பாவண்ணன்
கோகுலக்கண்ணன் புதிய நுாற்றாண்டில் மலர்ந்திருக்கும் இளங்கவிஞர்களில் முக்கியமானவர். 62 கவிதைகள் அடங்கியிருக்கும் ‘இரவின் ரகசியப்பொழுது ‘ அவருடைய முதல் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. நெருக்கமான ஒரு நண்பர் ஒரு மரத்தடியில் அல்லது புல்வெளியில் நம்முடன் அமர்ந்து தன் மனந்திறந்து நட்பார்ந்த குரலில் பேசுவதைப்போல அமைந்திருக்கிறன கோகுலக்கண்ணனின் கவிதைகள் இவை மிக எளிய வரிகளால் புனையப்பட்டிருப்பதைப்போன்ற தோற்றத்தைத் தந்தாலும் அது உண்மையல்ல. வாழ்வின் ஆழத்தைக் கண்டறியும் ஆர்வமும் மொழியின் தேர்ச்சியும் பொருந்திய ஒருவரின் அனுபவத்தையே ஆடையாகக் கொண்டது இந்த எளிமை. எந்த அளவு ஈடுபாட்டோடு இவ்வரிகளை உள்வாங்கிக்கொள்கிறோமோ அந்த அளவுக்கு நம்மை வேறொரு தளத்துக்கு நகர்த்திச் செல்கின்றன. துக்கத்தின் அலையோசை ஒலிக்கிறது அத்தளத்தில். வாழும் உலகின் தனிமையால் உருவாகும் பதற்றத்தின் தடங்கள் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. ஆதரவற்ற நிலையாலும் இயலாமையாலும் தடுமாறும் மனிதர்களைக் காணும்போதெல்லாம் கையறு நிலையில் இவர் மனத்தில் பெருகும் துக்கம் அளவற்றதாக இருக்கிறது. இவருடைய எல்லாக் கவிதைகளையும் ஒன்றிரண்டு முறைகள் படித்துமுடித்த பிறகு அவை சுட்டும் உலகை ‘துக்கத்தின் அலையோசை ‘ என்று படிமப்படுத்தலாம் என்று தோன்றுகிறது. மனத்தில் கவிந்து படரும் துக்கமென்னும் மாபெருங்கடலின் தீராத ஓசையின் வரிவடிவமே கோகுலக்கண்ணன் கவிதைவரிகளாக மாற்றம் பெறுகின்றன.
தொகுப்பில் முதல் கவிதையே ‘இனியென் துக்கம் ‘ என்ற தலைப்புடன்தான் அமைந்திருக்கிறது. ‘இனியென் துக்கம் என் துக்கமாக மட்டும் இருக்காது. உங்களின் துக்கமாக, உங்கள் குழந்தைகளின் துக்கமாக, உங்கள் கடவுளின் துக்கமாக ஆகும் ‘ என்பவை இக்கவிதையில் இடம்பெறும் வரிகள். ‘இந்தக் குல்மொஹர் பூ மலர்ந்த மரத்தின் விதைக்கு நான் ஊற்றியது என் கண்ணீர் என் கனவு என் துக்கம் ‘ என்று இன்னொரு கவிதையில் அவர் எழுதிச் செல்லும்போது கவிதைகளையே குல்மொஹர் பூவாக உருவகப்படுத்தியிருப்பதை எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது.
இவர் சுட்டிக்காட்டும் பல சித்திரங்கள் அன்றாட வாழ்க்கையைச் சார்ந்தவை. இவற்றை நாமும் கண்டிருக்கக்கூடும். வருத்தப்பட்டிருப்போம். அல்லது வருத்தப்படாமலேயே கடந்துபோயிருப்போம். இக்கவிதைகள் நாம் மறந்துவிட்ட அக்கணங்களை ஆழத்திலிருந்து அகழ்ந்தெடுத்து மீண்டும் நம் முன் நிறத்துகின்றன. அவர் மனத்திலெழுந்த ஓசையை நம் மனமும் உள்வாங்கி நிறைத்துக்கொள்வதில் எவ்விதமான தடையும் இல் லாததால் கோகுலக்கண்ணனின் கவிதைகளுடன் நல்ல நெருக்கம் கொள்ளமுடிகிறது. அதே சமயத்தில் சற்றே கூச்சம் கொள்ளவும் வைக்கின்றன. ஒரு துக்கத்தை அவர் பொருட்படுத்தி உள்வாங்கி நிறைத்துக்கொள்ளும் அளவுக்கு நாம் ஏன் பொருட்படுத்தாமல் போனோம் என்ற கேள்வி துளைப்பதால் இக்கூச்சத்தைத் தவிர்க்கமுடியவில்லை.
துக்கத்தின் சாயலைக் கொண்ட ‘இரண்டும் ‘ என்னும் கவிதை மிகச்சிறந்ததாக இத்தொகுப்பில் உருவாகியிருக்கிறது. இதை வாசித்து முடித்ததும் நம் இயலாமையை நினைத்துநினைத்துத் துவண்டுவிடுகிறது மனம். கவிதையில் இடம்பெறுவது ஓர் எளிய காட்சி. இக்காட்சியில் இடம்பெறுவது உண்மையில் மூன்றுபேர் என்றாலும் இருவரின் இயக்கம் மட்டுமே கவிதையில் இடம்பெற்றிருக்கிறது. தற்செயலாக இயங்கமுடியாமல் போன முதல்வன் உறைந்துபோனதற்கு வலுவான காரணம் இருப்பதை வேகவேகமாகக் கவிதை வரிகளைத் தாண்டிவந்த பிறகு புரிந்துகொள்கிறோம். அந்த உறைதலின் கடுமை நம்மைத் தாக்கியபிறகு பதற்றத்தோடு மீண்டும் முதல்வரியைத் தடுமாற்றத்தோடு படிக்க நம் கண்கள் பரபரக்கின்றன. உண்மையில் அந்த முதல்வனைப்பற்றியதுதான் இக்கவிதை என்று புரிந்துவிடுகிறது. அவன் கைகள் ஒரு குழந்தையை ஏந்தியிருக்கின்றன. பசித்து அழுத குழந்தையை அமைதிப்படுத்தி தோளில் சாய்த்த கணத்தில் குழந்தையின் உயிர் பிரிந்துவிடுகிறது. பசியும் மரணமும் ஒரே கணத்தில் தாக்கியதில் துவண்டு உறைந்து நிற்கிறான் முதல்வன். அதைக்கண்ட இரண்டாமவன், விசாரிக்கவந்த மூன்றாமவனுக்கு தானறிந்த தகவலைச் சொல்கிறான். அப்படித்தான் சித்தரிக்கிறது கவிதை. அறிமுகமில்லாத குழந்தைதயின் மரணம் அறிமுகமற்ற மனிதனால் தெரிவிக்கப்படுகிறது. மரணமும் அதைத் தெரிந்துகொண்ட முறையும் ஆகிய இரண்டுமே பயங்கரமாகவும் இயல்பானதாகவும் இருக்கிறதென்ற குறிப்புகளோடு கவிதை முற்றுப்பெறுகிறது. கடுமையான வேதனை என்பதைத்தான் பயங்கரமானதென கோகுலக்கண்ணன் குறிப்பிடுவதாகத் தோன்றுகிறது. மரணம் வேதனையானதுதான். பசியால் விளைந்த மரணம் என்பது இன்னும் கூடுதலான வேதனையைத் த ரக்கூடியது. ஒரு வேதனையை இயல்பான ஒன்றாக எப்படிக் குறிப்பிடமுடியும் என்பது யோசிக்க்கவேண்டிய அம்சம். முதல்நாள் இப்படிப்பட்ட ஒரு மரணக்காட்சியைப் பார்க்கும்போது அல்லது கேட்கும்போது தாளமுடியாத வேதனை உருவாகலாம். மீண்டும் பார்க்கும்போது அல்லது கேட்கும்போது நெஞ்சம் கனத்துப்போகலாம். மறுபடியும்மறுபடியும் மரணத்தைப் பார்க்கும்போது வேதனையின் கடுமை குறையக்கூடும். வேதனைகூட பப 6கிவிடுகிறது. சுடுகாட்டில் பிணத்தை எரிப்பவனுக்கு மரணக்காட்சி பழகிவிடுவதைப்போல. ஆகவேதான் வேதனையான ஒரு மரணம் மிகவும் இயல்பான தகவலாக மண்ணில் பதிகிறது. பசியினால் நிகழ்ந்த மரணம் என்ற குறிப்பு நாம் வாழக்கூடிய உலகின் வறுமைத்தன்மையையும் ஆதரவற்ற அம்சத்தையும் கசப்புடன் ஞாபகப்படுத்தியபடி இருக்கிறது. மரணத்தை ஒரு புள்ளிவிவரக் கணக்காகமட்டுமே பார்க்கக்கூடிய அரசியல் அமைப்பில் இது இயல்பாக இல்லாமல் வேறு எப்படி இருக்கமுடியும் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்கிறோம். ஓர் அடிமைச் சமுதாயத்தில் கூட உயிர் வாழ்வதற்கு அடிப்படைத் தேவையான உணவுக்கு உத்தரவாதம் உண்டு. எந்த எஜமானனும் தன் அடிமையின் மரணத்தை விரும்புவதில்லை. அடிமையை இழப்பது என்பது அடிமையின் உழைப்பை இழப்பதாகும். அந்த உத்தரவாதம்கூட மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மக்களாட்சி புரிகிற மண்ணில் இல்லாமல் போன துரதிருஷ்டத்தை எங்கே சென்று முறையிடமுடியும் ? ஒரு வாய் சோறு. அதுதான் ஒரு குடிமகனின் மிகப்பெரிய கனவு. அதுவும் நிறைவேறாத சூழலில் நேர்ந்துவிடுகிற மரணத்தின் வேதனை பழகிப்பழகி இயல்பாகிவிட்டது. நாம் ஒவ்வொருவருமே சுடுகாட்டுப் பிணம் எரிப்பாளனாக மெல்லமெல்ல மாறிக்கொண்டு இருக்கிறோம்போலும். வேண்டுமென்றால் நவீன பிண எரிப்பகத்தின் பணியாளனார்கள் என்று சொல்லிக்கொள்ளலாம்.
‘பனிமூடும் சுவடுகள் ‘ முழுக்கமுழுக்க அயல்மண்ணின் அனுபவம் படிந்த ஒரு கவிதை. விருந்தினர்களுக்காகக் காத்திருப்பவள், உணவகத்தில் காத்திருப்பவர்கள், உணவகத்தில் காணநேர்ந்த காவியச்சாயல் மிகுந்த கிழவி, சலவைக்கடையில் தொலைக்காட்சி பார்த்தவர், சாலையைப் பழுது பார்க்கும் காட்சி என விதம்விதமாக தொகுப்பெங்கும் பல இடங்களில் தீட்டிக்காட்டப்பட்ட சித்திரங்களைக் கொண்ட கவிதைகளில் அயல்மண்ணின் அடையாளங்கள் இருப்பதைக் கவனமாகப் படிக்கும்போது கண்டறிந்துவிட முடியும். இச்சித்திரங்கள் கொஞ்சம்கொஞ்சமாக செப்பனிடப்பட்டு பிறகு நேர்த்தியும் ஒழுங்கும் பொருந்தியதாக மாற்றப்பட்டு ஒரு முழுச்சித்திரமாக இக்கவிதையில் வெளிப்படுகிறது. நாம் பனி என்று அதிகபட்சமாகக் கண்டதெல்லாம் எங்கெங்கும் புகையடர்ந்து சில மணிநேரங்கள் கைக்கெட்டும் அருகில் உள் ள காட்சியைக்கூட காண இயலாதபடி தவிக்கவைக்கும் சூழலைமட்டும்தான். ஆனால் அயல்மண்ணின் பனி பாதையை மூடுவதைப்போல வாழ்க்கையின் இயக்கத்தையே முடக்கிவிடுகிறது. அது மண்ணை மூடுகிறது. வீடுகளை மூடுகிறது. காற்றை அலறவைக்கிறது. மரங்களை மொட்டையாக்கி திகைக்கவைக்கிறது. புல்வெளியை மூடுகிறது. பறவைகளைக்கூட அடக்கிவைக்கிறது. ஓர் அராஜக சர்வாதிகார ஆட்சியைப்போல பனியின் ஆட்சி கோலோச்சத் தொடங்கிவிடுகிறது. பனியென்பது உறைந்துபோன செயலற்ற தன்மையின் அடையாளமாக அம்மண்ணில் மாறிவிடுகிறது. துல்லியமான முறையில் அயல்மண்ணின் பனிக்காட்சி கவிதையில் ஏன் தீட்டிக் காட்டப்படவேண்டும் என்பது முக்கியக் கேள்வியாகப்படுகிறது. நம் மண்ணீன் கண்களால் பார்ப்பதால்தான் பனிக்காட்சியின் உறைநிலை மிகப்பெரிய இழப்பு அல்லது துக்கம் எழக் காரணமாக இருக்கிறது. அந்தத் துக்கத்தை இப்படி எழுதித்தான் அல்லது சொல்லித்தான் தீர்த்துக்கொள்ளவேண்டி இருக்கிறது. வெயிலென்றும் மழையென்றும் காற்றென்றும் வெள்ளமென்றும் பாராமல் கால்போன போக்கில் மனம் விரும்பும் இடங்களில் அலைந்து திரிவதற்கு இந்த மண்ணில் எவ்விதமான தடையுமில்லை. வெளியுலகம் என்பது ஒருபோதும் நமக்குத் தடையாக இருந்ததே இல்லை. நம் மண்ணின் கால்பங்குக்கும் மேலான மக்கள் வீடற்று சாலையோரங்களிலும் மரத்தடிகளிலும் நாடோடிகளாக வாழ்கிறவர்கள்தாம். வெளி, பொழுது, பருவம் எல்லாமே நம் கொண்டாட்டங்களுக்கு ஒரு முட்டுக்கட்டையாக குறுக்கில் வந்ததில்லை. மானுட வாழ்வின் ஆனந்தம் எல்லாவற்றோடும் கரைந்திருக்கக்கூடியது. இதற்கு நேர்மாறான இயங்குதளத்தைக் கொண்டதாக இருக்கிறது வாழப்போன அயல்மண். மானுட நடவடிக்கைள் ஒவ்வொன்றையும் வெளி , பொழுது, பருவம் அனைத்தும் சிறிய அளவிலாவது கட்டுப்படுத்தியபடி இருக்கிறது. கட்டுப்பட்டு நிற்க நேர்ந்த நிர்ப்பந்தத்தின் தளையை உதறவும் முடியாமல், தன் மண்ணில் கட்டற்றுத் திளைத்த ஆனந்தத்தின் ஞாபகத்தை ஒதுக்கவும் முடியாமல், இரண்டுக்குமிடையே தத்தளிக்கிற மனத்தின் ஆதங்கத்தை அல்லது துக்கத்தைப் பகிர்ந்து கொள்வதற்காகவே இக்கவிதை எழுதப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.
ஒன்றின்மீது ஒன்றாக அடுக்கியபடி செல்கிற தன்மையைக் கொண்டிருக்கும் ‘தேவதைகள் ‘ கவிதை குறிப்பிட்டுச் சொல்லத்தக்க இன்னொரு கவிதையாகும். தேவதைகள் யார் என்னும் கேள்விக்கெல்லாம் அது செல்லவில்லை. தேவதைகள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருங்கள் என்னும் மன்றாடுதலோடு தொடங்குகிறது கவிதை. தேவதைகள் இதயம் மென்மையானது என்ற குறிப்பு தொடர்ந்து சொல்லப்படுகிறது. தேவதைகள் தங்களை ஒருபோதும் அறிவித்துக்கொள்ளாது என்றும் நாமாகவே அறிந்துகொள்வது அவசியமென்றும் இன்னொரு குறிப்பும் வழங்கப்படுகிறது. இப்படியே பல குறிப்புகள் முன்வைக்கப்படுகின்றன. தேவதைகளைக் கண்டால் ஆசையின் உந்துதலால் வரம் எதுவும் கேட்டுவிடக்கூடாதென்றும் பிறகு அவை குற்ற உணர்ச்சியில் கண்ணீர் சிந்தக்கூடியதென்றும்கூட சொல்லப்படுகிறது. ஆனால் தேவதைகளை எப்படி அறிவது ? ஒரு தேவதை தேவதையாகவே வரவேண்டுமென்ற அவசியமில்லை. தேவதைகளின் உருவங்கள் புழுவாகவோ பறவைகயாகவோ கிழவியாகவோ குழந்தையாகவோ காற்றாகவோ மின்னலாகவோ இருக்கக்கூடும் என்று அடங்கிய தொனியின் மற்றுமொரு குறிப்பு முன்வைக்கப்படும்போது கவிதை உச்சத்தைத் தொட்டுவிடுகிறது. பிரித்தெடுத்துப் பார்த்தால் எளிய உரைநடையாலான ஒரு கருத்துத்தான். ஆனால் அக்கருத்து மிக லாவகமாக ஒரு கவிதையனுபவமாக மாறியிருப்பது சிறப்பம்சமாகப்படுகிறது. ரஷ்யக்கலைஞன் தல்ஸ்தோயின் சிறுகதையொன்றில் ஒரு முதியவனாக, ஒரு சிறுமியாக, கைக்குழந்தையோடும் பசியோடும் அலையும் ஒரு பெண்ணாக தேவதை உருமாறிவரும் சந்தர்ப்பங்கள் உடனடியாக நம் நினைவில் ஒளிர்கின்றன. இவ்வரிகளைக் கடக்கும்போது தேவதையின் புதிர் அவிழ்ந்துவிடுகிறது. இந்த உலகம்தான் தேவதை. இந்த வாழ்வுதான் தேவதை. இந்த இயற்கை, நதி, காற்று, கடல், வீடு, ஜன்னல், வெளிச்சம், மழை எல்லாமே தேவதைகளே. ஒவ்வொரு கணமும் தேவதையின் விரல் நம்மைத் தீண்டிய ஏந்திக்கொள்கிறது. தேவதைகள் நம்மை ஒரு குழந்தையாக தன் தோளில் சுமந்து திரிந்துகொண்டுதான் இருக்கின்றன. காத்திருத்தலைக்கூட ஒரு விளையாட்டாக மாற்றிக் களிப்பில் மிதக்கத் தொடங்கிவிடுகின்ற குழந்தையைப்போல தேவதையைக் காணும் ஆவல், விழைவார்ந்த ஒரு காத்திருப்பாக அன்றி, ஒவ்வொரு கணமும் துய்த்தலுக்கான களமாக வாழ்க்கையை மாற்றவேண்டும். அந்த ஆனந்தத்தில் லயித்திருந்தால் போதுமானது என்று தோன்றுகிறது. தேவதைகளின் உள்ளங்கைப் பரப்பில் சுற்றிச்சுழலும் பம்பரமங்களாக நாம் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் ஏதோ ஒரு கணத்தில் நம்மாலும் தேவதைகளை உய்த்துணரமுடியும் என்று எண்ணத் தோன்றுகிறது.
தொகுப்பின் மிகச்சிறந்த கவிதைகளில் ஒன்று ‘ஒளியின் குழந்தை ‘. இக்கவிதையில் தாயும் குழந்தையும் ஏற்றிருக்கும் பாத்திரங்களுக்கு நிகரான உயிருள்ள மற்றொரு பாத்திரமாக வெயில் இடம்பெறுகிறது. உண்மையில் வெயில்தான் நிரந்தரமான உயிருள்ள பாத்திரம் என்று சொல்லத் தோன்றுகிறது. சூரியப்பந்திலிருந்து துண்டாகி விழுந்து நெடுங்காலம் கனலாகவே கொதித்து, காலம் கடக்கக்கடக் க குளிர்ந்து அடங்கி வாழத் தகுதியுள்ளதாக உருமாறிப் படர்ந்திருக்கிற பூமியின் அடிவயிற்றில் பதிந்திருப்பது வெயிலின் கதகதப்புதான். ஒரு தாயினுடைய கருப்பையின் கதகதப்புக்கு நிகரானதாக இதைக் குறிப்பிடலாம். காலை என்று புலர்ந்து வெளிச்சம் படர்ந்தாலும் மாலை என்று ஒளிகுறைந்து இருள் படர்ந்தாலும் பூமிக்கும் வெளிச்சத்துக்கும் இடையே இருக்கும் உறவு ஒருபோதும் அறுபடாத ஒன்று. பூமிை யப்போலவே வெயிலும் ஒரு தாய். அவர் கைகள் சிற்சில சமயங்களில் குளிர்ந்திருக்கலாம். சிற்சில சமயங்களில் சற்றே வெப்பம் கூடியதாக இருக்கலாம். ஆனால் அதன் விரல்களில் சதா நேரமும் அன்பும் தாய்மையும் கசிந்தபடியே இருக்கிறது. உயிர்ப்பாற்றல் மிக்க அந்த ஆதித்தாயின் இருப்பு கடவுளின் இருப்புக்கு இணையானது. அதன் நிரந்தரத்தன்மைக்கு ஒருபோதும் அழிவென்பதே இல்லை. சிணுங்குகிற குழந்தையை இருகைகளாலும் அள்ளிய குழந்தையின் தாய் அமைதியோடு ஒளிபடர்ந்த வீட்டு வாசலுக்கு வந்து நிற்கும்போது அந்தக் குழந்தையை வாங்கிக்கொள்ள நெஞ்சு நிறைந்த கருணையோடு ஏற்கனவே ஆயிரமாயிரம் கைகளைக்கொண்ட ஆதித் தாயான வெயில் வந்து நிற்கிறாள். பெற்ற தாயிடமிருந்து அவளுடைய கைகள் குழந்தையை வாங்கி ஏந்தி எடுத்துக்கொள்கின்றன. அதுவரை அழுது சிணுங்கிய குழந்தை மெளனமாகி கண்கள் மின்ன சிரிக்கிறது. அமைதியாக வெயிலின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கிறது. எல்லாம் சில கணங்கள்தாம். பெற்றெடுத்த தாய் வெயிலிடமிருந்து குழந்தையை திரும்பவும் வாங்கிக்கொண்டு வீட்டுக்குத் திரும்புகிறாள். வெயில் நம் எல்லாருக்கும் ஆதித்தாய் என்பதை ஒரு கண்டுபிடிப்பாக முன்வைக்கிறது கவிதை. வெயிலின் கைகள் ஏந்தி முத்தமிட்ட குழந்தையாக நாமும் ஒருகாலத்தில் இருந்தோம் என்னும் நினைவு மகிழ்ச்சியை அளிக்கிறது. நம் மூதாதையரையும் ஏந்தி நம்மையும் ஏந்தி, நம் பிள்ளைகளையும் கருணையோடு வாங்கி அமைதிப்படுத்தும் அந்தத் தாயின் இருப்புக்கு தலைவணங்கவேண்டும் என்று தோன்றுகிறது. வெயில் மட்டுமல்ல, காற்று, தண்ணீர், மழை எல்லாமே தாயாய் நின்று நம்மைக் காத்துவரும் தாய்ச்சக்திகளே என கவிதையின் அனுபவத் தளத்தை விரிவாக்கிக்கொள்ளும்போது வாசகம் கொள்ளும் மகிழ்ச்சி எல்லையின்றி விரிவானதாகிறது.
இப்படி ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்ல பல நல்ல கவிதைகள் தொகுப்பில் உள்ளன. சொற்களை கவனமாக தேர்ந்தெடுத்து பொருத்தமாக இணைக்கிற நேரத்தியில் இவர் கவிதை வரிகள் உடனடியாக நெருக்கம் கொள்ளவைக்கின்றன. தனிமையில் குழந்தைகள், ஆறுதல், ரயிலைத் தவறவிட்டவள், ஒரு மிகப்பெரிய அழிவுக்குப் பிறகு ஆகியவை மிகச்சிறந்த கவிதைகளாக வெளிப்பட்டுள்ளன. குரல்-2, வீடு, மெளன ப்பொய்கை போன்ற கவிதைகள் இன்னும் சற்றே சிரத்தையோடு எழுதப்பட்டிருக்கலாம் என்ற எண்ணத்தைக் கொடுக்கின்றன. சமீபத்தில் வெளிவந்த கவிதைத் தொகுப்புகளில் முக்கியமான ஒன்றாக தயக்கமின்றி கோகுலக்கண்ணனின் தொகுப்பைக் குறிப்பிடலாம்.
(இரவின் ரகசியப் பொழுது- கவிதைகள். கோகுலக்கண்ணன், உயிர்மைப் பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-18. விலை.ரூ50)
- பாட்டி
- சங்கனாச்சேரியும் ‘ஸ்டார்டஸ்டு ‘ம்
- விண்வெளியில் செல்லும் வால்மீன் ஒளிமுகில் மாதிரித் தூளைப் பிடித்து வந்த விண்சிமிழ் (Stardust Space Ship Collects Comet ‘s Coma Sa
- பிரபஞ்சத்தில் ஒரு நீலப்படம் ? (Between the Black-hole and the White-hole there is a Worm-hole)
- இரண்டாம் அர்த்த வரிசையின் கதை- சல்மாவின் நாவலை முன்வைத்து
- நான் கண்ட சிஷெல்ஸ் – 7
- மு புஸ்பராஜனின் ‘மீண்டும் வரும் நாட்கள் ‘
- சி.கனகசபாபதியின் ‘ புனைகதைகள் ‘
- உயிர்ப்பு தொகுப்பின் பத்து சிறுகதைகள்
- சேதிராயர்
- ஜெயமோகனின் கொற்றவை
- சுப்ரபாரதிமணியன் படைப்பு மனத்தின் செயல்பாடுகள்
- ஸி. செளரிராஜன் கவிதைகள்
- ஹெச்.ஜி.ரசூலுக்கு….
- ஹெச்.ஜி. ரசூலின் ‘வாகாபிசமும் நவீன முதலாளியமும் ‘ கட்டுரைக்கு எதிர்வினை
- கடிதம்
- ஜெயந்தி சங்கரின் மூன்று நூல்கள் வெளியீடு
- எச்சங்கள் இன்னும்
- கீதாஞ்சலி (58) ஒளிந்திருக்கும் காதலன்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- ஈரமான தீ
- அபத்தங்களின் சுகந்தம்
- கவிதைகள்
- துக்கத்தின் அலையோசை – கோகுலக்கண்ணனின் ‘இரவின் ரகசியப் பொழுது ‘
- (இங்கிலாந்து இடம் பெறாத) எடின்பரோ குறிப்புகள் – 7
- யமேய்க்கனுடன் சில கணங்கள்!
- வீடற்றவன்…
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம்- 5
- கல்லறைக்குச் செல்லும் வழி (மூலம் : தாமஸ் மன் (ஜெர்மனி) )
- மிட்டாதார்
- முதலாம் தீர்மான கோட்பாடு
- பிளவுண்ட சமூகம் என்பதால் என்றென்றும் பிளவுபட்டிருப்பதா ?
- பிறவழிப் பாதைகள் : அன்புள்ள குட்டி ரேவதி
- சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு!
- தனிநபர்-புரட்சி-முன்னெடுப்பு, சில அபிப்பிராயங்கள்!
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-6) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- ஒருவரையொருவர் காயப்படுத்தி ரத்தம் ருசித்தலா விவாதம் ?
- மாயச் சரக்குப் பெட்டிகள் (Phantom Cargo)
- கைநுனி மின்மினி
- பெரியபுராணம் – 74 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- காத்திரு காத்திரு
- சாத்தானுடன் போகும் இரவு
- விதிகளின் மீறுகை
- செரிபடட்டும்
- வீடு
- ஹெச்.ஜி.ரசூல் கவிதைகள்