தீபச்செல்வனின் ‘பதுங்கு குழியில் பிறந்த குழந்தை’ புத்தகம் வெளியீடு

This entry is part [part not set] of 46 in the series 20090108_Issue

தமிழ்நதி


தீபச்செல்வனின் பதுங்குகுழியில் பிறந்த குழந்தை கவிதைப்புதத்கம் சென்னையில் நடைபெறுகின்ற புத்தகக்கண்காட்சியில் வரும் 12ம் திகதி மாலை 6மணிக்கு கவிஞர் சுகுமாரன் தலைமையில் வெளியிடப்படுகின்றது. வன்னி கிளிநொச்சியை சேர்ந்த தீபச்செல்வன் போர் பற்றி பல முக்கியமான கவிதைகள் எழுதி வருகிறார். அங்கு கடுமையான போர்ச் சூழல் நிலவியபடியிருக்க அவரது தொகுப்பு சென்னையில் வெளிவருவது ஒரு முக்கியமான விடயமாகும்.

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்

ஒடுக்கப்பட்ட மக்கள் ஒரு போராட்டத்தின் வழியாக தமக்கான விடுதலையைப் பெற்றுக்கொள்வதன் முன் எண்ணுக்கணக்கற்ற இழப்புகளையும் மனச்சிதைவுகளையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. பட்டியலிடாமலே அந்த மானுட அவலங்களை நாம் அறிவோம். சகமனிதர்களின் குறிப்பாக தான் வாழும் சமூகத்தின் இழப்புகளும் வலிகளும் ஒருத்தியை அன்றேல் ஒருவனைப் பாதிக்கவில்லையெனில், அவர்கள் வாழ்வதற்கான அடிப்படைத் தகுதியற்றவர்களாகவே கணிக்கப்படுவர்.

சக மனிதர்களின் வலியைத் தன் வலியாக உள்வாங்கி அதைக் கவிதையாக உருமாற்றி வெளிப்படுத்தும் பேராற்றல் வாய்க்கப்பெற்றவராக தீபச்செல்வனை அடையாளம் காணமுடிகிறது. அதேசமயம் போர் அவர் மீதே செலுத்தும் ஆதிக்கம், அழுத்தங்கள், நேரடியானதும் மறைமுகமானதுமான அச்சுறுத்தல்கள் இவைகளையும் கவிதைகளாக்கியிருக்கிறார். புனைவுகளும் இறந்தகாலத்தின் நினைவுகளும் பெரும்பாலும் கவிதைகளாகக் கருக்கொள்ளும் நிலையிலிருந்து மாறுபட்டு சமகாலத்தை இவரது எழுத்துக்கள் ஏந்திவருகின்றன. தான் வாழும் நிலத்தின் வதைபடலை கையறு நிலையோடு பார்த்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கும் குற்றவுணர்வை இவரது பெரும்பாலான கவிதைகள் பேசுகின்றன.

போருள் வாழ்வதென்பது ஏறக்குறைய மரணத்திற்குச் சமானம். அந்த மரணவாதையை, அதன் குரூரத்தை அதனுள் வாழ்பவர்களால் மட்டுமே முழுமைபடப் பேசமுடியும். ஒரு தோழியின் வழியாக அறிமுகப்படுத்தப்பட்ட தீபச்செல்வனின் வலைப்பூவானது இணையத்தில் கிடைக்கப்பெறும் செய்திகளைக் காட்டிலும் வருத்தந் தருவதாயிருக்கிறது. அதுவே இலக்கியத்தின் சக்தியும் அல்லவா?

அதிகாரங்களுக்கெதிராக எழுப்பப்படும் எந்தவொரு குரலையும் எழுத்தையும் நசுக்குவதும்கூட ஆக்கிரமிப்பாளர்களின் போர் தர்மங்களில் ஒன்றாக இருக்கும் நாட்டில், அழிவின் மையப்புள்ளியாக்கப்பட்டுவிட்ட கிளிநொச்சியில் வாழ்ந்துகொண்டு இவ்வாறு எழுதத் துணிவதென்பது ஒரு கவி மனசுக்கே சாத்தியம். இத்தனை இளம் வயதில் அவர் தனக்கேயான கவிதை வடிவத்தைக் கண்டடைந்திருப்பதும் மற்றுமோர் சிறப்பு. முதல் தொகுப்பு என்பது பெரும்பாலும் கவிதை எழுதிப் பழகும் ஒரு முயற்சியின் வெளிப்பாடே என்ற எனது கருத்தை இவரது கவிதைகளை வாசித்தபிறகு மாற்றிக்கொண்டேன்.

உதிரிகளாக வாசிக்கும்போது ஏற்படாத தாக்கத்தை ஒரு தொகுப்பாக வாசிக்கும்போது கவிதைகள் தந்துவிடுகின்றன. அந்த வகையில் அவருடைய 30 கவிதைகளைத் தொகுத்து ‘பகுங்குகுழியில் பிறந்த குழந்தை’என்ற தலைப்புடன் காலச்சுவடு பதிப்பகம் வெளியிடுகிறது. புத்தகத் திருவிழாவில், கவிஞர் சுகுமாரன் அவர்களது தலைமையில் 12ஆம் திகதியன்று மாலை ஆறு மணிக்கு தீபச்செல்வனின் தொகுப்பு வெளியிடப்படவிருப்பதாக அறிகிறேன். இத்தொகுப்பின் வழியாக தமிழ்க் கவிதைப் பரப்பிற்கு மேலுமொரு கனதியான படைப்பாளி வந்துசேர்கிறார்.

தீபச்செல்வனால் அவரது வலைத்தளத்தில் அண்மையில் இடப்பட்டிருக்கும் ‘கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்’ என்ற கவிதையில் சொல்லப்பட்டிருப்பதைப் போல

“ஜனாதிபதியின் உணவுக் கோப்பையில்
மண் நிறைகிறது”

உண்மைதான். மற்றவர்களது மண் மீதான ஆக்கிரமிப்பாளர்களின் பசி தீராதது. ஆனாலும் மண்ணும் பசி கனலும் வயிறோடிருக்கிறது என்ற உண்மையை வரலாறு உணர்த்தத்தான் போகிறது. தமிழர்களின் மண் விதைகுழி மட்டுமன்று ஆக்கிரமிப்பாளர்களது புதைகுழியும்கூட.

தீபச்செல்வனின் வலைப்பூ முகவரி: http://deebam.blogspot.com/

-தமிழ்நதி

Series Navigation

தமிழ்நதி

தமிழ்நதி