துணைநலம்

This entry is part [part not set] of 50 in the series 20040715_Issue

பத்ரிநாத்


நீலாவும் மாதவனும் அந்தக் காலத்திலேயே உயிருக்குயிராய்க் காதலித்தார்கள். இறப்பு மட்டுமே உன்ினைவிட்டுத் தன்னைப் பிரிக்கும் என்றான் மாதவன். என் சிந்தையும் செயலும் அவன்தான் என்றிருந்தாள் நீலா. புதிதாய் ஒரு பேனா வாங்கி எழுதிப் பார்க்கும் போதும் ‘மாதவன் ‘ என்றே எழுதினாள். அது கல்லூரி முடித்து அந்தப் பிரபல நிறுவனத்தில் வேலைக்குச் சோந்த காலகட்டம். அப்போது நீலாவுக்கு இருபது வயது இருக்கும். அதிகாலை எழுகதிரைப் போலப் பளிச்சென்று இருந்தாள். வெளுத்ததைப் பால் என்று எண்ணும் சிந்தனைப் போக்கு. நாற்பது வயதுக்கு மேல் வரும் கல்மிஷங்கள் இல்லாத அந்த வயதொத்தவர்களிடம் இருக்கும் வெகுளித்தன்மை அவளிடம் சற்றுக் கூடுதலாகவே இருந்தது. உலகமே அலம்பி விடடததைப் போல எத்தனை சுத்தமாக இருக்கிறது..! வயதானர்களிடம் அவள் பழகும்போது அவர்களும் இளமையாகத் தெரிந்தார்கள். பிறருடன் கலகலப்பாகப் பேசிச் சிரிக்கும்போது மனம் முழுவதும் சேர்ந்து சிரித்தது.

இந்தச் சந்தர்ப்பத்தில்தான் அவள் மாதவனை சந்தித்தாள். பெங்களூரிலிருந்து சென்னைக்கு மாற்றலாகி வந்திருப்பவன். அவனுடைய சிவப்பு நிறம், உயரம் வசீகரமானது. அடர்த்தியான அந்த மீசை எத்தனை ஆண்மைத்தனமாக இருக்கிறது..ஆனால் பெண்களைப் போலச் சரியான லொடலொட.. நிறுத்தாமல் பேசிக் கொண்டே இருப்பான். ஆரம்பத்தில் அவளை அடிக்கடிப் பார்வையாலே சினேகம் கொள்ள அழைத்தான்.. அப்பா.. விழுங்கிவிடுவதைப் போன்ற பார்வை அது.. ஒரு நாள் விழுங்கியேவிட்டான்..

திரைப்படம் அழைத்துச் சென்றான். கடற்கரை, பார்க் என்று தினமும் போனார்கள். ஏதேதோ சொன்னான். தன் தநதை பெங்களூரில் பெரிய தொழில் முனைவோராம்.. பெரும் பணக்காரர். அவருடன் எற்பட்ட மனச் கசப்பால் பிரிந்து இங்கு வந்துவிட்டதாகக் கூறினான்.. நீலாவின் புரசைவாக்கம் வீட்டுக்கு இரண்டு முறை வந்தான். பிரதான சாலையில் இருந்த அந்தக்கால வீடு அது. மிகப் பெரிய வீடுதான். அதில் பத்து ஒண்டுக் குடித்தனங்கள். நீலாவின் ஒண்டுக் குடித்தன வீடு என்பது இரண்டு அறைகள் கொண்டது. உலகமே அறியாத தாய். ஒன்றுமே புரியாத தம்பி மற்றும் அவள் என்ற மூன்று பேருக்கான புறாக்கூண்டு அது..

‘ ‘இன்னமும் கொஞ்சம் பெரிய வீடா பார்க்கலாமே நீலா… ? ‘ ‘

‘ ‘இப்பத்தான் வேல கெடச்சிருக்கு.. அப்பா காலமான கடன்கள் அடஞ்சு இருக்கு..இனிமேதான் பார்க்கணும்.. உங்க தயவில… ‘ ‘, கண் சிமிட்டினாள்.

‘ ‘நம்ம விசயம் சொல்லிட்டியா.. ? ‘ ‘,

‘ ‘இல்ல மாதவன்.. சொல்லிறட்டுமா.. ? ‘ ‘,

‘ ‘வேண்டாம்.. நா வேற எங்க வீட்டில ஏற்பாடுகள் பண்ணணும்.. ‘ ‘, என்று தள்ளிப் போட்டான்.

எத்தனை நாள்தான் தள்ள முடியும்.. காதலும் தன் அடுத்த கட்டத்துக்கு ஏங்க ஆரம்பித்தது. அவன் திருமணத்துக்காக அவனை வற்புறுத்த ஆரம்பித்தாள். அதன் பிறகு நடந்த அனைத்துச் சந்திப்புகளிலும் திருமணத்தைப் பற்றியே அவள் பேச்சு சுழன்று சுழன்று வந்துது.. அன்று மகாபலிபுரத்தில் ஓர் இனிமையான மாலைப் பொழுதில் திருமணத் தேரியை அறிவித்தான். அடுத்த வாரம் வெள்ளிக் கிழமை 12ம் தேதி.. வடபழனிக் கோவிலில் காலை 8.30 மணி முதல் 11.00 மணி வரை நல்ல நேரமாம்.. எளிமையாக நடத்த முடிவு செய்திருக்கிறானாம்..ஆகவே அன்று உடைகளும் மிக எளிமையாக இருக்க வேண்டும்.. திருமணம் என்ற சந்தேகமே வரக் கூடாது..அலுவலகத்திலும் யாருக்கும் அவன் தரப்பில் அழைப்பு கிடையாதாம்..அதனால் அவளும் தன்னுடைய உறவினர்கள் மட்டுமன்றி தோழிகள் யாரும் வரக்கூடாது என்று திட்டவட்டமாக கூறினான். தாலிி கட்டிய மறுநிமிடம் தன் தந்தையை பார்க்க நேராக சென்று விடலாம் என்றும் கூறினான்..

திருமணம் நடக்கும் வரைதான் பிரச்சனை. பிறகு யார் நம்மை என்ன சொல்ல முடியும்.. ? மனம் சந்தோஷ மழையில் உற்சாகமாக நனைந்தது. ‘ ‘திருப்திதானே.. நீலா.. ‘ ‘, என்றான். நாணமடைந்து கவிழ்ந்த அவள் முகத்தைத் தன் கைகளால் எந்தி இதழ் பதித்தான். உடல் முழுவதும் கிளர்ச்சி பரவியது.

அன்றுதான் தன்னை முழு பெண்ணாக உணர்ந்தாள்.

வெள்ளிக்கிழமை.. புதிதாய்ப் பிறந்ததாகத் தோன்றிய நாள்.. தோழி வீட்டுக்குச் செல்கிறேன் என்று கூறிவிட்டு, குறைவான ஒப்பனையுடன் கோயிலை அடைந்தாள். மணி எட்டு.. மனம் உருக இறைவனை வேண்டினாள். பிரகாரம் சுற்றி வந்தாள் மணி 8.30. ‘ ‘ ஆண்டவா.. அவர் உடனே வரவேண்டும்.. ‘ ‘, மீண்டும் பிரகாரம் சுற்றி வந்தாள் ..மணி 9.30..அவன் வரவில்லை.. என்ன இது.. என்ன ஆகியிருக்கும்.. ஏதாவது விபத்து கிபத்து என்று.. சே.. என்ன இது என் மனம் அபசகுனமாகவே எண்ணுகிறது.. தொலைபேசியில் தொடர்பு கொண்டாள்.. வீட்டில் இல்லை.. அலுவலகத்திலும் இல்லை.. கோவில் ஊழியர் சந்தேகமாக அவளை விசாரித்தார்.. மணி 11 ஆகிவிட்டது..என்ன பிரச்சனை ஆனாலும்

அதற்காக இப்படியா.. ? மூன்று மணி நேரத்துக் மேல் ஒரு பெண் தன்னந்தனியாக கோவில், பிரகாரம், வாசல், பூக்கடை, புடவைக்கடை, பீசீஓ, என்று எத்தனை இடங்களில் மாறி மாறி நிற்பது.. பார்ப்பவர்கள் என்ன நினைத்தார்களோ.. லேசான மயக்கம் வருவதைப் போன்று இருந்தது..உலகமே என்னைப் பார்த்துக் கேலி பேசுவதைப் போல.. சே..மனம் புழுங்கியது.. நடந்து என்ன.. யதார்த்தம் ஒன்றே..அவன் வரவில்லை..

அன்று மட்டும் இல்லை.. தொடர்ந்து அலுவலகத்திற்கே வரவில்லை.. அவனைப் பற்றி உருப்படியாக ஒரு தகவலும் தெரியவில்லை.. ஆனால் சில நாட்களில் சில விசயங்கள் நடந்தது.. முதலில் அவன் ராஜிநாமாக் கடிதம் வந்தது. அதன் பின்பு அவனைப் பற்றி வரிசையான தகவல்கள் இரயில் பெட்டியைப் போல ஒவ்வொன்றாக வந்தது..அவன் ஏற்கனவே திருமணமானவன்.. சமீபத்திய மனைவியை விட்டுப் பிரிந்துள்ளான். அது எத்தனையாவது மனைவியோ தெரியாது.. அதுதான் அவன் தொழிலே.. அவன் தந்தை – பெரிய தனவந்தர் என்பதெல்லாம் அவனை போன்றே அத்தனையும் பொய்கள்.. மனம் வெம்பித் துடித்தது.. வாழ்க்கை என்பது ஒரு கொடூரமான, குரூரமான ஆசிரியன்.. கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்றிருப்பவர்களை என்னமாய்த் தண்டிக்கிறது.. பழுக்கக் காய்ச்சிப் பதம் பார்த்துவிடுகிறது. அன்று முதல் அவள் முகத்தில் மலர்ச்சியும் புன்னகையும் விடைபெற்றுக் கொண்டன.. இயந்திரத்தனமாக வாழ்ந்தாள். அவளின் செய்தி தெரிந்த விரல்விட்டு எண்ணக்கூடிய தோழிகள் தேற்றினார்கள்.. அவர்கள் முன்முயற்சியால் அவளுக்குத் திருமணமும் நடந்தது. மதுரைக்கு மாற்றலாகியும் சென்றாள்.. இந்தப் பத்து வருடங்களில் கணவன், குழந்தை என்று பறவை கூண்டுக்குள் தன்னைச் சுருக்கிக் கொள்வதைப் போல மறைந்து போனாள். சென்னைத் துயரத்தை மதுரை வாழ்க்கையில் மறைக்கவும் மறக்கவும் ஓரளவு முடிந்தது..

கணவன் சந்திரமோகன் பெயருக்கு ஏற்றவாறு குளர்ச்சியாக இருந்தான்.. அவன் ஓர் இலக்கியவாதி.. வாழ்க்கையை அலசி ஆராய்பவன். அவன் சொல்வது ஐம்பது சதவீகிதத்திற்கு மேல் அவளுக்குப் புரிந்ததில்லை.. இருந்தாலும் ரசிப்பாள்.. ஆனால் அவளை முழுமையாக ரசிக்க விடாமல் பழைய குற்றவுணர்வு குத்திக் கொண்டே இருக்கும்..

கடந்த காலத்தைப் பற்றி அவள் கூறவில்லை.. விரும்பவும் இல்லை.. அவனும் அதைப் பற்றி ஆவலாய்க் கேட்கவில்லை..ஆனால் அதை நினைவுப் படுத்திக் கொள்ள இந்த வாரம் சந்தர்ப்பம் வாய்த்தது.

இதோ.. சென்னை..

இத்தனை வருடங்களுக்குப் பின் அலுவலக விசயமாக அவள் இங்கு வர நேரிட்டது.. சென்னை அலுவலகம்தான் எத்தனை மாறுதல் அடைந்துவிட்டது.. சில பழைய தோழிகளைப் பார்த்துப் பேசவும் நேரிட்டது.. அதில் ஒருத்தி ‘ ‘போன வாரம் மாதவன் இங்க வந்திருந்தான் நீலா.. ‘ ‘, என்றாள்.. ‘மாதவனா..திருட்டு ராஸ்கல்.. நான் இருக்கிறேனா..

செத்துவிட்டேனா என்று பார்க்கவா.. ? ‘..

‘ ‘ஒன் அட்ரஸ் கேட்டான்.. நான் தெரியாது.. மதுரைக்கு மாத்தலாகிப் போயிட்டாங்கன்னு சொன்னேன்.. அங்கப் போய்ப் பாக்கறதா எங்கிட்டச் சொன்னான்…. வந்தானா.. ? ‘ ‘,

என்ன.. மதுரைக்கு வந்து பார்க்க வருகிறானா.. ? அய்யோ.. வரவில்லை.. திக்கென்றது.. இத்தனை வருடங்களுக்குப் பின் ஏன் என்னைப் பார்க்க வரவேண்டும்.. மன்னிப்புக் கேட்கவா.. அல்லது இருப்பதைக் கெடுக்கவா.. ? அவன் ஒரு விஷப் பாம்பு..விஷத்தைக் கக்கவே வந்திருப்பான்.. ‘நான் கெட்டழிந்து போனேன்.. மட்டும் குடியும் குடித்தனமுமாக

ஏன் இருக்கிறாய்.. ? என்னைப் போல வா.. சேர்ந்து தெருப் பொறுக்குவோம்.. ‘ என்று அழைக்க வந்திருப்பான்..

அடி வயிற்றில் பந்து போல சுழன்று மேலே வருவதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது.. என்ன உணர்வு இது.. ? அன்று இதைப் போன்றுதான் கோவிலில் நிராதரவாக நின்ற போது ஏற்பட்ட அதே உணர்வு.. மீண்டும்..மீண்டும் ..இறைவா… நான் செய்த தவறுதான் என்ன.. ? ஏன் இப்படிச் சோதனைகள் வர வேண்டும்.. ?

ஆனால் கணவன் மேல் நம்பிக்கையாக இருந்தது..சந்திரமோகன் அப்படிப்பட்ட கணவன் அல்லன்.. வாழும் கடவுள் அவன்.. என்ன சொன்னாலும் நம்பமாட்டான்.. நிச்சயம் நம்ப…அய்யோ.. நான் இங்கிருக்கிறேன்.. இந்தச் சமயத்தைப் பயன் படுத்திக் கொண்டு தன் கணவனிடம் நேராகப் போய்..

அடித்துப் பிடித்து மதுரை அலுவலகத்துக்கு ஃபோன் போட்டாள்.. ‘ ‘ ஆமாம்மா.. ஒருத்தர் நல்ல சிவப்பா. வெடவெடன்னு பேருகூட ஏதோ சொன்னாரு.. ஆ.. மாதவன்..ஒங்களுக்குச் சொந்தக் காரங்கேன்னு சொன்னாரு.. நீங்க ஊருக்குப் போயிருக்கிங்கேன்னு சொன்னேன்..பரவாயில்லைன்னு புருசன் கொளந்தைகளப் பாத்துட்டுப் போறேன்னு அட்ரசு வாங்கிட்டு போனாரு.. ‘ ‘,

விதியே.. விதியே.. என்னைத் துரத்தித் துரத்திக் கொல்கிறாயே.. என் வாழ்க்கையைத் தவிப்பாகவே அமைத்துக் கொண்டு விட்டேனே.. இப்போது என்ன செய்வது.. ? கணவனைத் தொடர்பு கொண்டு, மாதவன் என்ற ஒருவன் வருவான்.. அவன் என்ன உளறினாலும் நம்ப வேண்டாம் என்று.. வேண்டாம்.. எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிற கதை இது.. தவிரவும் கணவன் என்ன பச்சைக் குழந்தையா.. ? எவனோ எதையோ சொல்வான்..அதைப் போய்.. அதுவும்..இத்தனை வருட தாம்பத்யத்திற்குப் பிறகு.. வேண்டாம்.. பொறுமை.. பொறுமை..

ஆனால் பொறுமை என்ன கடைச் சரக்கா.. ? பொறுக்கவே முடியவில்லை.. இன்றே.. இன்றிரவே நான் மதுரைக்குத் திரும்ப வேண்டும்..

‘ ‘என்னம்மா இது..சரி.. குழந்தைக்கு ஒடம்பு சரியில்லன்னா என்ன பண்றது..கிளம்புங்க.. ‘ ‘, மேலதிகாரியும் ஒப்புதல் தந்து விட்டார்.. இரவு கிடைத்த பஸ்ஸில் ஓட வேண்டியதுதான்.. மீண்டும்.. கிடைத்த வாழ்க்கையை நான் இழக்க முடியாது..

கணவனைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று எண்ணினாலும், முடியவில்லை.. மாலை ஆறு ஆகிவிட்டது..வீடு திரும்பியிருப்பார்..சாதாரணமாகத் தொடர்பு கொள்ள நினைத்ததாகப் பேசுவோம்..

பையன்தான் பேசினான்..

‘ ‘அம்மா.. எப்பம்மா திரும்பி வருவே.. ? ‘ ‘,

‘ ‘இன்னிக்கேடா..சரிடா செல்லம்.. அப்பாவக் கூப்பிடு.. ‘ ‘,

‘ ‘அப்பா பிரண்டோட வெளியே போயிருக்காரு.. ‘ ‘,

‘ ‘நீ மட்டும் தனியாவா இருக்கே.. ? ‘ ‘,

‘ ‘இல்லம்மா.. பக்கத்து வீட்டு அக்காவோட வெளையாடிட்டு இருக்கேன்..அப்பா நா வெளியே போயிட்டு வர்ற வரைக்கம் வெளையாடிட்டு இருக்கச் சொன்னார்.. ‘ ‘,

‘ ‘எந்த பிரண்டு.. ராகவன் அங்கிளா… ‘ ‘,

‘ ‘இல்லைம்மா.. யாரோ ஒரு புது அங்கிள்.. சிவப்பா உயரமா இருந்தாரு..அப்பாவும் அவரும் பேசிட்டு இருந்தாங்க..அப்பறம் ரெண்டு பேரும் வெளியே போயிட்டாங்க.. ‘ ‘,

உயரமாக.. அந்தக் குள்ளநரி.. மாதவன்தான்.. மோப்பம் பிடித்துக் கொண்டு மதுரைவரை வந்து விட்ட வெறிநாய்.. என்ன செய்ய முடியும்.. ? எதிர் கொள்வதைத் தவிர.. ? கணவனிடம் என்ன சொல்லுவான்.. ? நாளும் நீலாவும் கல்யாணம் செய்து கொண்டு பல நாட்கள் குடும்பமே நடத்தினோம் என்றும் கூறலாம்..நான் நானூறு கிலோமீட்டர் தள்ளி இங்கிருக்கிறேன்.. அங்கு ஒரு நபர் விசாரணை.. ஒருதலைப்பட்சத் தீர்ப்பு.. யார் முதலில் என்ன சொல்கிறார்களோ..அதுதான் எடுபடும்.. எனக்கு இப்படிப்பட்ட தண்டனை தேவைதான்.. அப்பாவியாக இருந்தேனே.. முட்டாளாக இருந்தேனே..வெகுளியாக இருந்தேனே.. இந்த உலகில் அப்படி இருப்பது எவ்வளவு பெரிய குற்றம்.. ? இவற்றைக்கூட இ.பி. கோ பிரிவில் சேர்க்கலாம்.. தவறில்லை..

சுற்றிலும் இருட்டு..பறந்து கொண்டிருந்தது-பேருந்து..

இருட்டு.. என் வாழ்க்கையைப் போல.. சிறு ஒளியை முன்னால் கொண்டு கறுப்பு ரோட்டைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விரைந்து கொண்டிருந்தது.. கறுப்பு ரோடுதான் நம்பிக்கை.. சற்று விலகினாலும் எங்காவது பயங்கரமாய் மோதி.. சே.. என்னைத் தவிர பேருந்தில் அனைவரும் ஆழ்ந்த நித்திரையில் .. மணி இரண்டு.. ஓட்டுனரும் நானும் மட்டும் விழித்துக் கொண்டிருக்கிறோம்..

மதுரையை அடைந்த போது காலை எட்டு மணிக்கு மேல் ஆகிவிட்டது.. நடுவில் வண்டியில் ஏதோ கோளாறு விடியும்வரை சரி செய்து கொண்டிருந்தார்கள்.. நேராமாகிவிட்டது.. வீட்டை அடைந்த போது, யாரும் இல்லை.. கணவனும் அலுவலகம்

சென்றுவிட்டான்.. மகனும் பள்ளிக்குச் சென்று விட்டான்.. வீடு மயான அமைதியைப் போல இருந்தது.. கணவன் அலுவலகத்தைத் தொடர்பு கொள்வோமா.. ? வேண்டாம்.. .இத்தனை வேகமாக ஏன் என் உடல் நடுங்குகிறது..பேரூந்தில் வந்த அசதியா.. இல்லை.. மனதின் தவிப்புதான்.. இருதயம் வேறு இயல்பைவிட வேகமாகத் துடிக்கிறது..

தண்ணீர் எடுத்துப் பருகினாள்.. அப்போதுதான் மேஜையின் மேல் சிறு பார்சலைப் பார்த்தாள்.. எடுத்துப் பிரித்தாள்.. புடவை.. துண்டுச் சீட்டுடன்..

‘நேற்று இரவுதான் வாங்கினேன்.. நீண்டநாட்களாக விரும்பிக் கேட்ட அந்த ராசிப்புடவை.. என் இனிய வாழ்க்கைத் துணைக்கு பிறந்தநாள் பரிசாக.. ‘ – சந்திரமோகன்..

அதை எடுத்து அணைத்துக் கொண்டு, தேம்பித் தேம்பி அழுதாள்..

prabhabadri@yahoo.com

Series Navigation

பத்ரிநாத்

பத்ரிநாத்