தாவரக்காதல்

This entry is part [part not set] of 34 in the series 20030427_Issue

ஜ்யோதிர்மய் தத்தா


தோட்டவேலை மீது என்னுடைய அப்பாவின் ஈடுபாடு, ஒரு பொழுதுபோக்கு என்ற எல்லையைத் தாண்டி, அடங்காத ஆர்வமாகவும், பைத்தியமாகவும் ஆகிவிட்டது. எங்கள் நண்பர்களோ அல்லது குடும்பத்தினரோ குழுமும் எல்லா விருந்துகளிலும் சேர்ந்தமைவுகளிலும் பேச்செல்லாம் இப்போது பழங்களையும், பூக்களையும் செடிகொடிகளைப் பற்றித்தான் இருக்கிறது. தாவரங்களை நேசிக்கும் மனிதர்களை அவர் விரும்புகிறார் என்பது உண்மையென்றாலும், தாவரங்களை நேசிக்காத மனிதர்கள் மீது நல்ல அபிப்ராயம் ஏதும் அவரிடம் கிடையாது. அவரது தாவரங்களை நெருங்கி ஆராய்வதில் அவருடைய அன்றாடப் பொழுது ஆரம்பிக்கிறது. அவரது நாள் அவர் சேர்த்து வைத்திருக்கும் தாவரங்களை பற்றிய புத்தகங்களைப் புரட்டுவதில், படிப்பதில் முடிகிறது. அவரது பார்வையில், ஒரு தோட்டக்காரன் தோட்டக்கலையைப் பற்றிய அறிவியற்பூர்வமான பரந்த அறிவை தன்னுடைய பசுமை பூத்த விரல்களின் நுனியில் வைத்திருக்கும்போதுதான் அவன் நல்ல தோட்டக்காரனாகிறான்.

அவரது அறிவையும் அவரது சொத்துக்களான தாவரங்களையும் வினியோகிக்க அவர் மிகுந்த ஆர்வத்துடனேயே இருந்தார். யாரேனும் ஏதாவது ஒரு தாவரத்தின் நாற்றைக் கேட்டால் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைவார். ஞாபகம் வைத்திருந்து சரியான பருவத்தில் அந்த செடியின் நாற்றுக்களை ஒரு பெரிய பையில் கவனமாகப் போட்டு அனுப்பி வைப்பார். தாவரங்களைப் பெற்றுக் கொண்டவர் கவனித்திருந்தால், ஒவ்வொரு செடியின் தண்டிலும், ஒரு சிறு அட்டையில் கவனமாக, அந்த செடியின் பெயர், அதன் அறிவியல் பெயர், அதனை எவ்வாறு கவனித்துக்கொள்வது, எப்போது தண்ணீர் ஊற்றுவது போன்ற விஷயங்கள் எழுதப்பட்டிருப்பதை பார்க்கலாம். இவ்வாறு பெற்றுக் கொண்டவர் ஒருவர் என்னுடைய தந்தையை மீண்டும் மீண்டும் பாராட்டி சந்தோஷப்பட்டார். ஆனால் என் தந்தைக்கோ, தன்னுடைய தாவரங்கள் சரியான ஒருவர் கையில் சென்றது என்ற விஷயம் தான் பெரும் திருப்தி அளித்தது.

எங்களது தோட்டத்தில் இருக்கும் பல வகையான பழுத்து சிவந்து இருக்கும் பழங்களும், ஆரஞ்ச் மஞ்சளாக இருக்கும் பழங்களும் தாவரங்களின் மீது அன்பு செலுத்தும் மனிதர்களை மட்டும் கவர்வதில்லை. அருகாமையில் இருக்கும் குரங்குகளையும் கவர்ந்துவிடுகின்றன. ஆகவே நாங்கள் எங்கள் தந்தையாரின் விலைமதிப்பற்ற தாவரங்களைப் பாதுகாக்க குரங்குகளை விரட்டும் பணியில் தொடர்ந்து இருக்கவேண்டியதாயிற்று. எங்களது நாய் டிங்கோ இந்த குரங்குகளை வெற்றிகரமாகத் துரத்த முடிந்தாலும், அந்த குரங்குகள் சில பழங்களை எடுத்துக்கொண்டு சென்றுவிடுவதை தடுக்க முடியவில்லை. என்னுடைய தகப்பனார் அந்தக் குரங்குகளை அவைகளின் குற்றங்களுக்காக தண்டிக்க விரும்பினார். கூழாங்கற்களையும் கற்களையும் கொண்டு தன்னுடைய கோட்டையைக் காப்பாற்ற யோசித்தார். இருப்பினும் அந்த எண்ணத்தை பின்னர் விட்டுவிட்டார். ஒருவேளை அவரது விலங்குகளை நேசிக்கும் இதயம் தாவரங்களை நேசிக்கும் இதயத்தைவிட சற்று பருமனாக இருந்திருக்கலாம். பிறகு ஒருவர் வைக்கோல் பொம்மை ஒன்றை வைத்து குரங்குகளை விரட்ட யோசனை கொடுத்தார். இந்த கருத்து அவருக்கு பிடித்திருந்தது. அதனால் அந்த வேலையில் இறங்கினார். ஒரு தேர்ந்த சிற்பி தோற்றான். இறுதி வடிவமோ அழகான இரு மனித உருவங்கள். பயமுறுத்தும் வைக்கோல் பொம்மைகள் இல்லை.

சில மாதங்களுக்கு முன்னர் அவரது தோட்டத்தை ஒரு சோகம் எதிர்பாராத விதத்தில் தாக்கியது. அவரது விலைமதிப்பற்ற சில தாவரங்கள் காணவில்லை. நாங்கள் எல்லோரும் அதற்காக வருந்தினோம். ஆனால் என் தந்தையாருக்கு ஆறுதல் சொல்லமுடியவில்லை. ஒவ்வொரு தாவரத்தின் அழகையும் பல மணிகள் விவரித்தபிறகு அவர் ஒரு உறுதியுடன் வேலையில் இறங்கினார். எங்கள் பகுதி எங்கும் சுற்றி துப்புத் துலக்கினார். எங்களது வீட்டருகே இரண்டு சிறுவர்கள் சந்தேகப்படும்படி சுற்றிக்கொண்டிருந்ததை பால்காரர் பார்த்திருந்தார். ஒரு சிறுவன், பக்கத்து கிராமத்திலிருக்கும் ஒருவரது பையன் என்று பால்காரர் தெரிவித்தார். உடனே எங்கள் தந்தையாரும் டெலிபோன் டைரக்டரியை எடுத்து அந்த கிராமத்தில் இருக்கும் ஒரே பலசரக்கு கடைக்கு டெலிபோன் செய்து அந்தப் பையனின் தகப்பனாரிடம் பேச விரும்புவதாகச் சொல்லி அவரை அழைத்து பேசினார். டெலிபோனிலேயே அவருக்கு நன்றாக உபதேசம் செய்தார். குழந்தைகளிடம் நல்ல பழக்கங்களை வளர்க்கவேண்டிய அவசியத்தையும், தன்னுடைய தாவரங்கள் திரும்பித் தரப்படாவிட்டால் போலீஸில் சென்று புகார் கொடுக்கப்போவதாக பயமுறுத்தினார். அடுத்த நாள் அதிகாலையில் அவரது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தாவரங்கள் அவரது கைக்கே திரும்பி வந்துவிட்டன.

அவர் எங்கேனும் சென்றால், அவர் டெலிபோன் செய்து கேட்கும் முதல் கேள்வி, ‘என்னுடைய லில்லி எப்படி இருக்கிறது. கிரிஸாந்தமம் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றினாயா ? ‘ என்பதாகத்தான் இருக்கும். அதற்குப்பின்னர் அவரது கட்டளைகள் பறக்கும் ‘ ரோஸ் செடிகளுக்கு நிறைய தண்ணீர் ஊற்றிவிடாதே. மாலை சூரியனின் கதிர்களிலிருந்து அந்த மெல்லிய மலர்களைக் காப்பாற்ற மஸ்லின் துணி கொண்டு மூடி வை ‘. சில வேளைகளில் அவரது தாவரங்களின் மீதான நேசம் எங்களை பைத்தியம் பிடிக்க வைக்கும் அளவுக்கு கோபத்தை ஏற்படுத்தும். ஆயினும், மெல்லிய சூரியனின் வெளிச்சத்தில் ஸ்ட்ராபெர்ரி பழங்களும், கிவி பழங்களும், மெல்லிய பனித்துளிகள் துளிர்த்திருக்கும் மலர்களையும், அரிய மலர்களின் வேறெங்கும் கிடைத்திராத நறுமணமும் காற்றில் மிதந்துவரும்போது, அவரது அன்பின் இனிமையை நாங்கள் துய்க்க முடிகிறது. அவரது கடும் உழைப்பின் சாட்சியாகவும், அவரது அன்பு நிறைந்த மனத்தின் நறுமணமாகவும் நாங்கள் இழுக்கும் ஒவ்வொரு மூச்சின் இழுப்பிலும் நிறைந்து எங்கள் உள்ளத்தை நிறைக்கிறது.

Tuesday, April 22, 2003, Chandigarh, India, Tribune

Series Navigation

ஜ்யோதிர்மய் தத்தா

ஜ்யோதிர்மய் தத்தா