தினம் ஒரு கவிதை – கலந்துரையாடல்

This entry is part [part not set] of 30 in the series 20010819_Issue


கர்நாடகத்தில் உள்ள ‘திருவள்ளுவர் மக்கள் நற்பணி மன்றம் ‘ சென்ற புதன் கிழமை ஆகஸ்ட் 15-ஆவது தேதி பெங்களூரில் ஒரு கலந்துரையாடல் நடத்தியது.இதில் பெங்களூரில் உள்ள அறிஞர்கள், தமிழ்ப்புலவர்கள், பத்திரிக்கையாளர்கள், கணிப்பொறி வல்லுநர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

சரியாக 4.15க்கு நிகழ்ச்சி தொடங்கியது.அனைத்து நிகழ்ச்சிகளையும் உரிய நேரத்தில் நடத்தும் இயல்புடைய திருவள்ளுவர் மக்கள் நற்பணி மன்றத்தினர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சியைத் தொடங்கினர்.மன்றத் தலைவர் திரு.தேனிரா.உதயகுமார் அவர்கள் சிறப்பு விருந்தினர்களை மேடைக்கு வருமாறு அழைத்தார்.பின் செயலாளர் திரு.மணி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த நிகழ்ச்சி இனிதே துவங்கியது.

சிறப்பு விருந்தினர்களாக தினச்சுடர் ஆசிரியர் திரு.ப.சு.மணி,மலேசியப் பாவாணர் ஐ.உலகநாதன், பெங்களூர் தமிழ்ச்சங்கத் தலைவர் கா.சுப்ரமணியம்,ஓசூர் வழக்கறிஞர்கள் சங்கத்தலைவரும் புலவருமான திரு.தேனிரா. பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி தமிழ் அறிஞர்களுக்கும் தமிழை நேசிக்கும் கணிப்பொறியாளர்களுக்கும் ஒரு பாலமாக அமைந்தது. ‘தினம் ஒரு கவிதை ‘ என்ற பெயரில் 1500 உறுப்பினர்களைக் கொண்டு இணையத்தில் இயங்கி வரும் ஒரு மின்னஞ்சல் குழுவின் உறுப்பினர்கள் இதில் ஆர்வத்துடன் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.சில தவிர்க்க முடியாத காரணங்களால் இதன் அமைப்புத் தலைவர் திரு.நாகசுப்ரமணியன் அவர்கள் வரமுடியாது போக அவருக்கு பதில் குழு உறுப்பினர் திரு.கே.ஆர்.விஜய் அவர்கள் தினம் ஒரு கவிதையின் செயல்பாடு, திட்டங்கள் குறித்து வந்தவர்களுக்கு எடுத்து உரைத்தார். ‘தினம் ஒரு கவிதை ‘ குழுவில் வந்த பகுதிகளான சிந்தனை செய் மனமே, குறுந்தொகை,கவிதை,கவிதைத் தொடர்,திரையில் மலர்ந்த பாடல்கள்,கவிதைஸ்வரன் ஆகியவற்றைப் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தினார்.

பின் தினம் ஒரு கவிதைக்கும் திருவள்ளுவர் மக்கள் நற்பணி மன்றத்திற்கும் பாலமாக விளங்கும் திரு.மகேந்திரன் அவர்கள் இரண்டு அமைப்புகளின் நோக்கம்,சாதனைகள் குறித்துப் பேசினார்.பின் எவ்வாறு தினம் ஒரு கவிதையில் உறுப்பினராகலாம் என்பதையும் எடுத்துரைத்தார்.அதாவது dokavithai-subscribe@yahoogroups.com என்ற முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப, அனுப்பியவர் உறுப்பினராக ஏற்றுக்கொள்ள்ப்படுவார் என்பதையும் தெரிவித்தார்.

அதன் பின்னர் நடைபெற்ற கலந்துரையாடலில் பல்வேறு அறிஞர் பெருமக்கள் இரு அமைப்புகளின் வளர்ச்சியைப் பாராட்டியதோடு அவை வரும் காலங்களில் எவ்வாறு செயல்படவேண்டும் என்பதினையும் பற்றி விவாதித்தனர்.இந்த விவாதத்தில் சிறப்பு விருந்தினர்களும் கலந்துகொண்டு பேசினர்.வளர்ந்த தலைமுறை தங்கள் அனுபவத்தை இளைய தலைமுறைக்குத் தரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இந்த இரு அமைப்புகளைத் தவிர வேறு பல அமைப்புகளும் இதில் கலந்துகொண்டு தத்தம் கருத்துகளைத் தெரிவித்தனர்.

தனித் தமிழ்த் தொண்டர் திரு.சி.பு.மணி அவர்களின் நன்றியுரைக்குப் பின் நாட்டுப் பண்ணோடு நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.ஆரம்பம் முதல் இறுதி வரை அனைத்தையும் உரிய நேரத்தில் நடத்தி நிகழ்ச்சியை சிறப்புற நடத்திய திரு.தேனிரா.உதய குமார் அவர்களுக்கு அனைவரும் தத்தம் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு விடைபெற்றனர்.

Series Navigation