துளிப் பூக்கள்….

This entry is part [part not set] of 30 in the series 20060707_Issue

பட்டுக்கோட்டை தமிழ்மதி



/ தேக்கா பகுதியில் “புக்கீஸ் சந்திப்பு” கடைத்தொகுதி வளாகம். மண்புதைந்த
துவாரங்கள் வழி துள்ளிவரும் நீர் துளியாக…கோடாக…அலங்கார வளைவாக…
அதற்குள் நுழைகையில் எதிர்பாராமல் எங்கிருந்தோ துளிர்த்துக் குதித்து
விண்ணெட்டி மண் சொட்டும் மழைத்துளியாக… விளையாடும் பிள்ளைகள்
வேடிக்கை பார்க்கும் கண்கள்…. /

தண்ணீர் விளையாட்டு.

தலைகீழ் மழை
நனையாமல் நடை.

விண்ணிலிருந்து விழும் மழைதான்
இந்த
மண்ணிலிருந்து எழும் அலையாய்.

இந்தத்
துளிப்புள்ளிகள் போடும் கோடுகள்
தண்ணீர்க்கோடு பாயும் பிள்ளைகள்
சில்லிக்கோடுகளாய்
சிரித்தாடும் சிறியவர்கள்

இந்தக்
கோடுகள் ஓவியமாய்
நீரில் எழுத நிசமாய் முடியும்

விழும் வேகத்தில் எழும் அழகு

கிணற்றின்
ஊற்றுக்கண் ஊற்றுதலாய்
இந்த
அழகு மண்ணின் ர்ட்டீசியன் ஊற்று

நீர்த்துளிகள் மீனாய்
நிலம் வந்து துள்ளும்
கைகள் பிடிக்கக் காணாமல் போகும்
சிறுமீன் பெருமீன்
சேர்ந்து விளையாடும்
கரைக்குத் தூண்டில் போடும்

ளைப்பிடிக்கவோ யாரைப்பிடிக்கவோ
நீரே வலைவீசும்
துள்ளும் மழலையாய்
துளி மழைப் பூக்கள்

நினைவுக்குள் நனையாமல்
நெஞ்சம் நடக்க
இந்த
மழைக்குள் நனையாமல்
மெளனம் நடக்கும்

மூங்கில் இலைமேல்
தூங்கும் பனிநீர்
ஏங்குமிங்கு விளையாட

வட்டமாய் சுற்றிக்கொட்டும்
வளைகரங்களிடை
புகுந்துபோய் குதிக்க
கும்மி கொட்ட
சொல்லிக் கொடுத்தது யார்?

நீரோடு நீராக
பிள்ளைகளோடு விளையாடும்
பிள்ளையாய் ம‎னம்.

பட்டுக்கோட்டை தமிழ்மதி
tamilmathi@tamilmathi.com

Series Navigation

பட்டுக்கோட்டை தமிழ்மதி

பட்டுக்கோட்டை தமிழ்மதி