திருச்சியில் பன்னாட்டுக் கருத்தரங்கு (டிசம்பர் 2007)

This entry is part [part not set] of 41 in the series 20080320_Issue

கவிஞர் வைகைச் செல்வி


2007 டிசம்பர் முதல் தேதியில் பன்னாட்டுக் கருத்தரங்கினை தூயவளனார் தன்னாட்சிக் கல்லூரியின் தமிழாய்வுத் துறை, தமிழ்த்திணை மற்றும் தமிழ் எழுத்தாளாகள் ஆகிய இணையத் தளங்களுடன் இணைந்து நடத்தியது.

தூயவளனார் தன்னாட்சிக் கல்லூரி மாணவர்களின் கரகாட்டத்துடன் காலையில் இப்பன்னாட்டுக் கருத்தரங்கம் ஆரம்பித்தது. கருத்தரங்கினை ஒட்டி, தமிழ்நாட்டைச் சேந்த தி.மா. சரவணன், விரிவான முறையில் ஒரு அயலகத் தமிழ்ச்சிற்றிதழ்க் கண்காட்சியை அமைத்திருந்தார். கருத்தரங்கில் அயலகத் தமிழர் வாழ்வு, அயலகத் தமிழர் படைப்பிலக்கியம், அயலகத் தமிழர் இதழியல் மற்றும் அயலகப் பன்முகத் தமிழ் என்று நான்கு அமர்வுகள் இருந்தன.

துவக்க விழாவில் பேசிய கல்லூரிச் செயலாளர் முனைவர் அருட்திரு ஜோசப் சே.சே. அயல் நாட்டில் வாழும் தமிழர்கள் ஆங்கிலத்தின் வழியாகத்தான் தமிழைக் கற்றுக்கொள்ளும் நிலை இருக்கிறது என்று வருத்தப்பட்டார். இலங்கை கொழுந்து சிற்றிதழ் ஆசிரியர் அந்தனி ஜீவா இலங்கைத் தமிழ்ப்பெண் எழுத்தாளர்களின் சவால்களும் சாதனைகளும் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

கவிஞர் வைகைச் செல்வி கனடா வாழ் கவிஞரும் எழுத்தாளருமான சி. ஜெயபாரதனின் படைப்புலகம் பற்றிப் பேசினார். அப்போது அவர் கூறியது: திண்ணை வலையைத் திறந்தால் அதில் ஜெயபாரதன் இல்லாமல் இருக்க மாட்டார். கவிதை, சிறுகதை, நாடகம், மொழிபெயர்ப்பு, கட்டுரைகள் என்று பன்முகம் கொண்டவர். மதுரையில் பிறந்தவர். சமீபத்தில் வெளியான இவரது அணுசக்தி என்ற நூல் தகவல்களுடன் படப் பெருக்கியின் துணைகொண்டு இக்கட்டுரையினை வழங்கினர்.

எழுத்தாளர் காஞ்சனா தாமோதரனின் வாழ்வும், இதழியல் பணியும் பற்றி தமிழ்த்திணை.காம் இணைய ஆய்விதழ் நிறுவன முனைவர் டி. நெடுஞ்செழியனும், ராஜேசுவரி பாலசுப்பிரமணியத்தின் கதைகளில் திருமணம் குறித்த கண்ணோட்டம் பற்றி ஜே. செந்தாமரையும் கட்டுரை வாசித்தனர். தில்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உமா சித்திராதேவியின் மின்னஞ்சல் தமிழ் பற்றிய கட்டுரை சுவையானதாக இருந்தது. வட இந்திய மாநிலம் மற்றும் ஒன்றியப் பகுதிகளுக்கும் புலம் பெயர்ந்த தமிழர்களின் படைப்பிலக்கியம் பற்றி ஆராய்வதும் இக்கருத்தரங்கின் ஒரு நோக்கமாக இருந்தமையால் அம்பையின் படைப்பிலக்கியம் பற்றி முனைவர் ஜே. பாத்திமா சூசை மணியும், லெ. சுந்தரமும் கட்டுரை வழங்கினர்.

சிங்கப்பூர் தமிழ் நாடகங்களின் தோற்றமும், வளர்ச்சியும் பற்றி சிங்கப்பூர் அப்துல் நசீர், மைசூரிலுள்ள செம்மொழித் தமிழ் உயர் ஆய்வு மையத்தின் ஆய்வுத் தலைவர் மருதநாயகத்தின் தனி நாயகம் அடிகளாரது திருக்குறள் திறனாய்வுப் பணி சாந்தா ஜெயராஜின் புலம் பெயர்ந்த தமிழ்ப்பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ஆகியவை, கட்டுரைகளில் சில குறிப்பிடத்தக்கவையாகும். மிகவும் உணர்ச்சி வசப்பட்ட மாத்தளை சோமுவின் தமிழால் எல்லாம் முடியும். ஆனால் தமிழனால் எதுவும் முடியாது என்ற கவலை தோய்ந்த வார்த்தைகள் சிந்திக்க வைத்தன. மைய உரையாற்றிய பேரறிஞர் வ. ஈசுவர மூர்த்தி எந்த மொழியில் அதிகம் படைப்புகள் வருகிறதோ அந்த மொழிதான் வளர்கிறது. விருதுகளோ, பரிசுகளோ முக்கியம் அல்ல. தமிழ்ச்சிந்தனை தான் முக்கியம். தமிழ் தமிழ் என்று பேசி அரசியல் பண்ணாமல் அடிநிலையில் உள்ள நம் தமிழில் அதிகம் இலக்கியம் படைக்க வேண்டும் என்று குறிப்பிட்டதை நாம் கவனத்திற் கொள்வது நலம்.

இப்பன்னாட்டுக் கருத்தரங்கில் ஜெர்மனியைச் சேர்ந்த சுபாசினி கனகசுந்தரம், இலங்கையைச் சேர்ந்த டோமினிக் ஜீவா, கவிஞர் காசி ஆனந்தன். சென்னையைச் சேர்ந்த முனைவர் பத்மாவதி விவேகானந்தர், மலேசியாவின் சை.பீர் முகமது, கொழும்பு துரைவிராஜ பிரசாத் மற்றும் ஆத்திரிலேவியாவின் பாடும் மீன் ஸ்ரீகந்தராசா ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது சிறப்பம்சமாகும்.

ஆண்டுதோறும் தமிழ் இலக்கியத்திற்காக இப்படி ஏதாவது தேசிய அல்லது பன்னாட்டுக் கருத்தரங்கு நடத்தி பல நாட்டு தமிழ் அறிஞர்களையும் திருச்சியை நோக்கி இழுக்கும் தமிழாய்வுத் துறை தலைவர் முனைவர் அ. அந்தோணி குருசை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நிறைய அயலகத் தமிழ் எழுத்தாளர்கள் இருந்தபோதும், அவர்களின் படைப்புகளைப் பற்றிய ஆய்வுகள் வெளிக் கொணரப்படவில்லை. இதற்கு காரணம் கல்லூரி மற்றும் பல்கலை வளாகத்தில் தமிழ் இணையங்களின் பங்களிப்பு அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை என்பதே.

திருச்சியில் உள்ள தூய வளனார் கல்லூரி இலங்கைக்கு மாறிவிட்டதோ என ஐயம்படும்படிக்கு அவ்வளவு இலங்கை தமிழ் எழுத்தாளர்கள் கூட்டம். இரா. நித்தியானந்தன், ஸ்ரீகந்தராசா, சுபாசினி, அந்தனி ஜீவா ஆகியோர் சுற்றி சுற்றி வந்து அனைவருடனும் அளவளாவிக் கொண்டிருந்தனர். அவர்கள் நம் எழுத்தாளர்களுடள் கலந்துரையாடிய காட்சி இலங்கைப் போர் நிகழ்வுகளை ஒரு கணம் மறக்கச் செய்தது எனலாம்.

*********************

Series Navigation

கவிஞர் வைகைச் செல்வி

கவிஞர் வைகைச் செல்வி