள் நாளுக்குநாள் அதிகரித்து மனித உறவுகளைப் பிரி;த்து விபரீதமான விளைவுகளுக்கு இட்டுச் செல்கின்றன. உனக்கும் எனக்குமிடையிலான இடைவெளி கவிதையில் முரண்பாடு பற்றி கவிஞன் கூறி அதிலிருந்து விடுபடவும் வழி சொல்கிறார். உன்னை அமைதிப்படுத்துவதைத் தவிர
வேறு எதுவும் புரிவதில்லை என்ற வரிகளினூடாக கணவன் மனைவிக்குள்ள புரிந்துணர்வை கவிஞன் வெளி;ப்படுத்துவதோடு தமிழர்களது தனித்துவமான பண்பாட்டை வெளிக் கொணர்ந்திருப்பதும் வரவேற்கத்தக்கது. முரண்பாடுகளிடையே சிக்கித் தவிக்காது கணவன் மனைவி உறவிலுள்ள உண்மைக் காதலை வெளிப்படுத்தி நிற்கிறார். ஆண் பெண்மேல் ஆதிக்கம் செலுத்துவதை விரும்பாத கவிஞன் இக்கவிதையில் கணவனையே அமைதிப்படும்படி கூறியுள்ளார்.

சிறுவர்களைக் காக்க வேண்டும் என்ற அறைகூவலை கவிஞனும் தன் கவிதை மூலமாக வெளியிடுகிறார். சின்னப்பூ, யாழ்ப்பாணம் 2005, என்ற கவிதைகள் கல்வி அறிவு பெற வாய்ப்பற்று இருக்கும் சிறுவர் சிறுமியர் பற்றிய கவிதை. இந்தச் சமுதாயத்திற்கு இச்சீர் கெட்ட நிலைமையைப் போக்;க வீதியில் நடப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.

நீதிதேவதையின் கூண்டில் தனியனாக எவரையும் நிற்க வைத்துக் குற்றப்பத்திரிகை வாசிக்கவில்லை. எல்லோரையும் குற்றவாளியாக நிற்க வைத்து பேதம், வண்ணத்துப்பூச்சிகளின் உரையாடல் ஆகிய கவிதை மூலமாக நியாயம் தேடுகிறார்.

பொதிசுமந்து எங்கு செல்கிறோம் என்பதே தெரியாது முதுகுமுறிய பொதிசுமக்கும் ஒட்டகங்களாக இருப்பவர்களுக்கு

சாட்டையும்
விரட்டும் இலாவகமும்
உங்களிடம் இருக்கும் வரை
நாமும் சுமந்து கொண்டே இருப்போம்

முடிவு செய்து விட்டார்கள் எதற்கும் அஞ்சாது பயணம் தொடங்கி விட்டார்கள் முடிவை மட்டும் கேட்;;க வேண்டாம் அலைவும் தொலைவும் பல செய்திகளைச் சொல்கிறது. கவிதையின் இறுதியில்

ஆனாலும் நாங்கள் நடக்கிறோம்
நிரந்தரத் தரிப்பிடத்தைத் தேடி
மிகுந்த நம்பிக்கையுடனே

என்று சொல்ல முடியாத இடம்பெயர்வுகளால் அல்லற்படும் மக்களைக் கண்டு மனம் வெதும்பி பாடுகிறார்.

கவிஞன் பிரயாணம் செய்யும்போதும் சும்மாயிருக்கவில்லை வல்லை வெளி வந்தபோது நிறைமாதக் கர்ப்பிணிப்பெண்போல் எங்கள் ஊர் லொறிகள் வரிசையாக வந்து போவதைக் கண்டபோது எமது ஊர் திருமணம் ஞாபகத்திற்கு வந்து விடுகிறது. தாலி கூறைமுதல் பழம் பணியாரம் ஆகியவற்றைக் கொண்டு வரிசையாக வருவோர் நினைவு அவனுக்குக் காட்சியாகின்றது

ஆனால் ஒரு வித்தியாசம் தான்
எங்களுர் கலியாண வீடுகளோ
நிச்சயித்த நாளில் நடக்கும்
லொறிகளோ
நினைத்தவுடன் வரிசையாய்ச் செல்லும்

இந்த வரிகள் கவிஞனை மிக வருத்தியுள்ள வரிகள். நீண்ட காலமாக எனக்குள்ளே ஒருவித மனக்கவலை என்னவென்றால் பஸ்ஸில் போகிறபோது பக்கத்தில் இருப்பவரோடு ஒரு மணிநேரம் வரை பிரயாணம் செய்வோம். கதையே இருக்காது முகத்தை இறுக்கிக் கொண்டிருப்போம். துவாரகனின் நெடுஞ்சாலைப் பயணம் அதற்குப் பதிலாக இருக்கிறது கையில் கொண்டுவந்த சுமைகளைப் பவுத்திரமாக பஸ்ஸில் உள்வைத்து விட்டு பிரயாணம் செய்யும் வித்தியாசமான மனச்சுமைகளை இவர்கள் எப்படி இறக்குவது போசாதிருப்பதற்கான காரணம் யாது என்று இப்போதுதான் புரிகிறது.

சிலர் சிரிக்கிறார்கள்
இன்னலையே விழுங்கி
ஏப்பம் விட்ட வாயால்
மனிதர்கள் போலவே

சில நேரங்களில்
கடதாசிப் பூக்கள் போல்
பொம்மை முகம் பூட்டி
பொய்ம்மை முகம் காட்டி
ஈரமற்ற நெஞ்சுடன்

பொய்ம்மை முகம் காட்டியே இன்று மனிதர்கள் உலாவருவதைக் கண்டு எரிச்சல் கொள்கிறான் கவிஞன். இந்த விடயத்தை அறிமுகம் என்ற தலைப்பின் ஊடாக கவிஞர் மு. மேத்தா

‘மனிதர்களுக்கு
இங்கே
பெயர் இருக்கிறது
பிரபலம் இருக்கிறது
முக்கியமான
முகமில்லாமல் போய்விட்டது’

என்று பாடுகிறார்.

இதே போன்று மீளவும் மரங்களில் தொங்கி விளையாடலாம் என்ற கவிதையில் சற்று வித்தியாசமான முறையில் தனது துன்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுவும் பிரயாணத்தின் போது மக்கள் படும் துன்பத்தை வெளிக்காட்டும் கவிதைதான்.

எப்போதோ முடிந்திருக்க வேண்டியது
இன்னமும் தொடர்கிறது

ஓடிய சைக்கிளில் இருந்து
இறங்கி நடந்து
ஓடவேண்டியிருக்கிறது
போட்ட தொப்பி
கழற்றிப் போடவேண்டியிருக்கிறது
எல்லாம் சரிபார்த்து மூடப்பட்ட
கைப்பை
மீளவும் திறந்து திறந்து
மூடவேண்டியிருக்கிறது
என் அடையாளங்கள் அனைத்தும்
சரியாகவே உள்ளன
என்றாலும்
எடுக்கவும் பார்க்கவும் வைக்கவும் வேண்டியிருக்;கிறது
என்ன இது?
மீளவும் மீளவும்
ஆரியமாலா ஆரியமாலா பாட்டுப்போல்
கீறிக்கொண்டேயிருக்கிறது.

குரங்கு மனிதனாகி
மனிதன் குரங்குகளாகும் காலங்கள் எங்களதோ?
இப்படியே போனால்
மரங்களில் தொங்கி விளையாடவேண்டியதுதான்
மீளவும் மீளவும் குரங்குகள்போல்!

எல்லாவற்றையும் அடிக்கடி சரிபார்ப்பதும் பதட்டத்தோடு இருக்க வேண்;டியிருக்கிறது. இதேபோல் நாய் குரைப்பு, வெள்ளெலிகளுடன் வாழ்தல், எச்சம், ஒரு மரணம் சகுனம் பார்க்கிறது ஆகிய கவிதைகள் வெளிப்படுத்தும் கவிதை வரிகள் அற்புதமாக இருக்கின்றன.

கவிஞனுக்கு தாங்கொணா வேதனை இருந்திருக்கிறது மக்கள் நாளாந்த வாழ்வில் படும் துன்பங்கள், காயங்கள் பல இதைச் சீர் செய்வது எப்படி என்று தெரியாது அதை அப்படியே படம் பிடித்துக் காட்டியுள்ளமை இங்கு குறிப்பிட வேண்டும்.

துன்பங்களை மனதுக்குள் வைத்துக்கொண்டிருப்பதும் அழுது தீர்த்துக்கொள்வதும் என்று எமது மக்களின் வாழ்வாகிப் போன இந்தக் காலத்தில் இரண்டாவது ரகத்தில் உட்பட்டு இருப்பதாக சில கவிதைகள் அமைந்துள்ளன. என்னை விரட்டிக் கொண்டிருக்கும் தலைகள,; பல் நா சுவையறியாது, புணர்ச்சி, ஆகிய கவிதைகள் இதற்கு உதாரணம். இந்தக் கவிதைகள் கவிஞனின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்ட சம்பவங்களை எடுத்துக் காட்டுகின்றன. இங்கு பலோக்காரமான செயலை சி;த்தரித்துக் காட்டுகிறான் கவிஞன். ஆட்டைக்கடித்து மாட்டைக் கடித்து இறுதியாய் மனிதனைக் கடிக்கிறபோது கவிஞன் உணர்வலைகள் பொங்கி வந்து இயலாமையை வெளிப்படுத்துகின்றன.

இவரது கவிதைகள் அகன்று விழிக்கின்றன. இவரது ஆன்மா துடிப்பதைப் பார்க்கலாம். இலட்சியத் துடிப்போடு வாழ்கின்ற இவரது கவிதைகளை வரலாற்று ஆசிரியர்கள் தேடி எடுப்பது உறுதி. இவரது கவிதையில் பழைய இலக்கண காவலாளிகள் இல்லை. சம்பிரதாயங்கள் என்னும் சுற்றுவேலிகள் இல்லை. புதிய நோக்குக் கொண்டவையாக இருக்கின்றன. மக்களின் சிந்தனையில் கலந்து எம் தற்கால வாழ்வுப் போக்கைப் பதிவு செய்வனவாக அமைந்துள்ளன.

மூச்சுக்காற்றால் நிறைகின்றன
வெளிகள்
எல்லைகள் தாண்டிச் சென்று
இடைவெளிகளை நிரப்பிடாதபடி
கூட்டுக்குள்ளேயே
நிரம்பித் திமிறுகின்றன
கண்ணாடி மீன் தொட்டிகளில்
முட்டிமோதும்
மீன்குஞ்சுகளைப் போலவே!

புதிய மூச்சு
இளைய மூச்சு
முதிய மூச்சு
எல்லாம் நெருக்கியடித்தபடி
ஒன்றையொன்று முட்டிமோதியபடி
அலைகின்றன
சுவரில் மோதித் திரும்பும்
ஒரு பந்தைப்போலவே!

மூச்சுக்காற்றால்
மீண்டும் மீண்டும்
நிறைகின்றன வெளிகள்

இற்றுப்போன
ஓர் இலைச்சருகின் இடைவெளியை
நிரப்பிக் கொள்கிறது
செம்மண்

என்று மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள் கவிதையில் யாழ்ப்பாண மக்களின் தற்கால வாழ்வை சித்தரிக்கின்றார் கவிஞர். வாழும் உலகோடு உறவு கொள்ளாத எந்தக் கலையும் மகத்தானதாவதில்லை நூலினுள் சென்று பாருங்கள். இந்த உண்மை புலனாகும்.

– புலவர் சீடன் –

Series Navigation

புலவர் சீடன்

புலவர் சீடன்