அலர்மேல் மங்கை
ஸ்டேட் ரோடும், லிபர்ட்டி ரோடும் சந்திக்கும் முனையில் இருந்த ம்யூஸியம் அப் ஆர்ட் முன்னே கிடந்த கல் பெஞ்ச்சில் அமர்ந்திருந்தான் கெளதம்.
பல்கலைக் கழக மாணவர்கள் சிலர் சுறுசுறுப்புடனும், சிலர் மந்தமாகவும், சிலர் பிரகாசமாகச் சிரித்தபடியும், சிலர் உலகத்தின் பாரமே தன் தோளில் மட்டுமே என்பது போலவும் போய்க் கொண்டிருந்தனர். ‘இவர்களுக்கெல்லாம் வாழ்க்கை இந்த பல்கலைக்கழகமும், பாடங்களும், ஆண் தோழனும், பெண் தோழியும், விடுமுறை நாட்களில் சந்திக்கும் பெற்றோர்களும், உடன் பிறந்தவர்களும் மட்டுமா, இல்லை அதற்கு மேலும் வேறு தேடல்கள் உண்டா ?, ‘ என்று நினைத்தான். இதில் எத்தனை பேருக்குத் தாய் வேறு ஒருவனுடன் போயிருக்க முடியும் ? எத்தனை பேருக்குத் தந்தை – நண்பனும், ஆசானும் போல் இருந்து வளர்த்த தந்தை இறந்து போயிருக்க முடியும் ? யாருடைய முகத்திலும் துயரத்தின் அறிகுறி தெரியவில்லை. எல்லோரும் மாணவர்களாக அவரவர் கடமையை நோக்கிப் போய்க் கொண்டிருப்பது போலத்தான் தெரிந்தது. ஏதோ ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையை நோக்கி அவர்கள் யாவரும் நகர்ந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது. அவனுக்கு மட்டுமே வாழ்க்கை அர்த்தமில்லாததாகவும், துயரம் நிறைந்ததாகவும் தோன்றியதும், மீண்டும் அன்றே தான் இறந்து விட வேண்டும் என்ற முடிவு உறுதியானது. ஆர்ட் ம்யூஸியத்தின் படிகளில் அமர்ந்து ஒரு ஆப்பிளைக் கடித்துக் கொண்டே ஏதோ புத்தகத்தை திருப்பிக் கொண்டிருந்த பெண் இவனைப் பார்த்து புன்னகைக்க முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
கடந்த ஒரு மாதமாக ஆர்ட் ம்யூஸியத்தில் ஜார்ஜியா ஓ ‘ கீபின் ஓவியங்கள் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப் பட்டிருந்தன.
விக்ரம் கெளதமை போன வாரம்தான் வலுக்கட்டாயமாக அழைத்துப் போனான் ஓவியங்களைப் பார்க்க. கெளதமுக்கு ஓவியங்களில் எல்லாம் அவ்வளவாக ஆர்வமில்லை. விக்ரம் ஒவ்வொரு ஓவியத்துக்கும் முன் பத்து நிமிடங்களாவது நின்றான்.
‘என்ன ஒரு வெரைட்டி அப் தீம்ஸ் பார். வித விதமான பூக்கள். அப்புறம் நியூ மெக்சிக்கோவின் செம்மண் மலைகள். அப்புறம் மிருகங்களின் எலும்புகள்…கலர் காம்பினேஷனைப் பார்த்தாயா ? பூக்களின் நிறங்களையும், செழுமையையும் வரைந்த அதே கைகள் நியூ மெக்சிக்க மலைகளின் வறட்சியையும் வரைந்துள்ளதே! என்ன காரணத்துக்காக இப்படி வரைந்திருப்பார்னு நினைக்கிறே ?, ‘ என்றான். விக்ரம் மருத்துவ மாணவன்.நியூரோ சர்ஜனாகும் லட்சியம் அவனுக்கு. மனித மூளையின் ஆழத்தையும், வீர்யத்தையும் அவனால் வியக்காமல் இருக்கவே முடியாது.
‘ப்ச, ‘ என்றான் கெளதம் அஸ்வாரஸ்யமாக. விக்ரம் அதையெல்லாம் கண்டு கொள்வதாகக்த் தெரியவில்லை. ஒரு ஓவியத்தின் முன்னே தீவிர யோசனையுடன் நின்று கொண்டிருந்த ஒரு வெள்ளைக்கார தாடிக்காரர் ஆர்ட் ப்ரொபசராக இருக்க வேண்டும். அவருடன் விக்ரம் ஒரு அரை மணி நேரம் அந்த ஓவியத்தைப் பற்றி விவாதித்தான். அவரும் பொறுமையாக விளக்கிக் கொண்டிருந்தார். இவர்களுக்கெல்லாம் இதற்கு நேரமும் இருக்கிறதே! மருத்துவ மாணவனுக்கு, ஓவியத்தில் என்ன ஈடுபாடு ? ஆனால் விக்ரம் அப்படித்தான். அவனுடைய பலமும் அதுதான், பலகீனமும் அதுதான். பல விஷயங்களில் ஈடுபாடு கொண்டதால், அவனுடைய மருத்துவப் படிப்பில் அவனால் தீவிர கவனம் செலுத்த முடிகிறதா என்று கெளதம் எப்போதும் வியந்திருக்கிறான். நேரம் காலம் இல்லாமல் படிக்கும் மருத்துவப் படிப்பின் நடுவே அவனுக்கும் இதற்கெல்லாம் எப்படியோ நேரம் இருக்கத்தான் செய்கிறது!
ஒரு தாயும் மகனும், ஆர்ட் ம்யூஸியத்தின் படிகளில் ஏறிக் கொண்டிருந்தார்கள். இப்படித்தான் விக்ரமின் தாயும் அவனை ஆர்ட் ம்யூஸியத்துக்கும், பல்கலைக் கழக வளாகங்களில் நடக்கும் இலவச விரிவுரைகளுக்கும் அவனை அழைத்துச் சென்றதாக விக்ரம் கூறியுள்ளான்.
‘எல்லா இந்திய அம்மாக்களும் தங்கள் பிள்ளைகளை பஜனை க்ளாஸிலும், ஸ்லோகக் க்ளாஸிலும் சேர்த்து விட்ட கால கட்டத்துல, என்னோட அம்மா என்னை ஆர்ட் ம்யூஸியத்துக்கும், ப்ளேனட்டொரியத்துக்கும், நோபல் ப்ரைஸ் வாங்கின விஞ்ஞானி பல்கலைக் கழகத்துக்கு வந்த போது அவருடைய லெக்சருக்கும் கூட்டி போனா. இன்னிக்கு நான் பலதரப் பட்ட விஷயங்களிலில் ஆர்வம் உள்ளவனா இருக்கிறேன்னா அதுக்கு அம்மாதான் காரணம் ‘ என்றான் பெருமிதமாக. அப்போது அவனைப் பார்க்கப் பொறாமையாக இருந்தது கெளதமுக்கு. இப்போது ஆர்ட் ம்யூசியத்தின் படிகளில் ஏறிக் கொண்டிருக்கும் அந்தத் தாயையும், மகனையும் உற்று நோக்கினான். இவனும் ஒரு நாள் விக்ரம் போல இதே பல்கலைக் கழகத்தில் படிக்க வரலாம். அப்போதும் அவனுடைய படிப்புக்கு நடுவே கிடைக்கும் சில நிமிடங்களில், ஆர்ட் ம்யூஸியத்துக்கு ஓடி வரலாம். ஏன் சிலருக்கு மட்டும் இது போன்ற அற்புதமான தாய் அமைந்து விடுகிறார்கள் ? கடவுள் என்ற ஒருவர் இருந்தால், இவர்கள் எல்லாம் அவரால் அனுப்பப் பட்ட தேவதைகளாக இருந்திருப்பார்கள்.
‘எனக்கு மட்டும் அப்படி ஒரு தாய் அமைந்திருந்தால் நானும் விக்ரமப் போலத்தான் இருந்திருப்பேன், ‘ என்று கெளதமின் எண்ணம் ஓடியது. அப்படி ஒரு தாய் அமையாத கொடுமைதான் இன்று இப்படி உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளியுள்ளது என்ற நினைப்பும் ஓடியது.
இரு மாதங்களுக்கு முன், அப்பா திடாரென்று மாரடைப்பில் இறந்து போனது முதலாகத் தாயின் மீது அவனுடைய வெறுப்பு கூடிக் கொண்டுதான் இருக்கிறது. விக்ரம் கூறியது போல எல்லா இந்திய அம்மாக்களும் போலக் கெளதமின் அம்மாவும் அவனுக்கு எட்டு வயதாகும் வரை அவனை ஒரு இந்தியப் பையனாக, அதுவும் ச்லோகங்களும், சாஸ்திரங்களும் தெரிந்த ஒருவனாக வளர்க்கப் பிரயத்தனம் செய்யத்தான் செய்தாள். அவள் செய்த பூஜைகளுக்கும், செய்த ஹோமங்களுக்கும் குறைவில்லை. ஆனால் அதனாலெல்லாம் என்ன பலன் என்று அவனுக்கு அன்றும் புரிந்ததில்லை, இன்றும் புரியவில்லை. அர்த்தம் தெரியாத மந்திரங்களையும், ஸ்லோகங்களையும் முழங்கி விட்டுப் பின், எட்டு வயது மகனையும், அன்பான கணவனையும் விட்டு ஒரு வெள்ளைக்கார மருத்துவனுக்குப் பின் சென்ற அந்த ஒழுக்கமின்மையை என்னவென்று சொல்வது ? அப்பா ஒரு சாதாதாரணப் பொறியாளராக இருந்தது அம்மாவுக்கு எப்போதுமே உறுத்தலாக இருந்துள்ளது என்பது அவனுக்கு விபரம் தெரிந்த போது புரிய வந்தது. அம்மா மாபெரும் அழகி. அவளுடைய அழகில் மயங்கிய மிகப் பெரிய இருதய அறுவை சிகிச்சை நிபுணருடன் அம்மா தொடர்பு கொண்ட போது, அவள் பாடிய ஸ்லோகங்களும், மந்திரங்களும் அவளுக்கு எந்த விதத்திலும் ஒழுக்கத்தையும், அடிப்படை மனித நல்லியல்புகளையும் கற்றுத் தரவில்லையென்றே அவனுக்கு இன்றும் தோன்றுகிறது. அதற்குப் பின்னும் அவள் தன் ஜெப தபங்களையும், மந்திரங்களையும் முழங்கிக் கொண்டுதான் இருக்கிறாள். வேடிக்கை என்னவென்றால் அந்த வெள்ளைக்கார மருத்துவனுக்கும் பட்டு வேஷ்டி கட்டி விட்டு, அவனுடன் பெற்ற மகனுக்கு பூணூல் கல்யாணமும் செய்து
வைக்கிறாள்.
அம்மா, அப்பாவிடம் இருந்து விவாகரத்து வாங்கிக் கொண்டு விலகிப் போன நாள் முதலாகவே அப்பாவும் இந்த வெற்றுச் சம்பிரதாயங்களில் நம்பிக்கை அற்றுப் போனவராகத்தான் இருந்தார். அவருடைய தாய், அவரைச் சந்தியாவந்தனம் செய்யச் சொல்லி வற்புறுத்திய போது,
‘இது பண்றதால மட்டும் நான் ஒரு முழு மனுஷனாவோ, நல்ல மனுஷனாவோ ஆகிட மாட்டேன். உன் மாட்டுப்பொண் பண்ணாத பூஜையும் இல்லை, செய்யாத ஹோமமும் இல்லை. ஆனால் உறவுகளுக்கு முக்கியம் தராமல் பணத்துக்காக, புருஷனையும், புள்ளையையும் விட்டுட்டு ஒரு வெள்ளைக்கார டாக்டர் கூட ஓடிப் போனாளே ? அதுனாள் வரை நீ பண்ண பூஜையும், நான் சொன்ன மந்திரமும் எந்த விதத்தில் எனக்கு உதவியது ? ‘, என்ற போது பாட்டியால் ஒன்றும் கூற இயலவில்லை. அதன் பின் அம்மா மீதுள்ள கசப்பு அவருக்குப் போன பின்பும் கூட, அவருக்குக் கடவுள் மீதோ, பூஜைகள் மீதோ மீண்டும் எந்த நம்பிக்கையும் ஏற்பட்டு விடவில்லை.
ஏழு வயதில் அம்மா பண்ணிய செயலின் தீவிரம் அவனுக்குப் பனிரெண்டு வயதில்தான் புரிந்தது. வார இறுதி விடுமுறைகளை, அவளுடன் கழிக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவு. அம்மா இன்னமும் தன் பூஜை, புனஸ்காரங்களை நிறுத்திய பாடில்லை. தன்னுடைய ஆசாரத்தை, சைவ உணவை உண்ணுவதால் மட்டுமே நிலை நிறுத்திக் கொண்டிருந்தாள். டாக்டருக்குக் கோழியும், மாடும், பன்றியும் சமைக்க ஒரு தென் அமெரிக்கப் பெண் இருந்தாள். ஆறாயிரம் சதுர அடிகள் கொண்ட வீட்டில் வசிப்பதில் அவள் ஜென்மம் சாபல்யமாகி விட்டதாகத்தான் தெரிந்தது. வீட்டில் இருந்த டென்னிஸ் கோர்ட்டில் விளையாடி, நீச்சல் குளத்தில் நீந்தி, உடலையும் சிக்கென வைத்துக் கொண்டு, டாக்டருக்கு, தான் இன்னும் இளமையாகவே இருப்பதாகவும் காட்டிக் கொண்டாள்.
எல்லாத் தவறுகளும் செய்து கொண்டு அவள் வாழ்க்கை சந்தோஷமாகத்தானே கழிகிறது ? கெளதமுக்குத் தொண்டை கசந்தது. அப்பா என்ன பாவம் செய்தார் ? தன் கடமைகளை எப்போதும் தவறாமல் செய்து கொண்டு, மனித நேயம் பேணிய அவரை வாழ்க்கை ஏன் இவ்வளவு அலைக் கழித்தது ? இதில் எந்த விதத்தில் நியாயம் இருக்கிறது ? அம்மா சொகுசான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்க, அப்பா தனியாக, இந்த அமெரிக்க மண்ணில் அவனை வளர்க்க எத்தனை சிரமப்பட்டார் ? அவன் மனமெல்லாம் பரவியிருந்த கசப்பைக் கண்டு அவரே எத்தனையோ முறை திகைத்திருக்கிறார். அவருக்கு ஒன்றிரண்டு வருடங்களில் அம்மா மீது இருந்த வருத்தமெல்லாம் மாறி விட்டது.
‘We were not meant to be together, ‘ என்பார் ஒரு நாள்.
‘ நானே அவள் பண்ணியதை ஏத்துக்கிட்டாச்சு. அவளை மன்னிச்சுட்டேனான்னு நீ கேக்கறே ? யோசிக்க யோசிக்க, அவள் பண்ணியது ஒண்ணும் பெரிய பாவமில்லன்னுதான் தோணுது. அம்மா அப்பா சொல்றாங்கன்னு என்னக் கல்யாணம் பண்ணிக்கிட்டா. இப்பத்தான் தெரியுது, அவ என் கூட இருந்த எட்டு வருஷமும் அவ்வளவு சந்தோஷமா இல்லன்னு. எந்த மனுஷனுக்கும் வாழ்க்கையில முக்கிய குறிக்கோள் சந்தோஷம்தான ? ஸோ, சந்தோஷத்தத் தேடி அவ போனதுல நான் தப்பு சொல்ல மாட்டேன். என்னோட நடந்த அவ கல்யாணமும், நீ பிறந்ததும் அவ வாழ்க்கையில அவ சந்தோஷத்துக்கு இடையில வந்த குறுக்கீடுகள்னுதான் நாம எடுத்துக்கணும். நீ ஒரு தாயில்லாமல் வளர்வது உன்னுடைய துரதிர்ஷ்டம்தான். ஆனா, ஒண்ணு ஞாபகம் வச்சுக்கோ. உன்னிடம் இருந்து ஒன்று பறிக்கப் பட்டதுன்னா, வேறு ஒன்று உனக்குக் கிடைக்கும். அம்மா செஞ்சது பெரிய தப்புன்னு நினைச்சியானால், அவளை மன்னிச்சுடு. உன்னுடைய வெறுப்பே உன்னுடைய கைவிலங்கா மாறிடுமோன்னு பயமா இருக்கு, ‘ என்பார் இன்னொரு நாள்.
அவருக்கு அடுத்தபடியாக அவனால் விக்ரமுடன் மட்டுமே அப்படியெல்லாம் பேச முடிகிறது. விக்ரம் உடன் அவன் கழிக்கும் நேரமெல்லாம் அவன் மிக சந்தோஷமாக உணர்கிறான். விக்ரம் மிகவும் சந்தோஷமானவன். எதையும் சுலபமாக எடுக்கத் தெரிகிறது அவனுக்கு. மறுனாள் ‘அனாட்டமி ‘யில் பரீட்சை வைத்துக் கொண்டு, இன்று அவனால் சியெர்ரா க்ளப் மீட்டிங்கில் கலந்து கொண்டு சுற்றுப் புறச் சூழலைப் பற்றிப் பேச முடிகிறது. மருத்துவக் கல்லூரியில் உடன் படிக்கும் மாணவியை டின்னருக்கு அழைத்து அவள் வர மறுத்ததை, அவன் அம்மாவிடம் சொல்லி, அவள் கேட்கும் ஆயிரம் கேள்விகளுக்கும் சிரித்துக் கொண்டே பதில் சொல்ல முடிகிறது. வீட்டுக்குத் திடாரென்று எட்டு இந்திய மாணவர்களை அழைத்துச் சென்று, அவன் அம்மாவின் சமையலறையில் நின்று அவன் அம்மாவுக்கு எடுபிடியாக எட்டு பேருக்கும் சமைக்க முடிகிறது. தந்தூரிச் சிக்கனையும், ரசத்தையும் ருசிக்கும் அளவு, மங்கோலியன் பார்பெக்யூ உணவையும் ரசிக்க முடிகிறது. மதங்கள் எதிலும் நம்பிக்கை இல்லை என்று சொல்லிக் கொண்டே, தலாய் லாமாவின் புத்தகங்களை வாசிக்க முடிகிறது. நேரம் கிடைக்கும் போதெல்லாம், சூப் கிச்சனுக்குச் சென்று எழைகளுக்குப் பரிமாறி, பாத்திரம் கழுவ முடிகிறது. இதையெல்லாம் அவன் எங்கிருந்து கற்றான் என்ற ஆச்சர்யம் கெளதமுக்கு எப்போதும். அவனுடன் சந்தோஷமாக எதைப் பேசினாலும், கடைசியில், அது அம்மாவைப் பற்றி பேசுவதில்தான் முடிகிறது.
‘நீயேன் இன்னும் அம்மா பண்ணியதை உன் தோளில் சுமந்துட்டுத் திரியறே ? பர்கெட் இட், கெளதம். இவ்வளவு பெரிய யுனிவர்ஸில, நீயும், நானும் உன் அம்மாவும், அப்பாவும் ஒரு துளி கூட இல்லை. சுயனலவாதி பிழைக்கிறான், உன் அம்மாவைப் போல. சந்தோஷமாகவும் இருக்கிறான், அல்லது இருப்பது போன்றதான பிரமையில் வாழ்கிறான். இதிலெல்லாம் நீ ஒரு ஜஸ்டிசைத் தேடினியானால், உனக்குத்தான் ஏமாற்றம். இந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லையென்று நினைக்காதே. உன் வாழ்க்கையின் அர்த்தத்தை நீதான் தேட வேண்டும். உன் அம்மாவுக்கு அர்த்தம் பணத்தில் இருந்தது. அந்த பணத்தால் கிடைக்கிற வசதிகளில் இருக்கிறது. உன்னுடைய அப்பாவுக்கு அர்த்தம் உன்னை வளர்ப்பதிலும், மனித நேயத்திலும் இருக்கிறது. அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ முடியாமல் போனது உன்னுடைய துரதிர்ஷ்டம் மட்டுமே. அவர்கள் இருவரும் சேர்ந்து இருந்திருந்தாலும் சந்தோஷமாக இருந்திருப்பார்களா என்ன ? அவர்கள் இருவருக்கும் வேறு வேறு தேடல்கள் அல்லவா ? உன்னுடைய அர்த்தம் எதில் இருக்கிறது என்று நீ தேடு, ‘ என்றான் விக்ரம்.
ஆனால் இன்று அவனுடைய தேடல்களுக்கு எல்லாம் முடிவுதான் என்று நினைத்துக் கொண்டான். அப்பா இருக்கும் வரை அவனுடைய வாழ்க்கைக்கு அர்த்தம் இருந்தது போலவும் அவர் இறந்த பின்னே அவன் இருப்பிற்கே அர்த்தம் இல்லாதது போலவும் தோன்றியது. விக்ரம்தான் அவன் முழுதும் உடைந்து போகாமல் இன்று வரை தாங்கிக் கொண்டிருக்கிறான். ஆனாலும் வெறுமை அவனைச் சூழ்ந்து இருப்பது போன்ற துயரம்! மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ சேர்ந்த போது இருந்த சந்தோஷம் எல்லாம் அப்பாவின் மரணத்துடன் மறைந்து விட்டது. படிப்பதிலும் ஆர்வம் குறைந்து விட்டது. எந்த நேரத்திலும், ப்ரொபஸர்கள் கூப்பிட்டு அவனை எச்சரிக்கலாம். எதிர்காலமே ஒரு சூன்யமாகத் தெரிந்தது.
அப்பா இறந்த புதிதில் இரு வாரங்கள் விக்ரம் வீட்டில்தான் தங்கி இருந்தான். அப்போது ஒரு நாள், அவன் துக்கத்தில் கண்ணீர் வடித்த போது விக்ரமின் தாய் அவனை அணைத்துக் கொண்டாள். அது அவனுக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது.
‘உன்னை அழாதேன்னு சொல்ல முடியாது. நல்லா அழு. அழுது உன் துக்கத்தையெல்லாம் கரைச்சுடு. ‘ என்றாள். அவனுடைய தாய் அவனை அணைத்த ஞாபகமே இல்லை அவனுக்கு. அன்றும் அவனுக்கு இதே கேள்விகள் இருந்தன. பணத்துக்காக, கட்டிய புருஷனையும், பெற்ற பிள்ளையையும் விட்டுப் போன அம்மா சகல செளபாக்கியங்களுடன் சந்தோஷமாக ஐரோப்பா டூர் போன நேரம், அப்பா தனியாக வீட்டில், இரவில் மாரடைப்பில் சாவானேன் ? அன்றும் இப்படித்தான் அம்மா மீது கோப வெறியில் குமுறினான்.
‘அதுக்கு என்ன பண்றது, கெளதம் ? அவரவர்க்கு விதிச்சதுன்னு இருக்குல்லியா ? உன் அம்மாவுக்கு விதிச்சது அவளுக்கு. அப்பாவுக்கு இப்படி விதிச்சுருக்கு. அதது அதன் போக்கிலேதான் போகுது. இதுதான் முரண்பாடே. நீ அம்மா தப்பானவள்னு நினைக்கிறே. Right and wrong is very relative தான் இல்லியா ? உனக்கு ரைட்டாத் தோண்றது எனக்குத் தப்பாத் தெரியலாம். உன் அம்மா கெட்டவள் அப்படின்னு நீ நினைக்கிறே ? எதனால் ? அவள் உன்னையும், உன் அப்பாவையும் விட்டுப் போனதாலா ? அவளைப் பொறுத்த வரை அவளுக்குப் பணம் முக்கியமா இருந்திருக்கு. அவள் மனசு அவளுக்குக் காட்டிய பாதையில்தான் அவ போயிருக்கா ? அவள் எடுத்த அந்த முடிவு உன்னையும், உன் அப்பாவையும் பாதிச்சிருக்கு. ஆனா, உன் அப்பா அவளை மன்னிச்ச மாதிரி நீயும் மன்னிச்சுப் பாரேன், உன்னுடைய வருத்தங்களும் , சோகங்களும் மறைஞ்சிடும். இன்னொண்ணும் தமிழில் இருக்கு, ‘தீதும், நன்றும் பிறர் தர வாரா ‘, அப்படின்னு, ‘ என்றவள், ‘அப்படின்னா என்ன தெரியுமா ? நல்லதும், கெட்டதும் மற்றவங்களால நமக்கு வர்றது இல்லை, ‘ என்றதும்,
‘பின்ன என்னையும், அப்பாவையும் இப்படி விட்டுட்டு அவன் கூடப் போனது சரின்னா சொல்றீங்க ? ‘ என்றான் கோபத்துடன்.
‘அவளப் பொறுத்த வரை சரி. உன்னப் பொறுத்த வரை தப்பு. ஆனால் உன்னுடைய கஷ்டமெல்லாம் அவளாலதான்னு நீ சொல்றதுதான் தப்பு. நல்லா யோசிச்சுப் பார். புரியும், ‘ கூறி விட்டுக் கீழே சென்று விட்டாள்.
விக்ரம் அவனைக் கலக்கத்துடன் பார்த்தான். ‘அம்மா இப்படித்தான். பட்டுன்னு உண்மைன்னு அவள் நினைக்கிறதைச் சொல்லிடுவாள். ஆனால் அவள் சொன்னதால அதுதான் உண்மைன்னும் நீ எடுத்துக்க வேண்டாம். அவளைப் பொறுத்தவரை அது சரின்னு அவ நினைக்கிறா. நீயே யோசி. உன் அப்பா இறந்த துக்கத்தில், நீ உன் அம்மாவிடம் வருத்தப் படுவதில் என்ன அர்த்தம் என்று யோசி. உன் அம்மா விட்டுப் போய் பதினெட்டு வருடங்கள் கழித்துதான் அப்பா இறந்திருக்கார். அவர் ஹார்ட் அட்டாக்கில் இறந்ததற்கு அவள் இத்தனை வருடங்கள் கழித்து எப்படிப் பொறுப்பாக முடியும் ? உன்னுடைய அம்மா அவள் குடும்பத்தில், பணக்கார வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பதுதான் உன்னுடைய கோபத்துக்குக் காரணம். அவளை அவள் கணவன் விட்டுப் பிரிந்தாலோ, வேறு எந்த வகையிலோ அவள் சிரமப்படுகிறாள் என்றாலோ, நீ உன் அம்மாவை மன்னித்திருப்பாயோ ? ‘ என்றான்.
விக்ரம் கூறியதில் இருந்த உண்மை அவனைத் தாக்கினாலும், அந்த உண்மையை அவன் மனம் நிராகரித்து விட்டது.
இன்று இந்த ஆர்ட் ம்யூஸியத்தின் முன்னால் அமர்ந்து, தற்கொலைக்கு உரிய நாளாகத் தேர்ந்தெடுத்த இந்த நாள் முதல் அம்மாவின் மேல் கோபம் கூடத்தான் செய்கிறதே தவிர குறையவில்லை. தான் தற்கொலை செய்து கொண்ட செய்தி கிடைத்ததும் அம்மா என்ன செய்வாள் என்ற எண்ணம் ஓடியது. அவளால் முகம் சுழித்துப் பெருங்குரலெடுத்து அழக் கூட முடியாது. வெள்ளைக்காரக் கணவன் முன்னே எப்போதும் அழகு முகத்தை மட்டுமே காட்ட வேண்டும் என்று நினைப்பவள் அல்லவா என்று தோன்றியது. விக்ரமுக்குத் தெரிய வரும் போது அவன் என்ன செய்வான் என்று நினைத்தான். விக்ரம் வருத்தமாக இருந்தே பார்த்ததில்லை அவன். இவனுடைய மரணத்தையும் அவன் ரெம்பச் சாதரணமாகத்தான் எடுத்துக் கொள்வானோ என்று தோன்றியது, கெளதமுக்கு. இல்லை, இவ்வளவு பரந்து, விரிந்திருக்கும் யுனிவர்ஸில் கலந்து விட்ட துளி என்று கூட அவன் நினத்துக் கொள்வான் என்று நினைத்த போது, கெளதமுக்குச் சிரிப்பு வந்தது. தற்கொலை எண்ணம் மனத்தைக் கான்சராக அரித்துக் கொண்டிருக்கும் நாள் முதலாக அந்த எண்ணத்தைப் பற்றி விக்ரமிடம் சொல்லவில்லை, அவன். விக்ரமிற்குத் தெரிந்திருந்தால் வற்புறுத்திக் கவுன்சிலிங்கிற்கு அழைத்துச் சென்றிருப்பான், உயிர் வாழ மில்லியன் காரணங்களைத் தொகுத்து வழங்கியிருப்பான், ‘வாழ்க்கையில் மாற்றங்கள் மட்டுமே நிரந்தரம் ‘ என்று தலாய் லாமா புத்தகத்தில் படித்திருப்பதைச் சொல்லியிருப்பான். விக்ரம் நினைவில் சிறிது நேரம் அமர்ந்திருந்தான்.
இரண்டு மணி நேரம் அந்தப் பெஞ்சிலேயே அமர்ந்திருக்கும் உணர்வு வர, பார்வையை ஓட விட்டான். பல்கலைக் கழக வகுப்பு நேரம் துவங்கி விட்டிருக்கும். தெருக்களில் மாணவர்கள் நடமாட்டம் குறைந்திருந்தது. இனி பகல் உணவு நேரம் மீண்டும் தெருக்களில் கூட்டம் கூடும். அந்த இடத்தைத்தான் அவன் தற்கொலைக்குத் தேர்ந்தெடுத்திருந்தான். ஸ்டேட் ரோடும், லிபர்ட்டி ரோடும் சந்திக்கும் இடத்தில் எலெக்ட்ரிக் சிக்னல் இல்லை. வெறும் ஸ்டாப் சைன் மட்டுமே உள்ளது. போக்குவரத்து குறைந்த நேரங்களில், ஹார்மோன்களின் உந்துதலில் அதிவேகமாக கார் ஓட்டி வரும் அமெரிக்க மாணவர்கள் அங்கு வேகத்தைக் குறைக்காமலேயே போய் போலீஸில் மாட்டியதை கெளதம் அடிக்கடி கவனித்திருக்கிறான். அது போன்ற ஒரு கார் வேகமாக வரும் தருணத்துக்காகக் காக்கத் துவங்கினான். ஆர்ட் ம்யூஸியத்துக்குள்ளும் வெளியேவும் வரும் கூட்டம் குறைந்திருந்தது. உள்ளே போயிருந்த அந்தத் தாயும், மகனும் வெளியே வந்து கொண்டிருந்தனர். அந்தச் சிறுவன் முகத்தில் சந்தோஷம் துள்ளிக் கொண்டிருந்தது. ரோடுகள் சந்திக்கும் முனையில் ‘ஹாட் டாக் ‘ ஸ்டாண்டைப் பார்த்ததும் ஏதோ தாயிடம் கேட்பது தெரிந்தது. அந்தக் குட்டிப் பையனின் வாழ்க்கை இது போன்ற தாயால் சந்தோஷமாக இருக்கும் என்ற நினைப்பு மின்னல் போல கெளதமுக்கு ஓடியது. இப்போது அவனுக்கு ஆர்ட் காலரியில் பார்த்த எதுவும் பாதித்திரா விட்டாலும், வளர்ந்தவனானதும் இவன் ஒரு பண்பட்டவனாக இருப்பான் என்றும் நினைத்துக் கொண்டான். கலையையும், வாழ்க்கையையும் ரசிக்கத் தெரிந்த மனிதனாக வளரும் அதிர்ஷ்டசாலியாக இருப்பான்.
பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த விபரீதம் நடந்தது. ஹாட் டாக் ஸ்டாண்ட் அருகே போன போது, அந்தச் சிறுவன் திடாரென்று ஒரே ஓட்டமாகச் சாலையை கடக்க, அதிர்ச்சியில் உறைந்த அவனது தாய், பின்னாலேயே ஓடும் போது, ஸ்டாப் சைனில், நிற்காமலேயே போன கார் அவளைத் தூக்கி எறிந்தது.
அதன் பிறகு நீண்ட நாட்களுக்குக் கெளதமுக்குக் கவுன்ஸலிங் வேண்டியிருந்தது.
****
பதிவுகள் சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை
mangaialarmel@yahoo.com
- தீக்களம்
- திணித்தல்
- இயக்கம்…
- கேட்பதெல்லாம் தந்திடுவேன்..
- திருப்பதி வரிசை
- அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தருக்கு பாராட்டு விழா..
- கடிதம்
- ரஜினி – ஷங்கர் ‘சிவாஜி ‘ தேறுமா… ?
- வறுத்த வறுகடலை – 1
- மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்தடா! (மதிவண்ணன் கவிதைகளைப் பற்றி ஒரு கடிந்துரை)
- வாழ்க்கைக் கவிஞன் வல்லிக்கண்ணன்
- கண்களைச் செப்பனிட தட்ப ஒளிக்கதிர் லேஸர்அறுவை முறைகள் -5 (Eye Surgery with Cool Laser Beams Part 2)
- நவீனங்களின் சாம்பல்
- பூனைகள்
- தீதும் நன்றும்
- கீதாஞ்சலி (37) என்னுள் விடப்பட்ட ஒன்று ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- பெரியபுராணம் – 53
- மக்கள் மேம்பாடு !
- தோழியின் வீடு
- அன்புள்ள ஆண்டவருக்கு
- ஆயினும் – இரண்டு கவிதைகள்
- முதலாளித்துவச் சூழலியல் – முதலாளித்துவச் சூழலியற் சிக்கல் – இறால் பண்ணைகள்; (Prawn Farms)
- நடை – சுருளிப்பேட்டையில் சுருண்டோம் – பாகம் 2
- ஒரு விசாரணையின் நூற்றாண்டு
- தேவை : நீதி வழுவா நெறிமுறை
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-5)
- என்னுரை
- ஆண்மகன்