தாய்மை – ஒரு உளவியல் பரிசோதனை

This entry is part [part not set] of 48 in the series 20040610_Issue

அரவிந்தன் நீலகண்டன்


பச்சிளம் குழந்தை தாய்க்காக ஏங்குகையில் உணவுக்காகத்தான் ஏங்குகிறதா ? அல்லது அங்கு வேறு சில காரணிகளும் செயல்படுகின்றனவா ? மானுட அன்பின் முதல் வெளிப்பாடான தாயன்பு மனித வாழ்க்கை முழுவதுமாக ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தும் ஒன்றாகும். தாயன்பின் உயிரியல் வேர்கள் எத்தனை ஆழமானவை என்பதை அறிய

உளவியலாளர்கள் மேற்கொண்ட பரிசோதனைகள் மானுட அறிவுத்தேடலின் வரலாற்றில் முக்கிய மைல்கற்களாகிவிட்டதில் அதிசயம் ஏதுமில்லை. அமெரிக்காவின் தொடக்க கால நடத்தையியலாளர்கள் (behaviourists) ஒரு குழந்தை தன் தாயிடம் காட்டும் அன்பு அதன் உணவுத்தேவை தாயினால் பூர்த்தி செய்யப்படுவதுதான் எனக் கருதினர். ப்ராயிடு முதலான உளப்பகுப்பாய்வாளர்களோ மார்பக கவர்ச்சியையும் குழந்தையின் தாயன்பு வேட்கையையும் முடிச்சு போட விழைந்தனர். இந்நிலையில் விஸ்கான்ஸின் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராக பணியாற்றிவந்த ஒருவர் பரிசோதனைச்சாலைகளில் குரங்கு குட்டிகளின் நடத்தைகளை கவனித்து வந்தார். குரங்குக்குட்டிகளை ஒவ்வொரு முறையும் இறக்குமதி செய்யாமல் எப்படியாவது அமெரிக்க ஆய்வகங்களிலேயே இனப்பெருக்கம் செய்யவைக்க வேண்டி விளைந்த போது ஏற்பட்ட சில பிரச்சனைகளின் விளைவாக குரங்குக்குட்டிகளின் நடவடிக்கைகளை அவர் கவனித்து வந்தார். குட்டிக்குரங்குகள் தம் அறைகளிலிருக்கும் துண்டுத்துணிகள் மீது மிகுந்த பற்று காட்டுவதை அவர் கண்ணுற்றார். குட்டிக் குரங்குகள் தம் அறையிலுள்ள துண்டுகள் மாற்றப்படும் போது அல்லது சுத்தம் செய்ய எடுக்கப்படும் போது ஏக ஆர்ப்பாட்டம் செய்தன. அந்த ஆய்வாளர் தன் வீட்டில் குழந்தைகள் தாங்கள் அரவணைத்துத் தூங்கும் பொம்மைகள் மாற்றப்படும் போது செய்கிற ஆர்ப்பாட்டம் செய்வதை இந்த குரங்குக் குட்டிகளின் செய்கைகள் ஒத்திருப்பதை கண்டார். அவர் மனதில் ஒரு கருதுகோள் தோன்றியது. அதனை சோதிக்க அவர் ஒரு பரிசோதனையை வடிவமைத்தார். அன்பின் இயற்கை குறித்து நாம் அறிவியல் பூர்வமாக அறிய வழிவகுத்த அந்த பரிசோதனை இன்று உலகப்புகழ் பெற்றுவிட்ட ஒன்று. அதுதான் ஹாரி ஹார்லோவின் ‘தகடு அழி கயறுகள் அன்னை ‘ (chicken feed wire mesh mother) பரிசோதனை. ஹாரி ஹார்லோவின் இயற் பெயர் ஹாரி இஸ்ரேல். அவர் யூதரல்ல. ஆனால் யூத வெறுப்பு மிகுந்த 1930களில் இஸ்ரேல் என்கிற அவரது பெயரால் அவருக்கு பின்னடைவுகள் ஏற்படலாம் என ஒரு நண்பர் கூறியதன் விளைவாக தமது பெயரை ஹாரி ஹார்லோ என அவர் மாற்றிக்கொண்டார். விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் அவர் ஆராய்ச்சியாளராக பணியாற்றலானார். இனி பரிசோதனைக்கு வரலாம்.

இப்பரிசோதனையில் குரங்குக்குட்டிகள் தம் அன்னைகளிடமிருந்து பிறந்த சில மணிநேரங்களில் பிரிக்கப்பட்டு ‘பதிலி அன்னைகளிடம் ‘ (substitute mothers) வளர்க்கப்படுகின்றன. இப்பரிசோதனைக்கு ரீசஸ் குரங்குகள் (Rhesus) பயன்படுத்தப்பட்டன. இவை பிறப்பின்போது மானுடக்குழந்தைகளைக் காட்டிலும் முதிர்ச்சியுடையவை என்பதால் அவை பயன்படுத்தப்பட்டன. பரிசோதனையில் இருவித பதிலி அன்னைகள் பயன்படுத்தப்பட்டன. அவற்றுள் ஒன்று தகடழி இரும்பு வயர்களால் (wire) ஆனது மற்றொன்று மரத்தால் செய்து அதன் மீது துணி சுத்தப்பட்டு குரங்குக்குட்டிக்கு உடல் கதகதப்பு அளிப்பதான

ஒரு ‘மரப்பாச்சி ‘ அன்னையாக உருவாக்கப்பட்டது. இந்த இரு அன்னைகளில் தகடழி கயிறுகளால் ஆன அன்னைக்கு மார்பகம் அளிக்கப்பட்டது அதன் மூலம் பால் வரவும் வழி செய்யப்பட்டது. மரப்பாச்சி அன்னைக்கோ பால் அளிக்கும் மார்பக அமைப்பு எதுவும் இல்லை. ஹார்லோவின் பரிசோதனையில் குரங்குக்குட்டிகள் தாங்கள் பசி ஆற மட்டுமே தகடழி அன்னையை பயன்படுத்தின. பின் தம் அன்புத்தேவைக்கும் அரவணைப்புக்கும் அவை மரப்பாச்சி அன்னையையே பயன்படுத்தின. 120 நாட்களுக்குள் பசித்தேவையை அன்புத்தேவை மிஞ்சிட மரப்பாச்சி அன்னையுடன் அவை செலவிடும் நேரம் அதிகமானது. நடத்தையியலாளர்களின் ‘உணவளிப்பால் ஏற்படும் அன்பு ‘ மற்றும் உளபகுப்பாய்வாளர்களின் ‘மார்பக கவர்ச்சியால் தாயன்பு ஏற்படுகிறது ‘ என்னும் கருதுகோள்கள் தவறு அல்லது முழுமையானவை அல்ல என்பது இப்பரிசோதனையின் மூலம் நிறுவப்பட்டதெனலாம். ஆக பசித்தேவையும்

அன்புத்தேவையும் ஒன்றோடொன்று தொடர்புடையவை எனினும், வெவ்வேறு உளவியல் கட்டமைப்புகளில் (சர்க்யூட்களில்) உருவாவதாக கூறலாம்.

ஹார்லோ பரிசோதனை குறித்த விமர்சனங்கள்: தகடழி கயிறினை குரங்குக்குட்டிகள் விரும்புவதில்லை என்பதால் இந்த விளைவு ஏற்பட்டிருக்கலாம் என்பது தொடங்கி இந்த பரிசோதனைகள் மனிதர்களுக்கு பொருந்துமா என்பது வரையாக விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஹார்லோ இரண்டாவது நிலை விமர்சனத்தை குறித்து கூறுகையில் தனது பரிசோதனையில் (பொதுவாக உளவியல் பரிசோதனைகளில் பயன்படுத்தப்படும்) எலிகளுக்கு பதிலாக குரங்குக்குட்டிகள் பயன்படுத்தப்ப

ட்டதே இந்த பரிசோதனை விளைவுகள் மானுடத்திற்கு அருகிலாக வருவதற்காகத்தான் என்கிறார். முதல் நிலை விமர்சகர்களுக்கு ஹார்லோவின் பதில் குரங்குக்குட்டிகளின் நடத்தையினை முழுமையாக காட்டுவதாக இருந்தது. குரங்குக்குட்டிகள் அடைக்கப்பட்டிருந்த கூண்டுகலில் தகடழி கயிறுகளாலான தடுப்புக்கள் இருந்தன. எந்த பிரச்சனையின் போதும் மரப்பாச்சி அன்னை இல்லாத போது குரங்குக்குட்டிகள் இந்த தகடழி கயிறுகளிலேயே ஏறின. ஹார்லோவின் பரிசோதனை குறித்த மிக முக்கியமான விமர்சனம் அன்னையின் அன்புத்தேவை குழந்தைகளுக்கு ஏற்பட காரணம் அரவணைப்புச்சுகம் மட்டும்தானா ? ஹார்லோ இதற்கான பதிலை மெலும் கூர்மைசெய்யப்பட்ட பரிசோதனைகள் மூலம் பதிலளிக்க முனைந்தார். சில மரப்பாச்சி அன்னைகளின் ‘நரம்புகளூடே ‘ குளிர் நீர் இருக்கும்படியாகவும், மற்ற மரப்பாச்சி அன்னைகளை கதகதப்பாகவும் வைத்தபோது, குரங்குக்குட்டிகள் குளிர்ந்த அன்னைகளைக் காட்டிலும் வெதுவெதுப்பான அன்னைகளை விரும்புவதை கண்டார். மேலும் தாலாட்டும் இயக்கமுடைய மரப்பாச்சி அன்னைகளை தாலாட்டாத அன்னைகளைக் காட்டிலும் குரங்குக்குட்டிகள் விரும்புவதைக் கண்டார்.

குரங்குக்குட்டிகளின் அறிவு வளர்ச்சிக்கு ஒரு பாதுகாப்பு அடிப்படையாகவும் அன்னையின் அரவணைப்பு செயல்படுவதை அவர் கண்டார். பலவித உருவங்கள் கொண்ட பொருட்களை குரங்குக்குட்டிகள் முன் வைக்கையில் அந்த குட்டிக்குழந்தை ஒரு பொருளை சிறிதே தொட்டுப்பார்க்கும் பின் தன் மரப்பாச்சி அன்னையிடம் வந்துவிடும். பின் மீண்டும் பொருட்களை அறிய முற்படும். இதே சூழலில் மரப்பாச்சி அன்னை எடுக்கப்பட்டுவிட்டால், நடுங்கி உறைந்து ஒரே இடத்தில் அது ஒரே நிலையில் எந்தப்பொருளையும் தொடாது இருந்துவிடும். இருபது வருட பரிசோதனைகளின் பின் ஹார்லோ குரங்குக்குட்டிகள் மரப்பாச்சி அன்னைக்கும் உண்மை அன்னைக்கும் காட்டும் அன்பு ஒரே விதமானது எனும் முடிவுக்கு வந்தார். பரிசோதனைகளில் பார்த்த வரைக்கும், அன்னை மீது குரங்குக்குட்டி காட்டும் அன்பு மிகத்தீவிரமானது பின்னர் அது மரப்பாச்சி அன்னையிடம் காட்டும் அன்பைக்காட்டிலும் அதிகமானது அல்ல. அதைப்போலவே உண்மை அன்னையிலிருந்து பெறும் அரவணப்பும் பாதுகாப்பும் அதீதமானது அதுவும் மரப்பாச்சி அன்னையிடம் பெறுவதிலிருந்தும் அதிகமானது அல்ல.

ஆனால் ஹார்லோவின் குரங்குகள் பிற்காலத்தில் வளர்கையில் அவற்றின் நடத்தைகள் மிகவும் குறையுடையதாக இருந்ததை அவருடன் இணைந்து ஆய்வு செய்த நரம்பியலாளாரான மேரி கார்ல்சன் ஆவணப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. மரப்பாச்சி அன்னைகள் உண்மை அன்னைகளுக்கு எக்காலத்திலும் பதிலியாக முடியாது என்பதனை அவர் தெளிவாக்கினார். எதுவாயினும் வெறும் உணவளிப்பதன் மூலமே அன்பு உருவாவதில்லை. அது ஆழ வேரூன்றிய பற்பல காரணிகள் பற்பல தளங்களில் இயங்குவதன் மூலமாக முகிழ்த்தெழும் ஒன்று என்பது ஹார்லோ பரிசோதனையாலும் பின்னர் தொடர்ந்த பல பரிசோதனைகளாலும் தெளிவாகிற்று. என்றபோதிலும் இந்த பரிசோதனைகள் நமக்கு இன்று அத்தனை மனப்பூர்வ ஏற்புடையவையாக இல்லை. ஆனால் ஹார்லோ பரிசோதனைகளையொத்த சூழலில் பல்லாயிரம் மானுடக்குழந்தைகளை கற்பனை செய்து பார்க்க முடியுமா ?

ரோமேனியாவின் மார்க்சிஸ்ட் வெறியனும் சர்வாதிகாரியுமான நிகோலே சியேஸ்கு (Nicolae Ceausescu) பல்லாயிரம் குழந்தைகள் (அநாதைகள் மற்றும் பெற்றோரால் பராமரிக்கப்பட முடியாதவர்கள் என மார்க்சிஸ்ட் அரசால் கருதப்பட்டவர்கள்) கூடங்களில் வளர்க்கப்பட்டனர். 1989 இல் இந்த மார்க்சிய அசுர அரசு வீழ்ந்தது. மிக மோசமான சூழலில் உளவியல் வளர்ச்சியும் உடல் வளர்ச்சியும் குன்றிய பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் அங்கிருந்து மீட்கப்பட்டனர். இவர்களின் நடத்தைகள் பலவிதங்களில் ஹார்லோவின் குரங்குகளின் பிற்கால நடத்தையை ஒத்திருந்ததாக கார்ல்சன் கூறுகிறார். மன-அழுத்த நிலையைக் காட்டும் கார்ட்டிசால் சுரப்பு இந்தக் குழந்தைகளில் அதீதமாக இருந்ததையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

குழந்தைகளுடன் இன்று சமூக சேவகர்கள் பணி புரிய வேண்டியுள்ளது. உறைவிடமும் உணவும், கல்வி மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவற்றை அளிப்பதுடன் அரவணைப்பையும் அன்பையும் இக்குழந்தைகளுக்கு அளிக்கவேண்டியது – அவர்களின் உளவியல் தேவைகளை பூர்த்தி செய்வது இந்த சமூக சேவகர்களின் கடமையாக உள்ளது. அறிவியலும் இந்த பூரண மானுட மதிப்பீட்டின் அவசியத்தை உறுது செய்கிறது.

பயன்படுத்தப்பட்ட நூல்கள் மற்றும் இணையத்தளங்கள்:

ஹார்லோ & மியர்ஸ் , ‘The Human Model: Primate Perspectives ‘, வின்ஸ்டன் 1979

டெஸ்மண்ட் மோரிஸ், ‘The Naked Ape ‘

ஹான்ஸ் மற்றும் மிக்கேல் ஹெய்ஸ்னக், ‘Mind watching ‘ பக் 79-85 (1981)

http://whyfiles.org/087mother/4.html – மேரி கார்ல்ஸன் மற்றும் ரோமேனிய குழந்தைகள் குறித்து

http://www.birdhouse.org/spong/napier/experim.html – எளிமையான சிறிதே நகைச்சுவையுடனான அறிமுகம்

http://psychclassics.yorku.ca/Harlow/love.htm – முழுமையாக பரிசோதனை அனைத்தும் அறிய – உளவியல் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக விளங்கும் அவரது ஆய்வுத்தாள் முழுமையாக இங்கு கிடைக்கும். இக்கட்டுரையில் விவரிக்கப்படாத பல தள பல அமைப்பு பரிசோதனைகளையும் இங்கு நீங்கள் வாசிக்கலாம். ஒரு கட்டாயப்பார்வைக்கான இணையபக்கம்.


infidel_hindu@rediffmail.com

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்