தாமதம்

This entry is part [part not set] of 24 in the series 20021201_Issue

புகாரி கனடா


அவசரச் செய்தியுடன்
அதிகாலை வரும்
செய்தித்தாள் பொடியன்…

ஏழுக்கே வரவேண்டிய
எங்களூர்ப் பேருந்து…

இஇதா வருகிறேனென்ற
சக தொழிலாளி…

ஒரு நொடியில்
தயாரென்ற இல்லாள்…

எட்டே முக்காலுக்குத்
தரையெட்டும் விமானம்…

மாலை வரவேண்டிய
மாண்புமிகு மந்திரி…

என்று…
எல்லோரும் இங்கே
தாமதிக்கிறார்கள்..!

o

வார்த்தை தந்துவிட்டால்
நெஞ்சுக்குள்
மணிச்சத்தம் கேட்காதா… ?

நேரம் தாண்டும்போது
உயிருக்குள்
புயலொன்று வீசாதா… ?

அதெப்படி…
ஆறுக்கே
வருகிறேனென்றுவிட்டு
ஆறிப்போய் நிற்பது… ?

எட்டுக்கு வருகிறேனென்றவர்
ஏழுக்கு வந்து நிற்பார்…
காலைக்குப் பதிலாய்
மாலை!

நேரம் தவறாமை
நம் உயிரல்லவா… ?
எத்தனை முறைதான்
அதைத் தூக்கிலிட… ?

இங்கே…
நேரத்தே வருவது
வேதனை மட்டுந்தானோ… ?

O

பசி தாமதித்தால் நோய்…!
இஇதயம் தாமதித்தால் மரணம்…!
மனிதன் தாமதித்தால்…
மனநோய்தானே… ?

தாமதமே கெளரவம் என்பவனை
என்னவென்றழைப்பது… ?

தருணத்தில் வாரா ஞாபகமும்
காலத்தே வாரா அறிவும்
துயரக்கடலில்தானே
நம்மை மூழ்கடிக்கும்… ?

பொங்கும்போதே இஇறக்காத
பால்…
பாழ்தானே…!

நேரத்தே காணா
புண்
புற்றுநோயல்லவா… ?

O

ஏனய்யா தாமதமென்றால்…
எலி செத்துவிட்டது
அதன் ஈமக்கடனில்
தாமதமாகிவிட்டது
என்பார் சிலர்…

காருக்குக்
கால் தடுக்கிவிட்டது
கைப்பிடியில்
பெட்ரோலும் இல்லை
என்பார் சிலர்…

தாமதம்
என்ற தப்புத்தானே
நம்மைப்
பொய்புனையும்
குற்றவாளியாக்கியது…!

O

தாமதிப்போம்…!

கைமீறும் காரணங்களில்
நாம்
தாமதிப்போம்…!

ஆனால்…
தாமதமே சம்மதம்
என்று
தரங்குறையலாமோ… ?

***
buhari2000@hotmail.com

Series Navigation

புகாரி

புகாரி