திறந்திடு சீஸேம்!

This entry is part [part not set] of 43 in the series 20051028_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


—-

‘ஷ ‘வின் கவிதைத் தொகுதிகள்

01/ கூறாதது கூறல்/கவிதைப் பம்பரம் 02/ ஞானக் கோமாளி/கவிதாப் பிரசங்கம் 03/ ஊர்வலத்தில் கடைசி மனிதன்/கவிதாஸ்திரம் 04/ திறந்திடு சீஸேம்!/கவிதாவதாரம்

—-

பயந்து பயந்து, வரவை நியாயப் படுத்தும், உயிரைப் பிரத்யட்சப் படுத்தும் உத்வேக அக்கறை சார்ந்து, அது கவிதைப் பம்பரம் ஆனது. சற்று குரல்மாறும் வாலிபம் கவிதையில் தொட்டுவிட்ட இதயவியூகத்தில் பிரசங்கமும் செய்தேன். (02)

ஒவ்வொரு நுீலும் ?ா, என களைப்பு மேலிடுகையில் நிறுத்திக் கொண்டாகிறது. இரையெடுத்த மலைப்பாம்பின் திகைப்பு அது. உள்ளம் – அது உறங்காக் கடல். கண்மூடி, கதவு சார்த்தி மூச்சு வாங்கி சிறு ஆசுவாசம். நெஞ்சைப் பொத்திக் கொள்கிறேன். ஐயோ இப்போது இதற்குமேல் ஜீரணசக்தி இல்லை என்ற திகட்டல். பூகோளம் நமக்கு வாயதிகக் கவளம். நான் சராசரியன். கிருஷ்ண பரமாத்மா அல்லவே!

கவிதை எனக்கு வாழிபாடு. மொழிப்பாடு. நான் செளந்தர்ய உபாசகன். ஆயினும் எனது வியூகவட்டம், ஊடகம் – புனைகதைகள். உறவினரைச் சந்திக்க ஊர் திரும்பி விடுகிறேன்.

திடுதிப்பென்று நடைப்பயணத்தின் சிறு மழைபோல எதிர்பாராத் துீறல்கள். கிச்சுகிச்சுப் பரவசங்கள். கலைஞனின் படைப்பு உற்பத்தித் திவலைத் தெறிப்புகள். அதை தட்டியும் நீட்டியும் நகையாக்கி விடுதல் வாடிக்கை. எனினும் உளப்பாங்கில் வாண வேடிக்கை, ஒளிக் குளியல், வண்ணக் குதுீகலம் நிகழ்வதான கணங்கள் கைநழுவி விடும் பதற்றம். பதிவு செய்க எனப் பறக்கும், பரபரக்கும் மனம். வார்த்தை எறும்புகள் சுறுசுறுப்பாக ஊர் உலாக் கிளம்புதல். மனசுக்குள் இயற்கை மெளன நாதசுரம் வாசித்தாகிறது.

கதைகள் – எழுதப் படுகின்றன. கவிதைகள் தம்மை எழுதிக் கொள்கின்றன. தக்கணத்து வெப்பக்குளுமை, ஆவேசஅமைதி நிசப்தசப்தங்கள் ஆகவே அவற்றுக்கு வாய்த்து விடுகிறது. வார்த்தைச் செதுக்கல்கள் – postproduction – இல்லாமல் கவிதைகள் கிடையா. அதையும் மீறி தட்பவெப்பம் தங்கினால் – latent heat என்கிறார்கள் பெளதிகமாய் – தங்கினால், அந்தக் கவிதைக்கு ஆயுசு கெட்டி. அவை இயற்கை உனக்கு அளித்த முத்தங்கள். பேறுபெற்றவன் நீ. பேர் பெற்று வாழ்க!

கவிஞனாக வரவை ஸ்திரப் படுத்த, ஊர்வலத்தில் கடைசி மனிதன் – புதிதாய்ப் பிறந்த குழந்தை, என தொகுதி எண் 03. இது, இப்போது நாலாவது – கவிதாவதாரம். சூரியனுக்கு விரிந்த, தாமரை மலர்கள் ஆறு. அதில் தவழ்ந்தன குழந்தைகள் ஆறு… சீர்காழியார் கணீர்க் குரல் காதில். வர்ணம் சிதறிய வைகறை வானம்… கிரண ஒழுங்கு கொண்டு முதிர்ச்சி – ஞானம் – நரை- தத்துவார்த்த அமைதி – அடக்கம்… எனக்கு வாய்க்குமா ? எப்போது ?

என் முத்தத்தை இயற்கை ஏற்றுக் கொள்ளுதல் சாத்தியமா ?

தேய்பிறை வளர்பிறை – கலைஞனுக்கும் உண்டு.

நடைப்பயண, வண்டிமாட்டுப் பயண காலம். நீள் கவிதைகளின் பொற்காலம் அல்லவா அது. இது ? இது ஓடும் பஸ்சில் தொற்றிக் கொள்ளும் காலம்.

நான் அலிபாபா. இதோ குகை. உள்ளேயிருந்து அள்ளி வந்த பொக்கிஷங்கள் இவையிவை. எச்சரிக்கை. கண் கூசும்.. தயாராகுங்கள். ஆகி விட்டார்களா ?

தி ற ந் தி டு சீ ஸே ம்!

முன்னுரை – திறந்திடு சீஸேம்! – கவிதாவதாரம் – ஷ/வின் நான்காம் கவிதைத் தொகுதி

storysankar@gmail.com

mobile 94444 18699 india

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்