கோகுலன்
தானம்
இன்று பிரதோசம் என்பதால் வழக்கத்தைவிட கோயிலில் கூட்டம் அதிகமாகவே இருந்தது. போக்குவரத்துச் சாலைகளை சற்று ஆக்கிரமித்தே நிறுத்தப்பட்டிருந்தன வாகனங்கள். அக்கா பூஜைக்குத் தேவையான சாமான்கள் வாங்கிக்கொண்டிருந்தாள். நானும் மாமாவுடன் தெற்குவாசலில் காத்திருந்தோம். அது வீட்டிலிருந்து அருகாமையில் அமைந்திருக்கும் பெரியகோயில் வாசல் என்பதால் வீட்டிலிருந்து யார் கோவிலுக்கு சென்றாலும் அந்தவாசல் வழி செல்வதுதான் வழக்கம்.
தனக்கும் மாமாவுக்கும் சேர்த்து இரண்டு நெய் விளக்குகள் வாங்கியிருந்தாள். எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்தே மாலை, பூஜைப்பொருட்கள் வாங்குவதற்கும் கட்டணமில்லாமல் காலணி விட்டு வருவதற்கும் கோயிலை ஒட்டிய அந்த பூக்கடைதான் எங்களின் வழக்கமான கடையாய் இருந்து வருகிறது. அக்கா எப்பொழுதுமே எனக்காக அர்ச்சனை சீட்டோ, விளக்கோ எதுவும் வாங்குவதில்லை. அது எனக்குப் பிடிக்காது என்பதும் அவளுக்கு நன்கு தெரியும். சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் மீது எனக்கு அவ்வளவாக அக்கறை கிடையாது என்பதும், நான் நாத்திகன் இல்லை, அதே வேளையில், சமயம் கடவுள் மீதான என் நம்பிக்கைகள் மாறுபட்டவை என்பதும் நன்றாகவே அறிவாள். இருபத்திநான்கு வருடம் கூடவே இருக்கும் தம்பியை வீட்டில் அனைவரை விடவும் நன்கு புரிந்துவைத்திருப்பவள் அவள்.
மாமா, நெல்லை டவுணில் ஒரு அரசு வங்கியில் துணை மேலாளர். தினமும் சுத்தமல்லியிலிருந்து அலுவலகத்திற்கு பயணம் செய்வது கஷ்டமான விஷயம் என்பதால், எங்கள் வீட்டு மாடி போர்ஷனில் அக்காவுடன் தனிக்குடித்தம் இருப்பவர். அப்பா மறுக்கும் பொழுதும் வாடகையை வழக்கமாக வங்கிக்கணக்கில் செலுத்திவிடுபவர்.
வெளிப்பிரகாரத்திலேயே கூட்டநெரிசல் அதிகமாக இருந்தது. கொடிமரத்தின் வலதுபக்க விளக்குமேடையருகே சென்று விளக்கேற்றுவது கூட சற்று சிரமமான விசயமாக இருந்தது. எனவே தனது இரண்டு விளக்குகளையும் ஏற்றி கொடிமரத்தின் அருகிலேயே வைத்தாள். ‘இங்கே விளக்கேற்றக்கூடாது’ என்ற எண்ணெய் வழியும் ஒரு போர்டை அலட்சியம் செய்தபடி ஏற்கனவே அங்கே பல விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன.
கருவறையில் தொடங்கிய தரிசன வரிசை, உள்பிரகாரத்தை ஒரு முறை சுற்றிக்கொண்டு வெளிபிரகாரம் வரை நீண்டிருந்தது. வரிசையை ஒழுங்குபடுத்தி விடுவதில் சில காவலர்கள் ஈடுபட்டிருந்தார்கள். வரிசையைப் பார்த்து மலைத்து நின்றிருந்தார் மாமா.
‘ஸ்பெஷல் கியூவில போனா சீக்கிரம் வந்துடலாங்க’ என்றாள் அக்கா.
‘போகலாம்தான். அதுக்கு உன் தம்பி ஒத்துக்கமாட்டானே’ என்றார் மாமா. அவர் சற்று எரிச்சலுடன் சொல்லியதுபோல் எனக்குத் தோன்றியது.
‘பரவாயில்லக்கா.. எனக்கு எதுவாயிருந்தாலும் சரி’ என்றேன். எனது நம்பிக்கைகளும் கோட்பாடுகளும் அடுத்தவரை பாதிக்கும் பட்சத்தில் அதை தளர்த்திக்கொள்வதும் என் வழக்கம்.
‘சரி, ஸ்பெஷல் கியூவிலே போயிடலாம்’ என்றார் மாமா. இரசீது வாங்குவதற்காய் அலுவலகம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
மாமா என்ன நினைத்தாரோ இரசீது வாங்கச் சென்ற என்னை திரும்ப அழைத்தார். ‘சூரி, வேணாம் இங்க வாடா.. எப்படியும் இரசீது முப்பது ரூவா ஆகும். ஸ்பெஷல் கியூவும் நீளமாத்தான் நிக்குது. பேசாம நீலகண்டன் சாமியை பாத்து அம்பது ரூபா குடுத்தா நல்லா தரிசனம் காட்டிடுவார் ‘ என்றார். நான் அமைதியாக தலையாட்டிவிட்டு நின்றேன். எனது கோட்பாடுகளைத்தான் நான் இன்றைக்கு மாத்திரம் நான் ஏற்கனவே மூட்டைகட்டி வைத்தாகிவிட்டதே. அக்காவின் கையில் ஐம்பது ரூபாயை திணித்துவிட்டு அமைதியாகிக் கொண்டேன்.
நீலகண்டன் அதே கோயிலில் பணியாற்றுகிறவர். அர்ச்சகர். எப்பொழுதும் நவக்கிரக சந்நிதியில் தான் அவரது வழக்கமான வேலை. எங்களுக்கோ எங்கள் உறவினர்களுக்கோ கணபதி ஹோமம் முதலான விசேஷங்களை அவர்தான் நடத்திக்கொடுப்பார். இதுபோன்ற கூட்டம் வழியும் நாட்களில் அவரைபார்த்து ஐம்பதோ நூறோ கொடுத்துவிட்டால் போதும். கருவறைக்கு மிக அருகில் கொண்டுபோய் நிறுத்திவிடுவார். சுவாமி கழுத்திலிருந்து மாலை சகிதம் பிரசாதமும் வாங்கித்தருவார்.
உள்பிரகாரத்திலிருந்து பக்தர்கள் வெளிவரும் வழியில் உள்ளே நுழைந்து வலப்பக்கமாகத் திரும்பி நவக்கிரக சன்னிதியை அடைந்தோம். அங்கே நீலகண்ட சாமிக்குப்பதிலாக வேறுயாரோ தீபாராதனை காட்டிக்கொண்டிருந்தார். அக்கா அவரிடம் விசாரித்தாள்.
‘இங்கே, வழக்கமாக இருப்பாரே, நீலகண்டன் சாமி..’
‘ஓ, அவரா, அவர் இப்போ அம்பாள் சன்னிதிக்கு போயாச்சே..’ என்றவர், ‘என்ன, தரிசனம் பண்ணனுமா’ என்று கேட்டார் சற்று குரலை தாழ்த்தி.
மாமா ஆமென்று என்று சொல்ல, ‘நான் ஏற்பாடு பண்ணிடறேன்’ என்றவர் மடியிலிருந்து செல்போன் எடுத்து யாருடனோ பேசினார். பேசும்போது திரும்பி மூன்று பேரா என விரல்காட்டி ஊர்ஜிதம் செய்துகொண்டார். பேசிமுடித்து, ‘செத்த நிமிஷம் பொறுங்கோ, நம்ம பையன் வந்துண்ருக்கான்.நெல்லையப்பரையும் காந்திமதியையும் பேஷா காட்டிடுவான்’ என்றார்.
சற்றுநேரத்தில் அங்கு வந்த சிறுவயது குருக்கள் தன்னை பெயர் சொல்லி அறிமுகம் செய்துகொண்டார். பின் எங்களை நேராக சுவாமி சந்நிதிக்கு அழைத்து சென்றார். ஸ்பெஷல் கியூவிற்கும் மிக அருகில், கருவறையின் வாசல் பக்கமாய் எங்களுக்கு வழிவிடப்பட்டது. நாங்கள் தரிசனம் செய்துகொண்டிருக்க எங்களை அழைத்து வந்தவர் வரிசை ஒழுங்கு செய்துகொண்டிருந்த காவலருடம் நட்பாய் பேசிக்கொண்டிருந்தார்.
சிறப்பு ஆரத்தி காட்டப்பட்டது. மாமாவும் தீபத்தட்டில் கணிசமாக காணிக்கை போட்டார். கருவறையின் மிக அருகில் சிறப்புத் தரிசனத்தின் பொருட்டு நிற்பதால் அத்தொகை போட வேண்டிய கட்டாயமும் இருந்தது. பிரசாதத்துடன் கொடுக்கப்பட்ட பிச்சிப்பூ மாலையில் ரொம்பவே சந்தோசமானாள் அக்கா.
வரிசையில் காத்திருந்து வந்தவர்கள் நெற்றி வியர்வை துடைத்தபடியே தரிசனம் முடித்து நகர்ந்து கொண்டிருந்தார்கள். சிலர் எங்களை கோபத்துடன் பார்ப்பதாகவே பட்டது எனக்கு. அப்பொழுது எனக்கு தரிசனத்தில் ஆர்வமில்லாமல் இருந்தது. மனதில் கொஞ்சம் குற்ற உணர்ச்சியும் இருந்தது.
சுவாமி தரிசனம் முடிந்து அழைத்துசென்றவர் அம்பாள் சந்நிதியிலும் நல்ல தரிசனம் காட்டினார். அங்கும் நல்லமுறையில் தரிசனம் முடித்து காணிக்கையிட்டு திரும்பினோம். அம்பாள் சந்நிதியில் பிரசாதத்துடன் வாங்கிய அரளிப்பூவை தலையில் வைத்துக்கொண்டாள் அக்கா. உள்பிரகாரத்தில் நுழைந்துபொழுது கைகுட்டை எடுத்து வியர்வை துடைத்துக்கொண்டார் மாமா. அருமையான தரிசனம் என்றார். பிரதோச நாளில் இவ்வளவு அருமையாக இதுவரை தரிசனம் கிடைத்ததில்லை எனவும் சொல்லிக்கொண்டார். அவர்கள் இருவரின் மகிழ்ச்சியும் நிறைவும் அவர்களின் முகத்தில் தெரிந்தன.
அக்கா பணப்பை பிரித்து ஐம்பது ரூபாய் எடுத்துக் அந்த குருக்களிடம் கொடுத்தாள். அவர் பார்த்துவிட்டு ‘ வழக்கம் நூறு ரூபாய்’ என்றார் புன்னைகையுடன். மாமா ‘ஓ அப்படியா, பரவாயில்லை’ என்றபடி தன் பர்ஸை பிரித்து ஐம்பது ரூபாய் எடுத்துக்கொடுத்தார். குருக்களிடம் செல்போன் நம்பர் வாங்கி தன் செல்போனில் குறித்துக்கொண்டார். அதன்பின், அவருக்கு நன்றி சொல்லிவிட்டு வெளிபிரகாரம் சுற்ற ஆரம்பித்தோம். நாகர் சந்தியில் கொஞ்ச நேரம் அமர்ந்துவிட்டு வாசலுக்கு வந்தோம்.
வாசலின் இருபுறமும் குழுமியிருந்தார்கள் வழக்கமான பிச்சைக்காரர்கள். உடல் ஊனமுற்றோர்களாகவும், வயதானவர்களாகவே இருந்தார்கள் அனைவரும். சுமாராக பதினைந்துபேர் இருக்கும் அக்கூட்டத்தில் ஒருவரிடம் இருபது ரூபாய் கொடுத்து அனைவரும் பகிர்ந்துகொள்ளச்சொன்னேன்.
பூக்கடையில் காலணிகள் தேடி அணிந்துகொண்ட அக்கா திரும்பி என்னை ஒரு அர்த்தப்பார்வை பார்த்துவிட்டு இயல்பானாள். மாமாவோ சட்டென ஒருகணம் திரும்பிப்பார்த்தார். ‘காசு என்ன மரத்துலயா காய்க்குது? பாத்து செலவு பண்ணுடா’ என்றார். ‘காசோட அருமை அது இல்லாட்டித்தான் தெரியும்’ என்றபடி அக்காவிடம் முணுமுணுத்தார்.
உள்ளே ஐம்பதும் நூறுமாய் காணிக்கையிட்டு பிச்சைக்காரர்களுக்கான தானத்தில் கணக்குபார்க்கும் மாமாவை நினைத்து உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன். மேலும் அந்த பிச்சைக்காரர்களைக் காட்டிலும் கொஞ்சம் அதிகமாகவே பரிதாபப்பட்டேன்.
gokulankannan@gmail.com
- மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 1
- தாகூரின் கீதங்கள் – 47 இதயத்தின் ஆழம் என்ன ?
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! காலாக்ஸிகளின் இரு மந்தைகள் மோதிக் காணப்பட்ட இருட் பிண்டம் (Dark Matter) [கட்டுரை: 41]
- ஜெயபாரதன் அவர்களின் பொறுமையும் ஈடுபாடும்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் காலைக் கவிதை -2
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 7 (சுருக்கப் பட்டது)
- செப்டம்பர் 2008 வார்த்தை இதழில்…
- ஏழாவது சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா – படைப்புகளுக்கான கோரல்
- கே கே பிர்லா – ஒரு கலை அஞ்சலி
- சிவப்பு ரிப்பனும், குப்பை குறுஞ்செய்திகளும்
- சென்னை மாரத்தான்!!
- தானம்
- காஷ்மீர் நிலவரம் – புத்தியே வராதா?
- சந்திரமுகி வீடியோ கடை
- இல்லாமையின் இருப்பு
- மழை பெய்தாலும் பெய்யலாம்
- ஒரு பாதசாரியின் கனவுகள்
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஆறு
- யமுனா ராஜேந்திரன் ஆறு நூல்கள் விமர்சன நிகழ்வு
- அப்பாவின் நினைவு தினம்
- உயிரோசை : உயிர்மை.காம் வழங்கும் இணைய வார இதழ்
- விழித்திருப்பவனின் இரவு
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 35 தாலமி.
- திருவல்லிக்கேணியில் திருமங்கையாழ்வார்
- நினைவுகளின் தடத்தில் – (17)
- உயிர்
- வேத வனம் கவிதை விருட்சம் 1.
- இருபத்து நான்கு வரிகளில் – அண்ணாவின் இனிய நினைவேந்தல்!
- இரண்டு கவிதைகள்
- கொடும்பனி இரவிலிருந்து தப்பித்தல் பற்றி
- மொழிபெயர்ப்பு கவிதை : D 54 அறை
- தேவைகளின் பார்வைகள்
- அணில்கள்
- பட்டம்
- ஆத்மார்த்தமாய்க் கொடு