வ.ஐ.ச.ஜெயபாலன்
தானாவை பார்த்தேன்
ஒருவருள் ஒருவர்
பாய்ந்த தருணத்தில்.
கண்டதில்லையா நீங்கள்
தானாவின் மனசுபற்றும் நிர்வாணம்.
அந்தக் கண்ணாடி மேனியில்
என் ஆத்ம முகத்தை அடைந்திருக்கிறேன்.
துருவத்துப் பனி ஆறு என
அலட்சியம் செய்து விடாதீர்கள்.
தானாவைத் தொடு கணத்தில்
தாடி வெண்மயிர் கறுக்க
எதிர் விதியில் மிதந்தேனே.
நதி காலவெளியில்
இருப்பதை முன்னும்
வாழ்வதைப் பின்னுமாக
அடித்துச் செல்கிறது.
கொம்புகள் உரசிச் சடசடக்கும்
பனிமான்களோடு
முன்நகரும் சறுக்குவண்டி.
அங்கிருந்து காலம் உடைய
நாற்புறமும் பாய்கிறது
ஒரு லாப்பியனின் பாடல்.
நூற்றாண்டு முன்னாடி
துப்பாக்கியும் பைபிளுமாய் வந்து
யேசுவையே மீண்டும்
சிலுவை அறைந்தவர்களால்
கொல்லமுடியாது போன பாடல் அது.
சமிக்ஞை மொழியாக
தொலைந்த சந்ததிகளை
தேடுகிறது அப் பாடல்.
தறிபட்ட கலச்சாரத்தின் விதை அது.
நதிகளின் ஆழத்திருந்து மீழ்கிறது
தலை மறைந்த வாழ்வு.
தானாவின் சரளைக் கற் கரைகளில்
என் அகதி மனசு சிந்துகிறது.
எல்லைகள் நூறு தாண்டினாலும்
என்னைச் சூழ எரிகிறதே
யாழ் நூலகம்.
பாலி ஆற்றம் கரைகளில்
பாடும் மீன் வாவியில்
பசும் ஆதிசேடனாகப் படமெடுக்கும்
தேயிலை மலைகளில்
முட்டாக்குள் தலை மறைத்து
முழுநிலவும் கவிபாடும்
வயல் வெளிகளில்
அலைகிறது எம் மூதாதையரின் பாடல்
பூமிப்பந்தின் புழுதியான எம்மை
கூவி அழைத்தபடி.
அடிக்குறிப்பு:
தானா – நோர்வே, பின்லாந்து நாடுகளின் எல்லையில் உள்ள வட துருவ நதி
லாபியர்கள் – நோர்வே, சுவீடன், டென்மார்க் நாடுகளின் வட துருவப்புலத்தில் வாழும் சாமி இன ஆதிவாசிகள்