தாகூரின் கீதங்கள் – 56 எல்லாம் நீ ! எனக்குரியவன் நீ !

This entry is part [part not set] of 52 in the series 20081120_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


உயிரினத் தோற்றங்கள் உருவாகும் போது
எனக்குப் பூரிப்புதான் !
எதை நோக்கி அவை சென்றாலும்
எனக்குப் பூரிப்புதான் !
எதனுள் அவை புகுந்து கொண்டாலும்
எனக்குப் பூரிப்புதான் !

இருளின் மூலத்தி லிருந்து
எழுந்திடும் ஒளிமயம் !
உந்தன் ஒளிச்சுடர் அதுதானப்பா !
கொந்தளிப்பிலும்
சீரமைப்பிலும்
செந்நெறி முறைகள் எப்போதும்
விழித்தெழு கின்றன !
உந்தன் நல்வினை அதுதானப்பா !

தெருப் புழுதியில் எழுந்துள்ள குடிசை
திறக்கும் தன் இதயக் கதவு !
உந்தன் உன்னத
அரண்மனை அதுதானப்பா !
அன்பும், கடுமையும், கொடூரமும்
அடி உதை கொடுத்து
அழியா நிலைக்கு
ஆக்கிடும் என்னை !
உந்தன் கனிவு அதுதானப்பா !

எல்லாம் வற்றி விட்ட போதிலும்
ஏதோ ஒன்று உந்தன்
ஒற்றைக் கொடையாய் எனக்குள்
ஒளிந்திருக்கும் !
உந்தன் அறக்கொடை அதுதானப்பா !
இறப்பைத் தன்னுடன்
இணைத் துள்ளது இவ்வாழ்வு
இந்தக் கும்பாவையும்
நிரப்பி உள்ளது அது !
உந்தன் வாழ்வு அதுதானப்பா !

மனித உலகின் காலுக் கடியில்
மண்தளம் எங்கும்
தூசியைப் பரப்பிடும் !
உந்தன் புவித்தளம் அதுதானப்பா !
எல்லோ ரையும் ஒன்றாய்த் தழுவி
இணைத்துக் கொண்டு
எல்லாப் பிறவிகட்கும்
இடையில் மறைந்திருக்கும்
தனித்துவன் நீ !
எனக்குரிய நீ !

(தொடரும்)

************

1. The Gardener,
Translated to English from Bengali
By : Nirupama Ravindra

2. Original Source: A Tagore Testament,
Translated From Bengali
By : Indu Dutt

Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (November 18, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா