தீர்க்கமும் தரிசனமும்

This entry is part [part not set] of 50 in the series 20040812_Issue

நெப்போலியன்


தீர்க்கதரிசனங்களின்
வாயிலாகவே
பரலோகராஜ்யம் சமீபம்
என்பதின் தொலைவை
இன்று
கணக்கிட்டபொழுது
நோவா பேழையின்
பிரமாண்டத்தை
மிஞ்சியிருந்தது.

யோர்தான் நதியில்
திருமுழுக்கு
வேண்டுமெனில்
உன்
பாதரட்சைகளை
அவிழ்க்கத்
திராணியில்லாத
ஒருவனும் அவசியம்.

அல்பாவும்
ஒமெகாவும்
யெகோவாவின்
வழியெனில்
நான் ஆதாம்.

கெபிகளில்
கர்சிக்கும்
சிங்கங்களுக்கிடையேயான
தானியேல் நான்.

என்
வாய் கட்டப்பட்டதால்
அவைகள் பேசுகின்றன.

நீண்ட கூந்தல்களால்
புண்ணிய பாதங்களைத்
துடைத்து
நறுமணத்தைலம் பூசும்
தருணங்களுக்காக
காத்திருக்கலாம்.

ஐந்து தலையும்
மனித முகமாய்
உடம்புகள்
மிருகவடிவாய்
அக்கினி கக்கியபடி
சமுத்திரத்திலிருந்து
இந்த முறை
பெரும் பிரளயம்
வரலாம்.

கள்ளர்களைப்போல்
ஓடி ஒழிந்தாலும்
நியாயத்தீர்ப்பு நிச்சயம்
எனவே
இன்றுவரை
துன்மார்க்கம்.

சரீரமான அப்பமும்
ரத்தமான திராட்சைரசமும்
இறுதி இரவின்
பசியாறல்.

விடியலுக்கு முன்
கல்லறைக்கதவு
திறக்கப்பட்டிருக்கும்
நான்
பரலோகம் ஏறுவதை
நீயும் பார்ப்பாய்.

தாவீதின் சங்கீதமும்
பிலாத்துவின் கை கழுவலும்
பேதுருவின் மறுதலிப்பும்
அப்போஸ்தலர்களுக்கான
சுவிசேஷங்களுடன்
சுழன்றபடியே
தீர்க்க தரிசனத்திற்கான
ஏற்பாடுகள்.

—- நெப்போலியன்
சிங்கப்பூர்
kavingarnepolian@yahoo.com.sg

Series Navigation

நெப்போலியன்

நெப்போலியன்