துப்பாக்கி இல்லாமல் ஒரு துப்பறியும் கதை

This entry is part [part not set] of 31 in the series 20100312_Issue

எஸ்.ஷங்கரநாராயணன்



மனோகரி கல்யாணம் ஆகி ஐந்து வருடத்திலேயே கணவனை இழந்தவள். அவனது வேலையே அவளுக்குக் கிடைத்து பல இடர்கள் தாண்டி, ஒரு பெண்பிள்ளையை கண்ணின் மணியாய்க் காத்து வளர்த்து வந்தாள்.

மனோகரிவாழ்வில் அதிர்ச்சியாக அந்தச் சம்பவம் நிகழ்ந்துவிட்டது.. அதுவும் கோவில் பிராகாரத்தில்! பிரதட்சிணம் போய்க்கொண்டிருக்கிறாள். சட்டென்று மின்சாரம் உயிரைவிட்டு, பச்சக் என்று அவள் உதட்டில் யாரோ ஆண்மகனின் அவசர முத்தம். ஆவேச முத்தம். முத்த்த்தம்… என்ன அச்சானியம்! கோவிலில்!

ஐயோ மின்சாரம் வந்துவிடுமோ என்று பதறிப் போனாள். கோபப்படுவதா பயப்படுவதா என்றே தெரியாத ஒரு உள்நடுக்கம். அது நிகழ்ந்த அந்தப் புயல் வேகம். மீசைக் குறுகுறுப்பு. எதற்கு அப்படிக் கடிக்கிறாப் போல ஒரு அழுத்தம்…

வெளிச்சம் வருமுன் விலகிக்கொண்டு விறுவிறுவென்று அவன் போய்விட்டான். வெளிச்சம் வந்தபோது அவளுக்குப் பக்கத்தில் யாருமே இல்லை. சற்று தள்ளி பின்னால் ஒரு பெரியவர். முகத்தில் மீசையே இல்லை… அவள் நினைத்துப் பார்த்தாள். ஆம் மீசைக்குறுகுறுப்பு அந்த முத்தத்தில் இருந்ததே. நாலைந்து விநாடிகள் நீடித்த சிறு முத்தம். என்றாலும் அதில் ஒரு உறுதி. எச்சில் வாசனை. பெரியவரைப் பார்த்தாள். வெத்தலை புகையிலை போட்ட சொதசொத உதடுகள். ம்ஹும். இவராய் இருக்காது. அதற்குள்ளாக எப்படி அவன் மறைந்து விட்டான்.

உதட்டில் இன்னும் அந்த பிரமை மிச்சம் இருந்தது. கால்கள் தள்ளாடின. உடலே கூசியது. கூட வரும் யாருக்கும் விவரம் தெரியாது. குப்பென்று அடிவயிற்றில் குளிர்… ஐயோ அவள் பெண்ணுக்குத் தெரிந்தால், அதைவிட அசிங்கம் வேறு இல்லை…

ஆண் ஸ்பரிசம் பட்டே வருடங்கள் ஆகிவிட்டன. மனசைப் பிடிவாதமாய் நிலைநிறுத்தி வைத்திருந்தாள். அலுவலகத்திலும் பக்கத்து வீடுகளிலும் எல்லாருமே அவளை மரியாதையாய் நடத்தினார்கள். தன்மையாய்ப் பழகினார்கள். மனோகரியா நெருப்பாச்சே, என்கிறாப் போல வைத்திருந்தாள். விகல்பங்களை ஒதுக்கி விலக்கி கவனமாய் ஜாக்கிரதையாய்ப் பழகினாள். யாரோடும் அதிகம் கலகலப்பாய்ப் பேசவோ சிரிக்கவோ மாட்டாள்.

எல்லாம் ஒரு நொடியில், பிராகாரத்தில் விளக்கணைந்த ஒரு கணத்தில் சூறையாடப் பட்டுவிட்டது.

ஒருவேளை நான் இன்னும் இளமை முறுக்கு தளராமல் இருக்கிறேனா என்ன? ஆம்பளைப் பார்வைக்கு ஒரு கிறுகிறுப்பு தருகிறாப்போலவா இருக்கிறேன். எப்படி துணிச்சலாய் ஒருத்தன் அந்த முடிவெடுத்திருக்கிறான். என்ன தைரியம். பச்சக்! ஊவென்று கத்தாமல் அப்படியே விட்டுவிட்டேன். குறைந்தபட்சம் அவன் கையைப் பிடித்துக்கொண்டு – விளக்கு வர – செமத்தியாய் உதை விழுந்திருக்கும். அந்த ஷணப்பித்தத்தில் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. விளைவு? அவனே ஓடிவிட்டான்.

ஆளே காணாமல் போய்விட்டான். அந்த நினைவுகளை அவள்மாத்திரம் இப்படிச் சுமந்துபோக வேண்டியதாகி விட்டது. ஐயோ என் பெண்ணுக்குத் தெரிந்தால்… என நினைக்கவே தூக்கிவாரிப் போட்டது. இருட்டு. நல்லவேளை அவளுக்குத் தெரியாது. அவளிடம் சொல்லவேண்டாம், சொல்லவே கூடாது. இந்த ரகசியம் அப்படியே என்னோடு புதைந்து போகட்டும். அந்த ராஜாமணி ஞாபகம்… அது ஏன் இப்போது வரவேண்டும்?

எத்தனையோ ஆசைகளை யெல்லாம் விட்டாகி விட்டது, ராஜிக்காக. வீட்டில் அவளும் பெண்ணும்தான். ராஜி இன்ஜினியரிங் படிக்கிறாள். கொள்ளையாய் ஃபீஸ். அவளுக்கு ஒரே பெண்தானே. சம்பாதிக்கிறதெல்லாம் யாருக்கு? அவளுக்குத்தானே, என நினைத்தாள் மனோகரி. அவள் நன்றாகவும் படித்தாள். நல்ல மதிப்பெண்கள். அரசு ஒதுக்கீட்டிலேயே கல்லூரி அமைந்தது. கேபிடேஷன் ஃபீஸ் அதுஇதுவென்று பிக்கல் பிடுங்கல் இல்லை… நல்ல பக்திசிரத்தையான பணிவான பெண் ராஜி. அம்மா கிழித்த கோட்டைத் தாண்டாத பெண். ஒரு வார்த்தை அம்மாவை எதிர்த்துப் பேசமாட்டாள்… பெண்ணையிட்டு மனோகரிக்குப் பெருமை உண்டு.

நடந்ததெல்லாம் பொய்யோ என நினைத்தாள். உதட்டில் இன்னும் மிச்சமிருந்தது அந்தக் குறுகுறுப்பு. லேசாய்க் காந்தியது. பல் பட்டிருக்குமோ? அவசரமாய் ஒரு இழு இழுத்தான். எதையோ வாயில் இருந்து உறிஞ்சி எடுத்தாப் போல. அவன் முடிவெடுத்தே கூட வந்திருக்கலாம். வாய்ப்பு கிடைத்தால் விடக்கூடாது என்றே, தன் அதிர்ஷ்டத்தை நம்பி, பின்னாலேயே வந்தானோ? அவள்தான் கவனிக்கவில்லையோ? அவள் ஆம்பிளைகளை நிமிர்ந்து பார்த்தே வருடங்கள் ஆகிவிட்டன.

பெண்ணுக்கே பதினெட்டு. என்றாலும் மனோகரிக்கு ஒரு முடி நரைக்கவில்லை. முகத்தில் ஒரு சுருக்கம் கிடையாது. ராஜியே ஆச்சர்யப்படுவாள்… ”எத்தனையோ நல்ல புடவைல்லாம் உள்ள வெச்சிருக்கியேம்மா… எடுத்துக் கட்டிக்கோயேன்.” மௌனமான ஒரு புன்னகை. ஜாக்கிரதையாய் தனக்குத் தானே ஒரு லெட்சுமண வட்டம், வேலி போட்டுக் கொண்டிருந்தாள் மனோகரி. கண்சிமிட்டி அடங்குமுன் எல்லாமே பொய்யாகி விட்டது. அச்சகத்தில் அச்சடிக்கிறா மாதிரி முத்தம் திரும்பத் திரும்ப மனசில் மோதி அலையடித்தது. இப்ப என்ன பண்ண?

”அம்மா என்னாச்சி?” என்று கேட்டாள் ராஜி.

”ஒண்ணில்ல.”

அவளிடம் சொல்ல முடியுமா அந்த வெட்கக்கேட்டை …

ஆண்களை அவள் அறிவாள். எத்தர்கள். சமயம் வாய்த்தால் தப்பு செய்ய அஞ்சாதவர்கள். வந்தவாசியில் அவர்கள் எதிர்வீட்டில் இருந்தான் ராஜாமணி. அவள் பள்ளிக்கூடம் போகும்போதும் வரும்போதும் அவளையே குறுகுறுவென்று பார்ப்பான். முகத்தில் உதடுமேல் லேசாய்ப் பூனை முடி. தினமும் எண்ணெய் போட்டு அதை வளர்க்கப் போராடிக் கொண்டிருந்தான். சைக்கிள் கத்துக் கொண்டபின் அவள் வரும்போதெல்லாம் டிரிங் டிரிங் என்று அடிப்பான். படபடப்பாய் இருக்கும் அவளுக்கு. திடீரென்று அவள்முன்னால் வந்து நின்றுவிடுவானோ என்று பயமாய் இருக்கும். தலையைக் குனிந்து நடக்க வேண்டும். தடுமாறி விழுந்துவிடக் கூடாது… ஓட்டமும் நடையுமாய் வீடு வருவாள்.

வீட்டு விலக்கான தருணங்களில் பின்முற்றத்தில் தனியே அவள் இருந்தாள். அப்பா அந்த விஷயத்தில் ரொம்ப கறார். ஞாயிற்றுக் கிழமை உச்சிவெயில் மதியம். அப்பா எங்கோ வெளியே போயிருக்கிறார். ”மாமி கிரிக்கெட் பந்து உங்க வீட்டுப் பின்பக்கமா விழுந்துட்டது…” அவன்தான். ராஜாமணி கடங்காரன். அம்மா அடுப்படியில் என்னவோ உருட்டிக் கொண்டிருந்தாள். ”போய் எடுத்துக்கோ” என அவள் சொல்லுமுன் விறுவிறுவென்று வந்தான் ராஜாமணி. அவன் வரும்வேகத்திலேயே அவள் எழுந்து நின்றாள். விறகடுக்குப் பக்கம் பாய் ஒன்றைப் போட்டுப் படுத்திருந்தாள். ஆம்பளை வரும்போது படுத்துக் கிடப்பதா… அட உள்ளே வந்தவன், பந்தைத் தேடாமல், அவளைப் பார்த்து ஹீயென்று ஒரு சிரிப்பு. தனியே அவனுடன் அவள். ஜிவ்வென்றிருந்தது. ஐயோ கிட்டே வருகிறான். அவளைக் கட்டிப்பிடித்தான். ஏய் என்ன பண்றே, எனப் பதறி விலக – அவன் விடவில்லை… என்ன தைரியம்! அவள் உதறுமுன் உள்ளே அம்மா – ”என்னடா கெடச்சதா?” இல்ல மாமி – என்று விறுவிறுவென்று போய்விட்டான்…

தூரமா இருக்கச்ச தொடறதே தப்பு. அதுலயும் அவன் பண்னது ரொம்பத் தப்பு… தனியே ரொம்ப நேரம் அழுது கொண்டிருந்தாள். சாப்பிடக் கூப்பிட அம்மா வரும் சத்தம். சட்டென்று கண்ணைத் துடைத்துக் கொண்டாள். இந்த வெட்கக்கேட்டை அம்மாவிடம் எப்படிச் சொல்வது, என்று விட்டுவிட்டாள். இந்த ஆம்பளைகள் மகா அயோக்கியர்கள்.

பிராகாரம் விட்டு வெளியேவந்து சந்நிதிக் கடைகளில் இந்தப் பெண் ஸ்டிக்கர் பொட்டு வாங்க நின்று நிதானித்துக் கொண்டிருந்தது. மனோகரிக்கானால் அங்கே நிற்கவே பிடிக்கவில்லை. ஒருவேளை அந்த முத்தந் தந்த ஆம்பளை எங்காவது ஒளிந்திருந்து அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறானா என்று யோசனையே கலவரப்படுத்தியது. ஐயோ திரும்பவும் லைட் போய்விட்டால்…

”வாடி போலாம்…”

”இரும்மா.”

கல்லூரிவட்டத்தில் அவளது சிநேகிதிகளில் பூரணிக்குத்தான் முதலில் கல்யாணம். அவளது நிச்சயதார்த்தத்துக்கு மனோகரி போயிருந்தாள். அதற்கப்புறம்தான் கொஞ்சம் தலையைத் தூக்கி ஓரக்கண்ணால் ஆம்பிளைகளைப் பார்க்க ஆரம்பித்தது. காதலித்துக் கல்யாணம் செய்துகொள்ள மனசு நிறைய ஆசையும் பயமும் இருந்த பருவம். எந்த ஆம்பிளையைப் பார்த்தாலும் அவன்கூட அப்பா அம்மாவை நமஸ்கரிக்கிறாப் போல கனவு வரும். எத்தனை தவிர்த்தும் சில சமயம் ஆம்பிளை கண்ணோடு அவள் கண் நேரே சந்தித்து விடும்போது அப்படியே உள்ளே ஒரு குலுக்கு குலுக்கியது.

எந்த ஆம்பளையைத் தாண்டிப் போனாலுமே அந்தப் படபடப்பு இருந்தது. நடையில் லேசாய் நெளிசல். கிட்டத்தில் சைக்கிள் மணி டிரிங் கேட்டாலே சிலிர்த்தது. சித்தி பையன் ஒருமுறை கோடை விடுமுறை என்று வீட்டுக்கு வந்திருந்தான். குளித்துவிட்டு வந்து அவள் உடை மாற்றும்போது எதிரேபாராமல் சட்டென்று கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்துவிட்டான் மணி. ஊவென்று அவள் அப்படியே மடிந்து உட்கார்ந்தால், கடகடவென்று சிரித்தபடியே அவன் வெளியே ஓடிவிட்டான்… என்ன சிரிப்பு வேண்டிக் கெடக்கு என்று ஆத்திரமாய் வந்தது. அப்புறம் ஒரு மூணுநாலு நாள் அவனோடு முகங்கொடுத்தே பேச முடியாது போயிற்று…

”வாடி போலாம்!” என்று கூப்பிட்டாள் மனோகரி. உதட்டை லேசாய் விரலால் துடைத்துவிட வேண்டுமாய் இருந்தது. தன் உதட்டில் தன் விரலை வைக்கவே என்னமோ யோசனையாகி விட்டது… இந்த ராஜிக் கடங்காரி ஜடம் என்னமா ஆடி அசைஞ்சி வர்றா.

திரும்ப அந்த முத்தத்தை நினைத்துப் பார்த்தாள். அந்த வியர்வை வாசனை ஞாபகம் வருகிறதா பார்த்தாள். ஒவ்வொரு வயசுக்கும் ஒரு வாசனை இருக்கிறது. வியர்வையும் பௌடர் சென்ட்டுமான இளமை வாசனை. பக்தி சிரோன்மணி என்றால் விபூதியோ குங்குமமோ நெடி தூக்கும். அந்த முத்தத்தோடு கூட வாசனை எதுவும் நினைவில் தட்டவில்லை… எல்லாம் அஞ்சு விநாடிக்கதை. எத்தனையை கவனிக்க முடியும்? அந்த வேகந்தான் அவனுக்கு சாதகம். நிதானமாய் இப்படி ஒரு காரியம் செய்யமுடியுமா?

அவசரம் என்று பரபரத்த அவன் கை அவள் நெஞ்சைப் பற்றி இறுக்கியிருந்தது. எல்லாம் மெல்ல அசைபோட்டுப் பார்த்தாள். இப்படியெல்லாம் கூட நடக்குமா? இப்படியெல்லாம் செய்ய ஒரு ஆம்பளைக்குத் தோணுமா, என்றே திகைப்பாய் இருந்தது. ஆண்கள் என்னவெல்லாம் யோசிக்கிறார்கள்…

அன்றைக்கொருநாள் அலுவலகம் விட்டு பஸ்சில் இருந்து இறங்கி வீடு வந்து கொண்டிருக்கிறாள். எவனோ குடிகாரன். தள்ளாடி மோதுகிறாப் போல கிட்டே வந்தபடி என்னவோ கெட்ட வார்த்தை சொன்னான். என்ன வார்த்தை என்றே அந்த பயத்தில் சரியாய்க் கேட்கவில்லை… அவள் பின்னாடியே வர ஆரம்பித்தான் அவன். தெருநாய்கள் சில சமயம் அப்படிப் பின்தொடர்ந்து வருகின்றன… ச்சீ, என பதறி காலை உதறி நடப்பாள். குடிகாரனை எப்படிச் சமாளிக்க தெரியவில்லை. ஓட்டமும் நடையுமாய் வீடுவந்து சேர்ந்தாள்…

கணவன் நடேசமூர்த்தியை நினைத்தாள். அல்சர் அல்சர் என்று சொல்லிக்கொண்டிருந்தார். அல்சர் ஆளையே கொல்லுமா என்ன? நம்ம வாங்கி வந்த வரம் அப்படியோ என்னமோ… அனுசரணையான மனுசன். ஒரு மீசை வைத்துக் கொண்டிருக்கலாம். மழுமழுவென்று ஷேவ் எடுத்துக்கொண்டு வந்து நிற்பார். ஒருநாள் விட்டு அந்த மழுமழுப்பு வெளிர் பச்சையாகப் பளபளக்கையில் அழகாக இருக்கும்…

கல்யாணமான புதிதில் அவளைப்போலவே அவருக்கும் ரொம்பக் கூச்சம். வெளிச்சத்தில் அசட்டுத்தனமாய் உணர்ந்தார். அதிகச் சத்தத்தை ஆபாசமாய் உணர்ந்தார். அவரும் பக்தி சிரத்தையான ஆள். மிக மென்மையாய் முத்தம் கொடுத்துவிட்டு அலுவலகம் போவார். ஒரு குழந்தைக்கே ஒடுங்கிப் போனார். அதற்கு நாலு வயசு. அவர் காலம் முடிந்தது… தனிமை கிடைக்கும் போதெல்லாம் சின்னச் சின்ன சில்மிஷங்கள் பற்றி அவள் சிநேகிதிகள் சொல்வார்கள். அதெல்லாம் அவருக்குத் தெரியாது. நொறுக்குத் தீனி பிடிக்காதவர். அவள் உடைமாற்றும் போது தலையைத் திருப்பிக் கொள்வார். மனோகரி பெருமூச்சு விட்டாள்.

யார் அவன் தெரியவில்லை. ரொம்பப் பழகியவன் போல என்ன உரிமை! அவளுக்கே அந்த இதம், இயல்பு ஆச்சர்யமாய் இருந்தது. இந்த ஆண்கள் சுலபமாய் பெண்களைக் கையகப்படுத்தி வசியப்படுத்தி விடுகிறார்கள்.பெண்களுக்கு தப்பித்தல் கிஞ்சித்தும் இல்லை. தமிழில் ஒரு பழமொழி உண்டு. முள்ளில் சேலை விழுந்தாலும் சேலையில் முள் விழுந்தாலும் கிழிவது எது? சேலைதான்…

சட்டென்று அவள் வாழ்க்கையே முகம் மாறிவிட்டாப் போலிருந்தது. நல்ல சுய கட்டுப்பாட்டுடன் நெறிப்படுத்திக் கொண்டிருந்தாள் மனோகரி. அவித்த நெல்லைப் பரசி விட்டாப் போல அவள் மனசை எவனோ கலைத்து விட்டான். ஒருமுறை ராத்திரி தண்ணி தாகம் எடுத்து எழுந்துகொண்டு திடீரென்று விளக்கைப் போட்டால், அம்மா… சர்ரென்று புடவையை எடுத்து மேலே போட்டுக் கொண்டது – அவளுக்கு உடம்பே சீச்சீயென்று நடுங்கியது. உள்ளே உள்ளே அடுக்கடுக்காய் ஞாபகங்கள் குவிய ஆரம்பித்திருந்தன. எங்கூட சினிமாவுக்கு வரியாடி, காலேஜைக் கட்டடிச்சிட்டுப் போலாம், எனக் கூப்பிட்ட மோகன்.

பார்க்க நான் அத்தனை வயசாய்த் தெரியவில்லைதான் போலும். உடல் கட்டுத் தளரவில்லை. முதுகெலும்பின் அசராத நிமிர்வு. ஆம்பளைகள் வட்டமிடுகிறார்களா என இனி கவனமாய்ப் பார்க்க வேண்டும்…

ராஜியை ஓரக்கண்ணால் பார்த்தாள் மனோகரி. பின் மெல்ல உதட்டை வருடிவிட்டாள். ஈரத்தில் மின்சாரமாய் சுர்ரென்றிருந்த அந்தக் கணம் திரும்ப வந்து மோதியது. மெல்ல நிதானமாய் எல்லாம் நினைத்துப் பார்த்தாள். ஒருவேளை என் மனசின் ஓட்டங்களை ராஜி கண்டுபிடித்து விடுவாளோ என்று வெட்கமாய்க் கூட இருந்தது…

என்ன நடந்தது, எப்படி நடந்தது – நாளைக்குத் தேர்வுகள், என்று ராஜி கோவிலுக்குக் கிளம்பினாள். எப்பவும் கல்லூரிக்கு ராஜி கிளம்புகையில் கல்லூரிப் பேருந்து வரும்வரை கூடவே நிற்பாள் மனோகரி. கோவிலுக்கு அவள்கூடவே மனோகரி போனாள். அது வினையாயிற்று.

திடீரென்று அவளுக்கு ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. அடிப்பிரதட்சிணம் என்று ராஜி மெல்ல வந்தாள். மனோகரி இடப்புறம். வலப்புறம் ராஜி. கூடவே வந்தாள் மனோகரி. அந்த முத்தக்கணம்! அட ஆமாம், என நினைத்துக் கொண்டாள். தற்செயலாக மினசாரம் போன கணம். தற்செயலாக அவர்கள் இடம் மாறியது அப்போதூன். இடப்புறம் வந்திருந்தாள் ராஜி.

(நன்றி – யுகமாயினி மார்ச் 2010)

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்